Wednesday, July 22, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 8

... இதுவரை

அந்த நெருப்புக் குழம்பு எங்களை நெருங்கிக் கொண்டே வந்தது. பின்னால் இருக்கும் கூட்டம் ஒவ்வொருவராக நெருப்பில் கருகி மாயமாகிக் கொண்டிருந்தனர். இதோ வந்து விட்டது நெருப்பு எங்கள் அருகில். கொத்துக் கொத்தாக அனைவரும் கருகிக் கொண்டிருக்கின்றனர். அவளும், அவனும் கூட அதே நெருப்பில் கருகியே விட்டனர். தேவதை முடிந்த வரையில் பறந்து இங்கும் அங்கும் அலைகிறாள். முடிந்தே விட்டது தேவதையின் கதையும். எனது கால்களைப் பற்றிக் கொண்டிருந்த க்ளீனரை நான் தூக்கி நெருப்பில் 'சாவு டா', என்று எறிந்தேன். அவனும் எறிந்து அவனது சாம்பலும் எறிந்து போயிருக்கும். கதவு திறந்துக் கொண்டது. நானும் மீண்டும் முழு மனிதானேன்.

'ஐய்யோ, எனக்கு பயமா இருக்குங்க', என்றாள் என்னவள்.
'என்ன டி கதை நல்லாயில்லயா?', அவளை வளைத்து என் மார்பு மீது போட்டுக் கொண்டு கேட்டேன்.
'நல்லா தான் இருக்கு, ஆனா ஹனிமூன்ல இப்படியா கதை சொல்லுவாங்க?'
'நல்ல முடிவோட தானே முடிச்சேன்', என்றேன் அவளை என்னுடன் இறுக்கிக் கொண்டு.
'ஏதேது, நீங்க மட்டும் தான் உயிரோட இருக்கீங்க சார், என்னை தான் கொன்னுடீங்களே'
'அடியே, எல்லாம் ஒரு கதை தானே டி', என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டேன்.
'சீ, சும்மா இரு டா', என்று பொய்யாக சினுங்கினாள்.
'சும்மா இருக்கணுமா? உண்மையாவா சொல்றே?'
'என்ன சாருக்கு மூட் அதிகமா இருக்கு போல, இன்னைக்கு?'
'ஓ ஒவ்வொரு நாளும் எவ்வளவு மூடுன்னு கணக்குவேற இருக்கா?'
'சரி பாவம் தாமுவ எதுக்கு கொன்னீங்க?'
'ஹ ஹ, கதைய திரில்லா கொண்டு போகத்தான்'

அப்போது எனது தொலைப்பேசி சினுங்கியது. தாமுவின் பெயர் அதில் தெரிந்தது.
'தாமு தான் டி கால் பண்றான், ஸ்பீக்கர்ல போடறேன், கேளு', என்று என்னவளின் தோளில் எனது வலது கையை போட்டு, பக்கத்தில் இழுத்துக் கொண்டேன்.

'சொல்லு தாமு', என்றேன்.
'சார் நான் கிளம்பிட்டேன், இதோ பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்'
'வாட்?'
'வந்திருவேன் சார், அது வரைக்கும் பாத்துக்கோங்க'
'என்ன தாமு சொல்றே?'
'நீங்க தானே சார் கால் பண்ணி, பேய் இருக்குன்னு சொன்னீங்க', என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

நான் என்னவளைப் பார்த்தேன்.
'நீங்க கால் பண்ணவே இல்லையே', என்றாள் அவள்.
'எனக்கும் புரியவே இல்லை', என்றேன்.

கதவு 'டொக் டொக் டொக்', என்றது.

முற்றும்.

Tuesday, July 21, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 7

... இதுவரை

இப்போது இரவு மணி ஒன்று. நாங்கள் அனைவரும் ஒன்று கூடினோம். அவர் இந்த மந்திர ரிசார்ட்டுற்குரிய வரைப் படம் வைத்திருந்தார். அதைக் காட்டி இப்போது நாம் எங்கிருக்கிறோம், தப்பிப்பதற்கான வழிகளும் விளக்கினார். எனது கவனம் முழுவதும் அவர் சொன்ன வழிகள் மீதே இருந்தது. அனைவரும் அவர் சொன்ன விஷயங்களைக் கிழிந்த காதுகளால் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் சொன்னதை வைத்துப் பார்த்தால் நாங்கள் ஏதோ குகைக்குள் இருக்கிறோம் என்பது மட்டும் புரிந்துக் கொண்டேன்.

'இந்த இடத்தை விட்டு நாம் செல்ல முயன்றால் நாம் வெடித்து சிதறிவிடுவோம். நாம் தப்பிக்க ஒரு வழி தான் உள்ளது. அது வடக்கே உள்ள வழியில் நடந்துப் போனால், கடைசியில் வலம், இடம் என்று இடண்டு வழிகள் வரும். அதில் நாம் வலது பக்கம் செல்ல வேண்டும். அந்தக் கடைசியில் ஒரு மர்ம வாசல் உள்ளது. அந்த மர்ம வாசலைத் திறப்பதற்கான சாவி என்னிடம் உள்ளது', என்றார்.

நாங்கள் அனைவரும் அவர் காட்டிய சாவியைப் பார்த்தோம். அது ஏதோ மனித எலும்பினால் செய்யப் பட்டது போல் இருந்தது. கிட்டத்ட்ட ஒரு அடி நீலம் இருக்கும் அந்தச் சாவி. அவர் அந்தச் சாவியை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டு எங்களுக்கான கட்டளைகளை விடுத்தார். அதன் படி நாங்கள் பன்னிரெண்டு பேரும் வெவ்வேறு திசைகளில் சென்று நிற்க வேண்டுமாம். கடிகார முட்கள் இருக்கும் கோணத்தில் நாங்கள் அனைவரும் இருக்க வேண்டும். பேய்கள் எங்களை அண்டாமல் இருக்க எங்கள் அனைவருக்கும் மந்திரக்கப் பட்ட ஒரு கயிற்றைக் கட்டினார். அவர் சொன்ன படி நான் பன்னிரெண்டாவது முள் இருக்கும் இடத்தில் நிற்கவேண்டும். வரைப்படத்தை ஒரு முறை பார்த்தேன். நான் நிற்கும் இடம் அந்த மர்ம வாசலின் அருகில் தான் இருந்தது.

'இந்தச் சாவியை நீ வைத்துக் கொள்', என்று அந்தச் சாவியை என்னிடத்தில் தந்தார்.
நான் மர்ம வாசலுக்கு அருகில் இருப்பதினால் அந்தச் சாவியை என்னிடம் தந்திருப்பார் என்பதை புரிந்துக் கொண்டேன்.
'இந்தச் சாவியை வைத்து மர்ம வாசலைத் திறந்தால் என்ன ஆகும்?', என்று நான் கேட்டேன்.
'நான் எனது யாகம் முடித்தப் பின்னர் நீ திறந்தால், இந்த இடம் முழுவதும் பஸ்பமாகி விடும், நாம் தப்பித்துவிடலாம்', என்றார்.
'இல்லேன்னா?'
'நீ வெடித்து சிதறிப் போவாய்', என்றார் சிவந்த கண்களுடன்.
நான் அமைதியானேன்.

'சரியாக ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணி வரை தான் பேய்களின் பலம் குறைந்து இருக்கும். அப்போது நாம் அனைவரும் வெளியே சென்று அவரவர்களுக்கான இடங்களில் காவல் நிற்க வேண்டும்', என்றார்.
இனி எனக்கான சுய முயற்சி தேவையற்றது என்று தெரிந்துக் கொண்டதால், நான் அவர் சொன்னதை கேட்டு நடந்துக் கொண்டேன்.

'நான் யாகத்தை முடித்து விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு மர்ம வாசலுக்கு வந்து விடுகிறேன்', என்றார்.
'சரி, நீங்கள் அனைவரும் வந்தவுடன் என்னிடம் இருக்கும் சாவியால் நான் கதவைத் திறந்துவிடுகிறேன்', என்றேன்.

இரவு ஒன்றரை மணி:
அவர் சொன்னதைப் போல் நாங்கள் எங்கள் மணிக்கட்டில் மந்திரக்கப்பட்ட கயிற்றைக் கட்டிக்கொண்டு வெவ்வேறு திசைகளில் நிற்கச் சென்றோம். எனது கையில் அவர் தந்த எலும்பினால் ஆன சாவியும் இருந்தது. அவர் தன்னுடன் யாகத்துக்குத் தேவையானவற்றை ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டார்.

நாங்கள் அனைவரும் பிரிந்தோம். ஒன்று, பதினொன்று மணி கோணங்களில் நிற்பவர்கள் என்னுடன் வந்தார்கள். அருகில் சென்ற பின் அவர்களிடமிருந்தும் நான் பிரிந்து நான் நிற்க வேண்டிய இடத்திற்கு தனியாக வந்து சேர்ந்தேன். இந்த இடத்தின் வரைப் படம் என் கண்களிலேயே இருந்தது. அதன் படி அங்கு மர்ம வாசலைப் போல் ஒன்றும் இருக்கவில்லை. சாவியைப் போட ஒரு துவாரமும் இல்லை. ஒருவேளை இது மர்ம வாசல் என்பதால், யாகம் முடித்தப் பின்னர் தான் பூட்டின் துவாரம் கூட தெரியவரும் போல் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

சுமார் பத்து நிமிடங்களாகியிருக்கும். யாகம் முடிந்த பாடில்லை. மணி இரண்டாவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் தான் இருக்கிறது. நான் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். மந்திர வாசலில் துவாரம் மெல்ல காட்சியளித்துக் கொண்டிருந்தது. தப்பித்தல் இப்போது இன்னும் ஒரு சில நிமிட தூரத்தில் தான் இருந்தது. நான் இருக்கும் இடத்திற்கு வர இதோ இந்த ஒரு வழி தான் இருக்கிறது.

இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது. பேய்களின் தூக்கம் முடியப் போகிறது. அனால் இன்னும் இவர்கள் வரவில்லை.
அதோ அங்கே யாரோ வருகிறார்கள் என்பது தெரிகிறது. ஒருவர் மட்டுமே வருகிறார், மற்றவர்கள் எங்கே என்று தெரியவில்லை. ஒருவராக இருந்தால் இவர் க்ளீனர் இல்லை. வேறு யாரோ வருகிறார்களா? அவர் தூரத்திலிருந்து நடந்து வந்துக் கொண்டிருக்கும் போதே எனக்குள் ஏகப்பட்ட சந்தேகங்கள் மீண்டும் எட்டிப் பார்த்தது. நாங்கள் ஏன் வெவ்வேறு திசைகளில் நிற்க வேண்டும்? அவரிடம் சாவி இருக்கும் பட்சத்தில் ஏன் இது வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும்? நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது தூரத்தில் இருந்து நடந்து வந்துக் கொண்டிருந்தவர் அருகில் வந்தார். அவர் அதே மூன்றடி க்ளீனர் தான்.

'மத்தவங்க எல்லாம் எங்க?', என்று கேட்டேன்.
'அவர்கள் இனி வரப் போவதில்லை', என்றார்.
எனது சந்தேகங்கள் வலுத்துன. இவர் அனைவரையும் கொன்று இவர் மேலும் சக்திப் பெற்று வருகிறார். மேலும் இவரது அடுத்த கொலை நானாகத் தான் இருக்கப் போகிறேன், என்பது எனக்கு தெரிந்து விட்டது.
'ஓ, நீயும் போலி தானா?', என்றேன்.
'தெரிந்துவிட்டது அல்லவா, இனியும் தப்பிக்க முயற்சிக்காதே', என்றார்.

இரண்டு நிமிடங்களில் தான் இன்னும் இருக்கிறது. பேய்கள் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும்.

'என்னை நீ அவ்வளவு சுலபமாக கொல்ல முடியாது', என்றேன், கையில் சாவியுடன்.
'ஹா ஹா, நீ வைத்திருக்கும் சாவி போலி, உன்னை கொன்று, என்னிடம் இருக்கும் உண்மையான சாவியால் திறந்து நான் வெளியே செல்லப் போகிறேன்', என்றார்.
நான் சிரித்துக் கொண்டே, 'ஹலோ தம்பி, முளைச்சு மூனு இல விடல, என்னய பாத்தா என்ன கிண்டலா இருக்கா?', என்று எனது வலது காலால் அவரது கழுத்தில் உதைத்தேன்.

அதோ அவர் பத்தடி தூரத்தில் விழுந்தார். அவரிடம் இருந்த பெட்டி தூரத்தில் விழுந்தது. பெட்டி உடைந்து சாவி வெளியே விழுந்தது. அவர் ஓடிச் சென்று அந்தச் சாவியை எடுக்க முயன்றார். நான் இங்கிருந்தே தாவி, அவர் மீது விழுந்தேன். அவரை எனது இடது கையால் தூக்கி எறிந்தேன்.

பேய்கள் முழிக்க இன்னும் ஒரே நிமிடம் தான் இருக்கிறது.

அவர் மீண்டும் என்னிடம் வந்து சாவியை எடுத்துக் கொண்டார். எனக்கு ஏனோ இவனை கொன்று விடுவது நல்லது என தோன்றியது. எனது காலால் அவனது கழுத்தை மிதித்தேன். அவன் சிரித்துக் கொண்டே, அவனது வலது பக்கம் பார்த்தான். தூரத்தில் பலர் பறந்து வருவதை பார்த்தேன். இனி இவனிடம் சண்டை போடுவதற்கு நேரம் இல்லை.

முப்பது வினாடிகள் மட்டுமே இருக்கிறது இப்போது.

அவர் எனது கால்களை பிடித்துக் கொண்டிருந்தார். அவரை தூக்கிப் போடவும் முடியவில்லை. இதோ அந்தப் பேய்க் கூட்டம் என்னை நெருங்கிவிட்டனர். நான் அவரை காலால் இழுத்துக் கொண்டு மர்ம வாசலுக்கு நடக்க முயன்றேன்.

இரண்டு வினாடிகள் மட்டுமே.
பேயக்ள் கீழே இறங்கி விட்டு, வந்து சேர்ந்தனர். நான் மர்ம வாசலில் இருக்கும் துவாரத்தின் அருகே நின்றேன். உண்மையான சாவியை பூட்டில் திருகி பூட்டைத் திறந்தேன்.

இப்போது மணி இரண்டு.
எங்கேயோ தூரத்திலிருந்து நெருப்புக் குழம்பு எங்களை நோக்கி வர ஆரம்பித்தது.

அடுத்த பதிவில் முடியும்...

Monday, July 20, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 6

...இதுவரை

யோசித்து பார்த்து முடிவெடுக்கும் சமயம் இல்லை இது. ஐம்பது பேரிடமிருந்து தப்பிக்க வேண்டிய சமயம். எனது பின்னால் இருந்த கூட்டம் என்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். நான் உடனே எனது வலது பக்கம் திரும்பி ஓட, தாமுவாகிய அவன் என்னைப் பிடிக்க முயன்று அவனிடமிருந்து தப்பித்து நான் ஓட ஆரம்பித்தேன். அங்கிருந்த ஏதாவது ஒரு அறையில் நுழைந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றால் அங்கிருக்கும் அறைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையும் தட்டிப் பார்த்து விட்டு திறக்காமலிருக்க, தாமுவும், அவளும், என்னை துறத்த, அவர்களின் பின் ஐம்பது பேர் வந்துக் கொண்டிருந்தனர்.

அதோ தெரிகிறது ஒரு அறை, இல்லை இல்லை அது அறை இல்லை. ஏதோ ஒரு கோ-டவுன் போல் காட்சி அளித்தது. அதில் ஏதோ மூட்டைகள் மட்டுமே திணிக்கும் அளவிற்குத் தான் கதவு இருந்தது. ஆனால் அது திறந்து தான் இருக்கிறது. என்னால் அதில் புகுந்து போய் விட முடியும். எனது வேகத்தை முடிந்த வரையில் கூட்டினேன். பின்னால் வருபவர்களின் வேகமும் இப்போது கூடியிருக்கிறது. அந்த அறை இதோ இருபது அடி தூரம் தான். பின்னால் என்னை துரத்துபவர்களுக்கும் எனக்கும் அதே இருபது அடி தூரம் தான். வேகத்தைக் கூட்டினால் தவிர என்னால் அங்கு நின்று குனிந்து அந்த பொந்துக்குள் சென்று விட முடியாது. இதோ வந்துவிட்டேன். இன்னொரு ஐந்து அடி தான். எனது வேகத்தை குறைத்து கீழே குனியும் போது தேவதை என் முன் வந்து நின்றாள். கண் வீங்கி, காது தொங்குகிறது தேவதைக்கும். அவளது சிங்கப் பற்கள் வளர்ந்து இருக்கிறது. நான் நின்றுவிட்டேன்.

பின்னால் அந்த கூட்டத்துடன் படை எடுத்து அவளும், அவனும் வந்து சேந்தனர். தேவதை எனது வயிற்றைப் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஐயோ, முடிந்து விட்டதா? இன்னும் ஒரு சில வினாடிகளில் நானும் இவர்களில் ஒருவனாவேன். பிரிதொரு சமயம் நானும் இவர்களோடு சேர்ந்து இங்கு தங்க வருபவர்களை துரத்தப்போகிறேன். அதை நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அந்த சிறிய கதவின் துவாரம் வழியாக இரு கண்கள் எனக்குத் தெரிந்தன. எனக்குத் தெரிந்த கண்கள் மற்றவர்களும் உணர்ந்தனர். தேவதை வலதோரமாகப் பறந்து வவ்வாலைப் போல் ஒரு மரக் கிளையில் தொங்க ஆரம்பித்தாள். அவளும், அவனும் மேலும் என் பின் இருந்த கூட்டம் அனைவரும் பறந்து அருகிலிருந்த மரக்கிளைகளில் தொங்கினர். இந்த மரக்கிளைகள் எல்லாம் நான் நேற்று வரை பார்த்ததில்லை. இவை இப்போது புதிதாக முளைத்தது போல் இருந்தது. அந்தக் கண்கள் இப்போது என்னை பார்த்துக் கொண்டிருந்தன.

இவை அனைத்தும் என்ன? நான் இப்போது என்ன செய்ய வேண்டும். இந்தக் கண்களைக் கண்டு ஓட வேண்டுமா? இல்லை இந்தக் கண்களிடம் இருந்தால் தான் தேவதையிடமிருந்து தப்பிக்க முடியுமா? இந்தக் கண்களைக் கண்டு தான் அனைவரும் ஓடி விட்டனர். ஆக இந்த கண்களிடம் இருந்தால் நான் தேவதையிடமிருந்து தப்பிக்க முடியும், ஆனால் இந்தக் கண்கள் என்னை ஒன்றும் செய்யாதா? இத்தனைக் கேள்விகள், ஒரு கேள்விக்கும் என்னிடத்தில் பதில் இல்லை. இனி சுயமாக யோசித்து எந்த முடிவிற்கும் வரும் அளவிற்கு மனதில் திடமும் இல்லை, நேரமும் இல்லை. நான் அங்கிருந்து ஓட ஆரம்பித்ததும், தேவதை தன் படையுடன் கீழே இறங்கினாள். நான் மீண்டும் அந்தக் கண்களிருக்கும் கதவருகே சென்றேன். மீண்டும் தேவதைக் கூட்டம் பறந்துச் சென்றது. அதே சமயம் அந்த அறையிலிருந்து ஒரு கை வெளியே வந்து என்னை உள்ளிழுத்துச் சென்றது.

அறையின் கதவு அடைக்கப்பட்டது. உள்ளே இருட்டைத் தவிர வேறொன்றும் கண்களுக்குத் தெரியவில்லை. மௌனத்தைத் தவிர வேறொன்றும் காதுகளுக்குக் கேட்கவில்லை. அறையின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதினால் என்னால் நிற்கவும் முடியவில்லை. நான் தவழ்ந்துக் கொண்டே அந்தக் கண்களை தொடர்ந்துச் சென்றேன். இது வேறு உலகம் போல் உணர்ந்தேன். இரண்டு நிமிடங்கள் தவழ்ந்திருப்பேன். அதோ அங்கே வெளிச்சம் தெரிகிறது. அறையின் உயரம் இப்போது அதிகரித்தது. இப்போது என்னால் நிற்கவும் முடிகிறது. வெளிச்சம் இன்னும் சற்றுக் கூட, அந்தக் கண்களைச் சுற்றி இருக்கும் மனிதனைப் பார்த்தேன். அவன் அதே மூன்றடி க்ளீனர் தான்.

'நீயா?... நீங்களா?', என்றேன்.
'கவலைப் படவேண்டாம், இப்பொழுது நீ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாய்', என்றான்.
'இது எல்லாம் என்னது? நான் எங்க இருக்கேன்? நீங்க என்ன பண்றீங்க இங்க?'
'இது கிட்டத்தட்ட வேறு உலகம். இதிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதில்லை'
நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். க்ளீனர் நடந்தார். நானும் அவரைத் தொடர்ந்தேன். அங்கிருந்து அடுத்த அறைக்குச் சென்றோம். அங்கு ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள், கணக்கெடுக்க முடியாத அளவிற்கு மனித உடல்கள் இருந்தன. அங்கிருந்த அனைவருக்கும் என்னைப் போலவே முகத்தில் காயங்கள். இறந்த உடல்களின் அழுகிய நிலை வெவ்வேறாக இருந்தன. சில உடல்களில் வெறும் எலும்புக் கூண்டுகள் மட்டுமே இருந்தன.

'இங்க இருந்து எப்படி தப்பிக்கிறது. இவங்க எல்லாம் யாரு?'
'இவர்கள் அனைவரும் உன்னைப் போல் நான் காப்பாற்றியவர்கள் தான். மொத்தம் பதின்முன்று பேர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தப்பிக்க முடியும். இப்போது உன்னுடன் சேர்த்து பன்னிரண்டு பேர், என்னையும் சேர்த்து பதின்மூன்று பேர்', என்றார்.
'இங்க இத்தனை பேரு இறந்துகிடக்கறாங்க, இவங்க உயிரோடு இருக்கும் போது முயற்சி பண்ணலியா?'
'ஓரிரு முறை தப்பிக்க முயற்சி செய்யும் போது இவர்களில் சிலர் இறந்து விட்டனர்', என்றார்.
'அப்போ மத்த உடல்கள்?'
'அவர்கள் வெளியே போக முயற்சிக்கு என்னுடன் ஒத்துழைப்பு தராததால் நான் கொன்றுவிட்டேன்', என்றார்.
நான் இதற்கு பயப்படவில்லை. இப்போது எனது நம்பிக்கை அளவுகோளின் முள் மேலே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
'எப்போ தப்பிக்கலாம்?', என்றேன்.

இனி தாக்குதல் வேட்டை தொடரும்...

Sunday, July 19, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 5

...இதுவரை

என்னவளின் மரணத்திற்கு அழ இது நேரமில்லை என்பதும், தாமுவைக் காப்பாற்றவதன் மூலமாகத் தான் நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை மட்டுமே நான் உணர்ந்திருந்த சமயம் இது. என்னவளின் தலையை கீழே போட்டுவிட்டு நான் குளியலறையின் வெளியே ஓடிவந்து, மீண்டுமொரு முறை என்னவளோடு இருந்த மெத்தையை ஒரு முறை பார்த்துவிட்டு கதவைத் திறந்தேன். கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது.

எனது 9mm பிஸ்டலால் பூட்டிய கதவை சுட்டு, பூட்டை உடைத்து வெளியே வந்தேன். இருட்டில் எனக்கு ஒன்றும் சரியாகத் தென்படவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். என்னவள் இன்னேரம் தாமுவை பார்த்திருப்பாள். ஆனால் அவன் இன்னும் உயிரோடு தான் இருப்பானா என்பது கேள்விக்குறி தான். என்னவள் எப்போது, எப்படி கொல்லப்பட்டிருப்பாள் என்பது என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

முதலில் கதவு தட்டும் போது என்னவள் குளியலறைக்கு ஆடையுடன் ஓடினாள். அப்போது க்ளீனர் என்னிடம் ஏதோ சொல்ல வந்திருக்கும் போது, என்னவளின் உயிர் போயிருக்கிறது. இதை நினைக்கும் போதே என உயிர் ஒரு கனம் வெளியே சென்று திரும்பி வந்தது. அதன் பின் குளியலறையிலிருந்து 'நான் ரெடி' என்று சொல்லி வெளியே வந்தது என்னவள் இல்லை. பின்னர் நடுவே கானாமல் போனதும், பிறகு வந்ததும் என்னவள் இல்லை.

சரி இனி அதைப் பற்றி யோசிப்பதில் எந்த உபயோகமும் இல்லை என்பது முடிவாகியது. தாமு எங்கே என்பதை தேட முற்பட்டேன். இருட்டில் நான் எங்கு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பது கூட எனக்குச் சரியாகத் தெரியவில்லை. போகும் வழியெங்கும் ஏதேதோ தடங்கல்கள் இருந்துக் கொண்டே தான் இருந்தது. எதை மிதிக்கிறேன், எதை இடிக்கிறேன் என்று கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். அதோ இருக்கிறது தாமுவின் கார். ஆனால் தாமு அங்கு இல்லை. அவன் கண்டிப்பாக இப்போது என்னவளிடம்... இல்லை இல்லை அவளிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். அவள் என்று தான் இனி அவளைச் சொல்ல வேண்டும். மூளை முழுவதும் பயம் சூழ்ந்துக் கொண்டிருந்தாலும் ஏனோ என்னவளைக் கொலை செய்த அவளை ஒழித்துவிட்டுத் தான் போகவேண்டும் என்று மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

நான் லாபியில் ஓடிக் கொண்டிருந்த போது என்னைத் தவிர இன்னொருவர் ஓடும் சத்தம் கேட்பதை நான் உணர்ந்தேன். ஐயோ, அது தாமுவாகத் தான் இருக்க வேண்டும். அவள் தாமுவைத் துரத்துகிறாள். இப்போது தாமுவின் கார் இக்னைட் ஆனது. அதோ நான் அவனை காரில் பார்க்கிறேன். அவன் வெளியே போகிறான். என்னை இங்கேயே விட்டுப் போகிறான். கார் வெளியே சென்ற அந்த வினாடி கார் வெடித்து சிதறியது. தாமுவும் என்னை விட்டு போய்விட்டான். இப்போது விளக்குகள் எல்லாம் மிண்டும் பிரகாசமாய். என் முன்னால் ரிசப்ஷன். அதே தேவதை ரிசப்ஷனிஸ்டாக இருந்தாள். அவளிடம் நான் ஓடிச் சென்றேன்.

அவளின் பின்னால் இருந்தால் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து என்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேனா? எனது முகம் முழுவதும் கொழ கொழவென்று இரத்தம் படிந்திருந்தது. சட்டை முழுவதும் இரத்தக் கறை. எனது இடது கண் வீங்கியிருந்தது. வலது காது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. நான் ஓடி வரும் போது இருந்த தடங்கல்களை யோசித்துப் பார்த்தேன். பல இடங்களில் நான் தடுக்கி விழுந்து, பல முறை என் மீது ஏதோ விழுந்தது எல்லாம் என் நினைவிற்கு வந்தது. தாமுவைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று நினைத்ததில் என்னை நான் கவனிக்க தவறவிட்டேன்.

தேவதை என்னைப் பார்த்து, 'என்ன சார் என்ன ஆச்சு?' என்றாள்.
என்ன ஆச்சா? இவை அனைத்தும் ஒருவேளை எனக்கு மட்டும் தானா நடந்தது? இவள் நடந்தவை எல்லாம் அறிந்திருப்பாளா? இவளுக்கு என் முகத்தில் இருக்கும் காயங்கள் தெரிகிறதா? இல்லை எனக்கு மட்டும் தானா இதுவும்?
'என்ன சார் ஆச்சு? இவ்வளவு ரத்தம்?', என்றாள்.
ஓ, இவளுக்கு என்னுடைய காயங்கள தெரிகிறது. ஆனால் இது வரைக்கும் நடந்த பேய் விஷயங்கள் தெரிந்திருக்காதா? சரி நமக்கு உதவி தான் வேண்டும்.
'மேடம், எனக்கு ஒரு உதவி வேணும்'
'சொல்லுங்க சார், எனிதிங்'
'நான் உடனே சென்னைக்கு கிளம்பணும்', என்றேன்.
'அது முடியாது சார்', என்றாள்.
எனக்குப் புரியவில்லை. அடுத்த நொடி அவளின் வலது பக்கத்தில் இருந்து என்னவளைப் போல் இருந்த அவள் வெளியே வந்தாள். அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். தேவதையின் இடது பக்கத்திலிருந்து தாமு வெளியே வந்தான்.
ஓ தாமு சாகவில்லையா? பின், காரில் இருந்தவன் யார்? ஒரு வேளை இறந்தவர்கள் மீண்டும் இப்படி வருகிறார்களா? இப்போது லேசாக புரிந்தது என்னவளைப் போல் அவள் எப்படி என்றும், தாமுவைப் போல் அவன் எப்படி என்றும்.

இனி ஓட்டம் மட்டுமே நமக்குத் தெரிந்த ஒரே ஆயுதம். உடனே பின்னால் திரும்பி ஓட ஆயத்தமானேன். எனக்கான அதிர்ச்சிக்கு எங்குமே பஞ்சம் இல்லை. எனது முன்னால் கிட்டத்தட்ட ஐம்பது பேர் முகத்தில் இரத்த காயங்களுடன் இருந்தனர். அனைவருக்கும் இடது கண் வீங்கியிருந்தது, வலது காது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர்கள் அனைவருக்கும் இடது பக்கத்தில் வயிறு வெட்டி எடுக்கப் பட்டிருந்தது. நான் எனது வயிற்றை தொட்டுப் பார்த்தேன். இல்லை நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். அனைவரும் இதற்கு முன்னர் இங்கு இறந்தவர்களாகத் தான் இருந்திருக்கக்கூடும். எனது இரத்த காயங்களுக்கு இவர்கள் தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

நான் மீண்டும் திரும்பி தேவதையைப் பார்த்தேன். இப்போது தேவதைக்கும், அவளுக்கும், அவனுக்கும் அதே காயங்கள் இருந்தன. அவள் தனது சிங்கப் பற்களை காட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தாள். இம்முறை அவை அழகாக இருந்திருக்கவில்லை.

எனக்கு முன், தேவதை, அவள், அவன். எனக்கு பின்னால் சுமார் ஐம்பது பேர். எனது நம்பிக்கை அளவுகோளின் முள் இப்போது எங்கேயோ அதலபாதாளத்தில் இருக்கிறது.

வேட்டை, பழிவாங்குதல், தப்பித்தல், இம்மூன்றில் ஒன்று கூடிய விரைவில்...

Saturday, July 18, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 4

...இதுவரை

நான் சுற்றும் முற்றும் பார்த்தும் என்னவள் அங்கே இல்லை. உள்ளே இருக்கும் இன்னொரு அறைக்குச் சென்று பார்த்து, அங்கும் அவள் இல்லை. குளியலறையிலும் தேடிப் பார்த்துவிட்டேன். அங்கு இருந்த சோப்பு பெட்டி கீழே விழுந்திருந்தது. ஒரு வேளை அது அவள் ஆடை அணியும் போது கீழே விழுந்திருக்கலாம். இது விளையாடும் நேரம் இல்லை என்பது அவளுக்கு ஏன் புரியவில்லை. நான் பார்த்த காட்சிகளை அவள் பார்த்திருந்தால் அவள் என்னை விட்டு எங்கும் போயிருக்கமாட்டாள்.

'அடியே...', நான் அலறியது எனக்கு மட்டுமே பல முறை கேட்டது போலும், யாருமே பதில் சொன்ன பாடில்லை. எனக்குள் இப்போது பயம் எட்டிப் பார்த்தது. எனது கைகள் உதற ஆரம்பின. எனது தொலைப் பேசியை எடுத்து மீண்டும் ஒரு முறை நான் தாமுவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவன் கிளம்பி ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். அவன் வழியின் நடுவே இருக்கலாம்.
'போன எடுடா...' அவன் தொலைப்பேசியை எடுக்கவே இல்லை. நான் குளியலறையிலிருந்து வெளியே வந்து, அங்கிருந்து மெத்தையிருந்த அறைக்கு வந்தேன். எனது தொலைப்பேசி சினுங்கி, குறுஞ்செய்தி வந்திருப்பதை எனக்கு அறிவித்தது.
'நான் வந்துட்டேன்', என்றது அந்தக் குறுஞ்செய்தி. தாமு வந்துவிட்டான் போல் இருக்கிறது.

நான் என்னவளின் தொலைப்பேசிக்கு அழைத்துப் பார்க்கலாம் என்று நினைத்து அவளது எண்ணைச் சுற்றினேன். அவளது தொலைப்பேசி மெத்தையின் மீதே தான் அலறிக்கொண்ட்டிருந்தது. அவள் எப்போதும் தன்னுடன் தொலைப்பேசியை வைத்திருக்கும் பழக்கம் அவளிடத்தில் இல்லை. அழைப்பைத் துண்டித்ததும், எனது தொலைப்பேசி ஆஃப் ஆகியது. எனது தொலைப்பேசி ஆன் ஆகவே இல்லை. அடுத்த வினாடி அறையின் விளக்குகள் அனைத்தும் அனைந்து விட்டன.

வெளியே சென்றிருப்பாளா என்ற சந்தேகம் ஏனோ எனக்கு இதுவரை வரவில்லை. பார்த்துவிடலாம் என்று நினைத்து கதவருகே சென்ற போது ஜன்னல்கள் தட்டப்பட்டது. அதே விரல்கள் வந்த ஜன்னல் தான். ஒரு பக்கம் கதவு இன்னொரு பக்கம் ஜன்னல். மற்றொரு பக்கம் என்னவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை.

ஒன்று மட்டும் எனக்குக் கச்சிதமாகப் புரிந்துவிட்டது. இதிலுள்ள முடிச்சுகளை அவிழ்த்து, கடைசியில் முடியாத பட்சத்தில், என்னவளைக் கண்டுபிடித்து இங்கிருந்து தப்பிக்க வேண்டும். நான் இம்முறை கதவைத் திறப்பதற்கு பதிலாக ஜன்னலருகே சென்றேன். ஜன்னல் பலமாகத் தட்டிக் கொண்டிருந்தது. நான் ஜன்னலைத் திறந்து பார்த்தேன். என் கண்களுக்கு எட்டிய வரையில் எதுவுமே தென்படவில்லை, ஏதோ ஒரு மயான பூமியில் இருப்பது போல் ஒரு உணர்வு. ஜன்னலைத் தட்டியது யாரென்று தெரியவில்லை. அங்கு யாரும் இல்லை. சரி இனி கதவைத் திறந்து என்னவளைத் தேடும் பணியில் இறங்க வேண்டும் என்பது நிச்சயமானது. நான் கதவருகே வந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஏனோ ஜன்னலைத் தட்டியது யார் என்று இன்னும் குழப்பமாகவேத் தான் இருந்தது. அங்கு யாருமே இல்லாத பட்சத்தில் யார் கதவைத் தட்டியிருக்கக் கூடும்? தட்டிவிட்டு ஒளிந்திருப்பார்களோ. அவ்வளவு வேகமாகவா? நான் ஜன்னலைத் திறந்த அந்த ஒரு வினாடிக்கு முன்பும் ஜன்னல் தட்டப்பட்டது. அந்த ஒரு வினாடிக்குள் தப்பிக்க முடியாது. ஒன்றும் புரியாமல் நான் கதவின் தாழ் மட்டுமே திறந்தேன். ஐயோ, ஜன்ன்லைத் தட்டியவன் ஒளிந்துக் கொள்ளவில்லை, அங்கே தான் இருந்திருக்க வேண்டும். ஜன்னலின் அருகே ஓடினேன், மீண்டும் ஜன்னலைத் திறந்து கீழே எட்டிப் பார்த்தேன். அதே மூன்றடி க்ளீனர் மீண்டும் கீழே விழுந்திருந்தான்.

நான் ஜன்னலைத் திறந்த போது கீழே எட்டிப் பார்க்காமல் போனதால் இவனை நான் கவனிக்கவில்லை. இப்போது ஏதோ எனக்கு புரிந்துவிட்டது போல் உணர்ந்தேன். இவன் எங்களைக் காப்பாற்ற வருகிறான். இனி யோசிப்பது நேர விரயம். உடனே தாவி கதவைத் திறக்கப் போனேன். கதவு மீண்டும் 'டொக் டொக் டொக்' என்றது. கதவின் தாழ் திறந்துவிட்டிருந்ததால், கதவு மெல்ல திறந்துக் கொண்டது. நான் பின் வாங்கினேன்.

கதவு முழுவதாக திறந்து கொண்டதே தவிர யாரும் அங்கு இல்லை. நான் சிறிது வலது பக்கமாக வந்து வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கே என்னவள் பயத்துடன் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
'எங்க டீ போனே? என்ன ஆச்சு', என்றேன்.
'நான் இங்க தாங்க இருந்தேன், நீங்க தான் காணாம போயிட்டீங்க'
'என்ன உளர்றே?', என்றேன்
'நீங்க இல்லேன்னு தான் நான் வெளியே தேடிப் பார்த்தேன்'
'சரி என் கூடவே இரு, நாம தப்பிக்கணும், தப்பிச்சுடலாம்'
'நான் வெளியே போனப்போ, அந்த மூனடி ஆளப் பார்த்தேன். அவன் இன்னும் உயிரோடத் தான் இருக்கான்.'
'தெரியும் டி, அவன் நம்மள காப்பாத்த வந்திருக்கான்'
'இல்லேங்க. இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் அவன் தாங்க காரணம்'
'வாட்???'
'நிச்சயமா தெரியுங்க, அவன் அடுத்த முறை நீங்க பார்த்த அவன் கிட்ட இருந்து நாம் தப்பிக்கணும்', என்றாள்.
'எனக்கென்னமோ அவன் நல்லவன்னு தான் தோனுது மா'
'சரி விடுங்க. தாமு எங்கே? இன்னும் வரலியா?'
'இல்ல. ஆனா இதோ இப்போ வந்திருக்கணும்'
'சரி நான் உள்ளேயே இருக்கேன், நீங்க போய் பார்த்துட்டு வர்றீங்களா?'
'சரி பத்திரம், உள்ளே பூட்டிக்கோ, இதோ வந்திடுறேன்'
'சரிங்க', என்றாள்

எனக்கு இதில் ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருப்பதைப் போலவே உணர்ந்துக் கொண்டிருந்தேன். எனக்கு அந்த மூன்றடி மனிதன் உதவும் நோக்கத்துடன் தான் வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அவன் கண்டிப்பாக எனக்கு இன்னுமொரு தடயம் தருவான் என்ற நம்பிக்கை இருந்தது.
'ஹே, நான் இந்த ரூம்ல இருக்கேன், நீ போய் தாமுவ அழைச்சுட்டு வர்றீயா?', என்றேன்
'சரிங்க, உள்ளேயே இருங்க, நான் அழைச்சுட்டு வந்துடுறேன்', என்றாள்.
அதோ வந்துவிட்டான் தாமு. அவனது கார் இப்போது வெளியில் பார்க் செய்துக் கொண்டிருந்தான். நான் எனது கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறான்.

என்னவள் வெளியே சென்றாள். நான் எனது 9 mm பிஸ்டலை எடுத்து என்னுடன் வைத்துக் கொண்டேன். இப்போது மீண்டும் 'டொக் டொக் டொக்', என்ற சத்தம்.
இம்முறை இது ஜன்னலும் இல்லை, கதவும் இல்லை. அறைக்கு உள்ளே எங்கிருந்தோ.
'இதோ வர்றேன் டா', என்று நினைத்து உள்ளே சென்றேன்.

அந்தச் சத்தம் என்னை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றது. நானும் சத்தம் வரும் திசையில் நடந்தேன். சத்தம் என்னைக் குளியலறைக்கு அழைத்துச் சென்றது. நான் குளியலறையைத் திறந்ததும் சத்தம் நின்றது. அங்கிருந்த கண்ணாடிகளில் எனக்கு நான் மட்டுமே தெரிந்தேன். வேறு யாரும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தேன். அங்கிருந்து வெளியே வரும் போது என் மீது ஒரு துளி திரவம் வழிந்தது. மேலே பார்த்து ஷவரில் இருந்து நீர் கசிந்ததைப் பார்த்து ஷவரை முழுவதுமாக மூடினேன். இன்னொரு துளி. விளக்குகள் இல்லாததால், என்னால் ஷவரை சரியாகப் பார்க்க முடியவில்லை.

என்மீது விழுந்த துளி, கொழ கொழவென்று இருந்தது. ஷவரில் ஒரு விரலால் மீட்டி, தடவிப் பார்த்தேன். அங்கிருந்து வரும் நீர் கொழ கொழவென்று இருக்கவில்லை. எனது கண்கள் ஷவருக்கு ஒரு அடி மேல் சென்றது. தீடீரென்று, மேலிருந்து ஒரு பெரிய பந்து அளவிற்கு ஒன்று கீழே விழுந்தது. இருக்கும் வெளிச்சத்தில் கண்களை வெறித்துப் பார்த்தது உடனே வெளியே ஓடினேன், தாமுவைக் காப்பாற்ற.

கீழே விழுந்தது என்னவளின் தலை. அப்போது இவ்வளவு நேரம் நான் பேசிக் கொண்டிருந்தது?

தேனிலவு இனி இல்லை. ஆனால் வேட்டை தொடரும்...

Friday, July 17, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 3

...இதுவரை

விரல்கள் என்னை வாவென்று அழைத்தன. நான் விரல்களின் அருகே செல்லும் போது கதவு மீண்டும் 'டொக் டொக் டொக்', என்றது.

ஒரு பக்கம் விரல்கள் என்னை மீண்டும் மீண்டும் அழைத்து கொண்டிருந்தது. மறுபக்கம் கதவு விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. நான் கதைவைத் திறப்பதா, அல்லது விரல்களிடம் போவதா என்றெண்ணும் போது உள்ளே இருந்து என்னவள் 'நான் ரெடி', என்றாள்.

'நோ, வெளியே வராதே', என்றேன்
கதவு மீண்டும் சத்தமிட்டது.
'என்ன ஆச்சு?'
'நான் சொல்ற வரைக்கும் வெளியே வராதே'

கதவு இப்போது பலமாகத் தட்டப்பட்டது.
கதவின் சத்தத்தைக் கேட்டு, என்னவள் 'எனி பிராப்ளம்?', என கேட்டாள்.
'நோ நத்திங்க், வெளியே வராதே', என்று சொல்லிவிட்டு நான் கதவருகே சென்றேன். கதவு இப்போது அமைதி ஆனது. கதவைத் திறக்கவேண்டுமா வேண்டாமா என்று சந்தேகம் இருந்தது.
கதவின் தாழ் மட்டும் திறந்தேன். திறக்க வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது. கதவு தட்டப்படவில்லை. கதவைப் பிடித்து மெல்ல திறக்க முயன்றேன். சின்ன துவாரத்தின் வழியே வெளியே யாரேனும் இருக்கிறார்களா என்று உற்றுப் பார்த்தேன். எனது கண்களுக்கு யாரும் தென்படவில்லை. கதவைத் திறந்தே விட்டேன். எனக்கான அதிர்ச்சி வெளியே இருக்கத் தான் செய்தது.

அந்த மூன்றடி மனிதன் கீழே விழுந்து கிடந்தான். கீழே இருப்பது அவனா, அதுவா என்று ஆராய்ச்சி செய்வது இப்போது முக்கியமில்லை என்பதைத் தெரிந்துக் கொண்டேன். கதவின் தாழடைத்து உடனே உள்ளே சென்றேன். என்னவள் எனக்காக மெத்தையருகே காத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, 'அடியே, அங்க போகாதே', என்று சொல்லி அவளை இழுத்தேன். இவை எல்லாம் அவளிடம் சொல்வது கடினம் தான். ஆனால் நடந்ததைப் பார்த்து இனி எதுவும் கடினம் இல்லை என்று முடிவிற்கு வந்து சொல்ல ஆயத்தமானேன்.

'சரி கேளு, நாம் உடனே கிளம்பணும்', என்றேன்
'ஏன் என்ன ஆச்சு?'
'திஸ் ஹவுஸ் இஸ் ஹாண்டட், இங்க பேய் இருக்கு'
'யோவ், என்ன யா நீ. லூசு மாதிரி பேசுற?'
'கமான். நீ உள்ள போனதும் இங்க நிறைய விஷயங்கள் நடந்துச்சு, அங்க பாரு', என்றேன் ஜன்னல் ஓரத்தைக் காட்டி.
அங்கு இப்போது விரல்களும் இல்லை. வெடிப்பும் இல்லை.

'என்ன அங்க?', என்றாள்.
'சரி வெளியே வா', என்று கதைவைத் திறந்தேன்.
வெளியே மூன்றடி மனிதனும் இல்லை.
'என்னங்க ஆச்சு உங்களுக்கு?', என்றாள்.

நான் பதில் சொல்ல முடியாமல். 'சம்திங் இஸ் ரியல்லி கோயிங் ராங்', என்றேன்.
'எனக்குப் புரியலேங்க நீங்க சொல்றது'
'சொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த ஜன்னலோரத்துல ஒரு சின்ன வெடிப்பு, அதுல இருந்து கை விரல்களைப் பார்த்தேன்'
என்னவள் திடுக்கிட்டு, 'வாட்?', என்று அலறினாள்.
'அந்தக் கை விரல்கள் என்ன வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்திச்சு'
என்னவள் என்னையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அப்புறம், இந்தக் கதவு யாரோ பயங்கரமா தட்டிக்கொண்டே இருந்தாங்க'.
'ஆமா, கேட்டுச்சு'
'திறந்துப் பார்த்தா, அந்த க்ளீனர் பாய் இல்ல? அவன் கீழே விழ்ந்திருந்தான்', என்றேன்.
'செத்துட்டானா?'
'தெரியல, ஆனா இப்போ அவன் இங்க இல்லயே'
'அப்போ உயிரோட இருப்பானா? இல்லே டெட் பாடிய யாராவது எடுத்துக் கிட்டு போயிருப்பாங்களா?' என்றாள்.
'தெரியல மா', எனது நெற்றியில் விழுந்த கோடுகளைத் தேய்த்துக் கொண்டே, 'அப்போ, அட்மின் சொன்னது, அந்த டீ கடைக்காரர் சொன்னது எல்லாமே உண்மை தானோ? ஆனா, அவங்க இந்த பேய் மேட்டர் சொல்லலியே'.

'இப்போ என்ன பண்றது?'
'தாமுக்கு கால் பண்றேன்'
'வாட்?'
'யெஸ், என்று சொல்லி, நான் எனது தொலைப் பேசியுடன் மீண்டும் ஜன்னல் ஓரத்திற்குச் சென்றேன்.

தொலைப் பேசி மணி அடித்துக் கொண்டே இருந்தது. தாமு நிச்சயமாக எடுக்க மாட்டான் என்று தோன்றியது. அங்கு ஜன்னல் ஓரத்தில் வெடிப்பு இருந்ததற்கு சுவடே இல்லை இப்போது. அருகில் எங்கும் அதற்கான அறிகுறியும் இல்லை. தாமு தொலைப்பேசி எடுக்கவே இல்லை. நான் மீண்டும் மீண்டும் அழைத்த பின் ஐந்து நிமிடங்களுக்குப் பின் எடுத்தான்.

'ஹலோ தாமு, சொல்றத மட்டும் செய்'
'என்ன ஆச்சு?'
'நாங்க ஒரு பிரச்சனைல மாட்டிக்கிட்டு இருக்கோம்'
'என்ன ஆச்சுன்னு சொல்லுங்க சார்'
'பதினஞ்சு கிலோமீட்டர், உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன், கிளம்பி வா'
'என்ன ஆச்சுன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்ல. நான் தனியா வரணுமா, இல்ல போலீஸ் ஹெல்ப் வேணுமா?'
'பேய் மீது நம்பிக்கை இருக்கா?'
'இல்லை'
'இங்க வா நான் காட்டுறேன்', என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

'இன்னும் பத்து நிமிஷத்துல தாமு வந்திருவான்', என்று சொல்லி, திரும்பிப் பார்க்க, என்னவளும் அங்கு இல்லை.

தேனிலவு தொடரும்...

Thursday, July 16, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 2

பாகம் ஒன்று

நானும் என்னவளும் எங்களின் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றோம். இருட்டால் துடைக்கப் பட்டிருந்தது அந்த அறை. வெளியே லாபியில் இருந்த விளக்கின் வெளிச்சம் முடிந்த வரை அறையின் உள்ளே எட்டிப் பார்க்க முயன்று நான்கு அடிக்கு மேல் உள்ளே செல்ல முடியாமல் தோற்றுப் போனதை ஒப்புக்கொண்டது. எனது வலது கையை சுவரின் மீது சற்றே தேய்க்க, இதோ கிடைத்துவிட்டது. விளக்குகள் போடப் பட்டது. அறை பிரகாசமானது. உள்ளே சென்று பூட்டினேன்.

உண்மையில் இந்த அறையை மட்டும் அடைக்காமல் இருந்திருந்தால் ஹெவன் ரிசார்ட்டுக்கு லாபம் அதிகரித்திருக்கும். அறையின் உள்ளே இருக்கும் விளக்குகள் ஆகட்டும், மெத்தை ஆகட்டும், அனைத்துமே புத்தம் புதுசாகத் தான் இருந்தது. ஜன்னலின் ஓரங்களும், தரையும் மட்டுமே ஏனோ பல நாட்கள் உபயோகிக்காமல் போனதால் அழுக்கு படிந்து கிடந்தது. அருகிலிருந்த அலமாரியைத் திறந்ததும் அறைக் கதவு தட்டப்பட்டது.

'டொக்... டொக்... டொக்...', என்றது கதவு.
'கதவத் திற டீ', என்றேன்.
'என்னால முடியாது செம்ம டையர்ட்', என்றாள்.
'உண்மையாவா சொல்றே?'
'ம்ம்ம்'
'அப்போ சரி, உடனே தூங்கிடுவே போல இருக்கு'
'ஏய்ய்ய், ச்சீ', என்றாள்.

'டொக் டொக் டொக்', இம்முறை இடைவெளி குறைந்தது.
நான் உடனே கதவைத் திறந்தேன். அங்கு சுமார் மூன்றடிக்கும் கம்மியாக ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
'சார், நான் க்ளீனர் பாய். ரூம க்ளீன் பண்ணனும்னு சொன்னாங்க', என்றான்
'சரி வாப்பா', என்றேன்.

பத்தே நிமிடத்தில் அவன் அறையைச் சுத்தம் செய்துவிட்டான். ஜன்னல்களின் இடுக்களிலிருந்து தரையின் ஓரங்கள் வரைக்கும் அனைத்தும் இப்போது சுத்தமாக இருந்தது.

'ஹம்ம் இப்போவே டைம் பத்தாகுது', என்றேன்.
'ரெண்டே நிமிஷம்'
'என்ன மேகி பண்ணப் போறியா?'
'ஆமா டா, அதுக்கு தான வந்திருக்கோம்', என்று சொல்லிவிட்டு முகத்தைக் கழுவச் சென்றாள்.
நான் எனது ஆடையை மாற்றிக் கொண்டு அவள் பின்னால் நின்று கொண்டேன்.
'என்ன ரெடியா?'
'இரு டா, ரொம்ப தான் அவசரம் உனக்கு'
'எனக்கு ஒன்னும் இல்லே, நீ தான் டையர்டா இருக்கியே, அதுக்கு தான் சொன்னே', என்றேன்.
'ச்சீப் போ', என்றாள், வெட்கத்துடன். ஏனோ தெரியவில்லை இந்தப் பழைய வெட்கம் மட்டும் என்றும் புதிதாக இருக்கிறது.
இரண்டு நிமிடங்கள் ஆனதும் அவளைப் பின்னாலிருந்து தூக்கி மெத்தைக்குக் கடத்தினேன்.

'என்ன செய்யப் போறீங்க?' என்று வினவினாள் ஏதும் தெரியாதவளைப் போல்.
'கவிதை எழுதலாம்னு' என்றேன் நான்.
'ஒ, அவ்ளோ சந்தோஷமா?' என்று கேட்டவள், என் பதிலுக்கும் காத்திராமல் 'என்ன தலைப்பு?' என்று புருவங்களை உயர்த்தியபடி கேட்டாள்.
'நாணம்'.

என்னை ஒரு நிமிடம் விழியால் உள்வாங்கிக் கொண்டு, 'நாணம் - பெண்ணின் தேவையற்ற ஆடை!' என்று கூறி, தன் காந்தப் பார்வையை நிறுத்தி, கண்களைச் சிமிட்டி, சிரித்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் என் குட்டிப் புயல். அய்யோ! தொலைந்தே போனேன் நான். பாதியைத் தொலைத்து, வெற்று மீதியுடன் வாழ்வது சாத்தியமற்றதால், தொலைந்த அவளிடமே சென்று, என்னைத் தேடி, மீண்டும் அவளிடம் முழுதாய்த் தொலைவதென்று முடிவு செய்தேன். அப்பொழுது தான் உணர்நதேன், எனக்கான, என் பண்டத்தை நான் ருசித்து நாட்கள் பலவானதென்று!

வெளியே சென்றவளைக் கரம் பற்றி இழுத்து, காற்றும் நுழையாத வண்ணம் அவளை என்னருகில் வளைத்தேன். என் துடியிடையாளைக் கரங்களில் ஏந்தி, பஞ்சணையில் கிடத்தினேன்! ஜென்ம சாபல்யம் அடைந்ததாய்த் தோன்றியிருக்கும் அந்தப் பஞ்சணைக்கு. அவளோ, ஏதும் பேசாமல், எனது லீலைகளை ஆவலாய் எதிர்நோக்கியவளாய் இருந்தாள். அவளின் கழுத்தில் அழுத்திய என் உதடுகளின் ஸ்பரிசம் தாங்க முடியாதவளாய்ச் சிதறிப் போனாள். சிதறியவளைச் சேர்த்து எடுக்கும் எண்ணம் கொண்டு, என் விழிகளோடு மட்டுமே விளையாட அறிந்திருந்த அவளின் உணர்வுகளோடு என் திருவிளையாடலைத் துவங்கினேன்.

'பூவுக்குள் ஒரு பூகம்பம் படைக்கணும், உதவி தேவை' என்றேன் காற்றில் அசைந்தாடிய அவளின் கூந்தலைக் கோதியவாறே.
'ஹ்ம்ம், என்ன பா' என்றாள்.
'பாலுக்கும் உனக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமாடீ உனக்கு?' என்றேன்.
'அது என்ன புதுசா ஒரு ஒற்றுமை?' என்றென்னை இருகியவளின் கண் பார்த்துச் சொன்னேன், 'இரண்டிற்கும் ஆடை அழகில்லை' என்று.
'ச்சீ', என்று பொய்யாய்ச் சினுங்கி, என்னைத் தள்ள முயன்றவளின் வளைக்கரத்தில் அழுந்த முத்தமிட்டேன்.

ஒவ்வொரு முறை மீட்டும் போதும் இசை விருந்தளிக்கும் இன்னிசை யாழ் அவள்; இன்னிசையாளும் அவள். பூவில் மதுவருந்தும் வண்டினத்தவன் இல்லை நான். மலரிதழ்களைக் கசக்கி அதிலிருந்து வாசனைத் திரவியம் கண்டெடுக்கும் மனு குலத்தவன். மெல்லிய மலரொத்த அவளிடமிருந்தும் திரவியம் தேடும் படலம் துவங்கியது.

மீண்டும் கதவு 'டொக் டொக் டொக்', என்றது.
இம்முறை கதவைத் திறக்கவே கூடாது என்று நினைத்தேன்.
கதவு பலமாகத் தட்டப்பட்டது.
'நான் போய் பார்கறேன்', என்றேன்.
'ஹே ச்சீ இரு, நான் உள்ள போறேன்', என்று சொல்லி, தனது ஆடைகளைத் தேடி எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

நான் கதவைத் திறந்தேன். அதே மூன்றடி க்ளீனர் நின்று கொண்டிருந்தான்.
'என்ன வேணும்', என்றேன்.
'ஒன்னும் இல்ல சார், எதாவது வேணுமா சார்', என்றபடி உள்ளே எட்டிப் பார்த்தான்.
'மணி பன்னண்டு ஆகுது, இப்போ ஒன்னும் வேணாம், மறுபடியும் கதவைத் தட்டாதே' என்று சொல்லி கதைவை அடைத்தேன்.
கதவு மூடும் வரை அவன் அங்கிருந்து கிளம்பியதாக எனக்குத் தெரியவில்லை.

நான் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தேன். எனது எதிரில் இருந்த ஜன்னலின் ஓரத்தில் சின்னதாய் வெடித்து அதிலிருந்து கை விரல்கள் மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது.

தேனிலவு இன்னும் தொடரும்...

Wednesday, July 15, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 1

முன்குறிப்பு:
கதாப்பாத்திரங்களைத் தெரிந்துக் கொள்ள 'எனது பெயர் நாகவள்ளியை' படிக்கவும்.

பாகம் 1.
'சொல்லுங்க சார், நான் தாமு தான் பேசறேன்'
'என்ன தாமு எப்படி போகுது உன்னோட ஹனிமூன்?'
'இது வரைக்கும் நல்லாதான் சார் போச்சு, என்ன நான் சென்னைக்கு வரணுமா?'
'நோ நோ தாமு, பயப்படாதே, நீ வரவேண்டாம்'
'ஓ ஒகே சார்'
'நாங்க அங்க வர்றோம்'
'இதுக்கு நானே சென்னைக்கு வரலாம்'
'என்ன தாமு?'
'ஒன்னும் இல்ல சார், வாங்க, ஆனா, 'முதன் முறையாக நான்கு பேருடன் தேனிலவு' அப்படின்னு நாளைக்கு தினத்தந்தில முதல் பக்கத்துல வருமே, பரவாலயா சார்'.
'டேய், நாங்க ப்ளான் பண்ணியிருக்கிற இடம் நீங்க தங்கியிருக்கிற இடத்துல இருந்து 15 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற மாபங்கி என்ற ஹில் ஸ்டேஷன்'
'சார் நாங்க அங்க போய் விசிட் பண்ணிட்டோம் சார். நாங்க வரலே சார், நீங்க போயிட்டு வாங்க'
'தம்பி'
'ம்ம்ம் சொல்லுங்ண்ணா'
'இது வெறும் இன்ப்ர்மேஷன் தான். உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன், சரியா?', என்றேன்.
'இப்போ இப்படித் தான் சொல்லுவீங்க, அப்புறம் என்னோட கழுத்துல ஒரு கேமராவ மாட்டிவிட்டுட்டு ஆவியோட அலையணும், பேயோட பேசணும்னு சொல்லுவீங்க'
நான் சிரித்துக்கொண்டே, 'இல்ல தாமு, நத்திங் அபீசியல் திஸ் டைம், நாங்களும் பெர்சனல ரிலாக்ஸ் பண்ணத் தான் போறோம்', என்றேன்.

அன்று மதியம் நானும், என்னவளும் காரில் ஏறி எங்களது பயணத்தைத் தொடங்கினோம். காதல் மழையில் நனைந்த கொண்டே சென்றதில் எட்டு மணி நேரப் பயணம் பெரிதாகத் தெரியவில்லை. குளிர் காற்றும், சாலையோர தென்னை மரங்களும் மாபங்கியை நெருங்கி விட்டோம் என்று மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

'யோவ், அங்க டீக் கடையில நிறுத்துங்க, இந்த இடம் ரொம்ப சீனிக்கா இருக்கு', என்றாள்.
'ஷூர்', என்று எங்களது காரை தேனீர் கடைக்கு அருகில் நிறுத்து விட்டு உள்ளே சென்றோம்.
தேனீர் பருக்கிக்கொண்டே அவள் மாபங்கியின் அழகைப் பிடித்து கேமராவில் அடைத்துக் கொண்டிருந்தாள்.
'என்ன சார் மாபங்கி சுத்தி பாக்க வந்தீங்களா?', என்றார் தேனீர் கடைக்காரர் கேட்டார்.
'ஆமாங்க'
'கைடு வேணும்னா சொல்லுங்க சார், பார்த்து பண்ணிடலாம்'
'வேணும்னா கண்டிப்பா கேட்கிறேங்க'
'எங்க தங்கப் போறீங்க?'
'இங்க தான் ஹெவன் ரிசார்ட்ஸ்'
அவரது முகம் வெளுத்துப் போனதை நான் கவனிக்கத் தவரவில்லை.

'என்னங்க, அமைதியா இருக்கீங்க, நல்லா இருக்காத அந்த ரிசார்ட்ஸ்'
'நல்லா தாங்க இருக்கும், ஆனா அங்க பலப் பேரு தற்கொலை பண்ணியிருக்கிறதா போலிஸ் சொல்லுது, உண்மையில அது கொலைன்னு ஒரு பேச்சு இருக்குங்க', என்றார்.
'சார் நாங்க இதுக்கெல்லாம் பயந்தா எங்க தொழில் என்ன ஆகும். நான் ஒரு ரிப்போர்ட்டர் மாதிரிங்க. நல்ல விஷயம் தான் சொல்லியிருக்கீங்க. நன்றிங்க', என்று சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பினோம்.

மலைப் பிரதேசம் என்பதால் சாலையில் ஒரு சில மேடு பள்ளங்களில் தள்ளாடிச் சென்றது எங்கள் வண்டி. அவள் ஏதோ விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்க, 'அடியே என்ன எண்ணிக்கிட்டு இருக்கே' என்று கேட்டேன்.
'ம்ம்ம். இது நம்மலோட பதிமூனாவது தேனிலவு', என்றாள் வெட்கச் சிரிப்புடன்.

எட்டு மணி நேரப் பயணம் ஏதோ எட்டே நிமிடத்தில் முடிந்தது போல் இருந்தது எனக்கு. அது சரி 'காதலி வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகும்' என்று வைரமுத்து ரசித்துச் சொன்னது சரி தான் என்று நினைத்துக் கொண்டேன். மாபங்கி ஹெவன் ரிசார்டுக்கு வந்தடைந்த போது இரவு ஒன்பது மணி. எங்கள் வண்டியைப் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, எங்கள் பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம்.

ரிசெப்ஷனில் ஒரு தேவதை மாறுவேடத்தில் இருந்தாள். கோதுமை நிறத்தில் உடல். லேசான சுருட்டை முடியை இடதோரம் வகுடெடுத்து வாரியது அழகு. மீன்களே அங்கு கண்களாகி இருந்தன. கண்ணுக்கே தெரியாதவாறு ஒரு சின்ன பொட்டு. யாரும் வெட்டுப் படலாம், ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தது அவளது மூக்கு. உதடுகள் இரண்டும் குறள் போல் மிகவும் சிறியது. குரல் சங்கீதம் பாடுகிறது. பற்கள் அனைத்தும் சீராக அடுக்கி இருந்தது. சிங்கப் பல் மட்டும் சிறுது எடுப்பாக இருந்தது. அதுவும் அவளுக்கு அழகைக் கூட்டியது.

'வெல்கம் சார், வெல்கம் மேடம்', என்று எங்களை வரவேற்றாள்.
நாங்கள் எங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம்.
'ஒ வாங்க, நீங்க ஏற்கனவே புக் பண்ணியிருந்தீங்களா?', தேவதை பாடினாள்.
'இல்லேங்க ஆனா, கால் பண்ணும் போது, கிளம்பி வாங்க பாத்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க', என்று நான் சொன்னது தான் தாமதம். என்னவள் என்னை பின் தள்ளி அந்த தேவதையிடம் பேசத் தொடங்கினாள்.
'சரி கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க, ஐ வில் செக் அண்ட் லெட் யூ நோ', இதுவும் சங்கீதம் தான்.

நாங்கள் இருவரும் ரிசெப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்தோம்.

'சாரி சார். இப்போ ஆக்சுவலா ரூம்ஸ் அவேலபலா இல்ல', என்றாள் தேவதை.
'என்ன மேடம் சொல்றீங்க? இனிமே எங்க போக முடியும்? இப்போவே லேட் ஆயிடுச்சு',
'சாரி சார், இப்போ ஒருத்தர் செக் அவுட் செய்யணும். ஆனா அவர் செய்யல. அது தான் இப்போ பிராப்ளம்'

அவளின் பின் ஒரு மரப்பலகையில் சாவிகளைத் தொங்கவிடுவதற்கான கொக்கிகள் இருந்தன. அதில் பதின்மூன்றாவது அறையின் சாவி தனியாக ஆடிக் கொண்டிருந்தது. அந்த சாவியை அவளிடம் காட்டி, 'ஹவ் அபௌட் தட் கீ', என்றேன்.
'இல்ல சார், அந்த ரூம் யாருக்கும் தரமாட்டோம் சார். அட்மின் இந்த ரூம் யாருக்கும் தர வேண்டாம்னு சொல்லியிருக்காங்க', என்றாள்.
'ஏன்?', ஆர்வத்துடன் நான்.
'தெரியல சார், அங்க இதுக்கு முன்னாடி பல பேரு தற்கொலை பண்ணியிருக்காங்க. அது தற்கொலையா, இல்ல கொலையான்னு கூட இன்னும் கண்டு பிடிக்கலை'
'எங்களுக்கு இதெல்லாம் தெரியுங்க. தெரிஞ்சுட்டு தான் கேட்கிறேன். நான் வேணும்னா உங்க அட்மின் கிட்ட பேசறேன்', என்றேன்.
'சாரி சார், அட்மின் இப்போ அப்ராட் போயிருக்காங்க'.
'இல்லேங்க, எங்களுக்கு ரூம் 13 தாங்க வேணும். நான் ஒரு தனியார் டி.வில வேலை பார்க்கிறேன். நான் ஒரு ரிப்போர்ட்டர். எந்தப் பிரச்சனையா இருந்தாலும் நாங்க பாத்துக்குறோம்', என்றேன்.

அப்போது ஒருவர் தன் மனைவியுடன் தனது பெட்டிகளுடன் செக் அவுட் செய்ய ரிசெப்ஷனுக்கு வந்தார்.
'சார், இந்த ரூம் எடுத்துக்கோங்க. ரூம் நம்பர் 14. பத்து நிமிஷத்துல க்ளீன் பண்ணி, ரெடி பண்ணச் சொல்றேன்', என்றாள் அக்கறையுடன்.
நானும் என்னவளும் அமைதியாக இருந்தோம். தேவதை செக் அவுட் செய்வதற்காக வந்தவரிடம் சில இடங்களில் கையெப்பம் வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவளது வலது கையில் 14. இடது கையில் 13.
'சொல்லுங்க சார். இனி உங்க சாய்ஸ் தான். எது வேணும். 13ஆ இல்ல 14ஆ?'
நான் என்னவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்து கண்ணடித்து விட்டு, 13ஆம் நம்பர் சாவியை எடுத்துக் கொண்டாள்.

நாங்கள் எங்களது பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவள் காட்டிய வழியில் நடந்தோம். 16, 15, 14, அதோ இருக்கிறது 13. நான் திரும்பி தேவதையைப் பார்த்தேன். அவள் சற்று பயத்துடன் சிரித்தாள். அவளது சிங்கப் பற்கள் அழகாக இருந்தது.

தேனிலவு இனி தான் ஆரம்பம்...

Tuesday, July 14, 2009

எதிர்பார்ப்புஅடியே, எதிர்பார்ப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை.

நீ என்னைக் காதலிக்கும் உண்மை
உனக்குத் தெரியும் முன்னே
எனக்குத் தெரிந்து விட்டதால் தான் என்னவோ
நான் உன்னை அவ்வளவு காதலிக்கிறேன்.

காதலில் எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம்
என்று எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்ல?

உண்மையில், எதிர்பார்ப்பால் காதல்
எவ்வளவு அழகாகிறது தெரியுமா?
எதிர்பார்ப்பே இல்லாமல் போனால்,
நமது ஆறாவது அறிவு அறவே காணாமல் போகிறது.
நமக்கும் ஆட்டு மந்தைக்கும் உள்ள
இன்னொரு வேறுபாடும் எதிர்பாப்பு தான்.

அது இல்லை, இது தான் வேண்டும்
என்று கட்டளையிட்டு பெறுவது
காதலில் எத்தனை அழகு தெரியுமா?
கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு போவதென்றால்
நான் எதற்கு உனக்கு
நீ எதற்கு எனக்கு?

உன்னுள் இருண்டு கிடப்பதை
நான் தோண்டி எடுப்பது எதிர்பார்ப்பு என்றால்
எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் தான்.
இது எனக்கு பிடித்தே இருக்கிறது.

அடியே, எதிர்பார்ப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை.

Monday, July 13, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 6

இதுவரை பயணித்தது...

ரயில் ரைன் நீர்வீழ்ச்சியை தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ரைன் நீர்வீழ்ச்சியின் அழகை நாங்கள் ரசிக்க முடியாமல் போய்க் கொண்டிருந்தது. ரயில் கடைசி நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தது.

'சரி கடைசியா கையில எப்போ பைய வெச்சிகிட்டு இருந்தேன்னு ஞாபகம் இருக்கா?', என்றேன்.
'தெரியல டா', என்றான்.
'யூத் ஹாஸ்டல்ல இருந்து கிளம்பும் போது எடுத்துகிட்டு வந்தியா?'
'ம்ம், ஜூரிக்ல என்கிட்ட பை இருந்திச்சு'.

ரயில் மீண்டும் கிளம்பி இப்போது ரைன் நீர்வீழ்ச்சி வந்து சேர்ந்தது. ஆதி ரயிலில் இருந்த ஒர் காவலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
'மச்சி அப்போ நாம ரைன் பால்ஸ் பாக்க முடியாதா?', என்று கேட்டான் கார்த்தி.
'ங்கொய்யால, ஊருக்குப் போய் சேருவோமான்னே தெரியல ரைன் பால்ஸ் ரொம்ப முக்கியம்', என்றேன்
'ஜுரிக்ல ட்ரெய்ன் ஏறும் போது கூட பை இருந்திச்சு டா, ஷூர். ஆனா விண்டர்தூர்ல இருந்த போது நம்ம சாப்பாட்டு மூட்டையெல்லாம் எடுத்துகிட்டு இறங்கினேன். பை எடுத்துக்கிட்ட மாதிரி ஞாபகம் இல்லே டா', என்றான் ஆதி.
'அப்போ நாம ஏறின ஜுரிக் டூ விண்டர்தூர் ட்ரெயின் இப்போ எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சு அதுல தேடலாம்', என்றேன்.

ஒரு பத்து நிமிடத்தில் ரயில் விண்டர்தூர் வந்து சேர்ந்தது. எங்களிடம் பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான ரசீது இருந்ததால், நாங்கள் எந்த ரயிலில் சென்றோம் என்பதற்கான குறியீடுகள் அதில் இருந்தது. அதை டிக்கெட் கவுண்டரில் காண்பித்த இப்போது அந்த ரயில் எங்கு இருக்கிறது என்பதைக் கேட்டோம். அந்த ரயில் இன்னுமொரு நாற்பத்தைந்து நிமிடங்களில் விண்டர்தூர் வந்து சேரும் என்பதைத் தெரிந்து கொண்டோம்.

சரி இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள் இருக்கிறதே என்று நாங்கள் விண்டர்தூரைச் சுற்றலாம் என்று எண்ணி ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். ஒரு அரை மணி நேரம் அருகிலிருந்த தோட்டங்களையும், சில சாலைகளையும் சுற்றினோம். விண்டர்தூரில் தான் நாங்கள் முதன் முறையாக ட்ராம் மற்றும் பஸ்சின் கலவையைப் பார்த்தோம். அதாவது பேருந்து போன்ற உடலமைப்பு இருந்தது. டையர்கள் உட்பட, ஆனால், மேலே மின்சாரக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தான் செயல் படுகிறது. கீழே தண்டவாளங்களும் இல்லை.
பின்னர் மீண்டும் நாங்கள் விண்டர்தூரில் எங்களது ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் முதல் வகுப்பு ஏறினோம் என்பதால், ரயிலில் உள்ள முதல் வகுப்புகளில் நாங்கள் மூவர் ஏறி, பையைத் தேடுவது என்று முடிவு செய்தோம். அதனால் ரயில் வந்தவுடன் மூவரும், பிரிந்து முதல் வகுப்புகளில் ஏற வேண்டும் என முடிவு செய்தோம்.அங்கே ஒரு ரயில் அதிகாரி நாங்கள் முன்னும் பின்னும் நடப்பதைப் பார்த்து எங்களிடம் வந்தார்.
'Are you guys ok?', என்றார்.
நாங்கள் நடந்தவற்றை எல்லாம் சொன்னோம்.
'Don't worry', என்று சொல்லி விட்டு, அவருடைய அலைப்பேசி எடுத்து யாருடனோ தொடர்பு கொண்டு, ஒரு சில நிமிடங்கள் கழித்து, 'the train is approaching this station in few minutes', என்றார்.
'Thanks', என்றான் ஆதி.
'Where in India are you from?', என்றார்.
இவருக்கு எப்படி இது தெரிந்ததென்று எங்களுக்குப் புரியவில்லை. 'From Chennai', என்றேன்.
'Oh Chennai, it was Madras once', என்றதும் எங்களுக்கு ஆச்சர்யம்.
'How do you know this?', கார்த்தி கேட்டான்.
'I had been in India for 7 to 8 years', என்றார்.
'Where in India?'
'From east to west and Kashmir to Kanyakumari, I have travelled almost every place in India. Its a nice country'

உண்மையில் பெருமையாக இருந்தாலும், இது வரை நாங்கள் லண்டன் என்று சொன்னதை நினைத்து சிறிது வெட்கமாகத் தான் இருந்தது.

'I have asked the guard in the train to look for the bags in the first class compartments, and apparently there is one, but not sure if that is your bag', என்றார்.
அவருடன் நாங்கள் இருந்தது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, இருப்பினும் அவர் மீது எங்களுக்கு அளவு கடந்த மரியாதை வந்தது. இரண்டொரு நிமிடங்களில் ரயில் வந்தது. அவர் சொன்ன ரயில் பெட்டியில் நான் ஏறினேன். கார்த்தியும் ஆதியும் வேறொரு பெட்டியில் ஏறினார்கள். கண்ணுக்கெதிரே இருந்தது அவனது பை.அவருக்கு நன்றிகளைச் சொல்ல, அவரோ நேரமின்மையால் விடைபெற்றுக் கொண்டார். நாங்கள் பின்னர் மீண்டும் ரைன் நீர்வீழ்ச்சிக்குப் பயணித்தோம்.

ரைன் நீர்வீழ்ச்சி உலகிலேயே மிகப் பெரிய நீர்வீழ்ச்சி. (மிக உயரமானது அல்ல. நயாகரா தான் உயரமானது). அங்கு செல்ல காட்டுப் பகுதிகளில் சுமார் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். நம்முடன் எப்போதுமே ஒரு கூட்டம் இருப்பதால் பயமில்லாமல் செல்லலாம்.தூரத்திலிருந்தே நீர்வீழ்ச்சியின் சத்தம் நமக்கு கேட்கிறது. அருகில் சென்றதும் நாம் பேசுவது யாருக்கும் கேட்பதில்லை.

ரைன் நதியில் ஒரு கரையிலிருந்து படகு ஏறி நாம் நீர்வீழ்ச்சியின் மையப் பகுதிக்கே செல்லலாம். படகு ஒரு கரையில் ஆரம்பித்து, இன்னொரு கரைக்குச் செல்கிறது. அங்கு பல்நாட்டு உணவகங்கள் இருக்கின்றன. அங்கிருந்து வேறொரு படகில் ஏறி நாம் நீர்சீழ்ச்சியின் மையப் பகுதிக்குச் செல்லலாம்.நாங்கள் முதல் படகில் ஏறி மற்றொரு கரைக்குச் சென்றோம். போகும் போது ஏதோ ஒரு கடலில் போவது போல் ஒரு வியப்பு. நம்மைச் சுற்றி முழுவதும் தண்ணீர், ஆழம் தெரியவில்லை. மீண்கள் தெரிந்தன. ஒரு பத்து நிமிடங்களில் மற்றொரு கரைக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் போகும் போது மணி சுமார் பன்னிரெண்டு இருந்ததால், நாங்கள் அங்கே இருக்கும் உணவகத்தில் ஏதோ கேட்க, அதைக் கஷ்டப்பட்டு முடித்தோம்.

பின்னர் அங்கிருந்து இன்னொரு படகில் ஏறி நீர்வீழ்ச்சியின் மையப் பகுதிக்குச் சென்றோம். அதன் அருகே செல்லும் போதே நம் மீது சாரல் அடிக்கிறது. குழந்தைகளுடன் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பார்க்க வேண்டிய இடம். இனி படங்கள்.
ரைன் நீர்வீழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்று மாலை நாங்கள் விமான நிலையத்திற்குப் போக வேண்டும். நேரம் இருந்ததால் நாங்கள் ஜூரிக் நகரம் சுற்றிப் பார்த்தோம். ஷாப்பிங் செய்வதற்கான மிகச் சிறந்த இடம். ஜுரிக் சின்ன நகரமாக இருந்தாலும் எங்கும் அழகாகவே இருக்கிறது.சுவிஸில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி சொல்லிவிட்டேன். வாங்க வேண்டியவை சில இருக்கிறது.
சுவிஸில் பிரபலமானது
1) சுவிஸ் கத்தி

2) குக்கூ கடிகாரம்.


எங்களது ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு, விமான நிலையத்திற்குச் சென்றோம். சிறிது தாமதமாகச் சென்றதால் எங்கள் மூவருக்கும் ஒரே வரிசையில் இடம் கிடைக்கவில்லை. மற்ற இருவர் எங்கு அமர்ந்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. நான் ஏதோ கிடைத்த இடத்தில் அமர்ந்துக் கொண்டேன். எனது அருகில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இருந்தார். விமானம் பாதி வழியில் பறந்து கொண்டிருந்தது.
'Where are you from? Swiss or England?', என்று நான் கேட்டேன்.
'I am from England, London. And you?'
'India'

பயணம் முடிந்தது.

Sunday, July 12, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 5

இதுவரை பயணித்தது...

நாங்கள் மூவரும் உள்ளே சென்றோம். அங்கே உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் பெண்கள். அனைத்துப் பணிப்பெண்களுக்கும் ஒரே உடுப்பு. மிகவும் தரமான ஓட்டல் போலிருக்கிறது. அனைவருக்கும் தொப்பியிலிருந்து காலணி வரைக்கும் ஒரே மாதிரியான உடை. அவர்கள் போட்டிருந்த டூ பீஸ் உட்பட. இதுவே எங்களை உள்ளே அழைத்துச் சென்றது. இங்கு ஏதோ கிடைத்தவற்றை சாப்பிட்டு விட்டு எங்கள் அறைக்குச் சென்றோம். நாள் முழுவதும் சுற்றியதால் உடனே படுத்ததும் உறக்கம்.

8-அக்டோபர்-2007, திங்கள்
இன்று மாலை நாங்கள் லண்டன் திரும்ப வேண்டும். இன்றைய திட்டத்தில் நாங்கள் ரைன் நீர்வீழ்ச்சிக்கும், ஜுரிக்கும் போக வேண்டும். ரைன் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல நாங்கள் முதலில் ஜுரிக் போக வேண்டும். அங்கிருந்து வடக்கே சென்றால் ரைன் நீர்வீழ்ச்சி. காலையிலேயே மறுபடியும் வழக்கம் போல இலவச உணவை சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். சுமார் இரண்டு மணி நேரம் இண்டெர்லேக்கனிலிருந்து ஜுரிக். அதே முதல் நாள் வந்த வழி தான்.

ஜுரிக் வந்து சேர்ந்த போது மணி காலை ஒன்பது இருக்கும். ஜுரிக்கிலிருந்து ரைன் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல இரண்டு ரயில்கள் மாற வேண்டும். ஒன்று ஜுரிக்கிலிருந்து விண்டர்தூர் என்னும் இடம்வரைக்கு. மற்றொன்று விண்டர்தூரிலிருந்து ரைன் நீர்ழீச்சி. நாங்கள் ஜுரிக்கிலிருந்த ஒரு டிக்கெட் கவுண்டரில் ரயில் எத்தனை மணிக்கு என்று விசாரிக்கச் சென்றொம்.

'When is the next train to Rhine Falls?', என்றேன்
'There is a train in next 10 minutes. The ticket for this train costs more. The trains after one hour costs less', என்றார்.

இதை நான் அப்படியே கார்த்தியிடமும், ஆதியிடமும் சொல்ல, மூவரும் யோசித்து, நமக்கு நேரம் தான் முக்கியம், காசு அல்ல என்று தீர்மானித்து உடனே மூவருக்கும் பயணச்சீட்டுகளை வாங்கிவிட்டு ரயில் ஏறச் சென்றோம். அப்போது தான் எங்களிடம் ஏற்கனவே முதல் வகுப்பு பயணச்சீட்டுகள் இருக்கிறதே என்று தோன்றியது. பின்னர் ஓடிச் சென்று வாங்கிய பயணச்சீட்டுகளை ரத்து செய்யச் சென்றேன். அவர் திட்டப் போகிறார் என்று நினைத்தேன். மாறாக அமைதியாக சிரித்துக் கொண்டே பயணச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு, பயணத்தோடு ரத்து செய்ததற்கான சீட்டும் தந்தார்.

நாங்கள் பிறகு ரயிலில் ஏறி, விண்டர்தூருக்குச் செல்ல ஆயுத்தமானோம். எங்களது முதல் வகுப்புப் பெட்டியில் நாங்கள் மூன்று பேர் தவிர இன்னும் ஒரு ஐந்து பேர் தான். ரயில் பெட்டி ஏதோ ஐந்து நட்சத்திர ஓட்டல் போல் காட்சி அளித்தது. நாங்கள் வைத்திருந்த ரொட்டிகளையும் ஜாம்களையும் காலி செய்ய இது தான் சிறந்த இடம் என்று நினைத்து வெளியே இருக்கும் ரம்மியமான இடங்களைப் பார்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தோம். வைத்திருந்த ரொட்டிகள் தீர்க்கும் முன்பே விண்டர்தூர் வந்துவிட்டதால், மீதமிருந்தவற்றை ஆதி எடுத்துக் கொண்டு நாங்கள் எங்களுடைய அடுத்த ரயிலுக்கு ஏற அதற்கான நடைமேடைக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்த ரயில் விண்டர்தூரிலிருந்து ரைன் நீர்வீழ்ச்சிக்கு. அது மறுபடியும் நமது ஊட்டி ரயில் போல தான் காட்சியளித்தது. அதில் முதல் வகுப்பு தனியாக இல்லையென்பதால் முதலில் இருக்கும் ரயில் பெட்டியில் ஏறினோம். அங்கும் அதே தான். போகும் வழியெங்கும் அழகிய வீடுகள். சில வீடுகளில் சூரியகாந்தி செடுகளும் வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அடுத்தது ரைன் நீர்வீழ்ச்சி ரயில் நிலையம். ரயில் நின்றது. நாங்கள் இறங்க போகும் போது ஆதி எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
'என்ன டா தேடுறே?', என்றேன் நான்.
'ஒன்னும் இல்லே', என்றான்.
'இறங்கணும் டா இங்க'
அவன் எதையோ தேடிக் கொண்டிருக்க ரயில் கிளம்பியது.
'டேய் ரயில் கிளம்பிடிச்சு, என்ன தான் தேடுறே?'
'என்னோட பேக் டா', என்றான்.
'சரி பிரச்சனை இல்ல, அதுல என்ன இருக்கு?'
'என்னோட ட்ரெஸ் இருக்கு டா, அப்றொம் காமெரா இருக்கு டா'
'சரி கலவைப் படாத, நாம அதைத் தேடிக்கிட்டு இருந்தா, இன்னைக்கு ஈவெனிங், ப்ளைட்ட மிஸ் பண்ணிடுவோம்'.
'டேய், அதுல என்னோட பாஸ்போர்ட்டும் இருக்கு டா', என்றான்.

நாங்கள் மூச்சு விடுவதை சற்று மறந்தே போய்விட்டோம்.

பயணம் தொடரும்...

Saturday, July 11, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 4

இதுவரை பயணித்தது...

நாங்கள் மூவரும் உள்ளே வரப்போகும் பெண்ணுக்காக ஆவலுடன் காத்திருக்க, ஆங்கிலம் தெரிந்த கொரியன் மட்டும் கதவைத் திறக்கச் சென்றான். கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்து வந்தான். வெளிச்சம் அவ்வளவாக இல்லாததால் உள்ளே வந்த பெண்ணின் முகம் எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.

'மச்சி உங்க யாருக்காவது அவ முகம் தெரிஞ்சுதா?', என்றேன்.
'ஏன் டா, நீ தான் பக்கத்துல இருக்கிற. உனக்கே தெரியல, அப்றொம் எங்க எங்களுக்குத் தெரியப் போவுது', என்றான் கார்த்தி.
'லைட் போட்டுடலாமா?'
நாங்கள் சொல்லும் போதே, அவர்கள் விளக்கைப் போட, முகங்கள் பிரகாசமானது. உள்ளே வந்த பெண்ணுக்கு வயது சுமார் நாற்பத்தி ஐந்து இருக்கும். ஆங்கிலம் தெரியாதவனுக்குப் பாவம் கேள் ப்ரெண்ட் என்றால் என்னவென்று கூடத் தெரியவில்லை. பின்னர் விசாரித்ததில், அந்த யூத் ஹாஸ்டலில் மட்டும் சுமார் முப்பது கொரியர்கள் வந்துள்ளதாகவும், அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்றும், அவர்கள் ஏதோ படிப்பு சம்பந்தமாக வந்ததாகவும், உள்ளே வந்த பெண் அவர்களின் ஆசிரியை என்று தெரிந்ததும் 'ச்சேய்' என்றாகிவிட்டது.

7-அக்டோபர்-2007, ஞாயிறு
அதிகாலை ஆறு மணிக்கே நாங்கள் எழுந்து விட்டோம். இன்று நாங்கள் யூங்ப்ரா போக வேண்டிய நாள். அங்கு தான் ஜில் ஜில் ஐஸ் இருக்கும் இடம். காலை இலவச உணவை சாப்பிட்டு விட்டு, வெளியே வந்தால் இண்டெர்லேக்கனின் அதிகாலைப் பொழுதை எழுத வார்த்தைகள் என்னிடம் இல்லை. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலன்று காட்சியளிக்கும் புல்வெளிகள். தூரத்தில் இருக்கும் மலைகள் நீலநிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது.இண்டெர்லேக்கனிலிருந்து ரயிலில் சுமார் இரண்டு மணி நேரப் பயணம் என்று நாங்கள் இண்டெர்லேக்கன் ரயில் நிலையத்திலேயே தெரிந்து கொண்டோம். நாங்கள் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு ஒரு வயதான ஒருவர் கார்த்தியைப் பார்த்து, 'Where are you coming from', என கேட்க, கார்த்தி, மறக்காமல், 'We are from London', எனச் சொல்ல, அவர் சற்றும் மதிக்காமல் அங்கே விட்டுச் சென்று விட்டார்.

நாங்கள் இண்டெர்லேக்கனிலிருந்து ஒரு ரயில் ஏறி, க்ரிண்டள்வால்ட் எனும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து நமது ஊட்டி ரயிலைப் போல் ஒரு சிறிய ரயிலைப் பிடித்து யூங்ப்ராவிற்குப் போக வேண்டும். வழக்கம் போல், போகும் வழியெங்கும் அருமையாகவே காட்சியளித்தது. க்ரிண்டள்வால்ட் வந்து சேரும் போதே தூரத்தில் வெள்ளை நிறத்தில் மலைகள் தெரிந்தது.நாங்கள் போனது அக்டோபர் என்பதால் பனி குறைவாகவே இருந்தது. க்ரிண்டள்வால்ட் அடைந்தது ஒரு சில நிமிடங்களில் இரண்டாவது ரயிலைப் பிடித்தோம். இந்த இடண்டாவது ரயில் மிகவும் சிறியதாகவும், ஒரு பொம்மை ரயில் போல் காட்சியளித்தது. இந்த ரயில் மலையின் இடையே செல்ல வேண்டிய ரயில் பல இடங்களில் மலையின் இடையே இருக்கும் சுரங்கப் பாதையின் இடையே சென்றது. ஆங்காங்கே ரயில் நின்று அங்கிருக்கும் இடங்களைப் பார்க்க ஒரு சில நிமிடங்கள் அளித்தது.யூங்ப்ராவின் உச்சி தான் ஐரோபாவின் உச்சி. இது ஆல்ப்ஸ் மலையின் ஒரு பக்கம். டிட்லிஸ் என்பது ஆல்ப்ஸ் மலையின் இன்னுமொரு பக்கம். ஆல்ப்ஸ் மலை பல மக்கள் கூடும் சுற்றுலா தளம். எனினும், டிட்லிசும் யூங்ப்ராவும் பார்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும். இரண்டு இடத்திலும் பனிக்கட்டிகள். அதனால் இரண்டில் ஒன்று பார்த்தாலே போதும். நேரம் இருந்தால் இரண்டு இடங்களுக்குச் செல்லலாம். நேரம் இல்லாத பட்சத்தில் இரண்டில் ஒரு இடத்திற்கு சென்றாலே போதும். நாங்கள் யூங்ப்ரா தேர்ந்தெடுத்த காரணம், இதன் மலை உச்சி ஐரோப்பாவிலேயே உயரமான இடம் என்பதால்.

இங்கு பார்க்க வேண்டிய இன்னுமொரு இடம் ஐஸ் பேலஸ். முழுக்க முழுக்க ஐஸ் கட்டிகளால் செய்யப் பட்ட ஒரு குகை. குகையின் உள்ளே பல சிற்பங்கள் செய்யப் பட்டுள்ளது. அனைத்துமே ஐஸ் கட்டிகளால். பிரம்மாண்டமான குகை. பார்த்து நடக்க வேண்டும், இல்லையெனில் என்னைப் போல் ஒரு முறையாவது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம்.ஐஸ் பேலசைப் பார்த்து விட்டு, வெளியே வந்தால் யூங்ப்ராவில் ஜில் ஜில் ஐஸ் கண் முன்னே. ஏதோ பிறந்த பலன் அடைந்து விட்டது போல் ஒரு உணர்வு.

இங்கே சிறிது நேரம் இருந்து விட்டு, பின்னர் நாங்கள் மலை உச்சிக்குச் சென்றோம். அனைவரும் செல்வார்கள். வழி தவர விட முடியாது. அங்கே நினைப்பவர்கள் உருளலாம், சறுக்க நினைப்பவர்கள் சறுக்கலாம், குதிக்க நினைப்பவர்கள் குதிக்கலாம், அமைதியாக இருக்க நினைப்பவர்கள் இங்கே கண்டிப்பாக வரவேண்டாம். இனி படங்கள்.ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டு, அங்கிருந்து வர மனமே இல்லாமல் திரும்பினோம். இண்டெர்லேக்கன் வந்து சேரும் போது சுமார் ஆறு மணி இருந்திருக்கும். ஒரு மணி நேரம் தெருக்களைச் சுற்றிக் கொண்டிருந்தோம். அட அங்கு தெருக்களும் சுற்றுலா spell check தளம் தான்.
'இன்னைக்குக் கண்டிப்பா, சுவிஸ் சாப்பாடு தான் சாப்பிடனும்', என்றேன்.
'கண்டிப்பா, இங்க வந்து இந்த ஊரு சாப்பாடு சாப்பிடலேனா எப்படி', என்று வழிமொழிந்தான் கார்த்தியும்.

நான் பார்த்த வரையில் லண்டனில் ஒரு ஓட்டலின் மெனு அட்டை, ஓட்டலின் வெளியே ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்திருப்பார்கள். நமக்கு பிடித்த உணவு இருக்கும் பட்சத்தில் நாம் உள்ளே சென்று சாப்பிடலாம். சுவிசிலும் அப்படித் தான் இருந்தது. மூவரும் இரவு ஏழரை மணியிலிருந்து அருகிலிருந்த ஓட்டல் ஒவ்வொன்றாக சென்று அங்கிருக்கும் மெனு அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பார்த்த அனைத்துமே நிராகரித்துக் கொண்டிருந்தோம். ஒன்று அங்கிருக்கும் உண்வு கண்டிப்பாக நம்மால் சாப்பிட முடியாது, இல்லை அதன் விலை நமக்குக் கட்டுபடி ஆகாது என்பதால். கிட்டத்தட்ட பத்து ஓட்டல்களை விடுத்து, இனி நேற்று போல் ஏதாவது ஒரு இந்திய ஓட்டலுக்குச் சென்று தான் சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.

அதோ அந்தத் தெருவில் இன்னும் சில ஓட்டல்கள் இருந்ததைத் தெரிந்து அங்கு சென்றோம். முதல் இரண்டு மூன்று ஓட்டல்களுக்கு நோ சொல்லி விட்டு, மேலும் நடந்தோம். கடைசியில் இருந்த ஓட்டலின் மெனு அட்டையை கார்த்தி பார்த்துக் கொண்டிருந்தான். நானும் ஆதியும் உள்ளே எட்டிப் பார்த்தொம்.
'மச்சி உள்ளே பாரு, சாப்பாடு எப்படி இருந்தாலும், எவ்ளோ செலவானாலும் இங்க தான் சாப்பிடப் போறோம்', என்றேன்.
'ஆமா டா, கண்டிப்பா', என்றான் ஆதி.
'என்ன டா சொல்றீங்க', என்றபடி கார்த்தி உள்ளே பார்த்து, 'கண்டிப்பா, லெட்ஸ் கோ', என்றான்.

பயணம் தொடரும்...

Friday, July 10, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 3

இது வரை பயணித்தது...

'சர்தான், நேத்து நைட் ஏர்போர்ட், இன்னைக்கு நைட் ப்ளாட்பார்ம் போல', என்றேன்.
அப்போது அங்கு வெள்ளை நிறத்தைத் தவிர வேறொன்றும் அறியேன் என்ற படி ஒரு பெண் செல்ல, 'மச்சி, இவளுக்குப் பக்கத்து ரூம்ல நமக்கு இடம் கிடைக்குமா பாரு டா', என்றான் ஆதி.
'ங்கொய்யாலே, ரூமே கிடைக்கல, இதுல ஸ்பெசிபிகேஷன் வேற', என்றேன்.
'So when can we check in, when will the reception be open', கார்த்தி கேட்டான்.
'Reception will be open again this evening till night. We have lockers there and bathrooms on to the left', சொல்லிவிட்டு சிரித்தாள் அங்கிருந்த பெண்.

நாங்கள் எங்களது பைகளை அங்கிருந்த லாக்கர்களில் வைத்து ஒருவன் காவல் காக்க, மற்றவர்கள் குளித்து முடிக்க, அனைவரும் மதியம் பன்னிரண்டு மணிக்குத் தயார்.
'இவ்வளவு வசதி இருந்தா நான் ரூம் புக் பண்ணியே இருந்திருக்க மாட்டேன் டா', என்றான் ஆதி.
'ஆமா, நமக்கு வேண்டியது பைகள வெக்கறதுக்கு ஒரு இடம், குளிக்கிறதுக்கு ஒரு இடம், சூப்பர் மச்சி. ரூம் கேன்சல் பண்ணிடலாமா?', என்றேன்.

வெளியே வரும் போது, 'மச்சி ரிசெப்சன்ல பாத்தோம்ல ஒரு பொண்ணு வெள்ள வெளேற்னு அவ ஆஸ்திரேலியா டா', என்றான் ஆதி.
'அது எப்படி டா கண்டுபிடிச்ச', என்றேன்.
'உங்கள மாதிரி தேர்வடைந்த துறைமுகம் எல்லாம் இல்ல'.
'பேசிட்டியா?'
'ச்சீ... இல்ல'
'பின்ன?'
'ஒட்டு கேட்டேன்'
'ம்ம்ம்'
'அவங்க க்ரூப்பா ட்ரிப்புக்கு வந்திருக்காங்க. பர்ஸ்ட் ப்ளோர்ல தான் இருக்காங்க', என்றான்.

இருப்பினும் எங்களின் ஊர் சுற்றும் பொறுப்புணர்ச்சி எப்போதாவது எங்களை எட்டிப் பார்ப்பதால், நாங்கள் வெளியே கிளம்பினோம். அன்று நாங்கள் பட்ட பாட்டைப் பார்த்து வானமும் அழுது கொண்டிருந்தது. எங்களின் திட்டப்படி அன்று யூங்ப்ரா போக வேண்டும். காரணம் அங்கு தான் ஜில் ஜில் ஐஸ் இருக்கிறது. ஆனால் மழையில் போகக் கூடய இடம் அது இல்லை என்று பலர் எங்களுக்கு சொன்னதால், எங்களின் திட்டத்தை மறுபடியும் வேகவேகமாக மாற்றி அமைத்தோம். அடுத்த நாள் திட்டத்தில் இடங்கள் குறைவாகவே இருந்ததினால், மேலும் இன்று ஏற்கனவே பாதி நாள் முடிந்துவிட்டதால், அடுத்த நாள் திட்டத்தில் இருந்தவை இன்றைக்கு மாற்றப்பட்டது. வெங்கன் மற்றும், இண்டெர்லேக்கன் சுற்றுவோம் என்று திட்டக்குழுவில் தீர்மானம் செய்யப்பட்டது.

வெங்கன் என்பது இண்டெர்லேக்கனிலிருந்து சுமார் ஒன்றரை நேர ரயில் பயணம். ரயிலில் முதல் வகுப்பில் தான் ஏறுவோம் என்று ஒற்றைக்காலில் நின்று பின இரண்டு கால்களோடு ஏறினோம். ரயிலைப் பற்றி எழுத வேண்டுமெனில் அதற்குத் தனிப் பதிவாகத் தான் இருக்கும். வெங்கன் போகும் வழி கூட பிரமாதம். மாசற்ற சூழல், எங்கும் பச்சைப் பசேலென்று மலைகள். ஒவ்வொரு சாலையின் ஓரத்திலும் தண்ணீர் ஓடுகிறது. அட சுத்தமான தண்ணீர் தான்.வெங்கனின் முக்கியத்துவம் கேபில் கார். ஒரு மலையிலிருந்து வேறொரு மலைக்குச் செல்ல வேண்டும். ஆகாயத்தில் பறப்பது போல் ஒரு உணர்வு. நாங்கள் சென்றது இலையுதிர் காலம் என்பதால் மரங்கள் யாவும் பொன்னிறத்தில் இருந்தது.கேபில் கார் பயணமும் சுமார் ஒன்றரை மணி நேரம். இடையில் ஒரு இடத்தில் இறங்கி வேறொரு கேபில் கார் ஏறவேண்டுமாம்.


அங்கு இந்தியக் குடும்பம் ஒன்றைக் காண முடிந்தது. அவர்களுடன் பேச்சு கொடுத்தவாறே வேறொரு கேபில் காரில் ஏறுவதற்கு நடந்தோம். மணி மதியம் இரண்டிருக்கும். ஆனால் பத்தடிக்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. அப்போது தான் தெரிந்தது நாங்கள் மேக மூட்டத்தின் நடுவே நடந்து கொண்டிருந்தோம் என்று.நாங்கள் ஏறிய இரண்டாவது கேபில் கார் இன்னும் உயரத்தில் இருக்கும் மலைகளின் இடையே செல்வது. கேபில் கார் மேகத்தைக் கிழித்துச் செல்வதை உணர முடிந்தது. இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்கும் தெரியும்.வெங்கனில் கேபில் கார் சாகசத்தை முடித்து விட்டு பின்னர் இண்டெர்லேக்கனுக்குத் திரும்பும் போது மணி சுமார் ஏழு இருந்திருக்கும். பசி உயிரைக் கிள்ளியதால் அருகில் ஏதேனும் இந்திய உணவகம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்ததில் ஏதோ ஒரு சந்தில் ஒளிந்து கொண்டிருந்தது. அதைத் தேடிப் பிடித்து வேண்டியதையும், வேண்டாததையும் சாப்பிட்டு எங்களின் யூத் ஹாஸ்டலுக்குச் சென்றோம்.

மறுபடியும் அங்கிருக்கும் ரிசப்ஷனிஸ்டிடம் எங்களைப் பற்றியும், மறவாமல் நாங்கள் லண்டனிலிருந்து வந்ததாகவும் கார்த்தி சொல்ல, எங்களின் அறை எங்களுக்குக் காட்டப்பட்டது.

யூத் ஹாஸ்டல் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பத்தி:
இங்கு ஒரு அறையில் குறைந்தது நான்கு படுக்கைகள் இருக்கும். எத்தனை படுக்கைகளோ அத்தனை அலமாரிகள் பூட்டுடன் இருக்கும். ஒரு குளியலறை இரு கழிப்பறை இருக்கும். படுக்கைகள் ஒன்றின் மேல் ஒன்றாகக்கூட இருக்கலாம் (நமது ரயில்களில் இருக்குமே அப்படி). பல யூத் ஹாஸ்டல்கள் நன்றாக சுத்தமாக பராமரிக்கப் பட்டிருக்கும். மற்றவைகளில் கால் கூட வைக்க முடியாது. காலையில் உணவு இலவசம். திருமணம் ஆகாதவர்களுக்கு ஏற்றது.

நாங்கள் சென்றது மிக சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருந்தது. எங்களின் அறையில் ஆறு படுக்கைகள் இருந்தது. மற்ற மூன்று பேர் யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை.
'இந்த மூனு பெட்ல பொண்ணுங்களாக் கூட இருக்கலாம் இல்ல', என்றான் ஆதி. ஆதி வெளியே சொல்லிவிட்டான், அவன் சொன்னதை நாங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தோம்.

சற்று நேரத்தில் மூன்று ஆண்கள் உள்ளே நிழைய எங்கள் ஆசையில் இரண்டு லாரி லோடு மண் போட்டு மூடப்பட்டது. அவர்கள் கொரியாவிலிருந்து வந்ததாக அவர்கள் சொல்ல எங்களுக்குத் தெரிந்தது. அதில் ஒருவனுக்கு மட்டுமே ஆங்கிலம் தெரிந்திருந்தது. மூவரும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருந்தனர். ஒரு வேளை அண்ணன் தம்பிகளாக இருப்பார்களோ என நினைத்தோம். இதைக் கேட்டதற்கு மூவரும் ஒரே கல்லூரியாம். அதைத் தவிர எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆங்கிலம் தெரிந்தவன் சொன்னான்.

'எப்படி தான் கண்டுபிடிக்கிறாங்களோ', என்று நினைத்துக் கொண்டேன்.

ஆங்கிலம் தெரிந்தவனிடம் நாங்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
'Where are you coming from?', என்னைப் பார்த்துக் கேட்டான்.
'London', என்றேன்.
'Are you a Brit?', சந்தேகத்துடன் கேட்டான்.
'ஐயோ உண்மை தெரிஞ்சிடுச்சு போல இருக்கு', என்று நினைத்து, 'No we are from India, but we work in London', என்றேன்.
'Ah ok', என்றான்.

அந்த மூவரும் ஏற்கனவே அவர்கள் இடத்தைப் பிடித்திருக்க மிச்ச மீதி இருந்த மூன்று இடங்களை நாங்கள் எடுத்துக் கொண்டோம். ஆங்கிலம் தெரிந்தவனும், இன்னுமொருவனும் இரண்டு படுக்கைகளின் கீழ் பெர்த்தை எடுத்துக் கொண்டிருந்ததால், அதன் மேல் பெர்த்துகளை ஆதியும் நானும் எடுத்துக் கொண்டோம். மூன்றாவது படுக்கையில் கார்த்தி கீழேயும், மேல் பெர்த்தில் மூன்றாவது கொரியன் படுத்துக் கொண்டான்.

ஆங்கிலம் தெரிந்தவன் ஏதோ அடுத்த நாள் நாசாவில் செயற்கைக்கோளை ஏவி விடுவது போல் அவனது கணிப்பொறியில் வெகு நேரமாக ஏதோ தட்டிக் கொண்டிருந்தான். எங்களது அறை மிகவும் சிறியதாக இருந்ததினால், கார்த்திக்கு வியர்க்க, அவனது சட்டையைக் கழட்டிப் படுத்துக் கொண்டான்.

அப்போது அந்த ஆங்கிலம் தெரிந்தவன் எங்களைப் பார்த்து, 'Do you mind bringing my girl friend into this room', என்றான்.
'I am without a shirt, is that ok with you?', என்று கார்த்தி கேட்டான்.
'No problem', என்று சொல்லி விட்டு அவனது தொலைப் பேசியில் ஏதோ சொல்லி இணைப்பைத் துண்டித்தான்.

'மச்சி எனக்கு ஒரு கவிதை தோனுது டா', என்றான் ஆதி
'சொல்லு', இது நான்
'அக்கா வருவாங்க பரவாலயான்னு அவன் சொன்னான்,
சொக்கா போடலா பரவாலயான்னு இவன் கேட்டான்', என்றான்

கார்த்தி அவளின் வருகையைப் பார்ப்பதற்கு திரும்பிப் படுத்துக் கொண்டான்.
நான் மேலேயிருந்து கீழே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எதற்குப் பிரச்சனை என்று ஆதி எழுந்து அமர்ந்து கொண்டான்.

கதவு 'டொக் டொக் டொக்', என்றது.

பயணம் தொடரும்...

Thursday, July 09, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 2

இது வரை பயணித்தது...

'என்ன மச்சி, ஏர்போர்ட் சுத்தறது நம்ம ப்ளான்ல இல்லலெ', என்றான் கார்த்தி.
'இல்லேன்னா ஆரம்பிக்க வேண்டியது தான்', என்றேன்.
'சரி நம்ம ப்ளான மாத்தணும் ', இது ஆதி.
'சரி இங்கிருந்து அடுத்த ட்ரைன் எப்போன்னு தெரிஞ்சுக்கணும்', என்றேன்.

அப்போது அங்கே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வர, கார்த்தி அவரிடம் பேச்சு கொடுத்தான்.
'Hi, we are from London', என்றான் கார்த்தி.
'என்ன டா இவன் நம்ம ஊரையே மாத்திட்டான்', என்று நான் ஆதியிடம் கேட்டேன்.
கார்த்தியுடன் நானும் சேர்ந்து கொண்டு அவரிடன் பேசினோம். அடுத்த ரயில் இனி நாளை தான் என்றும், இன்று இரவு விமான நிலையத்தில் தான் எங்களது படுக்கை என்பதும் தீர்மானமானது. அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தான் இண்டெர்லேக்கனுக்கு முதல் ரயில் என்பதை தெரிந்து கொண்டு, விமான நிலையத்தைச் சுற்ற ஆரம்பித்தோம்.

அங்குமிங்கும் சுற்றி, பின்னர் களைத்த பின் ஒரு டீக்கடைக்கு முன் இருந்த சோபா செட்டில் செட்டில் ஆனோம். டீக்கடை என்றால் காபி டே ரேஞ்சுக்கு இருந்தது.
'நம்ம கிட்ட பர்ஸ்டு க்லாஸ் பாஸ் இருக்குன்னு சொன்னா நைட் தூங்க எங்கயாச்சும் நல்ல இடம் கிடைக்குமா', என்று கேட்ட என்னை இருவரும் முறைத்தனர்.

இரவு எங்கள் மூவரின் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ஒரு புது திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது எப்போது எங்கு சுற்றுவது என்று. நாங்கள் அடுத்த நாள் மாலை துன் என்ற இடத்துக்குக் கப்பலில் போக வேண்டும் என நினைத்தோம். ஆனால் ரயில் போகும் வழியில் துன் வருவதால், போகும் போதே வழியில் இறங்கி பார்த்துவிட்டு, துன்-இலிருந்து இண்டெர்லேக்கனுக்குக் கப்பலில் போவதாக முடிவெடுத்தோம். இரவு காபி டேயில் தூங்கி விட்டு அடுத்த நாள் காலை, பதறி அடித்துக் கொண்டு ஓடி ரயில் நிலையத்தை அடைந்தோம்.

6-அக்டோபர்-2007, சனி
ரயில் நிலையத்தில் கார்த்தி இங்கும் அங்கும் அலைந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
'என்ன டா தேடறே?', நான் கேட்டேன்.
'இனிமே நாம எல்லா இடத்துலயும் பர்ஸ்ட் க்ளாஸ் தானே, அதான் பர்ஸ்ட் க்ளாஸ் கம்பார்ட்மெண்ட் எங்க வரும்னு தேடிக்கிட்டு இருக்கேன்', என்றான்.
'அது சரி, நேத்து அவர் கிட்ட We are from Londonன்னு சொன்னே. என்ன மேட்டரு'
'அப்படி தான் மச்சி சொல்லணும். அப்ப தான் நமக்குத் தனி மதிப்பு கிடைக்கும்'.
'அப்படியா...?' என முழித்தேன். சரி இது தான் நாம் முதலில் மிக தொலைவில் வெளியே போகும் பயணம் என்பதாலும், எனக்கு முன்பே கார்த்தி, வெளி நாட்டில் இருந்ததாலும், நானும் நம்பி, 'சரி இனிமே நானும் அப்படியே சொல்றேன் டா', என்றேன் அப்பாவியாக.

காலை சுமார் 9:30 மணிக்கு துன் வந்து சேர்ந்தோம். அங்கிருக்கும் இடங்களைப் பார்த்து விட்டு 10:00 மணி படகிற்கு பதிலாக 11:00 மணி படகில் ஏறி இண்டெர்லேக்கன் போகலாம் என்று நினைத்தோம். துன்னில் பார்க்க என்ன இருக்கிறது என்று கூட முதலில் எங்களுக்குத் தெரியாது. எங்களின் முதல் திட்டம் இண்டெர்லேக்கனிலிருந்து துன்னிற்கு படகில் சவாரி செய்யவேண்டும் என்பது மட்டும் தான். அதனால் அருகிலிருக்கும் மக்களிடன் சற்று பேச்சு கொடுத்தோம். பாவம் மக்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்றாலும், சிறிது முயற்சி செய்து புரிந்து கொண்டு பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி விளக்கினார் ஒரு பெரியவர். அதில் முக்கயமானவை கோட்டை, ஆறு, அணை.

கோட்டை மிகச் சின்னதாகவும், மூடப்பட்டிருந்தும், பார்பதற்கு ரம்மியமாகவும், அழகாகவும் இருந்தது. பல இடங்களில் கேட்பார் யாருமின்றி குழாய்களில் குடிநீர் வழிந்து கொண்டிருந்தது.


அங்கிருந்து அருகிலிருந்த ஆறினைப் பார்க்கப் போனோம். ஆற்றின் பெயர் ஆரே. இது ஐரோப்பவில் பல நாடுகளுக்கிடையே ஓடுகிறதாம். காவிரி பற்றி மனதில் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை.

அருகிலிருந்த அணை மரக்கட்டையால் செய்யப்பட்ட அணை. எழுத முடியவில்லை - எனது எழுத்து அணையின் அழகைக் குறைக்கக்கூடும் என்பதால் புகைப்படம் மட்டும். நாங்கள் இல்லையெனில் அணையின் அழகு கூடியிருக்கும் என்பதில் உங்களைப் போல எனக்கும் ஐயமில்லை.


பதினொரு மணிக்கு படகில் ஏற அங்கிருந்த வரிசையில் நின்றோம். தினமும் பலர் துன்னிலிருந்து இண்டெர்லேக்கன் போவது போல் தெரிந்தது. பலர் நின்றுக்கொண்டிருந்தனர்.
'மச்சி, நம்ம கிட்ட பர்ஸ்ட் களாஸ் டிக்கெட் இருக்குல்ல', என்றேன்.
'ஆமா டா, நமக்கு நல்ல வரவேற்பு இருக்குனு நினைக்கிறேன்', என்றான் கார்த்தி.
ஆதி மட்டும் ஏதும் பேசாமல் காமெராவுடன் அருகிலிருக்கும் அழகைப் பெட்டிக்குள் அடைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.

நாங்கள் மூவரும் படகில் ஏறி விட்டோம். முதல் வகுப்பு முதல் மாடியில் இருந்தைப் பார்த்து, நாங்கள் மூவரும் மேலே ஏற முயன்றோம்.
அதைப் பார்த்த படகோட்டி எங்களைப் பிடித்து, 'Where are you going?', என்று கேட்டார்.
'We hold a first class ticket', என்றேன்.
என்ன நினைத்தாரோ, எங்களைப் பார்த்தால் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. பயணச்சீட்டைப் பார்த்தபின்னும் நம்பவேயில்லை. பின்னர் இன்னொருவர் வந்து பார்த்த பின் தான் எங்களை மேலே அனுப்பின்னார்.
'செம்ம மரியாதை மச்சி', என்றேன்.

மேலே எங்களுக்காக ஒரு பிரம்மாண்டம் காத்துக் கொண்டிருந்தது. படகு இல்லை, அது எங்களுக்கான டைடானிக் என்று தான் சொல்ல வேண்டும்.


கப்பலில் இருக்கும் ஒவ்வொரு முக்கிலும் நின்று பார்த்து வந்தோம்.
'மச்சி, நாம் பணக்காரப் பசங்க டா, பர்ஸ்டு க்ளாஸ்ல எல்லாம் போறோம்', என்றான் கார்த்தி.
'ஆமாம் டா', என்றேன். எங்களின் பின்னால் படகோட்டி இருந்ததைக் கவனித்து பேச்சைக் குறைத்தோம்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். இதோ வரப் போகிறது இண்டர்லேக்கன். மனதைக் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடும் போலிருந்தது நாங்கள் பார்த்த காட்சி. இது கனவா நினைவா என்று எங்களைக் கிள்ளிப் பார்த்துக் கொண்ட பின்னர் தான், இதை நான் காமெரா பெட்டியில் ஏற்றினேன்.


மனமே இல்லாமல் படகிலிருந்து இறங்கி, நாங்கள் முன் பதிவு செய்த ஒரு யூத் ஹாஸ்டலிற்குச் சென்றோம். மணி பன்னிரண்டு இருக்கும். தெருக்களில் அலைந்து தேடி, பின்னர் சேர்ந்தோம்.
'We are coming from London', என்றான் கார்த்தி.
'மறுபடியுமா?', என நினைத்துக் கொண்டேன்.
'We have booked beds for three of us', என்றான் கார்த்தி.
'We are sorry, the reception is closed, more over you have come a day later', என்றாள் அவள்.
'செத்தோம் டி'

பயணம் தொடரும்...

Wednesday, July 08, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 1

முன் குறிப்பு: தலைப்பைப் பார்த்து, ஏதோ சிந்துபாத் கதைகள் என்ற தொடர் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இந்தப் பதிவிற்குப் பின்னர் இந்த சிந்துபாத் கதைகள் தொடருமா என்றால், அது சந்தேகமே. உங்களின் ஆதரவைப் பொருத்தது.

நம்மிடையே இருப்பவர்களிடம் உலகத்தில் நீங்கள் போக நினைக்கும் இடம் எது என கேட்டால், சுவிஸ் நாட்டை பலரும் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் முக்கிய காரணம், ஜில் ஜில் ஐஸ், வேறொன்றும் இல்லை. நாங்களும் அப்படித் தான். அமெரிக்காவில் வேலை செய்யும் நம் மக்கள் ஐரோப்பாவிற்கு வந்தால் சுவிஸ் போவதில்லை, ஆனால் இங்கிலாந்தில் இருப்பவர்கள் அப்படி இல்லை. ஒரு வேளை இந்த ஜில் ஜில் ஐஸ் அமெரிக்காவில் இருக்கும் என்று நினைக்கவேண்டாம். இங்கிலாந்தில் வேலை செய்யும் மக்களுக்குத் தனியாக விசா தேவை இல்லாமல் இருந்த போது தான் நாங்களும் சென்றோம். இன்று இங்கிலாந்தில் இருப்பவர்களுக்குத் தனியாக விசா தேவைப்படுகிறது.

விசா தேவை இல்லாததால் செலவும் குறைவாகவே ஆகும் என கணக்கிட்டு கார்த்தியும், ஆதியும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அவர்களுக்கான பயணச்சீட்டுகளை வாங்கிவிட்டனர். பின்னர் இதைப் பற்றி எனக்குத் தெரிய, நானும் வருகிறேன் என்று சொல்ல, கார்த்தி எனக்கான பயணச்சீட்டும் வாங்கிவிட்டான். எது செய்தாலும் இன்சூரன்ஸ் வாங்க வேண்டி இருந்ததால், பயணத்திற்கும் நாங்கள் இன்சூரன்ஸ் வாங்கி விட்டோம். மூன்று நாட்களுக்கு என்ன பார்க்கலாம் என முடிவெடுத்து மூன்று நாட்களுக்கான சுவிஸ் சீசன் டிக்கெட்டும் வாங்கிவிட்டான் ஆதி. பணப் பற்றாக்குறையால் இரண்டாம் வகுப்பே தேர்வு செய்தோம். இதற்கு முன்னர் முதல் வகுப்பை எட்டிக் கூட பார்த்ததில்லை என்ற உண்மையைக் கடைசி வரையில் நான் சொல்லப் போவதில்லை. அது மட்டுமில்லாமல், அங்கு ஆதியின் நண்பன் ஒருவருடைய டெபிட் கார்டையும் வாங்கிவிட்டோம். அந்த புண்ணியவானுக்கு கடைசியில் பணம் தந்தால் போது என்றதால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

வெள்ளியன்று மாலை கிளம்பி, திங்கள் இரவு வருவதாக திட்டமிடப்பட்டது. எனக்கும் கார்த்திக்கும் திங்கள் விடுமுறை கிடைத்துவிட்டது. ஆதிக்கு கிடைக்கவில்லை. சரி அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம், ஆதியே கவலைப்படவில்லை.

5-அக்டோபர்-2007, வெள்ளி
அன்று காலை அலுவலகம் செல்லும் போதே, பெட்டியைக் கட்டிவிட்டோம் அனைவரும். நானும் கார்த்தியும் ஒரே வீட்டிலிருந்தோம். ஆதி மட்டும் வேறொரு ஊரில் தங்கியிருந்தான். அன்று காலையே அவனை தொலைப்பேசியில் அழைத்து அனைத்தையும் எடுத்துக் கொண்டாகிவிட்டது என உறுதி செய்த பின்னரே அலுவலகத்திற்குப் புறப்பட்டோம், ஆணியைப் பிடுங்குவது போல் பாவனை செய்ய. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மூவரும் தொலைப்பேசியில் அழைத்து பேசிக் கொண்டிருந்தோம். இது தான் எங்களின் முதல் தொலை தூரப் பயணம் என்பதால் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. நாங்களும் எவ்வளவு நேரம் தான் ஆணியைப் பிடுங்குவது போல் நடிப்பது. ஆனது ஐந்து மணி. கிளம்பினோம் மூவரும் அவரவர் அலுவலகத்திலிருந்து. மூவரும் ஒரு ரயில் நிலையத்தில் சந்திப்பதாக முடிவு செய்தோம். அதே போல் சந்திதோம்.

நான்கு மணிக்கு ரயிலில் இருந்தோம். அங்கேயே ஆரம்பித்தது எங்களின் புகைப்படங்கள் எடுக்கும் படலம். நானும் அப்போது தான் புதிதாக DSLR காமெரா வாங்கியிருந்தால், எதைக் கண்டாலும் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்ட்டிருந்தேன். அங்கிருந்து சுமார் முக்கால் மணி நேரத்தில் ல்யூட்டன் விமான நிலையம் வந்தடைந்தோம். ஏதேனும் வித்தியாசமாகத் தென்பட்டால், நாங்கள் என்ன செய்வது, தானாக காமெரா ஆன் ஆகிவிடுகிறது. நானும் புகைப்படம் எடுத்து விடுகிறேன். விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இம்மிக்ரேசனும், பிறகு போர்டிங்கும் ஆரம்பித்தது.

திருமலைக்குச் செல்ல, பேருந்தில் இடம் பிடிக்க கீழ் திருப்பதியில் எங்கோ வரும் பேருந்தை விரட்டி, பின்னால் அரை கிலோ மீட்டர் ஓடி, கிடைக்கும் சன்னலில் தன்னிடம் இருக்கும் ஏதோ ஒன்றைப் போட்டு இடம் பிடிப்பது என்பது திருப்பதியில் மட்டுமே என்று நினைத்திருந்தேன். எனது அறிவின்மையை எனக்கு எடுத்துக் காட்டினாள் அங்கு போர்டிங் பாஸ் தந்த வெள்ளைக்காரி.
'The boarding pass doesn't have the seat number', என்றேன்.
'Yeah, you can sit where ever you find place', என்றாள் அவள்.

அவ்வளவு தான், ஓடினோம், ஓடினோம், விமான நிலைய விளிம்பிற்கே ஓடினோம், சுவிஸ் எங்களைக் கட்டிப் பிடித்து அழைத்ததால், மீண்டும் உள்ளே சென்றோம்.
'மச்சி, சீக்கிரம் போறோம், இடம் பிடிக்கிறோம்', இது நான்.
இருவரும் சம்மதிக்க, எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ அவ்வளவு வேகமாக நடந்தோம். எங்களின் கேட் நம்பர் வந்ததும், முன்னே இருப்பவர்களை ஓவர் டேக் செய்து முன்னேறினோம். அனைவரையும் முந்திக் கொண்டு இதோ நாங்கள் மூவர் தான் முதலில்.
எங்களின் போர்டிங் பாஸ்களை அங்கு நின்றுக் கொண்டிருந்த பீட்டரிடம் காட்டி அவர் காட்டிய இடத்தில் நின்றோம். நாங்களே வரிசையில் முதலிடத்தில்.

'எங்க டா உக்காரலாம்', கார்த்தி கேட்டான்.
'முன்னாடியே உக்காரலாம் மச்சி, அப்போ தான் இவங்களுக்கு முன்னாடி நாம் நம்ம கால சுவிஸ்ல வெக்க முடியும்', பலமாக யோசித்து சொன்னான் ஆதி.

எங்களின் பின் ஒவ்வொருவராக நிற்க, எங்களின் பின்னர் இருபது பேர் இருந்தனர். அதன் பின் வருபவர்கள் U டர்னை எடுத்து, நின்றனர். அதாவது நாற்பதாவதாக வந்தவன் எங்களின் அருகில். அதே போல் என்பதாவதாக வந்தவன் நாற்பதாவதாக வந்தவன் அருகில். முப்பதைந்தாக இருப்பவர் எங்கே இருக்ககூடம்? எங்கள் மூவரின் பின்னால், அடுத்த வரிசையில். அதாவதாக கிட்டத்தட்ட எங்கள் பக்கத்தில் தான். புரிகிறதா? இல்லையெனில் மீண்டும் படிக்கவும்.

அதென்ன முப்பத்தைந்து? அங்கு நின்றுக் கொண்டிருந்தது அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு மேரி. உண்மையான பெயர் தெரியாது, எனவே அவளின் பெயர் இனி மேரி. மேரியின் கையிலிருந்த பாஸ்போர்ட்டைப் பார்த்து அவள் அமெரிக்கப் பிரஜை என்று தெரிந்து கொண்டேன். இதை கார்த்தியும் கவனிக்கத் தவரவில்லை.
'ஏய், நான் அந்தப் பொண்ணு பக்கத்துல உக்காரப் போறேன்', என்றான் ஆதி மேரியைப் பார்த்துக் கொண்டு,
'அதுக்கு அவளோட பாய் பிரண்டு ஒத்துக்கணும்', என்றேன்.
'ஓ அவனா?', முப்பத்தாறாவதாக நின்றவனைப் பார்த்துக் கேட்டான்.
'யாருன்னு தெரியாது, ஆனா அவ பேரிக்கா நாட்டுல இருந்து வந்திருக்கா, சோ கண்டிப்பா இருக்கும்', என்றான் கார்த்தி.
இப்படித்தான் யாருக்கும் புரிந்துவிடக்கூடாது என்று சில கோடு வார்த்தைகள் உருவாக்கினோம், சமயத்தில் எங்களுக்குக் கூட புரிந்துத் தொலையாது.
'பேரிக்கான்னா?', ஆதி கேட்டான்.
'பேரிக்கா நாடு மச்சி, நம்ம ஊருல நிறைய பேரு போவாங்களே', என்றேன்.
'ஓ அமெரிக்காவா?' என ஆதி கத்த மேரி திரும்பிப் பார்த்தாள்.
நானும் கார்த்தியும் ஆதியை உதைக்க முயன்றோம்.
'எப்படி டா கண்டுபிடிச்ச', ஆதி கேட்டான்.
பாஸ்போர்ட் தமிழாக்கம் செய்ய முயற்சி செய்து, பாஸ் மட்டுமே தமிழில் தெரிய, போர்ட் தமிழில் தெரியாமல், நான் 'தேர்வடைந்த... தேர்வடைந்த... தேர்வடைந்த...'
'துறைமுகம். தேர்வடைந்த துறைமுகம்', என்றான் கார்த்தி.
'அப்படின்னா... ஓ பாஸ்போர்டா?'.
மேரி மறுபடியும் எங்களைப் பார்த்தாள்.

போர்டிங் ஆரம்பிப்பது போல் தெரிந்தது நாங்கள் எங்களின் பையை எடுத்துக் கொண்டோம்.
'மச்சி, அவளுக்கு பின்னாடியாவது உக்காரணும் டா', என்றான் ஆதி.
போர்டிங் ஆரம்பித்தது. பின்னாலிருந்து தொடங்க, நாங்கள் தான் வரிசையில் கடைசி.
மேரிக்கு சிரிப்பும், எங்களுக்குக் கடுப்பும் வந்தது.

அதோடு முடிந்தது மேரியின் சகாப்தம்.
நாங்கள் விமானத்தில் கடைசியாக ஏறினாலும் எங்கள் மூவருக்கும் ஒரே வரிசையில் இடம் கிடைத்தது. விமானத்திலும் நின்றபாடில்லை எங்களின் புகைப்படப் படலம். நாங்கள் புறப்படும் முன்பே நாங்கள் எங்கு தங்க வேண்டும், எங்கு, எப்போது சுற்ற வேண்டும் என்று மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டிருந்தோம். அதன்படி நாங்கள் விமானத்திலிருந்து இறங்கிய பின் ஒரு மணி நேரத்தில் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து ரயிலை எடுத்தால், இரவு நாங்கள் பதிவு செய்த ஓட்டலுக்குச் சென்று விடலாம். விமானப் பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம். அனைத்தும் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்தில் எங்களின் விமானம் சுவிஸை வந்து அடைந்தது.

எங்கிருந்து தான் வந்ததோ புத்துணர்வு அந்த சோர்விலும். சுவிஸில் எங்களது பாதம் படும் போது எதோ நிலவில் கால் வைத்த ஒரு உணர்வு எங்களுக்கு. உற்சாகம் தாங்க முடியவில்லை. எங்கு எதைப் பார்த்தாலும், அங்கு நின்று கொண்டு ஒரு புகைப்படம். ரயிலுக்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்ததால், விமான நிலையத்திலேயே எங்களின் சுவிஸ் பயணத்தை ஆரம்பித்தோம். அம்ர்ந்து கொண்டு ஒருவன் புகைப்படம் எடுத்துக் கொண்டால், மற்றவரெல்லாம் என்ன சும்மாவா இருக்கப் போகிறார்கள்? அனைவரும் தலா ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதோடு நில்லாமல், அவரவர் காமெராவில் தனியாக புகைப்படங்கள் எடுக்க வேண்டியிருந்தது. நேரம் ஆகியதால் அங்கிருந்து கிளம்பி ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றோம்.'மச்சி, இது ஆஃப் சீசன். அதனால நம்ம செகண்ட் க்ளாஸ் டிக்கெட்ஸ், பர்ஸ்ட் க்ளாசுக்கு அப்க்ரேட் பண்ணிட்டாங்க. சொல்ல மறந்துட்டேன்', என்றான் ஆதி.
ஏற்கனவே எங்களது கால்கள் நிலவில் வைத்தது போல் இருந்தது எங்களுக்கு, இதில் இந்த விஷயத்தைக் கொண்டாடியே ஆக வேண்டியிருந்தது. ஆயினும், ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டதால், எங்களின் பொறுப்புணர்ச்சி எங்களை ரயில் நிலையத்தை அடையச் செய்தது. இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது ரயில் ஏற. கூட்டமே இல்லாததைப் பார்த்து சற்று வியப்பாக இருந்தது. ஐந்து நிமிடங்களும் கழித்தோம். ரயில் வரவில்லை. அங்கிருந்த ஒருவரை நாங்கள் விசாரிக்கச் சென்றோம்.

'We have booked our tickets to Interlaken, when is the train expected',
'The last train has left almost one hour back', என்றார் அந்த சுவிஸ் காரர்.
'Our train is at 10 PM', என்றேன்.
அவர் சிரிக்க, எனக்குப் புரிந்துவிட்டது, சுவிஸ் நேரம் லண்டன் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னே. நாங்கள் கடைசி ரயிலைக் கோட்டைவிட்டோம்.

பயணம் தொடரும்...

Tuesday, July 07, 2009

32K

இதோ எனது பதில்கள்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

நான் பிறக்கும் முன்பே எனது பெயர் முடிவானது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இதே பெயர் தான் என்று. என்னுடைய பிறப்புச்சான்றிதழில் பெயர் கிரண் குமாருக்கு பதிலாக கிருஷ்ண குமார் என்று தவறாக அடித்துத் தந்திருக்கிறார் அந்த அரசாங்க ஊழியர். நானாக இருந்திருந்தால் அப்படியே கூட விட்டுருப்பேன். எனது அப்பா, அதை அவர்களுடன் பேசி சிரத்தையுடன் மாற்றியிருக்கிறார். எனவே எனது பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

02. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஞாயிறு இரவு பன்னிரண்டு மணிக்கு. மீண்டும் ஒருமுறை அனைவரையும் விட்டுப் போகும் போது. விமான நிலையத்தில் கண்கள் கலங்கியது. தனிமை கொடுமை.

03. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
மிகவும். எனது பள்ளியில் சிறு வயதில் கையெழுத்துப் பயிற்சி வகுப்புகள் உண்டு. அதனால் தான் என்னவோ, எனது கையெழுத்து மிகவும் நன்றாகவே இருக்கும்.

04. பிடித்த மதிய உணவு என்ன?
எதுவாக இருப்பினும் அம்மா சமைத்தது. அதற்கு பின்னர், நான் சமைப்பது. நல்லாத்தாங்க சமைப்பேன். என்னுடைய சமைப்பது எப்படி படிக்கலையா நீங்க.

05. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை. சில நாட்களாவது பிடிக்கும்.

06. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிப்பது பிடிக்காது. கடல் மண் ஆடைகளில் புகுந்து விடுவதால். அருவி பிடிக்கும்.

07. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்களை தான். ஐ டு ஐ காண்டாக்ட் மிகவும் முக்கியம்.

08. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது : தெரியாத விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்வது
பிடிக்காதது : அப்படிச் செய்ததால், jack of all trades, master of none ஆனது. ஆனால் இப்படி இருப்பதும் எனக்கு பிடித்தேயுள்ளது.

09. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
நான் சின்னப் பையங்க :-).

10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருமே பக்கத்தில் இல்லை என்ற கவலை தான் :-). பக்கத்தில் யார் இருந்தாலும் நல்லதே.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷூ. எல்லாமே கருப்பு தான். அதான் சொன்னேன்னே எல்லாமேன்னு.

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சென்ற வாரம் வரை FMஇல் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. 'துஜே மேன் ரப் திக்தா ஹே யாரா மேன் க்யா கரோ' என்ற பாட்டு பல முறை கேட்டுவிட்டேன். 'ரப் னே பனா தி ஜோடி' படத்திலிருந்து இந்தப் பாட்டு. இப்போது எதுவும் கேட்கவில்லை.

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம். நான் கல்லூரி முடிக்கும் வரை இங்க் பேனாவைத் தான் வைத்திருந்தேன்.

14. பிடித்த மணம்?
croissant(இதை க்ரொசாந்த் என்று சொல்ல வேண்டுமாம்)

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
யாருமே இல்லேங்க :-)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நிறைய இருக்கு. அட கோவில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு என்ற ஒரு பதிவு.

17. பிடித்த விளையாட்டு?
ஹி ஹி ஹி... இதைப் படிங்க.

18. கண்ணாடி அணிபவரா?
ஒரு காலத்தில் அணிந்திருந்தேன். பின்னர் (ஒரு வருடத்திற்கு முன்னர்) சையாப்டிக்ஸ் செய்து கொண்டு இப்பொது அணிவதில்லை. புதிதாய் ஒரு ரேய்பேன் வாங்கி தொலைத்ததால் வெயிலில் மட்டும் அதை அணிவதுண்டு.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
என்னுடன் இருக்கும் கூட்டத்தைப் பொறுத்து.
The Shawshank's Redemption நண்பர்களுடன் பார்க்க ஆரம்பித்து, முதல் காட்சியிலேயே அவர்கள் கமெண்டடிக்க, தொடர்ந்து பார்க்காமல் தனியாக பார்த்தேன்.
வில்லு படம் தனியாக பார்த்தால் உயிருக்கு பாதிப்பு இருப்பதை உணர்ந்து பல நண்பர்களோடு பார்த்தேன்.
எனவே என்னோடு இருப்பது யார் என்று தெரிந்துக் கொண்டு, அதற்கேற்ற படங்களைக் கண்டால் அனைத்தும் பிடிக்கும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
காதல்னா சும்மா இல்லே, நேத்து ஜெட் ஏர்வேய்ஸ்ல பாத்தேன். இந்தப் படத்தை தெலுங்குல பார்த்த மாதிரி இருக்கு.

21. பிடித்த பருவ காலம் எது?
கல்லூரி படிக்கும் போது. முக்கியமாக ப்ராஜெக்ட் செய்த நாட்கள்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்
The Selfish Gene

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அம்மா அப்பா படம் வெகு நாட்களாக இருக்கிறது. மாற்றுவதாய் எண்ணம் வரவில்லை.

24. உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : சத்தமே பிடிக்காது, இசை தான் பிடிக்கும்.
பிடிக்காத சத்ததம் : சிக்னலில் பச்சை விழுந்த உடன், முதலில் நிற்கும் ஒரு வண்டிக்கு பின்னால் நிற்கும் அனைவரும் ஹாரன் அடிப்பது.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
லண்டன், சுவிஸ், பாரிஸ், ஸ்காட்லாண்டு. எது தூரம் என்று தெரியவில்லை.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எதாவது ஒன்று இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் உலகத்தில் இருக்கும் அத்துனை பேருக்கும் தனித் திறமை இருக்கும் பட்சத்தில், உலகில் அத்தனை திறமைகளா இருக்கிறது? என்னாமா யோசிக்கிறேன் இல்ல?

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
இந்தியன் படத்தில் கமல் சொல்வது போல், 'உங்க வேலையைச் செய்ய எதற்கு காசு தரணும்?'
அந்நியன் படத்தில் விக்ரம் சொல்வது போல், 'பலர் தப்பு செய்றதுனால தப்பு சரி ஆகாது'

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தானை உள்ள கொண்டு போயா வைக்கனும்? நான் எல்லாவற்றிலும், cleanliness, punctuality, obidience இப்படிப் பல விஷயங்களை எதிர்பார்க்கிறவன். ஆனால் ஏனோ ஒரு நாள் நானும் இதைத் தவற விடுகிறேன்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
நிறைய இருக்கு, அடுத்து சுற்ற வேண்டும் என நினைத்திருப்பது பூனே - மும்பை ஹைவேயில் இருக்கும் கிராமங்கள்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
நானாகவே இருக்கத் தான் ஆசை. ஆனால் அப்படி இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை. மாற வேண்டியிருக்கிறது பல நேரங்களில்.

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அதான் சொன்னேன்னே, நான் சின்னப் பையன் என்று.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
எனது மாமா ஒரு பெரிய அட்டையில் எழுதி வைத்த ஒரு வாக்கியம். அன்று அதன் பொருள் தெரியாமலேயே படித்துப் படித்து மனதில் பதிந்த ஒன்று.
Life is not a problem to be solved.
Its an experience to be lived.