Wednesday, October 14, 2009

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா

இந்த வீடியோ எனக்கு மெயிலில் வந்தது. உங்களிடம் இந்த வீடியோ முழுவதுமாக இருந்தால் சொல்லுங்க. பார்த்தே தீர வேண்டும் :-)


Friday, October 09, 2009

அவனோட கதை - காதலுக்கு மரியாதை

இது அவனோட கதை. இதுல கதாபாத்திரங்கனு சொல்றதுக்கு நிறைய பேரெல்லாம் இல்லேங்க. அவனும், அவனோட காதலி. முக்கியமா இரண்டு பேரு தான். ஊடால நிறைய பேரு வருவாங்க, போவாங்க, உக்காருவாங்க, நிப்பாங்க, எல்லாம் பண்ணுவாங்க. அவங்க எல்லாம் டூயட் பாட்டுல வர்ற சைடு வாத்தியம் போல, அவங்கள பத்தி எல்லாம் நிறைய சொல்ல தேவைப் படல.

அவன் அவள முதல் முறையா ச்சேட்ல பாத்து தன்னோட மனச தொலைச்சிட்டான். அப்போ அவன் சென்னையிலும், அவ ஆந்திரவிலும் இருந்தாங்க. அவன் மறத்தமிழன், அவ ஆந்திரா ஆவக்கா. அதான் காதலுக்கு கண்ணு, காது, மூக்கு, நாக்கு, சாக்கு எதுவுமே தேவையில்லையே அப்புறம் என்ன மொழி? காதலிச்சானுவோ, காதலிக்கிறானுவோ, காதலிப்பானுவோ, அத பத்தி நமக்கு எதுக்கு. இப்போ நம்ம டாபிக் அவங்களோட காதல் மலர்ந்தப்போ நடந்த கதை.

இப்போ அவன் ஒரு நல்ல கம்பனில கை நிறைய, பை நிறைய சம்பாதிக்கிறான். ஆனா நம்ம பசங்களுக்குக் காதல் எல்லாம் பிச்சை எடுக்கும் போது தானே வரும். அவனுக்கும் அப்போ தான் வந்துச்சு. ச்சேட்ல பாத்து காதலிச்சதால அது மேலும் மலர, மேலும் ச்சேட் செய்ய வேண்டிய சூழ்நிலை. பாவம் பையன் அவன் என்ன பண்ணுவான், he was cornered. ஏன்னா கையில செல்போன் இருந்தாலும் அதுல காசு இருக்காது. எவ்வளவு நாள் தான் அவனும் மிஸ்டு காலே தருவான். காதலோட பேஸ்மெண்ட் ரொம்ப முக்கியம், தெரிஞ்சுக்கோங்க. அதனால கொஞ்சம் செலவு பண்ணி ச்சேட் செய்யலாம்னு முடிவு பண்ணி பிச்சை எடுக்க ஆரம்பிச்சான். ஐய்யோ மன்னிச்சுக்கோடா அவனே, பிச்சை எடுக்க மாட்டான், மத்தவங்க கிட்ட கேட்டு வாங்கிக்கிட்டு போவான்.

இதுல என்ன விசேஷம்னு கேட்டீங்கன்னா, எல்லா முறையும் மத்தவங்கக் கிட்ட காசு கேட்டுட்டுப் போக முடியாது. அவனும் எத்தனை முறை தான் காறி துப்புறது தாங்கிக்க முடியும்? அப்போ வேலை செஞ்சுகிட்டு இருந்த கம்பனி கொடுத்த சம்பளத்துல சாப்பாட்டுக்கே லாட்டரி. படிக்கிறவங்களே, அவன பத்தி ரொம்ப கீழ்த்தரமா எடை போடாதீங்க. நாங்க எல்லாம் முதல் வேலை தேடும் போது அமெரிக்கால டாட் காம் பபுள். ஒருத்தனுக்கும் வேல கிடையாது. கிடைச்சாலும் சம்பளத்துல டாய்லெட் டிஷ்யூ தான் வாங்க முடியும். அதுல தான் எங்களுக்கு சாப்பாடே. அட சாப்பாடு டாய்லெட் டிஷ்யூல இல்லே, அந்த சம்பளத்துல. அவன் அந்த சம்பளத்துலேயே கொஞ்சம் ச்சேட்டுக்கு ஒதுக்கி வெச்சு காதலிச்சுக்கிட்டு இருந்தான்.

அப்போ இன்டர்நெட்ல ச்சேட் பண்றதுக்கு மணிக்கு 15 ரூபா. இன்டர்நெட் வேற செம்ம வேகமா சும்மா ஆமையோடு போட்டி போட்டுகிட்டு இருக்கும். ஒரு மணி நேரத்துல நலம், நலம் அறிய ஆவல்னு பாட தான் முடியும். அதனால குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தேவை கடலைய வறுக்குறதுக்கு.

அன்னைக்கும் அப்படி தான், ச்சேட் செய்ய 15 ரூபாய் தேவைப் பட்டது ஆனா கையில வெறும் 5 ரூபா தான் இருந்திருக்கு, காறி துப்பாத நண்பர்களின் எண்ணிக்கை எத்தனை முறை நின்னு பாத்து எண்ணியும், தண்ணி குடிச்சு எண்ணியும் பூஜியம் தாண்டல. வங்கில அன்னைக்குன்னு பாத்து சரியா 510 ரூபா கிடக்குது. அவனோட வங்கி கணக்குல குறைந்தது 500 ரூபாய் இருக்கணும். ஆக அந்தப் பத்து ரூபாவ தான் நோண்டி எடுக்கணும். ஏ.டி.எம்-ல போய் பத்து ரூபா கேட்டா தருமா? அதனால அவன் டைரக்டா வங்கிக்கே போய், வித்ட்ராயல் ஸ்லிப் ஒன்னு வாங்கி சும்மா கெத்தா பத்து ரூபா போட்டு அங்கிருக்கும் ஆபீசர் கிட்ட தர, அவங்க
'ஏம் பா தம்பி இந்த வித்ட்ராயல் ஸ்லிப் இரண்டு ரூபா, தெரியுமா?' அப்படின்னு பீலா விட்டிருக்காங்க.
நம்ம பையன் அமெரிக்க எம்பஸில வாரணம் ஆயிரம் சூர்யா கணக்கா, 'நான் என்னோட காதலியோட ச்சேட் செய்யணும்'னு ஸீனா சொல்ல, அவங்க மெர்சலாகி காசு தந்திருக்காங்க.

காதலுக்கு மரியாதை! உண்மையாவே அவனே, நீ பண்ணின விஷயம் உன்னோட அவளுக்குத் தெரிஞ்சா அவங்களுக்கு உன் மேல காதல் அதிகமாகும்.

Tuesday, October 06, 2009

தோழியின் காதலன்

னது தோழியுடன் அந்தப்புரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசிக்கு வயது பதினெட்டு முடிந்து இரண்டு மாதங்கள் ஆகி நான்கு நாட்கள் எட்டிப் பார்த்து இரண்டு மணி முடிந்து இருபது நிமிடம் தொலைந்து எட்டு வினாடிகள் ஆகியிருந்தது. இதை நான் எழுதும் வேளையில் இன்னுமொரு பத்து வினாடிகள் ஆகிவிட்டது. தோழிக்கும் இளவரசிக்கும் ஒரு ஒற்றுமை - இருவரும் ஒரே சமயத்தில் பிறந்தது; வேறுபாடு - இருவரும் வெவ்வேறு சமயத்தில் பிறந்தது. பார்ப்பதற்கு இளவரசி ரம்பை போல், தோழி ஊர்வசி போல். இளவரசிக்குக் கிடைத்த அனைத்துமே தோழிக்கும் கிடைக்கும் அந்த அரண்மனையில். ஒற்றுமையினால் இருவரும் தோழிகள் ஆனார்கள், வேறுபாட்டினால் ஒருத்தி இளவரசி ஆனாள், வேறொருத்தி தோழி ஆனாள்.

வேற்றுமைக்கான பொருள் தெரியாதவர்களாகத் தான் இளவரசியும், தோழியும் முதலில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அரண்மனையில் இருந்த சிலப் பல நாரதத் தோழிகளால் இளவரசியின் தோழிக்கு விழுந்தது மனதில் ஒரு நிரந்திர வெட்டு. அன்றிலிருந்து இந்த அரண்மனையில், தான் இரண்டாம் பட்சம் தானோ என்ற எண்ணம் என்றுமே இருந்தது தோழிக்கு. வெளியே மட்டும் பொய்ச் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டு இளவரசியுடன் பழக அரம்பித்தாள்.

இளவரசிக்குத் திருமணம் செய்ய நினைத்த மன்னன், சுயம்வரத்திற்கு முன்பு இளவரசியின் புகைப்படத்தை மட்டும் அனைத்து நாட்டு இளவரசர்களுக்கு அனுப்ப முடிவு செயதார். இளவரசியை வரைய ஒரு ஓவியர் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். ஓவியர் இளவரசியைக் காகிதத்தில் வரைய, இளவரசியோ ஓவியரை தன் மனதில் வரைந்து கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் இளவரசி தன் காதலை ஓவியரிடம் சொல்ல, ஓவியரும் ஓரிரு நாட்களில் பயம் தெளிந்து சம்மதம் தெரிவித்தார். தன் காதலை இளவரசி தோழியிடம் சொல்ல, அவளோ வெளியே மகிழ்ச்சியையும், உள்ளே பொறுமியும், தனக்குக் கிடைக்காத ஒன்று இளவரசிக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவு கட்டினாள்.

இளவரசிக்கு உதவி புரிவது போல் நடித்து ஓவியரைத் தனதாக்கிக் கொள்ள தோழி திட்டமிட்டாள். இதன் முதல் கட்டமாக ஓவியரையும் இளவரசியையும் பிரிப்பது என்று முடிவு செய்தாள். ஒரு மாலை வேளையில் ஓவியரும் இளவரசியும் அந்தப்புரத்தில் ஓவியம் வரைவது போல் காதலித்துக் கொண்டிருந்தனர். அப்போது தோழி மன்னரிடம் ஓவியரைப் பற்றி கீழ்த்தரமாகச் சொல்ல, மன்னனும் அந்தப்புரத்தில் இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்துக் கோபமடைந்து உடனே ஓவியருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அது கழித்தப் பின்னர் மரண தண்டனையும் விதித்தார். இளவரசி ஏதும் சொல்வத்றகு முன் ஓவியர் சிறையில் அடைக்கப் பட்டார். இது தோழிக்கு முதல் வெற்றி.

இரண்டாவது கட்டமாக, ஓவியரைத் தன்வசப் படச் செய்ய நினைத்தாள். ஓவியர் சிறையில் இருக்கும் போது தோழி பல முறை ஓவியரைச் சந்தித்து தன்னைக் காதலிக்கும் படி சொன்னாள், மேலும் அப்படி காதலித்தால் மரண தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்றும் சொன்னாள். இதற்கு ஒரு போதும் மயங்காத ஓவியர் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாரானார். ஓவியரைச் சம்மதிக்க வைக்க முடியாமல் போக, தோழி தனது திட்டத்தை மாற்றினாள். தனக்குக் கிடைக்காத ஏதும் இளவரசிக்கும் கிடைக்கக் கூடாதென்பதில் உறுதியாக நின்றாள். மன்னரிடம் பேசி தண்டனையை மாற்றி அமைத்தாள்.

இன்று தண்டனைக்கான நாள்.

ஓவியருக்குத் தண்டனை மாற்றப் பட்டது என்பது மட்டுமே தெரியுமே தவிர என்ன தண்டனை என்று தெரியாது. ஓவியர் சிறையிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர் முன் இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றைத் திறந்து உள்ளே செல்ல வேண்டும் என்பது தான் தண்டனை.

தண்டனை என்னவென்று மன்னருக்கும், இளவரசிக்கும், தோழிக்கும் மட்டுமே தெரியும். ஒரு அறையில் பசியுடன் கூடிய சிங்கமும், மற்றொரு அறையில் தோழியும் இருந்தார்கள். ஓவியர் சிங்கமிருக்கும் அறையைத் திறந்தால், சிங்கத்துடன் சண்டையிட்டு வென்றால் இளவரசியைத் திருமணம் புரியலாம், ஒரு வேளை தோழி இருக்கும் அறையைத் திறந்தால், தோழியை மணக்க வேண்டும்.

இது ஏதும் தெரியாமல் ஓவியர் கம்பிகளால் அடைக்கப்பட்ட கூண்டில் இரண்டு அறைகளுக்கு முன்னால் நின்றுக் கொண்டிருந்தார். கூண்டிற்கு வெளியே இடது புறம் மன்னன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அருகே இளவரசி ஓவியரின் கவனத்தைத் தன் பக்கம் இழுக்க சைகை செய்துக் கொண்டிருந்தாள். ஓவியர் அறைகளின் முன் நின்று கொணடு, இளவரசியை ஒரு முறை பார்த்தார். இளவரசி சைகை செய்தாள். ஓவியரின் உள்ளத்தில் மகிழ்ச்சி, முன் சென்று அந்த அறையைத் திறந்தார்.

பி.கு: பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லும் பாட்டிகளின் மத்தியில், எனது பாட்டி சிறிது டெக்னிகல். சில மாதங்களுக்கு முன்பு ஒரு விடுகதையைச் சொல்லி பதில் தெரியாது என்று சொல்லி்ட்டாங்க. பதில் தெரியலேன்னா என்ன, ஒரு சிறுகதைக்காவது ஆகுதே.