Wednesday, July 08, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 1

முன் குறிப்பு: தலைப்பைப் பார்த்து, ஏதோ சிந்துபாத் கதைகள் என்ற தொடர் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இந்தப் பதிவிற்குப் பின்னர் இந்த சிந்துபாத் கதைகள் தொடருமா என்றால், அது சந்தேகமே. உங்களின் ஆதரவைப் பொருத்தது.

நம்மிடையே இருப்பவர்களிடம் உலகத்தில் நீங்கள் போக நினைக்கும் இடம் எது என கேட்டால், சுவிஸ் நாட்டை பலரும் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் முக்கிய காரணம், ஜில் ஜில் ஐஸ், வேறொன்றும் இல்லை. நாங்களும் அப்படித் தான். அமெரிக்காவில் வேலை செய்யும் நம் மக்கள் ஐரோப்பாவிற்கு வந்தால் சுவிஸ் போவதில்லை, ஆனால் இங்கிலாந்தில் இருப்பவர்கள் அப்படி இல்லை. ஒரு வேளை இந்த ஜில் ஜில் ஐஸ் அமெரிக்காவில் இருக்கும் என்று நினைக்கவேண்டாம். இங்கிலாந்தில் வேலை செய்யும் மக்களுக்குத் தனியாக விசா தேவை இல்லாமல் இருந்த போது தான் நாங்களும் சென்றோம். இன்று இங்கிலாந்தில் இருப்பவர்களுக்குத் தனியாக விசா தேவைப்படுகிறது.

விசா தேவை இல்லாததால் செலவும் குறைவாகவே ஆகும் என கணக்கிட்டு கார்த்தியும், ஆதியும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அவர்களுக்கான பயணச்சீட்டுகளை வாங்கிவிட்டனர். பின்னர் இதைப் பற்றி எனக்குத் தெரிய, நானும் வருகிறேன் என்று சொல்ல, கார்த்தி எனக்கான பயணச்சீட்டும் வாங்கிவிட்டான். எது செய்தாலும் இன்சூரன்ஸ் வாங்க வேண்டி இருந்ததால், பயணத்திற்கும் நாங்கள் இன்சூரன்ஸ் வாங்கி விட்டோம். மூன்று நாட்களுக்கு என்ன பார்க்கலாம் என முடிவெடுத்து மூன்று நாட்களுக்கான சுவிஸ் சீசன் டிக்கெட்டும் வாங்கிவிட்டான் ஆதி. பணப் பற்றாக்குறையால் இரண்டாம் வகுப்பே தேர்வு செய்தோம். இதற்கு முன்னர் முதல் வகுப்பை எட்டிக் கூட பார்த்ததில்லை என்ற உண்மையைக் கடைசி வரையில் நான் சொல்லப் போவதில்லை. அது மட்டுமில்லாமல், அங்கு ஆதியின் நண்பன் ஒருவருடைய டெபிட் கார்டையும் வாங்கிவிட்டோம். அந்த புண்ணியவானுக்கு கடைசியில் பணம் தந்தால் போது என்றதால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

வெள்ளியன்று மாலை கிளம்பி, திங்கள் இரவு வருவதாக திட்டமிடப்பட்டது. எனக்கும் கார்த்திக்கும் திங்கள் விடுமுறை கிடைத்துவிட்டது. ஆதிக்கு கிடைக்கவில்லை. சரி அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம், ஆதியே கவலைப்படவில்லை.

5-அக்டோபர்-2007, வெள்ளி
அன்று காலை அலுவலகம் செல்லும் போதே, பெட்டியைக் கட்டிவிட்டோம் அனைவரும். நானும் கார்த்தியும் ஒரே வீட்டிலிருந்தோம். ஆதி மட்டும் வேறொரு ஊரில் தங்கியிருந்தான். அன்று காலையே அவனை தொலைப்பேசியில் அழைத்து அனைத்தையும் எடுத்துக் கொண்டாகிவிட்டது என உறுதி செய்த பின்னரே அலுவலகத்திற்குப் புறப்பட்டோம், ஆணியைப் பிடுங்குவது போல் பாவனை செய்ய. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மூவரும் தொலைப்பேசியில் அழைத்து பேசிக் கொண்டிருந்தோம். இது தான் எங்களின் முதல் தொலை தூரப் பயணம் என்பதால் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. நாங்களும் எவ்வளவு நேரம் தான் ஆணியைப் பிடுங்குவது போல் நடிப்பது. ஆனது ஐந்து மணி. கிளம்பினோம் மூவரும் அவரவர் அலுவலகத்திலிருந்து. மூவரும் ஒரு ரயில் நிலையத்தில் சந்திப்பதாக முடிவு செய்தோம். அதே போல் சந்திதோம்.

நான்கு மணிக்கு ரயிலில் இருந்தோம். அங்கேயே ஆரம்பித்தது எங்களின் புகைப்படங்கள் எடுக்கும் படலம். நானும் அப்போது தான் புதிதாக DSLR காமெரா வாங்கியிருந்தால், எதைக் கண்டாலும் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்ட்டிருந்தேன். அங்கிருந்து சுமார் முக்கால் மணி நேரத்தில் ல்யூட்டன் விமான நிலையம் வந்தடைந்தோம். ஏதேனும் வித்தியாசமாகத் தென்பட்டால், நாங்கள் என்ன செய்வது, தானாக காமெரா ஆன் ஆகிவிடுகிறது. நானும் புகைப்படம் எடுத்து விடுகிறேன். விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இம்மிக்ரேசனும், பிறகு போர்டிங்கும் ஆரம்பித்தது.

திருமலைக்குச் செல்ல, பேருந்தில் இடம் பிடிக்க கீழ் திருப்பதியில் எங்கோ வரும் பேருந்தை விரட்டி, பின்னால் அரை கிலோ மீட்டர் ஓடி, கிடைக்கும் சன்னலில் தன்னிடம் இருக்கும் ஏதோ ஒன்றைப் போட்டு இடம் பிடிப்பது என்பது திருப்பதியில் மட்டுமே என்று நினைத்திருந்தேன். எனது அறிவின்மையை எனக்கு எடுத்துக் காட்டினாள் அங்கு போர்டிங் பாஸ் தந்த வெள்ளைக்காரி.
'The boarding pass doesn't have the seat number', என்றேன்.
'Yeah, you can sit where ever you find place', என்றாள் அவள்.

அவ்வளவு தான், ஓடினோம், ஓடினோம், விமான நிலைய விளிம்பிற்கே ஓடினோம், சுவிஸ் எங்களைக் கட்டிப் பிடித்து அழைத்ததால், மீண்டும் உள்ளே சென்றோம்.
'மச்சி, சீக்கிரம் போறோம், இடம் பிடிக்கிறோம்', இது நான்.
இருவரும் சம்மதிக்க, எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ அவ்வளவு வேகமாக நடந்தோம். எங்களின் கேட் நம்பர் வந்ததும், முன்னே இருப்பவர்களை ஓவர் டேக் செய்து முன்னேறினோம். அனைவரையும் முந்திக் கொண்டு இதோ நாங்கள் மூவர் தான் முதலில்.
எங்களின் போர்டிங் பாஸ்களை அங்கு நின்றுக் கொண்டிருந்த பீட்டரிடம் காட்டி அவர் காட்டிய இடத்தில் நின்றோம். நாங்களே வரிசையில் முதலிடத்தில்.

'எங்க டா உக்காரலாம்', கார்த்தி கேட்டான்.
'முன்னாடியே உக்காரலாம் மச்சி, அப்போ தான் இவங்களுக்கு முன்னாடி நாம் நம்ம கால சுவிஸ்ல வெக்க முடியும்', பலமாக யோசித்து சொன்னான் ஆதி.

எங்களின் பின் ஒவ்வொருவராக நிற்க, எங்களின் பின்னர் இருபது பேர் இருந்தனர். அதன் பின் வருபவர்கள் U டர்னை எடுத்து, நின்றனர். அதாவது நாற்பதாவதாக வந்தவன் எங்களின் அருகில். அதே போல் என்பதாவதாக வந்தவன் நாற்பதாவதாக வந்தவன் அருகில். முப்பதைந்தாக இருப்பவர் எங்கே இருக்ககூடம்? எங்கள் மூவரின் பின்னால், அடுத்த வரிசையில். அதாவதாக கிட்டத்தட்ட எங்கள் பக்கத்தில் தான். புரிகிறதா? இல்லையெனில் மீண்டும் படிக்கவும்.

அதென்ன முப்பத்தைந்து? அங்கு நின்றுக் கொண்டிருந்தது அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு மேரி. உண்மையான பெயர் தெரியாது, எனவே அவளின் பெயர் இனி மேரி. மேரியின் கையிலிருந்த பாஸ்போர்ட்டைப் பார்த்து அவள் அமெரிக்கப் பிரஜை என்று தெரிந்து கொண்டேன். இதை கார்த்தியும் கவனிக்கத் தவரவில்லை.
'ஏய், நான் அந்தப் பொண்ணு பக்கத்துல உக்காரப் போறேன்', என்றான் ஆதி மேரியைப் பார்த்துக் கொண்டு,
'அதுக்கு அவளோட பாய் பிரண்டு ஒத்துக்கணும்', என்றேன்.
'ஓ அவனா?', முப்பத்தாறாவதாக நின்றவனைப் பார்த்துக் கேட்டான்.
'யாருன்னு தெரியாது, ஆனா அவ பேரிக்கா நாட்டுல இருந்து வந்திருக்கா, சோ கண்டிப்பா இருக்கும்', என்றான் கார்த்தி.
இப்படித்தான் யாருக்கும் புரிந்துவிடக்கூடாது என்று சில கோடு வார்த்தைகள் உருவாக்கினோம், சமயத்தில் எங்களுக்குக் கூட புரிந்துத் தொலையாது.
'பேரிக்கான்னா?', ஆதி கேட்டான்.
'பேரிக்கா நாடு மச்சி, நம்ம ஊருல நிறைய பேரு போவாங்களே', என்றேன்.
'ஓ அமெரிக்காவா?' என ஆதி கத்த மேரி திரும்பிப் பார்த்தாள்.
நானும் கார்த்தியும் ஆதியை உதைக்க முயன்றோம்.
'எப்படி டா கண்டுபிடிச்ச', ஆதி கேட்டான்.
பாஸ்போர்ட் தமிழாக்கம் செய்ய முயற்சி செய்து, பாஸ் மட்டுமே தமிழில் தெரிய, போர்ட் தமிழில் தெரியாமல், நான் 'தேர்வடைந்த... தேர்வடைந்த... தேர்வடைந்த...'
'துறைமுகம். தேர்வடைந்த துறைமுகம்', என்றான் கார்த்தி.
'அப்படின்னா... ஓ பாஸ்போர்டா?'.
மேரி மறுபடியும் எங்களைப் பார்த்தாள்.

போர்டிங் ஆரம்பிப்பது போல் தெரிந்தது நாங்கள் எங்களின் பையை எடுத்துக் கொண்டோம்.
'மச்சி, அவளுக்கு பின்னாடியாவது உக்காரணும் டா', என்றான் ஆதி.
போர்டிங் ஆரம்பித்தது. பின்னாலிருந்து தொடங்க, நாங்கள் தான் வரிசையில் கடைசி.
மேரிக்கு சிரிப்பும், எங்களுக்குக் கடுப்பும் வந்தது.

அதோடு முடிந்தது மேரியின் சகாப்தம்.
நாங்கள் விமானத்தில் கடைசியாக ஏறினாலும் எங்கள் மூவருக்கும் ஒரே வரிசையில் இடம் கிடைத்தது. விமானத்திலும் நின்றபாடில்லை எங்களின் புகைப்படப் படலம். நாங்கள் புறப்படும் முன்பே நாங்கள் எங்கு தங்க வேண்டும், எங்கு, எப்போது சுற்ற வேண்டும் என்று மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டிருந்தோம். அதன்படி நாங்கள் விமானத்திலிருந்து இறங்கிய பின் ஒரு மணி நேரத்தில் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து ரயிலை எடுத்தால், இரவு நாங்கள் பதிவு செய்த ஓட்டலுக்குச் சென்று விடலாம். விமானப் பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம். அனைத்தும் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்தில் எங்களின் விமானம் சுவிஸை வந்து அடைந்தது.

எங்கிருந்து தான் வந்ததோ புத்துணர்வு அந்த சோர்விலும். சுவிஸில் எங்களது பாதம் படும் போது எதோ நிலவில் கால் வைத்த ஒரு உணர்வு எங்களுக்கு. உற்சாகம் தாங்க முடியவில்லை. எங்கு எதைப் பார்த்தாலும், அங்கு நின்று கொண்டு ஒரு புகைப்படம். ரயிலுக்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்ததால், விமான நிலையத்திலேயே எங்களின் சுவிஸ் பயணத்தை ஆரம்பித்தோம். அம்ர்ந்து கொண்டு ஒருவன் புகைப்படம் எடுத்துக் கொண்டால், மற்றவரெல்லாம் என்ன சும்மாவா இருக்கப் போகிறார்கள்? அனைவரும் தலா ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதோடு நில்லாமல், அவரவர் காமெராவில் தனியாக புகைப்படங்கள் எடுக்க வேண்டியிருந்தது. நேரம் ஆகியதால் அங்கிருந்து கிளம்பி ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றோம்.



'மச்சி, இது ஆஃப் சீசன். அதனால நம்ம செகண்ட் க்ளாஸ் டிக்கெட்ஸ், பர்ஸ்ட் க்ளாசுக்கு அப்க்ரேட் பண்ணிட்டாங்க. சொல்ல மறந்துட்டேன்', என்றான் ஆதி.
ஏற்கனவே எங்களது கால்கள் நிலவில் வைத்தது போல் இருந்தது எங்களுக்கு, இதில் இந்த விஷயத்தைக் கொண்டாடியே ஆக வேண்டியிருந்தது. ஆயினும், ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டதால், எங்களின் பொறுப்புணர்ச்சி எங்களை ரயில் நிலையத்தை அடையச் செய்தது. இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது ரயில் ஏற. கூட்டமே இல்லாததைப் பார்த்து சற்று வியப்பாக இருந்தது. ஐந்து நிமிடங்களும் கழித்தோம். ரயில் வரவில்லை. அங்கிருந்த ஒருவரை நாங்கள் விசாரிக்கச் சென்றோம்.

'We have booked our tickets to Interlaken, when is the train expected',
'The last train has left almost one hour back', என்றார் அந்த சுவிஸ் காரர்.
'Our train is at 10 PM', என்றேன்.
அவர் சிரிக்க, எனக்குப் புரிந்துவிட்டது, சுவிஸ் நேரம் லண்டன் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னே. நாங்கள் கடைசி ரயிலைக் கோட்டைவிட்டோம்.

பயணம் தொடரும்...

8 comments:

புன்னகை said...

ரொம்ப நாளுக்குப் பிறகு, Me de 1st :-)
படிச்சிட்டு வரேன்.

புன்னகை said...

ஏற்கனவே நீங்க ஒரு முறை சொல்லிக் கேட்ட விஷயம் தான் என்றாலும், நீங்கள் சொல்லியிருக்கும் விதம், உங்களுக்கு ஒரு 'சபாஷ்' சொல்லத் தான் தோன்றுகிறது! வழக்கம் போல், நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. உங்கள் தொடர் விரைவில் தொடர வாழ்த்துக்களும் கூட! :-)

Manu said...

அடுத்த தடவை நானும் வரேண்டா...என்னையும் கூட்டிக்கொண்டு போகணும்..சரியா?

Truth said...

@புன்னகை
நன்றிங்க. தொடர்ந்து படிங்க :)

@Manu
கூட்டிட்டு போறேன், ஆனா இதே மாதிரி ரயில மிஸ் பண்ண வேண்டி இருக்கும் பரவாயில்லையா? :)

sujatha said...

வயிறு வலிக்க சிரிச்சேன். மற்றவரை சிரிக்கவைப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
மிகவும் எதார்த்தம். முதலில் சிந்துபாத் கதை என்றவுடன் படிக்க சோம்பல் பட்டேன். கடைசியில் தெரிந்தது உண்மையிலேயே இது சிந்துபாத் கதை தான். வழக்கம் போல் கண் முன்னாள் காட்சிகள் தென்பட்டன. என் மனதார வாழ்த்துக்கள். உங்கள் பயணம் தொடரட்டும்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Kiran.. kudos!! i felt the swiss's special chill weather for the time i was reading this story..
this will retain those happy moments even after we turn old & lose our memories... ;)

Truth said...

thanks Adi!