Thursday, July 09, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 2

இது வரை பயணித்தது...

'என்ன மச்சி, ஏர்போர்ட் சுத்தறது நம்ம ப்ளான்ல இல்லலெ', என்றான் கார்த்தி.
'இல்லேன்னா ஆரம்பிக்க வேண்டியது தான்', என்றேன்.
'சரி நம்ம ப்ளான மாத்தணும் ', இது ஆதி.
'சரி இங்கிருந்து அடுத்த ட்ரைன் எப்போன்னு தெரிஞ்சுக்கணும்', என்றேன்.

அப்போது அங்கே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வர, கார்த்தி அவரிடம் பேச்சு கொடுத்தான்.
'Hi, we are from London', என்றான் கார்த்தி.
'என்ன டா இவன் நம்ம ஊரையே மாத்திட்டான்', என்று நான் ஆதியிடம் கேட்டேன்.
கார்த்தியுடன் நானும் சேர்ந்து கொண்டு அவரிடன் பேசினோம். அடுத்த ரயில் இனி நாளை தான் என்றும், இன்று இரவு விமான நிலையத்தில் தான் எங்களது படுக்கை என்பதும் தீர்மானமானது. அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தான் இண்டெர்லேக்கனுக்கு முதல் ரயில் என்பதை தெரிந்து கொண்டு, விமான நிலையத்தைச் சுற்ற ஆரம்பித்தோம்.

அங்குமிங்கும் சுற்றி, பின்னர் களைத்த பின் ஒரு டீக்கடைக்கு முன் இருந்த சோபா செட்டில் செட்டில் ஆனோம். டீக்கடை என்றால் காபி டே ரேஞ்சுக்கு இருந்தது.
'நம்ம கிட்ட பர்ஸ்டு க்லாஸ் பாஸ் இருக்குன்னு சொன்னா நைட் தூங்க எங்கயாச்சும் நல்ல இடம் கிடைக்குமா', என்று கேட்ட என்னை இருவரும் முறைத்தனர்.

இரவு எங்கள் மூவரின் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ஒரு புது திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது எப்போது எங்கு சுற்றுவது என்று. நாங்கள் அடுத்த நாள் மாலை துன் என்ற இடத்துக்குக் கப்பலில் போக வேண்டும் என நினைத்தோம். ஆனால் ரயில் போகும் வழியில் துன் வருவதால், போகும் போதே வழியில் இறங்கி பார்த்துவிட்டு, துன்-இலிருந்து இண்டெர்லேக்கனுக்குக் கப்பலில் போவதாக முடிவெடுத்தோம். இரவு காபி டேயில் தூங்கி விட்டு அடுத்த நாள் காலை, பதறி அடித்துக் கொண்டு ஓடி ரயில் நிலையத்தை அடைந்தோம்.

6-அக்டோபர்-2007, சனி
ரயில் நிலையத்தில் கார்த்தி இங்கும் அங்கும் அலைந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
'என்ன டா தேடறே?', நான் கேட்டேன்.
'இனிமே நாம எல்லா இடத்துலயும் பர்ஸ்ட் க்ளாஸ் தானே, அதான் பர்ஸ்ட் க்ளாஸ் கம்பார்ட்மெண்ட் எங்க வரும்னு தேடிக்கிட்டு இருக்கேன்', என்றான்.
'அது சரி, நேத்து அவர் கிட்ட We are from Londonன்னு சொன்னே. என்ன மேட்டரு'
'அப்படி தான் மச்சி சொல்லணும். அப்ப தான் நமக்குத் தனி மதிப்பு கிடைக்கும்'.
'அப்படியா...?' என முழித்தேன். சரி இது தான் நாம் முதலில் மிக தொலைவில் வெளியே போகும் பயணம் என்பதாலும், எனக்கு முன்பே கார்த்தி, வெளி நாட்டில் இருந்ததாலும், நானும் நம்பி, 'சரி இனிமே நானும் அப்படியே சொல்றேன் டா', என்றேன் அப்பாவியாக.

காலை சுமார் 9:30 மணிக்கு துன் வந்து சேர்ந்தோம். அங்கிருக்கும் இடங்களைப் பார்த்து விட்டு 10:00 மணி படகிற்கு பதிலாக 11:00 மணி படகில் ஏறி இண்டெர்லேக்கன் போகலாம் என்று நினைத்தோம். துன்னில் பார்க்க என்ன இருக்கிறது என்று கூட முதலில் எங்களுக்குத் தெரியாது. எங்களின் முதல் திட்டம் இண்டெர்லேக்கனிலிருந்து துன்னிற்கு படகில் சவாரி செய்யவேண்டும் என்பது மட்டும் தான். அதனால் அருகிலிருக்கும் மக்களிடன் சற்று பேச்சு கொடுத்தோம். பாவம் மக்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்றாலும், சிறிது முயற்சி செய்து புரிந்து கொண்டு பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி விளக்கினார் ஒரு பெரியவர். அதில் முக்கயமானவை கோட்டை, ஆறு, அணை.

கோட்டை மிகச் சின்னதாகவும், மூடப்பட்டிருந்தும், பார்பதற்கு ரம்மியமாகவும், அழகாகவும் இருந்தது. பல இடங்களில் கேட்பார் யாருமின்றி குழாய்களில் குடிநீர் வழிந்து கொண்டிருந்தது.


அங்கிருந்து அருகிலிருந்த ஆறினைப் பார்க்கப் போனோம். ஆற்றின் பெயர் ஆரே. இது ஐரோப்பவில் பல நாடுகளுக்கிடையே ஓடுகிறதாம். காவிரி பற்றி மனதில் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை.

அருகிலிருந்த அணை மரக்கட்டையால் செய்யப்பட்ட அணை. எழுத முடியவில்லை - எனது எழுத்து அணையின் அழகைக் குறைக்கக்கூடும் என்பதால் புகைப்படம் மட்டும். நாங்கள் இல்லையெனில் அணையின் அழகு கூடியிருக்கும் என்பதில் உங்களைப் போல எனக்கும் ஐயமில்லை.


பதினொரு மணிக்கு படகில் ஏற அங்கிருந்த வரிசையில் நின்றோம். தினமும் பலர் துன்னிலிருந்து இண்டெர்லேக்கன் போவது போல் தெரிந்தது. பலர் நின்றுக்கொண்டிருந்தனர்.
'மச்சி, நம்ம கிட்ட பர்ஸ்ட் களாஸ் டிக்கெட் இருக்குல்ல', என்றேன்.
'ஆமா டா, நமக்கு நல்ல வரவேற்பு இருக்குனு நினைக்கிறேன்', என்றான் கார்த்தி.
ஆதி மட்டும் ஏதும் பேசாமல் காமெராவுடன் அருகிலிருக்கும் அழகைப் பெட்டிக்குள் அடைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.

நாங்கள் மூவரும் படகில் ஏறி விட்டோம். முதல் வகுப்பு முதல் மாடியில் இருந்தைப் பார்த்து, நாங்கள் மூவரும் மேலே ஏற முயன்றோம்.
அதைப் பார்த்த படகோட்டி எங்களைப் பிடித்து, 'Where are you going?', என்று கேட்டார்.
'We hold a first class ticket', என்றேன்.
என்ன நினைத்தாரோ, எங்களைப் பார்த்தால் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. பயணச்சீட்டைப் பார்த்தபின்னும் நம்பவேயில்லை. பின்னர் இன்னொருவர் வந்து பார்த்த பின் தான் எங்களை மேலே அனுப்பின்னார்.
'செம்ம மரியாதை மச்சி', என்றேன்.

மேலே எங்களுக்காக ஒரு பிரம்மாண்டம் காத்துக் கொண்டிருந்தது. படகு இல்லை, அது எங்களுக்கான டைடானிக் என்று தான் சொல்ல வேண்டும்.


கப்பலில் இருக்கும் ஒவ்வொரு முக்கிலும் நின்று பார்த்து வந்தோம்.
'மச்சி, நாம் பணக்காரப் பசங்க டா, பர்ஸ்டு க்ளாஸ்ல எல்லாம் போறோம்', என்றான் கார்த்தி.
'ஆமாம் டா', என்றேன். எங்களின் பின்னால் படகோட்டி இருந்ததைக் கவனித்து பேச்சைக் குறைத்தோம்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். இதோ வரப் போகிறது இண்டர்லேக்கன். மனதைக் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடும் போலிருந்தது நாங்கள் பார்த்த காட்சி. இது கனவா நினைவா என்று எங்களைக் கிள்ளிப் பார்த்துக் கொண்ட பின்னர் தான், இதை நான் காமெரா பெட்டியில் ஏற்றினேன்.


மனமே இல்லாமல் படகிலிருந்து இறங்கி, நாங்கள் முன் பதிவு செய்த ஒரு யூத் ஹாஸ்டலிற்குச் சென்றோம். மணி பன்னிரண்டு இருக்கும். தெருக்களில் அலைந்து தேடி, பின்னர் சேர்ந்தோம்.
'We are coming from London', என்றான் கார்த்தி.
'மறுபடியுமா?', என நினைத்துக் கொண்டேன்.
'We have booked beds for three of us', என்றான் கார்த்தி.
'We are sorry, the reception is closed, more over you have come a day later', என்றாள் அவள்.
'செத்தோம் டி'

பயணம் தொடரும்...

4 comments:

Manu said...

இண்டெர்லேக்கன் எவ்வளவு அழகு. வாழ்கையில் ஒரு தடவையாவது அங்கு சென்று வர வேண்டும் போல இருக்கிறது. அதன் அழகு மனதிலே நிற்கின்றது.

உன் எழுத்துகள் படிக்கச் படிக்கச் ஆர்வத்தை தூண்டுகின்றதே தவிர....சலிப்பே ஏற்பட வில்லை. உன் திறமைக்கு ஒரு சல்லுட்....

புன்னகை said...

//'நம்ம கிட்ட பர்ஸ்டு க்லாஸ் பாஸ் இருக்குன்னு சொன்னா நைட் தூங்க எங்கயாச்சும் நல்ல இடம் கிடைக்குமா', என்று கேட்ட என்னை இருவரும் முறைத்தனர். //
அடங்கவே மாட்டீங்களா நீங்க? :-)

சிரிச்சா யாரும் அடிப்போம்னு சொல்லிட்டாங்களா என்ன? முகத்த அப்படி வெச்சிருக்கீங்க???

//என்ன நினைத்தாரோ, எங்களைப் பார்த்தால் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. பயணச்சீட்டைப் பார்த்தபின்னும் நம்பவேயில்லை. பின்னர் இன்னொருவர் வந்து பார்த்த பின் தான் எங்களை மேலே அனுப்பின்னார்.//
ஓ அவ்ளோ மரியாதையா? ;-)

//அது எங்களுக்கான டைடானிக் என்று தான் சொல்ல வேண்டும்.//
ரோஸ் இருந்தாங்களா??? :P

//'செத்தோம் டி'//
அங்குமா? அய்யோ பாவம்! :-(

மொத்தத்தில் நல்லா இருக்குங்க. படங்கள் அற்புதம்.

Truth said...

நன்றி மனோ,

நன்றி புன்னகை. ரோஸ் தானே, இருந்தாங்க, ஜாக் கூட.

sujatha said...

புகை படங்கள் அற்புதம். கேமராவிற்கு நன்றி சொல்லுங்கள்