Monday, June 29, 2009

காசி யாத்திரை

ம்பதுகளைத் தாண்டி ஒரு சில வருடங்களாகி இருந்தும், மனதளவில் முப்பதுகளிலேயே இருந்தாள் பங்கஜம். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் தன் கணவனை இழந்தாள். தனகென்று பிள்ளைகள் யாரும் இல்லாத போதும், தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளும் அளவிற்கு மனவலிமை இருந்தது அவளிடம். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, தனது பதினேழாம் வயதில் திருமணம் செய்து கொண்டு, அன்றிலிருந்து ஒரு பெரிய குடும்பத்தைக் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளாக வழிநடத்துகிறார். தனது தம்பி வரதராஜனையும் படிக்க வைத்து, இதோ இன்று வரதராஜனுக்கும் திருமணம் ஆகி இருபத்தைந்து ஆண்டுகளாகியிருக்கும். பங்கஜம் இருந்த கூட்டுக் குடும்பத்தில் ஏதோ பிரச்சனை வர, வரதராஜன் தில்லிக்குச் சென்று கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. அன்றிலிருந்து இன்று வரை வரதராஜனைப் பற்றியும், அவனது குடும்பத்தைப் பற்றியும் ஒரு செய்தியும் இல்லாமல் வாழ்கிறாள் பங்கஜம். அக்காளின் கணவன் இறந்த செய்தி கூட தெரியாமல் அங்கு வாடிக் கொண்டிருந்தார் வரதராஜன்.

ஏனோ இன்று மறுபடியும் வந்தது தம்பியின் நினைவு. அவனது நன்பர்கள் சிலரிடம் பேசித் தெரிந்து கொண்டாள். அவனது முகவரியும், தொலைப்பேசி எண்ணையும். இருபது வருடங்கள். இது போதும், போதிய மாற்றத்தைக் கொண்டு வர. தொலைப்பேசியின் ரிசீவரை கையில் எடுத்தாள். 'குரல் நினைவிருக்குமா?' ஒரு முறை யோசித்தாள். 'உறவு நினைவிருக்குமா என்றல்லவா நான் யோசித்திருக்க வேண்டும்', என்று நினைத்து ரிசீவரை மனமில்லாமல் வைத்துவிட்டாள். பின்னர் ஏதோ ஒன்று சொல்ல, மறுபடியும், ரிசீவரை எடுத்து, எண்களைச் சுழற்றினாள். அது காலச் சக்கரத்தையும் விட வேகமாகச் சுற்றி, மறுமுனையில் மணி அடித்தது.
'ஹலோ', இது மறுமுனை
'ஹ... ஹலோ', பங்கஜம், வரண்டே போனது அவளது தொண்டை நீர்.
'கவுன் ஹே ஆப்?'
ஏதோ வினவியது போல் மட்டும் புரிந்தது அவளுக்கு, 'வரதராஜன் இருக்காங்களா?' என்றாள்.
இது போதுமே, மௌனம் மட்டுமே மொழியாகி விளையாடியது அங்கே, சில நிமிடங்கள்.

தயக்கத்துடன் ஆரம்பித்த தொலைப்பேசி அழைப்பு, சில நிமிடங்களிலேயே சோகமயமானது. அக்காவின் கணவனை, தன் தந்தையாகவே பாவித்ததின் காரணமோ தெரியவில்லை, வரதராஜனால் அதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. தன்னுடன் வந்துவிடும்படி அக்காவிடம் அழைப்பு விடுத்தான். தனக்கு பதினெட்டு வயதில் ராஜி என்று ஒரு மகளும், ஏழு வயதில் திவ்யா என்று ஒரு மகளும் இருப்பதாகவும் வரதராஜன் சொன்னதைக் கேட்டு, அளவற்ற மகிழ்ச்சி பங்கஜத்திற்கு. தான் காசி யாத்திரை போக வேண்டுமென்றும், காசி செல்லும் வழியில் தம்பியைப் பார்க்க வருவதாகவும் சொன்னாள்.

இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பங்கஜம் தில்லி விமான நிலையத்தில் வந்திறங்க, வரதராஜன் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். சுமார் முப்பது நிமிடப் பயணம். பல அடுக்கு மாடிக் கட்டிடங்களிடையே இருந்தது வரதராஜனுடைய வீடும்.
'வாங்க அக்கா', பூட்டைத் திறந்து உள்ளே அழைத்தான், வரதராஜன்.
'யாருமே இல்லையா வீட்டுல?'
'திவ்யா ஸ்கூலுக்குப் போயிருக்கா, இப்போ வந்திருவா', என்றான் வீட்டின் சுவற்றில் மாட்டி இருந்த பெரிய கடிகாரத்தைப் பார்த்து.
'லதா எங்க?', வரதராஜனின் மனைவியைப் பற்றி கேட்டாள்.
'லதாவும், ராஜியும், வெளியில போயிருக்காங்க, வர்ற நேரம் தான்', என்று சொல்லி ப்ரிட்ஜில் இருந்து தண்ணீரை ஒரு கோப்பையில் ஊற்றித் தந்தான்.
தண்ணீரைப் பருகியவாறே, பங்கஜம் சற்று வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு குட்டிப் பெண் உள்ளே ஓடி வர, இது திவ்யாவாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தாள் பங்கஜம்.

'திவ்யா செல்லம், இத பாரு யாரு வந்திருக்கா, அத்தை வந்திருக்காங்க', திவ்யாவைப் பார்த்து வரதராஜன் தன் அக்காவை அறிமுகப்படுத்தினான்.
முதன் முறையாகப் பார்ப்பதாலோ என்னவோ, திவ்யா சிரித்துக் கொண்டே, அறையினுள் சென்று விட்டாள். எனினும் சிறிது நேரம் கிழித்து வந்து அத்தையின் மடியில் அமர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டாள்.
'அம்மாவும், அக்காவும் எங்க டா', என்று திவ்யாவிடம் பங்கஜம் கேட்க, திவ்யாவோ, தன்னுடைய அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னர் லதாவும், ராஜியும் வந்தனர். ராஜி கொள்ளை அழகு. தனது அம்மாவைப் பார்த்தது போல் இருந்தது பங்கஜத்திற்கு.
'டேய், வரதராஜா, நீ அம்மாவப் பார்த்ததில்ல இல்ல, அம்மாவே உனக்கு மகளாப் பிறந்திருக்கா டா', என்று கண்ணீர் மல்க ராஜியின் தாடையைப் பிடிக்க, கையைத் தட்டி விட்டு உள்ளே சென்றாள் ராஜி. முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு வரதராஜனைப் பார்த்தாள் பங்கஜம்.
'அவ ஆளு தான் வளர்ந்திருக்கா, மூளை இன்னும் இரண்டு வயது மூளை தான், மெண்டலி சேலஞ்சுட்', என்றான்.
தூக்கி வாறிப் போட்டது அவளுக்கு.

அன்றிரவு வரதராஜனும், லதாவும் ராஜியைப் பற்றி பங்கஜத்திடம் சொன்னார்கள். ராஜிக்கு இரண்டு வயதிருக்கும் போது தான் இது தெரிய வந்ததாகவும், கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள அனைத்து மருத்துவர்களிடமும் ராஜியை அழைத்து சென்றும் பயனளிக்கவில்லை என்று லதா சொன்னாள். ராஜிக்கு தானே பயிற்சி தர முடிவு செய்து, பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, லதா தினமும் ராஜிக்குப் பல விஷயங்கள் சொல்லித் தந்தும் பயனளிக்கவில்லை என்றான் வரதராஜன்.

அடுத்த நாளிலிருந்து பங்கஜம் தன் முழு வேலையாக ராஜியைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள். இவளும் ஒரு சில நாளில் பங்கஜத்துடன் விளையாட ஆரம்பித்து விட்டாள். காலை முதல் மாலை வரை பங்கஜம் எங்கு செல்கிறாளோ, அங்கேயே ராஜியும் தென்பட்டாள். ராஜிக்கு உணவும் பங்கஜம் தான் ஊட்டினாள். இப்போதெல்லாம் இரவில் கதை கேட்காமல் தூங்குவதில்லை ராஜி. அவளுக்காக சில புத்தகங்களைப் படித்தாக வேண்டியிருந்தது பங்கஜத்திற்கு. இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளில் ஆரம்பித்து, இன்றைய சிவாஜி வரை எல்லாக் கதைகளையும், சற்றே மாற்றி அமைத்து கதையாகச் சொன்னாள் பங்கஜம். அவை ராஜிக்குப் புரிந்ததா இல்லையோ, முகத்தில் சிரிப்பிற்கு மட்டும் பஞ்சமில்லாமல் சந்தோஷமாகவே இருந்தாள் ராஜி.

'டேய், வரதராஜா, இனி நான் காசிக்குப் போகணும் டா, டிக்கெட் எடுத்துட்டு வந்துடு', என்றாள் பங்கஜம், ஒரு நாள்.
'என்ன அக்கா அவசரம், இப்போ தானே வந்தீங்க, பொறுமையா போகலாம்', என்றான் வரதராஜன்.
'ஐய்யோ, நான் வந்து மூனு மாசத்திற்கு மேல ஆயிடுத்து டா வரதராஜா, இந்த சனிக்கிழம போகணும் டிக்கெட் எடுக்க மறந்துடாத'
'என்னவோ போங்க, சரி காசிக்கு போயிட்டு, திரும்பி இங்க தான் வரனும், சரின்னு சொன்னா எடுத்துட்றேன்'
'சரி டா வரதராஜா', என்று சொல்லி மீண்டும் ராஜியுடன் பேச ஆரம்பித்துவிட்டாள், பங்கஜம்.

வெள்ளியன்று இரவு ராஜிக்கு எப்படிப் புரிந்ததென்று தெரியவில்லை, தன் அத்தை அடுத்த நாள் தன்னை விட்டு போய்விடுவது மட்டும் நன்றாகத் தெரிந்தது. அன்றிரவு முழுவதும் பங்கஜத்துடனே இருந்தாள் ராஜி. பங்கஜதிற்கு இரவு முழுக்க யோசனைகள் ஓடியது. அனைத்துச் சக்திகளும் இருந்து ஏன் கடவுள் இப்படிப்பட்ட குழந்தைகளைப் படைக்க வேண்டும்? இது கடவுளின் தோல்வியா அல்லது இது தான் உலக நியதியா? அல்லது அவர்களின் பெற்றோரைத் தண்டிக்கும் பொருட்டு இப்படிச் செய்யப்பட்டதா? இப்படிப்பட்ட குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி தன் தம்பியால் நிம்மதியாக இருக்க முடியும். இப்படிப் பல விஷயங்கள் அவளின் மனதில் ஓடியது. பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த ராஜியைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை ரயில் நிலையத்தில், அனைவரும் ஒன்றாக. ராஜி மட்டும் பங்கஜத்தை ஒட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.
'அக்கா, உங்களுடைய அந்த நீல நிறப் பையை மட்டும் சீட்டுக்கு அடியில வச்சிருக்கேன், பெரிய பை உங்க கூடயே வெச்சிக்கோங்க', என்றான் வரதராஜன்.
ஏனோ, இன்று மீண்டும் அனைவரின் முகத்திலும் மௌனம். அமைதியாக பங்கஜம் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, ராஜிக்கு முத்தங்களை வழங்கி விட்டு ரயிலின் சன்னலோரத்தில் அமர்ந்தாள். அந்தப் பத்து நிமிடங்கள் முழுவதும் மௌனம் மட்டுமே சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது. ரயில் கிளம்ப, முதன் முறையாக ராஜியின் கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப் பார்தது. ரயிலின் வேகம் கூடியது, சற்று நேரத்தில் ரயில் தூரத்தில் மாயமானது.

இங்கு ராஜி மயங்கி விழுந்தாள்.
அங்கு பங்கஜம், கதறி அழுதாள்.

இங்கு ராஜி உயிர் துறந்தாள்.
அங்கு பங்கஜம், தன் பையில் இருந்த விடத்தைத் தூக்கி எறிந்து, தன் பாவங்களைக் கழுவ காசிக்கு யாத்திரைச் சென்றாள்.

பி.கு: ஒரு உண்மை சம்பவத்தை தொட்டு எழுதப்பட்டது.

பி.கு: உரையாடல் சிறு கதைப் போட்டிக்கு எழுதப் பட்டது.

7 comments:

Arasi Raj said...

number 1 number 1.....//

.அப்பாட ரொம்ப நாள் கழிச்சு ஒரு "ஒன்னு" போட்டாச்சு ..

இப்போ தான் ஆப்பிச்க்குள்ள வந்துருக்கேன்..அப்புறமா படிக்குறேன்....சரியா..

Anonymous said...

என்னங்க... கடைசியில பங்கஜம் மாமியை 'ஆன்ட்டி/ஆண்டி'ஹீரோயின் ஆக்கிடீங்களே...

கதை சூப்பர்..
வெற்றி பெற வாழ்த்துகள்...

Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள்... good story :)

புன்னகை said...

முதல் முறையா உங்களிடமிருந்து ஒரு சோகப் பதிவு. மனம் கனத்தது உங்கள் கதையினைப் படித்து. நல்லா எழுதி இருக்கீங்க. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Truth said...

@நிலாவும் அம்மாவும்
//number 1 number 1.....//
அப்பாட ரொம்ப நாள் கழிச்சு ஒரு "ஒன்னு" போட்டாச்சு ..

வாங்க ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்திருக்கீங்க.

//இப்போ தான் ஆப்பிச்க்குள்ள வந்துருக்கேன்..அப்புறமா படிக்குறேன்....சரியா..

சரிங்க, சீக்கிரம் படிச்சிட்டு சொல்லுங்க :-)

**************************

@இங்கிலீஷ்காரன்
//கதை சூப்பர்.. வெற்றி பெற வாழ்த்துகள்...

நன்றி இங்கிலீஷ்காரன்

**************************

@பித்தன்
வருகைக்கு நன்றி.

**************************

@இராஜலெட்சுமி
// வாழ்த்துகள்... good story :)

ரொம்ப நன்றி இராஜி.

***************************

@புன்னகை
//முதல் முறையா உங்களிடமிருந்து ஒரு சோகப் பதிவு. மனம் கனத்தது உங்கள் கதையினைப் படித்து. நல்லா எழுதி இருக்கீங்க. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இத்தன நாள் காமெடிங்ற பேருலு மொக்ககளைப் போட்டுக்கிட்டு இருந்தேன் :-). ஏதோ எழுதலாம்னு தான். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி புன்னகை.

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு. வாழ்த்துகள்.

Truth said...

@வித்யா
//நல்லாருக்கு. வாழ்த்துகள்.
ரொம்ப நன்றிங்க.