Thursday, April 30, 2009

கனவு நினைவாகுமா

கனவு நினைவாகுமா? ஜாதகப் படி இன்று இரவோடு முடிகிறதாம் என்னுடைய ஏழரை. நாளை முதல் என்னுடைய வாழ்க்கை ஒரு பெண்ணால் மெருகேறி அம்பானிகளையும், பில் கேட்சையும் ஓரம் தள்ளி முன்னுக்குச் சென்றாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் எங்கள் குடும்ப ஜோதிடர். எனது சிறு வயதிலிருந்தே எனது சித்தப்பா 'டேய் நீ பம்பாய்ல பெரிய அடுக்கு மாடி கடை எல்லாம் கட்டுவ டா' என்று சொன்ன ஒரே காரணத்திற்காக நான் சிவில் இஞ்சினியரிங் படித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது மாமா 'அமெரிக்காவுல தான்பூ இப்ப நிறைய வேல இருக்கு' என்று சொன்னதற்காக கம்ப்யூட்டர் கற்றேன். படித்து முடித்து நான்கு ஆண்டுகள் வேலையில்லாமல் போனதால், ஜோதிடர் இட்ட கெடுவிற்காகக் காத்திருந்து அதுவும் இன்றோடு முடிகிறது. நாளை எந்தப் பெண்ணை நான் பார்க்கப் போகிறேனோ என்று நினைப்பு எனது மூளையின் அனுக்களில் அலையடித்தது. எங்கு பார்க்கப் போகிறேன் அவளை? அவள் எப்படி இருப்பாள்? அவள் எனது வாழ்க்கையை மாற்றிவிடுவாளா? நாளை மும்பை முழுவதுமாகச் சுற்றி விடவேண்டும். அவள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்தாக வேண்டும். காலையில் ஆறு மணிக்கெல்லாம் அலாரம் வைத்துக்கொண்டேன். என்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை மடித்து வைத்திருந்த எனது சட்டையில் வைத்துக் கொண்டேன்.

அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டு குளித்து, இல்லாத அழகைக் கொண்டு வர முயற்சி செய்து தோற்று, நான்காக மடித்த சட்டையை மாட்டிக்கொண்டு, நிறம் மறந்த காலணிக்குக் கருப்பைப் பூசி, பரட்டையைப் பக்குவப்படுத்துவதற்குள் எனக்கு பிறந்த நாள் கண்டுவிட்டது. வீட்டிலிருந்து கிளம்பி பேருந்து நிலையத்தைப் பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தேன். முதலாவதாக வரும் பேருந்து எங்குச் சென்றாலும் ஏறிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். இது வரை திரைப்படங்களில் மட்டும் தான் முக்கிய காட்சிகளில் மழையும் இடியும் வரப் பார்த்திருக்கிறேன். இன்று ஏனோ எனது வாழ்விலும் இது நடக்கிறது. மேகத்தின் வேகம் கூடியது. பலத்த காற்றும் வீசியது. சில்லென்று மழைப் பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19.

மழையில் நனைந்து விடாமல் பேருந்தில் ஏறி விட முயற்சி செய்தும் சிறிது நனைந்தே தான் போனேன. வலது புறத்தில் கிடைத்த ஒரு இருக்கையில் சன்னலோரம் மழையால நனைந்திருக்க நான் அந்த இருக்கையில் இடது புறமாக அமர்ந்து கொண்டேன். காலையிலிருந்தே ஏதோ அனைத்தும் எனக்கு சாதகமாக இருப்பது போல் ஒரு உணர்வு. வெயிலில் சுட்டெறிக்கும் இந்த நரக நகரத்தில் இன்றேனோ சில்லென்று காற்று, மழையுடன். நிற்கக் கூட இடம் கிடைத்திராத இந்தப் பேருந்துகளில், இருவர் அமரும் இருக்கை எனக்கே எனக்கென்று. இவை எல்லாம் நினைத்தால் சிறுபிள்ளைத்தனமாகத் தான் இருக்கிறது. இருந்தும், எனக்கு அனைத்தும் அதிசயமாத் தான் தென்பட்டது. பேருந்தில் அவளெங்கும் இருக்கிறாளா என்று ஒரு முறை எனது தேடல் பார்வையை வீசினேன். சல்வார் கமீசிலும், ஜீன்ஸ் டாப்களிலுமே அனைவரும் இருக்க, இவர்களுள் யாரும் அவளாக இருக்க முடியாது என என்னுடைய உள்ளுணர்வு சொன்னது. எப்படியும் கடைசி நிறுத்தம் வரை பயணச் சீட்டு வாங்கி விட்டதால், இருக்கையில் சாய்ந்துக் கொண்டு சன்னல் வழியாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஆயிரம் மலர்களின் நறுமணம் தனக்குள்ளே வாங்கிக் கொண்டு, இளஞ் சிவப்பில் ஒரு புடவைக்குள் தன் அழகை மறைத்துக் கொண்டு, கைப்பேசியில் ஏதோ ஒரு குயிலுடன் கொஞ்சிக் கொண்டு, அவளுடைய முந்தானை எனது முகத்தை உரசியப்டி பின்னிருந்து முன்னே சென்றாள் அவள். வானம் பலமாக இடித்தது.

அவள் தான். அவளே தான். எனது வாழ்வை மாற்ற வந்து தேவதை அவளே தான். அவள் நான் அமர்ந்திருக்கும் இருக்கையிலிருந்து ஐந்து இருக்கைகள் முன் அமர்ந்து கொண்டாள். அவளது காதுகளை மறைத்த படி படிந்திருக்கும் முடியாக நான் இருக்கக்கூடாதா என்றது எனது மனம் ஒரு கணம். அவளது முந்தானையை அழகாகப் பிடித்திருக்கும் கைகளில் வளர்ந்து நீண்டிருக்கும் நகங்கள் ஒவ்வொன்றும் வெட்டிப் போட்ட நிலாத் துண்டுகள். எனக்குள் சந்தேகம், ஒரு வேளை இவளை நான் காதலிக்கிறேனா? இல்லை இல்லை. இவள் எனது வாழ்வில் ஒளி வீச வந்த தேவதை. எனக்குள் இருக்கும் அழுக்கைத் துடைத்துக் கொண்டு, அவளை ஒரு முறையேனும் பார்த்து விட, நான் பல முறை எட்டிப் பார்த்தும் முடியவில்லை. பேருந்து நின்றது. அவள் முன் பக்கம் இறங்கிடச் சென்றாள். ஐயோ, அவளை விட்டு விட்டால் எப்படி? நானும் அங்கேயே இறங்க முற்பட்டேன். அவள் இறங்கியதும் நானும் இறங்கி அவளைப் பார்த்து விட வேண்டுமென்று அவளின் பின்னேச் சென்றேன். அவளை நெருங்க எங்கிருந்தோ 'ஷீ இஸ் ஆர் ஃபேண்டசி' என்ற பாடல் எனக்கு உண்மையாகவேக் கேட்டது. அவளின் வலது பக்கமாக வந்து அவளின் அருகே சென்ற போது பாடல் சற்று கடுமையாகவேக் கேட்டது.

'சனியனே, வேல வெட்டி இல்லாம எவ்ளோ நேரம் டா தூங்குவே, ஏந்திரிச்சு போய் குளி, தண்ணீ நின்னுடப் போவுது', அரைகூவலாய்க் கத்தினான் எனது அண்ணன்.
எனது அலாரத்தை நிறுத்தி விட்டு குளித்து முடித்து, ஏழரை முடிந்ததாகச் சொன்ன ஜோதிடரைத் திட்டிக் கொண்டே, வெறும் வயிறுடன் பேருந்து நிலையத்திற்கு வந்துச் சேர்ந்தேன். மேகத்தின் வேகம் கூடியது. பலத்த காற்றும் வீசியது. சில்லென்று மழை பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19.


பின்குறிப்பு: சங்கமம் போட்டிக்காக முதலில் நினைத்தது இதைத் தான். பின்னர் மூளைக்குள்ளேத் தேடிப் பார்த்ததில் தேடல் கிடைத்தது.

Tuesday, April 28, 2009

தமிழுடன் சேர்ந்து தமிழர்களும் வாழ்ந்து வளரட்டும்

முன்குறிப்பு: இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களே.

இந்தி படிக்காதது குற்றமா? நிச்சயமாக இல்லை. நீச்சல் கற்றுக்கொள்ளாதது எப்படி குற்றமாகும்? ஆனால் தவளைகளாக இருந்துக்கொண்டு நீச்சல் தெரியாமல் போனால்? கடினம் தான் வண்டியை ஓட்டுவது. நாமும் தவளைகள் தான். நிலத்திலும், நீரிலும் இருக்க வேண்டிய தவளைகள். ஆனால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிக்கும் தவளைகள்.

தமிழ்நாட்டில் இருக்கும் போது தமிழ் மட்டுமே போதும் என்று தான் தோன்றுகிறது. ஆனால், தமிழ்நாட்டைத் தவிற வேறு எங்கு போனாலும் நமக்கு ஃபாரின் தான். ஒன்று நாம் போகும் மாநிலத்தின் பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும், இல்லையெனில் தேசிய மொழியாவது தெரிந்திருக்க வேண்டும். இரண்டுமில்லை என்றால், மிளகாய் அரைக்க நமது மண்டையை நீட்டியே ஆக வேண்டியிருக்கிறது.

லண்டனில் அலுவலகத்தில், பல முறை அங்கிருக்கும் வெள்ளையர்களுக்குப் புரியாமல் பேச வேண்டியிருக்கிறது. இதற்காக என்னுடைய டீம் மேட்ஸ் பேசுவது இந்தியில். அதையே என்னிடம் சொல்லத் தனியாக வந்து ஒரு மீட்டிங் ரூமில் பேச வேண்டி இருக்கிறது. இந்த பிரச்சனைகளை களைய நான் கிட்டத்தட்ட எல்லாப் புதிய இந்திப் படங்களையும் பார்த்துத் தொலைத்தேன். அப்படிப் பார்த்தும், 'பெஹலா', 'தூஸ்ரா', 'நீச்சே', 'பீச்சே', 'அந்தர்', 'பாஹர்', 'கரம்', 'டண்டா', 'டீக் ஹே', 'குச் நஹீ', 'இதர்', 'உதர்' போன்ற சின்னச் சின்ன வார்த்தைகள் மட்டுமே எனது மண்டையில் நின்றது. ஆனால் லண்டனில் அது போதுமென்றே தோன்றியது. ஆனால் இன்று நான் இருப்பதோ பூனேவில்.

இங்கு பேருந்தில் ஏறி பயணச்சீட்டு வாங்கினால், பயண்ச்சீட்டில் இருக்கும் எண்கள் கூட இந்தியிலோ, மராட்டியிலோ.
கையில் பயணச் சீட்டுடன், நடத்துனரிடம், 'கித்னா ஹை' என்றேன்.
அவர் மராட்டியில் ஏதோ சொல்ல, 'கித்னா?' என்று நான் மறுபடியும் கேட்க, அவர் நமக்கு மராட்டி தெரியாது என்று சரியாகப் புரிந்து கொண்டு, இந்தி தான் தெரியும் என்று தவறாக நினைத்துக் கொண்டு, 'பாரஹ்' என்றார்.
'ஓ பாரஹ்? ஒகே பாரஹ், யெஸ் பாரஹ், ஆனா அது எவ்வளவு?' என்று ஒரு முறை கேட்டு விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். நமக்கு பத்து வரை தான் இந்தியில் அத்துபடி (அட உண்மையாத் தாங்க), அதற்கு மேல் ஒவ்வொன்றாக சொல்லிப் பார்த்தால் 'பந்த்ராஹ்' வரைக்கும் வரலாம். அவர் பாரஹ் சொன்னவுடன், எனது இடக்கை விரல்களை ஒவ்வொன்றாக நீட்டி, 'க்யாரஹ்', 'பாரஹ்' என்றதும், 'அட அவர் சொல்லிய எண் வந்துவிட்டதே', என்று கையில் நீட்டிய விரல்களுடன் பத்தைக் கூட்டி பன்னிரண்டு ரூபாயை நீட்டினேன்.

இது பரவாயில்லை. ஒரு நாள் இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது பேருந்து இனி நமக்கு சரிப்பட்டு வராது, ஷேர் ஆட்டோவில் ஏறிவிடலாம் என்று முடிவெடுத்தேன். நான் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் 'வாக்கட்'. சாலையின் ஓரத்தில் பல ஷேர் ஆட்டோக்கள் இருக்க, அதில் ஒருவன், 'ஹே வாக்கடு வாக்கடு வாக்கடு வாக்கடு வாக்கடூஊஊஊ', என்று கூவிக் கொண்டிருந்தான்.
அவனிடம் சென்று மறுபடியும் 'கித்னா ஹை' என்றேன். இம்முறை எண்ணுவதற்காக கை விரல்களை நீட்டி ஆயித்தமாக இருந்தேன்.
அவன் 'பாஞ்ச்' என்றவுடன், அடடா இது எனக்குத் தெரியுமே என்று, கொஞ்சம் கூட அசராமல் ஏதோ பத்து பதினைந்து வருடங்கள் இந்தி பேசிப் பழகியதைப் போல் 'டீக் ஹை' என்று சொல்லிவிட்டு ஏறிவிட்டேன். ஆட்டோ கிளம்பிய போது தெரியவில்லை இனி தான் உச்ச கட்ட அவலம் என்று.

வாக்கட் என்பது பெரிய ஊரா அல்லது ஒரு தெரு மட்டுமா என்று கூட எனக்குத் தெரியாது. நான் ஹிஞ்சேவாடி பாலம் ஏறி இறங்கியதும் இறங்க வேண்டும். நான் இறங்க வேண்டிய இடம் வழியாக இவன் செல்வானா? அல்லது பாலம் ஏறாமல் கீழேச் சென்று சில பல டேக் டைவர்ஷன்களில் திரும்பி திருப்பதியில் விட்டுவிடுவானா என்று ஏகப்பட்டக் கேள்விகள். அவனிடம் கேட்டுவிடலாம் என்றால், எப்படி கேட்பது? சரி அவனிடம் கேட்பதற்கு முன் ஒரு முறை மனதிற்குள் சொல்லிப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.
'ஹிஞ்சேவாடி ப்ரிட்ஜ் கே பீச்சே?' இல்லை இல்லை, பீச்சே என்றால் பின்னாடி. சரி 'ஹிஞ்சேவாடி ப்ரிட்ஜ் கே நீச்சே?' இல்லை, நீச்சே என்றால் கீழே.
ஏறி இறங்கனும், இதை எப்படி கேட்பது. சரி நடித்து காட்டி விடலாம் என்று நினைத்து 'பெஹலே ஹிஞ்சேவாடி ப்ரிட்ஜ் மே சொய்ங்ங்க்' என்று சொல்லும் போது கைகளைக் கீழே இருந்து மேலே எடுத்துச் சென்று, பின்னர் 'ஆர் ஃபிர், ஜீங்ங்ங்க்' என்று கைகளை மேலிருந்து கீழே கொண்டு போகலாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொள்ளும் போது ஆட்டோ பாலத்தின் மீது இருந்ததை கவனித்தேன். நல்லவேலை ஆட்டோக்காரன் பிழைத்தான்.

பாலத்தை கடந்தவுடன் 'பையா பையா, இதர் ஸ்டாப் கர்ஜியே', என்றேன். இது மனதிற்குள் அல்ல, ஆட்டோக்காரனிடம் தான். அவரும் பதிலுக்கு ஏதோ சொன்னார். என்ன சொன்னார் என்பது அப்போது புரியவில்லை. ஆட்டோவிலிருந்து அனைவரும் இறங்க, 'இது தான் கடைசி ஸ்டாப்' என்று சொல்லியிருக்கிறார், என்று புரிந்துக் கொண்டேன். கடைசி ஸ்டாப் என்ற தைரியத்தில் இப்போதெல்லாம் 'பையா பையா, இதர் ஸ்டாப் கர்ஜியே' என்று சொல்லி ஆட்டோக்காரனின் சாபத்தைச் சம்பாதிப்பதை நிறுத்தியிருக்கிறேன்.

தமிழ் வாழ்க, வளர்க என்பது தவறில்லை என்ற போதிலும், வேற்று மொழியை கற்பதே தவறு என்று கூறித் தடுப்பதை என்னவென்று சொல்வது? ஏதோ பத்துப் பதினைந்து பேர் மட்டும் பேசிய ஒரு சில மொழிகள் அழிந்திருக்கலாம். ஆனால் கோடிக் கணக்கான மக்கள் பேசும் தமிழ் மொழி அழியாமல் காப்பதற்கான வழிகள்
- முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஒரு படம் எடுத்து, ஆங்கிலத்தில் பாட்டும் எழுதி விட்டு அதற்கு தமிழ் பெயர் வைப்பதோ
- இந்தி எழுத்துக்கள் மீது தார் பூசுவதோ
நிச்சயமாக இல்லை.
தமிழ் மட்டுமே வாழ்ந்து வளர்வதில் பயனில்லை. தமிழுடன் சேர்ந்து தமிழர்களும் வாழ்ந்து வளரவே இந்தப் பதிவு.

பின்குறிப்பு: என்னுடைய இந்தியைப் படித்துச் சிரிப்பவர்களுக்கு -
நான் பூனேவிற்கு வந்து ஒரு சில வாரங்களே ஆகிறது. என்னுடைய நண்பனொருவன் மும்பையில் ஒரு வருடமாக இருக்கிறான். அவனைப் பார்க்க நான் சென்ற மாதம் மும்பைக்குச் சென்றேன். அங்கு மாத்திரான் என்ற ஒரு இடத்திற்கு சென்றோம். அங்கு ஒரு ஏரி இருப்பதாக தெரியவந்தது.
'மச்சி, ஏரில தண்ணீ இருக்கான்னு கேட்டுக்கலாம், தண்ணியே இல்லாம அவ்ளோ தூரம் எதுக்கு நடக்றது', இது நான்.
சரி என்று சொல்லிவிட்டு அவன் அங்கிருக்கும் ஒரு கடைக்காரனிடம் 'லேக்கு வாட்டர் அவேலபல் ஹே' என்று கேட்டான்.
'கொய்யாலே, நீ பேசினதுல ஹே மட்டும் தான் டா இந்தி' என்றேன்.

Friday, April 24, 2009

தேடல்

எதையோத் தொலைத்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு. எனது முதுகிலிருந்த பையை எடுத்துப் பார்த்தும் தெரியவில்லை. சட்டைப் பையை ஒரு முறை தடவிப் பார்த்தும் விளங்கவில்லை. எதையோ தவறவிட்டது போன்றே தெரிகிறது. ஒரு வேளை தவறான பேருந்தில் ஏறிவிட்டேனோ? இல்லையே, சரியாகப் பார்த்துத் தான் ஏறினேன். இவ்வாறாக எனக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு நானே பதிலளித்துக் கொண்டிருந்த போது இரவு மணி பதினொன்று.

சற்றே ஓய்வெடுக்க இருக்கையிருக்கிறதா என்றுத் தேடிப் பார்க்கையில், அதோ இருக்கிறது இரண்டாம் வரிசையில் எனக்கென ஒரு ஆசனம். ஆட்டம் காணும் பேருந்தில் மெல்ல நடந்து முன்னேறிச் சென்று அமர்ந்தேன். எனது பேருந்து செல்லும் வழியெங்கும் எனக்குப் பரிச்சயப்படாத இடங்களாகவே இருக்கிறது. இயற்கைக் காட்சிகளை ரசிக்கத் தடை போட்டது என்னுடைய மனது. எதைத் தான் தொலைத்தேனோ.

சட்டென்று எனக்குள் ஒரு சந்தேகம், இந்தப் பேருந்து எங்கு தான் போகிறது என்று. கேட்டுவிடலாம் என்று அருகிலிருந்த ஒருவனைக் கேட்க நினைத்த போது அவனது குறட்டைச் சத்தம் என்னுடைய காதுகளைத் துளைத்தது. ஓட்டுனரிடம் கேட்கலாம் என்று எனது இருக்கையிலிருந்து எழுந்து அவரிடம் கேட்க, அவரோ, முழுக்கவனத்துடன் தானுண்டு தன் பேருந்துண்டு என்று என்னைச் சற்றும் பொருட்படுத்தாமல் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார். பேருந்தின் வேகம் குறைய ஆரம்பித்தது. இறங்கிவிடலாம் என்று எண்ணி, இறங்க முற்பட்டபோது, உடனே பேருந்து வேகத்தைக் கூட்டிச் சீறிப் பாய்ந்தது. இந்தப் பேருந்து கடத்தப்பட்டிருக்கிறதோ என்று ஒரு பயம் எனக்குள் மெல்ல எட்டிப் பார்த்தது. நான் திரும்பிப் பார்க்க அனைவரும் அமைதியாக உறங்கிக் கொண்டுதான் இருந்தனர். கடத்தப்பட்டது போல் இல்லை என்றாலும், எனது மனம் பாரமாகவே இருந்தது. தொலைத்தது கிடைக்குமா? அட தொலைத்தது தான் என்ன?

கிட்டத்தட்ட இந்தப் பேருந்தில் பயணித்து ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. இந்தப் பேருந்து மிகவும் வசதியாகத் தான் இருக்கிறது. ஆறு மணி நேரப் பயணத்தின் பின்னும் சற்றும் சோர்வடையாமல் தான் இருக்கிறேன். அட இது என்ன? இந்த இடத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஆம், நிச்சயமாக. அதோ அங்கேயிருக்கிறது ரயில் போகா ரயில் தடங்கள். நினைத்தது போலவே ரயில் தடங்களைத் தாண்டிச் சென்றது பேருந்து. இன்னும் சற்று தூரத்தில் இருக்கிறது பழைய மசூதி என்றது எனது மனம். அதோ இருக்கிறது அந்த மசூதி. ஆஹா, நினைவில் ஏதோ மெல்ல வந்து செல்கிறது. எதைத் தொலைத்தேன்? எதைத் தவறவிட்டேன்? ஒரே கேள்வியைப் பலவாறாக என்னை நானே கேட்டுக் கொண்டேன். சட்டென்று தொலைவில் எங்கிருந்தோ ஒரு பெண், ஒருவனுடன் மூச்சிறைக்க பேருந்தை நோக்கி ஓடி வந்தாள். இவர்களைப் பார்த்தால் பேருந்து ஏறுவது போல் தெரியவில்லை. அவர்கள் சாலை நடுவே பேருந்தை நோக்கி ஓடி வருகின்றனர். சில மீட்டர் தொலைவில் அவர்கள். பேருந்து சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்தது. ஓ, இவர்கள் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றனரோ? அவர்கள் அருகே வர, எனக்குள்ளே ஏவுகனைகளை ஏவி விட்டது போல் ஒரு உணர்வு. அவள் என்னவள்.

அவர்கள் இப்போது ஒரு சில அடி தூரத்தில் தான். அவனது முகம் இப்போது புலப்பட்டது. அவன் நான் என்று உணர்வதற்க்குள் பேருந்து எங்களைத் தாண்டிச் சென்றது. இப்போது விளங்கியது எனக்கு, நான் தொலைத்தது என்னவளைத் தான் என்று. அவளெங்கே என்று தேடிப் பார்க்க அவளோ பேருந்தில் இல்லை. பேருந்து நின்றது. வெளியே மிகப் பெரிய கூட்டம்.
'பையன் ஸ்பாட்லியே அவுட், அவளுக்குச் சின்ன காயம் தான்', என்றான் ஒருவன்.
என்னவள் பேருந்தின் வெளியே மயக்க நிலையில் நிஜமாய், நானோ பேருந்தின் உள்ளே நிழலாய். இப்படிப் பிரிந்துவாழத்தானோ இந்தக் கோழைத்தனமான முடிவெடுத்தோம். இது தெரிந்திருந்தால், போராடியிருப்போமே, என்று கண்ணீருடன் தொடர்கிறது என்னுடைய பேருந்துப் பயணம்.

சங்கமம் போட்டிக்காக...

Wednesday, April 22, 2009

இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியல டா நாராயணா

'ஐயோ அம்மா, இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலம்மா', இது நான்.
'உன்னை மட்டும் தான்டா கொசு கடிக்குது, எங்கள யாரையும் கடிக்கல', இது அம்மா, அம்மாவுக்கு ஆதரவாக பாட்டியும் கூட கூட்டணியில்.
'எவ்ளோ கொசு பாரும்மா'
'மைக்ரோஸ்கோப் வெச்சி பாத்தாக் கூட எங்களுக்குத் தெரியல, உன்னுடைய கண்ணுக்கு மட்டும் தான்டா அது தெரியுது'.

சரி கொசுக்களுக்கு இரவில் மட்டும் ஏன் இவ்வளவு குதூகலம்? தேடிப் பார்த்து படித்தவை, இதோ உங்களுக்கு. உங்கள் வீட்டைக் கொசுக்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள இது உதவலாம்.
- பொதுவாக கொசுக்கள் ஈரப்பதமான இடங்களையே விரும்புகின்றன.
- இருட்டும், வெப்பம் குறைந்த, (அதாவது சென்னையின் இரவு நேரத்தில் இருக்கும் வெப்பம்) மூலை முடுக்குகளில் தான் இவற்றின் இருப்பிடங்கள்.

எனவே இவை இரவு நேரங்களில் மட்டும் ஆட்டம் போடுகிறது.

அது இருக்கட்டும். கடிப்பதில் ஏன் இந்த பாரபட்சம்?
- நமது உடம்பிலிருந்து வரக்கூடிய ஒருவகையான மணம் அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை.
- சிலரது மணம் mosquito repellent தாக்கத்தை உருவாக்குவதால் கொசுக்கள் அவர்களை விட்டு விடுகிறது.

நேற்று இரவும் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது, எனக்கு மட்டும். ஹிட் அடித்த பிறகு மாயமாகப் போனது கொசுக்கள். எனது காலின் மீது ஏதோ கருப்பாக தூசி இருக்க, நான் அதைத் தட்ட, அம்மா உடனே 'அது எப்படி டா உன்னை மட்டும் தேடித் தேடிக் கடிக்குது', என்றாள்.
'இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியல டா நாராயணா', என்று முனுமுனுத்த படி நேற்றைய நாள் நிறைவுற்றது.

பி.கு: இன்னொரு கசக்கும் உண்மை, global warming உலகின் வெப்பத்தை உயர்த்துவதால், முன்னர் பனிப் பிரதேசங்களாக இருந்த இடங்களில் வெப்பம் அதிகரிக்க, கொசுக்கள் இப்போது அங்கும் உயிர் வாழத் துவங்கியுள்ளது. இதனால் மலேரியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் அங்கும் பரவலாகப் பரவுகிறது. இதைத் தான் 'inconvenient truth' டாக்குமெண்டரியில், அல் கோர் மிகவும் தெளிவாகக் கூறுகிறார்.

Monday, April 20, 2009

அது எப்படி டா முடியும்

அலுவலகத்தில் மதிய உணவிற்காக பெரிய வரிசையில் நின்று டோக்கனை வாங்கி, பிறகு கையில் சாப்பட்டுத் தட்டுடன் உட்கார ஒரு இடம் தேடி அலைவதை ஔவையார் பார்த்திருந்தால் அவரது கொடுமையில் கொடுமை பாட்டில் இதையும் சேர்த்துக் கொண்டிருப்பார்.

சரி இடத்தைப் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி, வாங்கிய உணவு வாயைச் சென்றடைந்ததும் மங்களம் பாடி விடுகிறது. பிறகென்ன? ஏதோ மருந்தை விழுங்குவது போல, உணவை உருண்டைகளாக்கி உள்ளுக்குள் தள்ளி விட்டு ஒரு செக் லிஸ்டில் 'லன்ச்' என்றிருக்கும் இடத்தில் ஒரு டிக் அடித்து விட்டால் முடிந்தது என்னுடைய மதிய உணவு. இந்த நிலை பூனேவில் மட்டுமல்ல, உலகின் எல்லா மூலைகளிலுள்ள கேண்டீன்களிலும் தான் (என்று நினைக்கிறேன்).

இரண்டு வருடங்களுக்குப் பின்னர், இப்பொழுது மீண்டும் அம்மா சமைப்பதை டப்பாவில் போட்டுக் கொண்டு வருவது இன்றோடு இரண்டு நாட்களாகிறது. சென்ற சனியன்று அம்மா, அப்பா, பாட்டி பூனேவிற்கு சமைக்கத் தேவையான சகலத்துடன் வந்து சேர முதல் பத்தியில் நான் அழுத அவலம் ஒரு முடிவிற்கு வந்தது. ஞாயிறு இரவு, திங்கள் மதியத்திற்கு என்ன சமைக்கலாம என்று அம்மாவும், பாட்டியும் நன்றாக யோசித்து தக்காளி சாதம் செய்து விடுவதாக முடிவு செய்தனர். இந்த முடிவை அவர்கள் என்னிடம் சொல்ல, நான் அவர்களிடம் 'இந்தத் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம் எல்லாம் நான் லண்டன்ல தனியா இருக்கும் போது கூட சமைச்சதில்ல', என்றேன்.

பிறகு நான் சில விஷயங்களைச் சொல்ல முடிவானவை இதோ.
- என்ன சமைக்கலாம் என்று முடிவு செய்யும் போது, சமைக்கும் உணவில் என்ன இருக்கிறது என்று ஆராய்தல்.
o தக்காளி சாதத்தில் சத்து ஒன்றுமில்லை. அதனால் கடைசியில் சமைத்தது பருப்பு + காய்கறி.
- எந்த உணவில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுதல்
o பருப்பு (pulse) வகையில் புரதச்சத்து உள்ளது. உடம்பு சதை வளர்க்க இது மிகவும் தேவை.
- அரிசியில் என்ன இருக்கிறது?
o ஒன்றுமே இல்லை, நிறைய கலோரீஸ் தவிர.
- கலோரீஸ் இருந்தால் என்ன?
o கலோரீஸ் இருக்கலாம். ஆனால் அதை உடற்பயிற்சி செய்து எறிக்க வேண்டும். தவறினால், சதை வளரும், வயிறு பாகத்தில் மட்டும்.
- எப்போது என்ன சாப்பிட வேண்டும்?
o காலையில் அதிகமாக. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு பின்னர் சாப்பிடுவதால் தான் ஆங்கிலத்தில break fast (break the fast) என்று கூறுகிறார்கள். மேலும் ஒரு நாள் முழுக்க நமக்கு சக்தியைத் தருவது காலை உணவு தான்.
o மதியம் சிறிது குறைவாக.
o இரவு மிகவும் குறைவாக, அரிசி வகைகள் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

'நீ இவ்வளவு ஒல்லியா இருக்கியே டா', இது அம்மா
'சரி நீங்க என்னோடு இரண்டு மாதங்கள் இருக்கப் போறீங்க, நீங்க சொல்றதை எல்லாம் நான் கேட்கிறேன், நீங்க சாப்பிட சொல்றதை எல்லாம் சாப்பிடுகிறேன்', என்று சொல்ல, அம்மா சிரிக்க, நான் தொடர்ந்தேன், 'ஆனா ஒரு கண்டிஷன், இரண்டு மாதத்தில் எனக்கு தொப்பை போடக் கூடாது ஆனா, கைகள் குண்டாகனும்', என்றேன்.
'அது எப்படி டா முடியும்?' மீண்டும் அம்மாவும் பாட்டியும் ஆழந்த யோசனையில்.

Friday, April 10, 2009

அவன்

இரண்டு ஆண்டுகள் ஆயிற்று, வீட்டையும் நாட்டையும் விட்டுத் தனியாக வாழத் துவங்கி. வருடத்திற்கு ஒரு முறை சென்னை செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம். அதேப் போல, சென்ற வருடம், சென்னை சென்றேன். இப்போது மீண்டும் சென்னை செல்லும் சமயம். அம்மா, அப்பாவை லண்டனுக்கு அழைத்துக் கொள்வதாகத் தான் முதலில் திட்டமிடப்பட்டது. விசா பிரச்சனையில் அவர்கள் வர முடியாதலால், இனி மனது தாங்காது என எண்ணி, பெட்டிகளைப் பூட்டினேன், காசுகளைக் கட்டினேன், சகப் பயணிகளோடு பறந்து கொண்டிருக்கிறேன் இப்போது.

காலச்சக்கரம் தான் எவ்வளவு வேகமாச் சுழல்கிறது. குழந்தைப் பருவம், பள்ளிக்குச் சென்றது, நண்பர்களுடன் சண்டை போட்டுப் பின்னர் சேர்ந்து கொள்வது, கல்லூரிக் கலாட்டாக்கள், அர்த்தமற்ற இரவு நேர க்ரூப் ஸ்டீஸ், பின்னர் வேலைத் தேடி அலைந்தது, வேலைப்லுவில் இரவு பகல் தெரியாமல் முட்டி மோதியது போன்றவையெல்லாம் ஏதோ கண் சிமிட்டும் நேரத்தில் முடிந்தது போல இருக்கிறது எனக்கு. நினைவுகள் பின் நோக்கிச் சென்றாலும், மனதில் ஏனோ, சென்னையைச் சீக்கிரம் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம். கிட்டத்தட்ட பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னர் என்னுடைய முதல் நண்பனைப் பார்க்கத் தான் இந்தத் துடிப்பு. இத்தனை காலத்திற்குப் பின்னர் அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்பதே எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

பத்தாவது முடித்த பின்னர், நான் வேரு பள்ளியில் சேர்ந்ததால், இவனுடைய தொடர்பு துண்டிக்கப்ட்டது. LKG முதல் நாளிலிருந்தே நாங்கள் நண்பர்களாகித் தொலைத்ததால் என்னவோ, என்னை இவனிடமிருந்தோ, அல்லது அவனை என்னிடமிருந்தோ பிரிக்கமுடியவில்லை. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்குட் என்ற விதி விளையாடி, துண்டிக்கப்பட்ட இணைப்பு மீண்டும் இணைக்கப்பட்டது. இம்முறை மிக வலிமையாக.

அன்றிலிருந்து இவனைப் பார்த்துப் பேசிப் பழகிப் பழைய நாட்களைக் திரும்பிக் கொண்டுவர வேண்டுமென்றே மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. தாய், தந்தை என்ற உறவுகளின் பொருள் புரியாத வயதிலிருந்தே நாம் அவர்களைச் சரியாக அழைப்பது போல், நண்பனின் அர்த்தம் தெரியாத வயதிலேயே 'இவன் தான் என்னுடைய நண்பன்' என்று சொல்லிக் கொள்ளும்படி வைத்தது அவனது நட்பு.

சென்னை விமான நிலையத்தில் இப்போது நான் நின்று கொண்டிருக்கிறேன். இவனைக் கண்டுபிடிக்க முடியுமா என்று நினைக்கும் போது, என் நினைவில் இருந்த அதே முகம் ஒன்று, மலர்க்கொத்துடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்க, எனது பெட்டிகளைத் தள்ளி அவனை தழுவிக் கொள்ள மீண்டும் LKG நாட்கள் நினைவில் குடியேறியது. அவன் பெயர் மனோகரன்.

Saturday, April 04, 2009

எனது பெயர் நாகவள்ளி : நிறைவுப் பகுதி

பாகம் இரண்டு

இரவு எட்டு முப்பது.
இது இராஜன் மயங்கி விழும் நேரம். ஆனால் இராஜன் கைகளின் இரத்த காயங்களின் வலியில் துடித்துப் போனான்.

'அண்ட் தட்ஸ் தி எண்ட் ஆஃப் தி கேம்.', என்று எனது வலது கட்டை விரலை தாமுவிற்க்கு உயர்த்தினேன்.

அடுத்த நாள் காலை சினிங்காப்பட்டியிலிருந்து சென்னைக்கு எங்கள் வேனில் சென்றுக் கொண்டிருந்த போது, எனது தொலைப்பேசி சினுங்கியது. அதில் My Heart Calling என்ற எழுத்துக்கள் 'உயிரின் உயிரே' என்ற பாடலுடன் மின்னிக்கொண்டிருந்தது.
'யோவ்', என்றாள் அவள்.
'அடியே, எப்படி டி இருக்கே', இது நான்.
நாங்கள் படித்தது கேம்ப்ரிட்ஜ் யூனிவெர்சிட்டியில்.ஆனால் எங்களை அழைத்துக் கொள்ளும் விதம் இன்றும் மாறவில்லை.
'நல்லா இருக்கேன். எப்படி இருக்கான் இராஜன்?'
'தெரியல மா, குணமான மாதிரி தான் இருக்கு. ஆனா, ஐ அம் நாட் ஷூர்'
'ஹ்ம்ம்ம், அடுத்து என்ன ப்ளான்?'
'அடுத்த மாசம் இராஜன இன்னும் க்ளோசா வாட்ச் பண்ணப்போறோம்'
'போறோமா? என்ன சொல்றே?', பொய்யான பயத்துடன் கேட்டாள்.
'ஆமா, நீயும் தான், நம்ம வீட்டில தான்', என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

நானும் அவளும் சுமார் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நான் அமானுஷ்ய சக்திகளின் பின்னிருக்கும் உண்மைகளை கண்டுபிடிக்க, அவளோ ஆவி உலகின் ஆதியை தேடி அலைந்தாள். அவளுடைய ஆராய்ச்சியை தவறென்று உணர்த்துவதற்க்குள் என்னுடைய மயிர்கள் சில வெள்ளைக் கொடியையே காட்டிவிட்டது. இரு துருவங்களாக இருந்தாலும், ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னையில், அவளுடன் நான்.
'சரி என்ன ஆச்சு, இங்க என்ன பண்ணப் போறீங்க?', இது அவள்.
'அடுத்த மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் இராஜனை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து, அவனுக்கே தெரியாம, அவன மானிட்டர் பண்ணப் போறேன்'
'பண்ணப் போறோம்னு சொன்னீங்க, இப்போ என்ன போறேன்?'
'சரி இரண்டு பேருமே சேர்ந்து ஆராய்ச்சி பண்ணலாம். நான் அவனுடைய ப்ரேயின் செல்ஸ்ச ஆராய்ச்சி பண்றேன், நீ நாகவள்ளியோடப் பேசு', என்றேன் சிரித்திக்கொண்டே.

அமாவாசையன்று, எனது வீட்டிற்க்கு, இராஜன் வரவழைக்கப் பட்டான். அவனுடைய சம்மதத்துடன், ஹிப்னடைஸ் செய்து சில விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன். ஆனால், நாகவள்ளியைப் பற்றி, ஒன்றும் தெரியவில்லை. வீட்டில் எல்லா முக்கிலும் CCTVக்கள் பொருத்தப் பட்டது. இராஜனின் ஒவ்வொரு அசைவும், ஸ்டடி ரூமிலிருந்தபடி கண்கானிக்க வசதிகள் செய்யப்பட்டது.

அமாவசைக்கு அடுத்த நாள், இரவு ஏழு ஐம்பது:
நான் எனது தற்காப்புக்காக எனது கோட்டில் ஒரு 9 mm பிஸ்டலை மறைத்துக் கொண்டு, இராஜனுடன் ஹாலின் சோஃபாவில் அமர்ந்து சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தேன்.

இரவு ஏழு ஐம்பத்தைந்து:
தொலைக்காட்சியில் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சியின் கடைசி சில நிமிடங்கள், இராஜன் இரத்தக் கைகளுடன் வலியில் துடித்துக் கொண்டிருக்க நாகவள்ளி தூக்கிலடப்படும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
ஸ்டடி ரூமில் தாமு தனது குழுவுடன் தீவிரமாக கண்கானித்துக் கொண்டிருந்தார்.
என்னவள் நாகவள்ளியுடன் பேச வேண்டுமென்று தனது பானியில் நாகவள்ளிக்கு பிடித்த உணவை சமைத்துத் தள்ளினாள்.
'வாங்க சாப்பிடலாம்' அவள் அழைத்தாள்.
இராஜனும், நானும் வாஷ் பேசினில், கைகளை கழுவி விட்டு மேசைக்கு வந்தோம். நான் இராஜனை மிக நெருக்கமாகத் தொடர்ந்தேன்.
ஸ்டடி ரூமில் தாமு மானிட்டரின் ஒவ்வொரு அங்குலமும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் இராஜனின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன்.

இரவு எட்டு மணி:
அவள் உள்ளிருந்து தான் சமைத்ததைக் கொண்டுவந்தாள்.
இராஜன் தனது இரு கைகளையும் பிசைந்துக் கொண்டான்.
அவள் வெளியே வர, கைகளில் இரத்தத்தை பார்த்து 'என்னங்க இரத்தம்', என்று அலறி கையில் இருந்த பாத்திரத்தைக் கீழே போட்டாள்.
நான் உடனே எழுந்து, இராஜனை வெறித்துப் பார்த்தேன். இராஜன் முகத்திலும் அதிர்ச்சி.
இரத்தக் கைகளுடன், பற்களைக் கடித்துக் கொண்டே 'எனது பெயர் நாகவள்ளி', என்றேன் நான்.

முற்றும்.