Wednesday, July 15, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 1

முன்குறிப்பு:
கதாப்பாத்திரங்களைத் தெரிந்துக் கொள்ள 'எனது பெயர் நாகவள்ளியை' படிக்கவும்.

பாகம் 1.
'சொல்லுங்க சார், நான் தாமு தான் பேசறேன்'
'என்ன தாமு எப்படி போகுது உன்னோட ஹனிமூன்?'
'இது வரைக்கும் நல்லாதான் சார் போச்சு, என்ன நான் சென்னைக்கு வரணுமா?'
'நோ நோ தாமு, பயப்படாதே, நீ வரவேண்டாம்'
'ஓ ஒகே சார்'
'நாங்க அங்க வர்றோம்'
'இதுக்கு நானே சென்னைக்கு வரலாம்'
'என்ன தாமு?'
'ஒன்னும் இல்ல சார், வாங்க, ஆனா, 'முதன் முறையாக நான்கு பேருடன் தேனிலவு' அப்படின்னு நாளைக்கு தினத்தந்தில முதல் பக்கத்துல வருமே, பரவாலயா சார்'.
'டேய், நாங்க ப்ளான் பண்ணியிருக்கிற இடம் நீங்க தங்கியிருக்கிற இடத்துல இருந்து 15 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற மாபங்கி என்ற ஹில் ஸ்டேஷன்'
'சார் நாங்க அங்க போய் விசிட் பண்ணிட்டோம் சார். நாங்க வரலே சார், நீங்க போயிட்டு வாங்க'
'தம்பி'
'ம்ம்ம் சொல்லுங்ண்ணா'
'இது வெறும் இன்ப்ர்மேஷன் தான். உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன், சரியா?', என்றேன்.
'இப்போ இப்படித் தான் சொல்லுவீங்க, அப்புறம் என்னோட கழுத்துல ஒரு கேமராவ மாட்டிவிட்டுட்டு ஆவியோட அலையணும், பேயோட பேசணும்னு சொல்லுவீங்க'
நான் சிரித்துக்கொண்டே, 'இல்ல தாமு, நத்திங் அபீசியல் திஸ் டைம், நாங்களும் பெர்சனல ரிலாக்ஸ் பண்ணத் தான் போறோம்', என்றேன்.

அன்று மதியம் நானும், என்னவளும் காரில் ஏறி எங்களது பயணத்தைத் தொடங்கினோம். காதல் மழையில் நனைந்த கொண்டே சென்றதில் எட்டு மணி நேரப் பயணம் பெரிதாகத் தெரியவில்லை. குளிர் காற்றும், சாலையோர தென்னை மரங்களும் மாபங்கியை நெருங்கி விட்டோம் என்று மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

'யோவ், அங்க டீக் கடையில நிறுத்துங்க, இந்த இடம் ரொம்ப சீனிக்கா இருக்கு', என்றாள்.
'ஷூர்', என்று எங்களது காரை தேனீர் கடைக்கு அருகில் நிறுத்து விட்டு உள்ளே சென்றோம்.
தேனீர் பருக்கிக்கொண்டே அவள் மாபங்கியின் அழகைப் பிடித்து கேமராவில் அடைத்துக் கொண்டிருந்தாள்.
'என்ன சார் மாபங்கி சுத்தி பாக்க வந்தீங்களா?', என்றார் தேனீர் கடைக்காரர் கேட்டார்.
'ஆமாங்க'
'கைடு வேணும்னா சொல்லுங்க சார், பார்த்து பண்ணிடலாம்'
'வேணும்னா கண்டிப்பா கேட்கிறேங்க'
'எங்க தங்கப் போறீங்க?'
'இங்க தான் ஹெவன் ரிசார்ட்ஸ்'
அவரது முகம் வெளுத்துப் போனதை நான் கவனிக்கத் தவரவில்லை.

'என்னங்க, அமைதியா இருக்கீங்க, நல்லா இருக்காத அந்த ரிசார்ட்ஸ்'
'நல்லா தாங்க இருக்கும், ஆனா அங்க பலப் பேரு தற்கொலை பண்ணியிருக்கிறதா போலிஸ் சொல்லுது, உண்மையில அது கொலைன்னு ஒரு பேச்சு இருக்குங்க', என்றார்.
'சார் நாங்க இதுக்கெல்லாம் பயந்தா எங்க தொழில் என்ன ஆகும். நான் ஒரு ரிப்போர்ட்டர் மாதிரிங்க. நல்ல விஷயம் தான் சொல்லியிருக்கீங்க. நன்றிங்க', என்று சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பினோம்.

மலைப் பிரதேசம் என்பதால் சாலையில் ஒரு சில மேடு பள்ளங்களில் தள்ளாடிச் சென்றது எங்கள் வண்டி. அவள் ஏதோ விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்க, 'அடியே என்ன எண்ணிக்கிட்டு இருக்கே' என்று கேட்டேன்.
'ம்ம்ம். இது நம்மலோட பதிமூனாவது தேனிலவு', என்றாள் வெட்கச் சிரிப்புடன்.

எட்டு மணி நேரப் பயணம் ஏதோ எட்டே நிமிடத்தில் முடிந்தது போல் இருந்தது எனக்கு. அது சரி 'காதலி வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகும்' என்று வைரமுத்து ரசித்துச் சொன்னது சரி தான் என்று நினைத்துக் கொண்டேன். மாபங்கி ஹெவன் ரிசார்டுக்கு வந்தடைந்த போது இரவு ஒன்பது மணி. எங்கள் வண்டியைப் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, எங்கள் பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம்.

ரிசெப்ஷனில் ஒரு தேவதை மாறுவேடத்தில் இருந்தாள். கோதுமை நிறத்தில் உடல். லேசான சுருட்டை முடியை இடதோரம் வகுடெடுத்து வாரியது அழகு. மீன்களே அங்கு கண்களாகி இருந்தன. கண்ணுக்கே தெரியாதவாறு ஒரு சின்ன பொட்டு. யாரும் வெட்டுப் படலாம், ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தது அவளது மூக்கு. உதடுகள் இரண்டும் குறள் போல் மிகவும் சிறியது. குரல் சங்கீதம் பாடுகிறது. பற்கள் அனைத்தும் சீராக அடுக்கி இருந்தது. சிங்கப் பல் மட்டும் சிறுது எடுப்பாக இருந்தது. அதுவும் அவளுக்கு அழகைக் கூட்டியது.

'வெல்கம் சார், வெல்கம் மேடம்', என்று எங்களை வரவேற்றாள்.
நாங்கள் எங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம்.
'ஒ வாங்க, நீங்க ஏற்கனவே புக் பண்ணியிருந்தீங்களா?', தேவதை பாடினாள்.
'இல்லேங்க ஆனா, கால் பண்ணும் போது, கிளம்பி வாங்க பாத்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க', என்று நான் சொன்னது தான் தாமதம். என்னவள் என்னை பின் தள்ளி அந்த தேவதையிடம் பேசத் தொடங்கினாள்.
'சரி கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க, ஐ வில் செக் அண்ட் லெட் யூ நோ', இதுவும் சங்கீதம் தான்.

நாங்கள் இருவரும் ரிசெப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்தோம்.

'சாரி சார். இப்போ ஆக்சுவலா ரூம்ஸ் அவேலபலா இல்ல', என்றாள் தேவதை.
'என்ன மேடம் சொல்றீங்க? இனிமே எங்க போக முடியும்? இப்போவே லேட் ஆயிடுச்சு',
'சாரி சார், இப்போ ஒருத்தர் செக் அவுட் செய்யணும். ஆனா அவர் செய்யல. அது தான் இப்போ பிராப்ளம்'

அவளின் பின் ஒரு மரப்பலகையில் சாவிகளைத் தொங்கவிடுவதற்கான கொக்கிகள் இருந்தன. அதில் பதின்மூன்றாவது அறையின் சாவி தனியாக ஆடிக் கொண்டிருந்தது. அந்த சாவியை அவளிடம் காட்டி, 'ஹவ் அபௌட் தட் கீ', என்றேன்.
'இல்ல சார், அந்த ரூம் யாருக்கும் தரமாட்டோம் சார். அட்மின் இந்த ரூம் யாருக்கும் தர வேண்டாம்னு சொல்லியிருக்காங்க', என்றாள்.
'ஏன்?', ஆர்வத்துடன் நான்.
'தெரியல சார், அங்க இதுக்கு முன்னாடி பல பேரு தற்கொலை பண்ணியிருக்காங்க. அது தற்கொலையா, இல்ல கொலையான்னு கூட இன்னும் கண்டு பிடிக்கலை'
'எங்களுக்கு இதெல்லாம் தெரியுங்க. தெரிஞ்சுட்டு தான் கேட்கிறேன். நான் வேணும்னா உங்க அட்மின் கிட்ட பேசறேன்', என்றேன்.
'சாரி சார், அட்மின் இப்போ அப்ராட் போயிருக்காங்க'.
'இல்லேங்க, எங்களுக்கு ரூம் 13 தாங்க வேணும். நான் ஒரு தனியார் டி.வில வேலை பார்க்கிறேன். நான் ஒரு ரிப்போர்ட்டர். எந்தப் பிரச்சனையா இருந்தாலும் நாங்க பாத்துக்குறோம்', என்றேன்.

அப்போது ஒருவர் தன் மனைவியுடன் தனது பெட்டிகளுடன் செக் அவுட் செய்ய ரிசெப்ஷனுக்கு வந்தார்.
'சார், இந்த ரூம் எடுத்துக்கோங்க. ரூம் நம்பர் 14. பத்து நிமிஷத்துல க்ளீன் பண்ணி, ரெடி பண்ணச் சொல்றேன்', என்றாள் அக்கறையுடன்.
நானும் என்னவளும் அமைதியாக இருந்தோம். தேவதை செக் அவுட் செய்வதற்காக வந்தவரிடம் சில இடங்களில் கையெப்பம் வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவளது வலது கையில் 14. இடது கையில் 13.
'சொல்லுங்க சார். இனி உங்க சாய்ஸ் தான். எது வேணும். 13ஆ இல்ல 14ஆ?'
நான் என்னவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்து கண்ணடித்து விட்டு, 13ஆம் நம்பர் சாவியை எடுத்துக் கொண்டாள்.

நாங்கள் எங்களது பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவள் காட்டிய வழியில் நடந்தோம். 16, 15, 14, அதோ இருக்கிறது 13. நான் திரும்பி தேவதையைப் பார்த்தேன். அவள் சற்று பயத்துடன் சிரித்தாள். அவளது சிங்கப் பற்கள் அழகாக இருந்தது.

தேனிலவு இனி தான் ஆரம்பம்...

6 comments:

Manu said...

//'சரி கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க, ஐ வில் செக் அண்ட் லெட் யூ நோ', இதுவும் சங்கீதம் தான்.//


எப்படி இப்படிஎல்லாம் எழுத தோனுது?

பிறரை ஆச்சிரியப்பட படுத்துவதில் நீ மன்னவன்.

ஆவலோடு அடுத்த பகுதிக்காக காத்து கொண்டு இருக்கிறேன்

sreeja said...

// அவள் ஏதோ விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்க, 'அடியே என்ன எண்ணிக்கிட்டு இருக்கே' என்று கேட்டேன்.
'ம்ம்ம். இது நம்மலோட பதிமூனாவது தேனிலவு', என்றாள் வெட்கச் சிரிப்புடன். //

// எது வேணும். 13ஆ இல்ல 14ஆ?'
நான் என்னவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்து கண்ணடித்து விட்டு, 13ஆம் நம்பர் சாவியை எடுத்துக் கொண்டாள். //

ம்ம்ம்...13-ம் எண்....

நன்றாக உள்ளது. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்.

ஸ்ரீஜா.K

Truth said...

நன்றி மனு.
நன்றி ஸ்ரீஜா.

அடுத்த பகுதி போட்டாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க.

புன்னகை said...

நாகவள்ளியில் வந்த கதாபாத்திரங்கள் என்றதுமே புரிந்து விட்டது, இதுவும் ஒரு திகில் தொடர் தான் என்று. அதான் நிறைவுப் பகுதி வரும் வரை காத்திருப்பது என்று முடிவு செய்திருந்தேன், முழு கதையையும் படித்து விட்டு கருத்து சொல்லலாம் என்று.

//'ம்ம்ம். இது நம்மலோட பதிமூனாவது தேனிலவு', என்றாள் வெட்கச் சிரிப்புடன்.//
என்ன நடக்குது? ;-)

//என்னவள் என்னை பின் தள்ளி அந்த தேவதையிடம் பேசத் தொடங்கினாள்.//
possessiveness??? :-)

//நான் என்னவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்து கண்ணடித்து விட்டு, 13ஆம் நம்பர் சாவியை எடுத்துக் கொண்டாள்.//
பின்ன, நாய்க்கு வாக்கபட்டா...

Sankai said...

உதடுகள் இரண்டும் குறள் போல் மிகவும் சிறியது

//First time kuralai uthadugaluku oppiduvathe ketkiren,

Truth said...

நன்றி புன்னகை, Sankai