Saturday, November 21, 2009

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு - 2

முதல் பகுதி

அதான் E கிடைத்துவிட்டதே என்ற சந்தோசம் ஒரு இரு நிமிடங்கள் கூட இருந்திருக்கவில்லை. யாரோ இரண்டு பேர் அவர்களுக்கு வந்த சீட்டுகளை மாற்றிக் கொண்டு விட்டதால் ஆரம்பித்தது அவலம். வரிசையில் நிற்கவேண்டிய கட்டாயம். முடிந்தது இனி என முடிவானது. மறுபடியும் நான் செல்லும் போது அங்கு ஒரே சீட்டு தான் இருந்தது. 'கமான் டேக் ஒன்' என்று எனது வயிறெறிச்சலை கட்டிக் கொண்டார். இருந்த ஒன்றை எடுத்துக் கொண்டேன். அதில் L என்றிருக்க நடக்க ஆரம்பித்தேன் தூரத்தில் இருக்கும் பட்டறையை நோக்கி.

இங்கே நான் சில விஷயங்களை சொல்லியே ஆக வேண்டும். எனது அக்கா கல்லூரியில் எனக்கு இரண்டு வருட சீனியர். அவர் Electricals and Electronics Engg [EEE] டிபார்ட்மெண்ட். அவர் அதிபுத்திசாலி என்பதால் அவருக்கு அவருடைய டிபார்ட்மெண்ட் HODயிடம் மிக நல்லப் பெயர். எனக்கு அங்கிருக்கும் மிஷன்களின் பெயர்கள் கூட சரிவரத் தெரியாது. எந்த கேள்விற்கு எங்கே போய் எந்த மிஷனை ஓட்ட வேண்டும் என்பது கூட சரிவரத் தெரியாது. அன்று எங்களுக்கு வைவாவிற்கு வந்தவர் EEEயின் HOD தான். அக்காவின் தயவில் ஏற்கனவே எனக்கு அவரிடம் நல்ல பெயர் இருந்து வந்தது.

அங்கே சென்றதும் மீண்டும் ஒரு குலுக்கல், வழக்கம் போல் கடைசியாக மீதமிருந்த ஒன்று தான் எனக்கு. கடைசியாக மிச்சமிருந்த ஒரு சீட்டை எடுத்தேன். ஏதோ ஷண்ட் மோட்டார் பற்றிய கேள்வி என்று நினைக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏன்? இதை எளிதாக செய்து கிழிக்கலாம் என்றா? அதெல்லாம் இல்லை. இதே ஷண்ட் மோட்டார் தான் என்னுடைய மாடல் பரிட்சையிலும் வந்தது. அதனால் இந்த ஷண்ட் மோட்டார் எங்கே இருக்கிறது என்பது மட்டும் தெரியும். சரியாக அங்கே சென்று நின்று கொண்டேன். அப்போது லேப் அசிஸ்டெண்ட் ஒருவர், 'ஏன்பா அங்க நிக்குற? அங்க போலாம்ல' என்றார். அவ்வளவு தான். சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. நான் சரியான மிஷனில் தான் நிற்கிறேனா என்று. ஒரு முறை அவர் சொன்ன மிஷினைப் பார்த்தேன். அது அச்சு அசலாக இருந்தது. 'சார்...' என்று இழுக்க, 'சரி இது தான் உன்னோட ராசியான இடம்னா நின்னுகோ, இரண்டும் ஒரே ஷண்ட் மோட்டார் தான்', என சொன்ன பிறகு தான் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டேன். சரியான இடத்தில் தான் நிற்கிறோம் என. இனி இருக்கும் வயர்களை எங்கே மாட்ட முடியும் என்று லாஜிக்காக யோசித்து (இதில் யோசித்து யோசித்து செய்த ஒரே ஆள் நானாகத் தான் இருப்பேன்) அங்கே இங்கே என்று மாட்டிவிட்டு, குல தெய்வங்களை எல்லாம் ஒன்றிற்கு நாற்பதேழு முறை வேண்டிக் கொண்டு மோட்டாரை ஆன் செய்தேன். இருக்கும் மீட்டர்களில் உள்ள எண்களை எழுதி, ஒரு முறை கேள்வியைப் படித்து, அதிலிருந்து ஷண்ட் மோட்டர் எதற்கு தேவைப் படுகிறது என்று தெரிந்துக் கொண்டு அதையே எழுதி, ஒரு வழியாக செய்து முடித்தேன். அடுத்தது வைவா.

வைவாவில் HODயும் எனது ஆசிரியையும் இருந்தார்கள். எனது ஆசிரியைக்கு எனது அக்கா பற்றி தெரியாது. எனது அக்காவிற்கு ஆசிரியையை விட அதிகமாகவே தெரியும் என்பது வேறு கதை. ஒருவேளை எனது அக்காவைப் பற்றி தெரிந்திருந்தால் அமைதியாக இருந்திருக்கக் கூடும். தெரியாததனால், 'சார் இவனைக் கொஞ்சம் நல்லா கேள்வி கேளுங்க சார், ரொம்ப தான் பேசறான்', என்று HODயிடம் சொல்ல, அவர், 'ச்சே இந்தப் பையனுக்கு எல்லாமே தெரியும்' என்று அவர் சொல்ல எனக்குப் பீதியில் இங்கும் அங்குமாய் படித்தவை எல்லாம் மறந்தே போனது.

பின்னர் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மாட்டைப் பற்றி கேட்டால், மரத்தைப் பற்றி சொல்லிவிட்டு 'அந்த மரத்தில் தான் எசமான் அந்த மாட்டைக் கட்டி வெச்சிருந்தாங்க' என்பது போல் பதிலளித்துக் கொண்டிருந்தேன். அவர் கேட்டதில் இன்னும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் கேள்வி - saturation.

'வாட் ஈஸ் சேச்சுரேஷன்' என்று கேட்டார்.
படித்ததையெல்லாம் மறந்தாச்சு. இதில் படிக்காததை எப்படிச் சொல்ல? அமைதியாகவே இருந்தேன்.
அவரே சொன்னார், 'இப்போ நீ எல்லாத்தையும் படிச்சுட்டு வந்திருக்கே...'
'ஆமாம் சார்'
'இப்படி த்ரெஷோல்ட் லெவெலுக்கு அதிகமா படிச்சா ஒரு நேரத்துல அதுக்கு மேல படிக்க முடியாது'
'ஆமாம் சார்'
'ஒரு லெவெலுக்கு மேல போக முடியாத போறது தான் சேச்சுரேஷன்'
'ஆமாம் சார்'
'நீ அந்தளவுக்கு படிச்சதுனால தான் இப்போ உனக்கு எதுவுமே நினைவுல இல்ல'
'ஆமாம் சார்'

என்ன நினைத்தாரோ தெரியவில்லை மார்க் மட்டும் நல்லாவே வந்திருந்தது.

ஒரு கட்டுரையில் படித்த நினைவு - நமக்கு என்ன வேண்டும் என்று பூவா தலையா போடும் போது, நாணயத்தை சுண்டிவிட்டு, அதை பிடித்துப் பார்ப்பதற்கு முன்பே, நமது மனதில் பூ அல்லது தலை இதில் இரண்டில் ஒன்று வேண்டும் என நினைத்திருப்போம். மனதில் எது வேண்டும் என்பது நாணயத்தைச் சுண்டி விடுவதற்கு முன்பே நமக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது பூ விழுந்ததா, தலை விழுந்ததா என்று பார்க்கத் தேவையில்லை. உண்மையில் சாய்ஸே தேவையில்லை.

Friday, November 20, 2009

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு

ஒன்றிலிருந்து பத்துக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருப்பதைச் சொல்கிறேன், உங்கள் ராசியை அலசுகிறேன் என்றபடி நமக்கு எத்தனையோ மெயில்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி வரும் மெயில்களுக்கு நான் நினைக்கும் எண் எப்போதும் 'ஒன்று' தான். 'ஒன்று' எனக்கு பிடித்த எண்னா? அப்படி எல்லாம் இல்லை. ஒருவேளை முப்பத்தேழுலிருந்து நாற்பத்திமூன்றுக்குள் ஒரு எண்னை நினைக்கச் சொன்னால், நான் முப்பத்தேழு தான் நினைப்பேன். ஏன்னா நமக்கும் சாய்சுக்கும் ஆகவே ஆகாது...

எனக்கு இருபது வயதிருக்கும் போது நான் பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன். ஹி ஹி ஹி... போதும் உங்க தூள் பட டயலாக். வழக்கமாக ஒரு வகுப்பில் அறுபது மாணவர்கள் இருப்பார்கள். ப்ராக்டிகல்ஸ் பரிட்சை வரும் போது வகுப்பை நான்காகப் பிரித்து பதினைந்து பதினைந்துகளாக பிரித்து மேய்ப்பது பாரம்பரிய வழக்கம்.

அன்றைக்கும் அப்படித் தான். ForTran மற்றும் COBOL ப்ராக்டிகல்ஸ். பன்னிரண்டாவது வரை அப்பாவின் ஆசையின் பெயரில் பயாலஜியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால் கணினியைத் தொட்டது எல்லாம் கல்லூரியில் தான். முதன் முதலாக கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் என்பது உள்ளூர பயம் இருந்தது. பயம் எல்லாம் கொடுத்த வேலையை செய்யத் தெரியுமா என்றெல்லாம் இல்லை. நாங்க எல்லாம் நல்லா படிக்கிற பயலுக. ஆமா... பயமெல்லாம் தெரிந்த ப்ரோக்ராமை குறிப்பிட்ட நேரத்தில் கீ-போர்டில் எழுத்துக்களைத் தேடித் தேடி டைப் அடித்து முடிக்க முடியுமா என்று தான். அன்று அனைவரும் இருக்கும் ப்ரோக்ராம்களை படித்துக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் கீ போர்டில் எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அனைத்து கேள்விகளும் ஒவ்வொரு தாளில் மறைத்து வைத்திருப்பார்கள். நாம் குலுக்கல் முறையில் நமக்கு கிடைப்பதை எடுத்துக் கொண்டு அதிலுள்ள கேள்விக்கான ப்ரோகிராமை எழுத வேண்டும். நேரம் நெருங்க நாங்கள் வரிசையில் நிற்க, முதலில் நிற்பவன் அங்கிருக்கும் பதினைந்து தாள்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதிலுள்ள ஒரு கேள்விக்கு ப்ரோக்ராம் எழுத வேண்டும். எனது எண் பதினைந்து, நான் வரிசையில் கடைசி. நான் செல்லும் போது ஒரே ஒரு கேள்வித் தாள் தான் பாக்கி இருக்கும். இதில் ஆசிரியரின் நக்கல் வேறு. 'சூஸ் ஒன்லி ஒன்' என்று சிரித்தார். 'என்னத்த சூஸ்றது' என்று நினைத்து விட்டு மிஞ்சிய ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று ப்ரோக்ராமைக் கணினியில் அடிக்க ஆரம்பித்தேன். கடினமானது தான். பதினைந்து பேரில் முதலில் முடித்தது நான் தான். அது மட்டுமின்றி சரியாக முழுமையாக எழுதியதும் நான் மட்டும் தான்.

பின்னர் ஒரு முறை Electricals & Electronics லேப். எலக்ட்ரிகல்ஸ் என்பது (எனக்குப் புரிந்த வரை, இதையே முதன்மையாக படித்தவர்கள் பின்னூட்டத்தில் தாறு மாறாக விளக்கவும்) ACயில் இயங்குபவை. எலக்ட்ரானிக்ஸ் என்பது DCயில் இயங்குபவை. சரி அதெல்லாம் இப்போது தேவையில்லை. என்னைப் பொருத்த வரையில் எலக்ட்ரிகல்ஸ் என்பது மெகானிக் ஷெட் போலிருக்கும் ஒரு பட்டறையில் பெரியப் பெரிய மோட்டார்கள், ட்ரான்ஸ்பார்மர்களுடன் வயர்களுடன் வண்டி ஓட்ட வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் என்பது சிப், டையோட், ரெசிஸ்டர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களை வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க வேண்டும். நான் ஒன்பதாவது படிக்கும் போதே எலக்ட்ரானிக்ஸ் பற்றி அக்காவிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டதால் எனக்கு எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரிகல்ஸை விட சுலபமானது தான்.

அன்றும் பதினைந்து பேர் தான். எட்டு பேருக்கு எலக்ட்ரானிக்சும், ஏழு பேருக்கு எலக்ட்ரிகல்சும் என்று முடிவெடுத்து துண்டுச் சீட்டில் E (எலக்ட்ரானிக்ஸ்) மற்றும் L (எலக்ட்ரிகல்ஸ்) எழுதி வைத்தது ஆசிரிய பட்டாளம். முதலில் எந்த லேப் என்பது முடிவு செய்து அதன் பின்னர் அதில் என்ன கேள்வி என்பது அந்தந்த லேபிற்குச் சென்று முடிவு செய்யலாம் என்று நினைத்தார்கள் போலும். 'கம் அண்ட் பிக் யுவர் சிட்', என்றார் அங்கிருக்கும் ஒரு ஆசிரியர். வரிசையில் அப்போது யாரும் நிற்காததால் ஓடும் பஸ்சில் துண்டைப் போடு சீட்டு பிடிப்பது போல் அனைவரும் அலரி அடித்துக் கொண்டு எடுக்க, நான் தேடிப் பார்த்து Lலை விடுத்து E எடுத்துக் கொண்டேன். இனி சுலபம் தான்.

பதிவு பெரியதாக போய்க் கொண்டிருப்பதினால் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் தொடரும்.

Thursday, November 12, 2009

காம்போசிஷன்

இது புகைப்படங்கள் எடுப்பதைப் பற்றிய பதிவு. இனிமேல் இது போன்ற பதிவுகள் தொடரலாம். ஆமாங்க நேரமும், ஐடியாவும், உங்கள் ஆதரவும் இருந்தால் மட்டுமே இது தொடரும். புகைப்படங்கள் எடுப்பதைப் பற்றி நான் எழுதுவதற்கான காரணங்கள் பல. எனக்குள் புகைப்பட ஆர்வம் இருப்பதாலும், இப்படிப் பதிவுகளாக எழுதுவதால் நானும் மேலும் படிக்க முடியுமென்பதாலும், இப்படியாவது பதிவுகள் எனது ப்ளாக்கில் ஓடட்டும் என்றும் பல காரணங்கள்.
ஒரு முக்கிய முன்குறிப்பு - இங்கு நான் எழுதுவது அனைத்தும் என்னுடைய எண்ணங்கள் மட்டுமே, அதைக் கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை.
சரி இனி பதிவிற்குச் செல்லலாம்.

முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு கலை, அறிவியல் கண்டிப்பாக இல்லை. எனவே தான் அப்படியொரு முன்குறிப்பு.

இந்தப் பதிவு காம்போசிஷனைப் பற்றியது. காம்போசிஷன் என்றால் என்ன? நாம் ஒரு மெயிலை கம்போஸ் செய்கிறோம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். மெயிலை கம்போஸ் செய்யும் போது, To, CC, BCC, Subject, Body, Signature போன்ற சமாச்சாரங்களைச் சரியாக அடிக்க வேண்டும், அதாவாது எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்கு இருந்தால் நலம். CCயில் இருப்பவர் Toவில் போட்டாலும் மெயில் சரியாகச் செல்லத் தான் போகிறது. ஆனால் அது சரியான முறை அல்ல. ஒரு முறை எனது அலுவலகத்தில், எனது டீமைச் சார்ந்த ஒருவன் Subjectல் 'Hi, this is Venkat' என்று அடித்து ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் ரிலேடட் மெயிலை அனுப்பினான். மெயில் எனக்கு வரத் தான் செய்தது. ஆனால் அவன் என்னிடம் வந்து சொன்ன பிறகு தான் நான் படித்தேன். எனவே காம்போசிஷன் மிக முக்கியம். அதே சமயம் இதுவும் ஒரு கலை தானே.

சரி இனி புகைப்பட உதாரணங்களுக்குச் செல்வோம்.
நாம் ஒரு புகைப்படம் எடுக்கப்போகிறோம் என்றால் நாம் முதலில் முடிவு செய்ய வேண்டியது புகைப்படத்தின் சப்ஜெக்ட். நமது புகைப்படத்தைக் காண்பவர்களின் கண்கள் நாம் நினைத்த சப்ஜெக்டை மட்டுமே பார்க்கும் வண்ணமாகச் செய்ய வேண்டும். அவர்களின் கண்கள் நாம் நினைத்த சப்ஜெக்டை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும்.

நாம் ஒரு லேண்ட்ஸ்கேப் ஒன்றினை எடுக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொள்வோம். ஒரு லேண்ட்ஸ்கேப் என்பது பரந்து விரிந்த ஒரு நிலம்/மலை. இதில் சப்ஜெக்ட் என்று சொல்வதற்கு முக்கியமாக ஒன்றும் இல்லை. முழு புகைப்படமும் சப்ஜெக்ட் தான். இப்படிப்பட்ட புகைப்படங்களில் நமது நிழலோ அல்லது வேறொருவது நிழலோ மிகத் துல்லியமாக இருந்தால், பார்ப்பவர்களின் கண்கள் கண்டிப்பாக திசை மாறும்.

சில நேரங்களில் நாம் நிழலை மட்டும் புகைப்படம் எடுக்க நினைத்து தேவையில்லாமல் ஒரு ஓரத்தில் நமது கால்களோ, கைகளோ வந்து தொலைக்கும். அவற்றை தவிர்ப்பது நல்லது.


சில சமயம் நாம் ஏதாவது ஒரு சப்ஜெக்டை எடுக்க நினைக்கும் போது நடுவில் ஒரு சிலர் வருவது தடுக்க முடியாதது. அப்படிப்பட்ட இடங்களில் நாம் அவர்களை க்ராப் செய்தோ அல்லது அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகோ அல்லது அவர்களிடம் கேட்டுக் கொண்டு அவர்களை விலக்கி புகைப்படம் எடுக்க வேண்டும். கீழே இருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். ஒரு காலத்தில் நான் எடுத்தது தான். நாயை மட்டுமே எடுக்க வேண்டும் என நினைத்து எடுக்கப்பட்டது தான், ஆனால் கூடவே ஒருவரின் பின்புறமும், இன்னொருவரின் கால்களும் வந்திருக்கிறது. காண்பவர்களின் கண்கள் இனி நாயை விட்டு திசை மாறுவது இயல்பே.



நாம் புகைப்படம் எடுக்கும் போது சப்ஜெக்டின் அருகே இருக்கும் பொருட்கள் நமது சப்ஜெக்டின் வடிவத்தையோ, பொருளையோ மாற்றிவிடுகிறது. உதாரணதிற்கு... படங்கள் இல்லை, எழுதுகிறேன், புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் ஒரு விளக்குக் கம்பத்திற்கு முன் நின்று கொண்டிருக்கிறார் எனக் கொள்வோம். அவரைப் புகைப்படம் எடுக்கும் போது அந்தக் கம்பம் அவரது தலைக்கு மேலே இருந்தால் தலையிலிருந்து முளைப்பது போல் காட்சியளிக்கும்.

பதிவு பெரியதாகிக் கொண்டே போகிறது. சரி இந்தப் பதிவில் எப்படி எல்லாம் புகைப்படம் எடுக்கக்கூடாதென்பது தெளிவாக(?) விளக்கியுள்ளேன். கேள்விகள் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். தெரிந்தால் பதிலளிக்கிறேன். தெரியவில்லையெனில், வாங்க கத்துக்கலாம்.

அடுத்தப் பதிவு எப்படி எடுத்தால் காண்பவர்களின் கண்களை ஈர்க்க முடியும் என்று பார்க்கலாம்.