Saturday, December 12, 2009

மெகா பிக்சல் என்றால் என்ன?

சென்ற காம்போசிஷன் பதிவில் புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லியிருந்தேன். இப்போது தான் ஆரம்பித்து இருப்பதனால் சில எளிய கான்செப்ட்ஸ் மட்டுமே சொல்லப் போகிறேன். எளிய கான்செப்ட்ஸ் எல்லாம் முடிச்சிட்டு அப்புறமா எனக்குத் தெரிஞ்ச சில முக்கியமானவற்றை எளிமையாகச் சொல்கிறேன். இந்த இணையத்தில் புகைப்படக் கலை பற்றி வரும் பதிவுகள், SLR வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இல்லை. சாதாரண கேமரா வைத்திருப்பவர்களுக்கும் தான். எனவே கேமராவை வாங்கும் போது நாம் நினைக்கும் அம்சங்களை இப்போது பார்ப்போம். இதில் உங்களுக்கு என்ன அம்சங்கள் தேவைப் படுகிறது என்பது உங்களுக்குத் தான் தெரியும் என்பதால், நான் அவற்றை விளக்குவதோடு நிறுத்திக் கொண்டு, என்ன வேண்டும் என்பதை உங்களிடத்தில் விட்டு விடுகிறேன்.

இன்று நாம் மெகா பிக்சல் பற்றி பார்ப்போம். இது தான் நாம் அனைவரையும் ஈர்ப்பது. ஆனால் மெகா பிக்சல் என்றால் என்ன என்பதை பார்போம். மெகா பிக்சலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், பிக்சல் என்றால் என்ன என்பதைப் பார்போம். நமது புகைப்படங்களில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியைத் தான் பிக்சல் என்று குறிப்பிடுகிறோம். நாம் நமது கணினியில் Display Properties-இல் resolution-ஐ மாற்றும் போது என்ன நடக்கிறது. நாம் 1024x768 அல்லது 800x600 அல்லது வேறொரு resolution வைத்திருப்போம். 1024x768 என்று இருக்கும் போது நமது கணினியில் 1024x768=786432 பிக்சல்கள் (அதாவது புள்ளிகள்) இருக்கிறது என்று பொருள். அதே 800x600 என்று இருக்கும் போது 800x600=480000 பிக்சல்கள் தான் இருக்கும். ஒரு மெகா பிக்சல் என்பது 1000000 (ஒரு மில்லியன்) பிக்சல்கள் ஆகும். எனவே நமது கணினியின் மெகா பிக்சல் 786432/1000000 = 0.79 மெகா பிக்சல் தான். அதாவது ஒரு மெகா பிக்சலை விட குறைவு.

சரி இனி நாம் நமது கேமராவின் மெகா பிக்சலைப் பற்றி பார்ப்போம். ஒரு கேமரா 8 மெகா பிக்சல் என்று இருக்கிறது எனக் கொள்வோம். 8MP (MP: Mega Pixel) என்பது 8000000 பிக்சல்களாகும். அதாவது நமது கேமராவின் சென்சரில் (sensor) 8000000 பிக்சல்களை சேமிக்க (to save) முடியும். கேமராவின் சென்சர் பரப்பளவு மெகாபிக்சலுக்கேற்ப மாறுவதில்லை. அதாவது 1024x768ஆக இருந்தாலும், 800x600ஆக இருந்தாலும் எப்படி நமது மானிட்டெரின் பரப்பளவு மாறுவதில்லையோ அதேப் போல் மெகா பிக்சல்கள் நமது கேமரா சென்சரின் பரப்பளவை மாற்றுவதில்லை. ஆனால் என்ன மாறுகிறது? பிக்சல்களின் எண்ணிக்கை தான் மாறுகிறது. சரி பிக்சல்களின் எண்ணிக்கை மாறுவதால் என்ன நடக்கிறது?

நமது சாதாரண போஸ்ட் கார்டில் சுமார் 475x335 பிக்சல்கள் இருப்பதாக நினைப்போம் (சரியான எண்ணிக்கை தெரியவில்லை, இது வெறும் உதாரணம் மட்டுமே). 475x335=159125 பிக்சல்கள் அதாவது 0.16 MP. ஆக 0.16 மெகா பிக்சலில் எடுக்கும் புகைப்படம் ஒரு போஸ்ட் கார்டின் அளவில் பார்த்தால் நன்றாகத் தான் தெரியும். ஆனால் இதையே ஒரு A4 அளவு (சுமார் 950x672) காகிதத்தில் ப்ரிண்ட் செய்தால் கண்டிப்பாக சரியாக இருக்காது. ஒரு A4 அளவு புகைப்படத்திற்குக் குறைந்த பட்சம் 950x672=638400 அதாவது 0.64 மெகா பிக்சல் இருக்க வேண்டும். இப்போது மெகா பிக்சல் பற்றி ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.

8MP என்பது நமது மானிட்டரின் அளவைக் காட்டிலும் கிட்டத் தட்ட 3 மடங்கு அதிகம். இந்த மூன்று மடங்கை குறைத்து தான் நமது மானிட்டரில் பார்க்கிறோம். எனவே நமது கணினியில் பார்க்கும் போது படங்கள் 8MP கேமராவில் எடுத்ததாக இருந்தாலும், 10MP கேமராவில் எடுத்ததாக இருந்தாலும் நமக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியப் போவதில்லை. எப்போது வித்தியாசம் தெரியும் என்றால், நாம் இதை ப்ரிண்ட் செய்யும் போது தான், அதுவும் A4 காகித்தில் பிரிண்ட் செய்தால் தெரியாது, 8MP காதிதத்தில் அதாவது சுமார் 4000x2000 பிக்சல்* அதாவது 125cm x 62.5cm அதாவது அகலம் ஒன்றேகால் மீட்டர், உயரம் கிட்டத் தட்ட முக்கால் மீட்டர் அளவு காகிதத்தில் ப்ரிண்ட் செய்தால் மட்டுமே வித்தியாசம் தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த அளவுக்குப் படங்களை ப்ரிண்ட் செய்யப் போகிறோம். இன்றைய உலகில் நாம் அனைவரும் புகைப்படங்களைக் கணினியில் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். அல்லது A4 அளவு காகிதத்தில் தான் ப்ரிண்ட் செய்யப் போகிறோம். புகைப்படங்களைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்பவர்கள், அதாவது திருமணங்களில் புகைப்படங்கள் எடுப்பவர்கள் அல்லது போஸ்டர்கள் தயார் செய்பவர்கள் தான் மெகா பிக்சலைப் பற்றி அதிக அளவில் ஆராய வேண்டியிருக்கிறது.

என்னுடைய கேமரா வெறும் 10.1 மெகா பிக்சல் தான். எனக்குத் தெரிந்து சோனி எரிக்சன் மொபைலில் 12MP இருக்கிறது. சோனி DSLRல் 24.6MP இருக்கிறது. மெகா பிக்சலின் முக்கியத்துவம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இனி கேமராவை வாங்கும் போது உங்களுக்கு இது முக்கியமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் புகைப்படங்களைப் ப்ரிண்ட் செய்யப் போவதில்லை என்றால் 10MP போதுமானது. என்னைக் கேட்டால் 8MPக்கும் - 10MPக்கும் அதிக வித்தியாசம் தெரியப்போவதில்லை. கேமரா வாங்கும் போது மெகா பிக்சலின் பங்கு இத்துடன் முடிவு பெறுகிறது.

கேமரா வாங்கும் போது நாம் பார்க்க வேண்டிய அம்சங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அனைத்தும் இந்தப் பதிவில் எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் மெகா பிக்சல் மட்டுமே பதிவைப் பெரிதாக்கியதால் அடுத்த அம்சங்கள் அடுத்தடுத்தப் பதிவுகளில் வரும்.

*பிக்சலிலிருந்து செண்டி மீட்டருக்கு மாற்றுவதை நமது ms paintல் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.


டிஸ்கி: எனக்குத் தெரிந்ததை எளிமையாக சொல்லியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும்.

Thursday, December 03, 2009

Photographers Invited - புகைப்படபோட்டிக்கு அழைப்பு.

Translated into English towards the end.

இம்முறை அழகான தலைப்பு நமது PiTல். இதுவரை தனித்தனியாக போட்டியில் கலந்து கொண்டிருந்த நமக்கு இம்முறை ஒரு குழுவாக பணியாற்ற ஒரு புது சந்தர்ப்பம். தலைப்பு 'நம் நகரம்'. ஒரு குழுவில் குறைந்தது இரண்டு பேராவது இருக்க வேண்டுமாம். அவர்கள் வசிக்கும் நகரத்தைப் பற்றி புகைப்படங்களை எடுக்க வேண்டும். ஐம்பதிலிருந்து நூற்றிருபது புகைப்படங்கள் வரை எடுத்து ஒரு ஆல்பத்தை உருவாக்கித் தர வேண்டும். கடைசி நாள் பிப்ரவரி 28. இப்படிப்பட்ட குழுப் போட்டி இது தான் முதன் முறையாக நடத்தப் படுவதால், விதிமுறைகளும் இடையிடையே மாற்றப்படலாம். சில விதிமுறைகள் புதிதாக சேர்க்கப்படலாம். கடைசியில் தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள்/ஆல்பம் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டு நமது வட்டாரங்களில் விற்கப்பட்டு, அதில் வரும் பணம் ஏதேனும் (இந்திய) தொண்டுநிறுவனத்திற்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


சரி இனி விஷயத்திற்கு வருவோம். நான் தற்போது (இதில் 'தற்போது' என்பது மிக முக்கியம்:-) ) லண்டனில் வசித்து வருவதால், நான் லண்டனை ஆல்பமாக்கும் குழுவை உருவாக்க நினைக்கிறேன். ஒரு வேளை குழு ஏற்கனவே உருவாகியிருந்தால், என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு குழுவில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் இருந்தால் நல்லது. அதற்கும் மேலாக நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் நாம் வேலையை பிரித்துக் கொண்டு, இரண்டு அல்லது அதற்கு மேல் குழுக்களாக பிரிந்து பணிபுரிந்து கடைசியில் ஆல்பத்தை ஒன்று படுத்தலாம்.

இதில் என்னோடு 'லண்டன்' ஆல்பத்தில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் அவர்கள் இதுவரை எடுத்த புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்தை பின்னூட்டவும். டிசெம்பர் 20ஆம் தேதிற்குள் குழுவை அமைத்து விட்டால் பாதி வேலை முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

Folks, we have a photo competition in place. The topic is 'My City', more precisely London, in this case. We have to shoot 50 to 120 photos which depicts London before 28-Feb-2010. Interested do comment with your contact details, I will get in touch with more information personally.

Regards,
Kiran Gosu.

Wednesday, December 02, 2009

காம்போசிஷன் - 2

காம்போசிஷன் பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் பதிவும் காம்போசிஷன் பற்றியது தான். சென்ற பதிவில் எப்படி எல்லாம் படங்களை எடுக்கக்கூடாதென்று சொல்லியிருந்தேன் அல்லவா? இம்முறை படங்களை எப்படி எடுத்தால் கண்களைக் கவரும் என்பதை பார்ப்போம்.
இதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் முன்பே சொன்னது போல், புகைப்படம் எடுப்பது ஒரு கலை தான். எனவே இங்கே நான் சொல்லும் விதிமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் இவற்றைப் பின்பற்றினால், கண்களை ஈர்க்கும் என்பது நிச்சயம்.
"The so-called rules of photographic composition are, in my opinion, invalid, irrelevant and immaterial" - Ansel Adams

காம்போசிஷனை பற்றி தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். ஒவ்வொன்றையும் முழுவதுமாக சொல்லிக் குழப்புவதற்கு பதிலாக சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறேன். சந்தேகங்களைப் பின்னூட்டமிடவும்.

மிக முக்கியமான விதி ஒன்று Rule of Thirds. நமது புகைப்படத்தை ஒன்பது கட்டங்களாக பிரித்துக் கொள்ளுங்கள், அதாவது மேலிருந்து கீழாக இரண்டு கோடுகளும், இடமிருந்து வலமாகவும் இரண்டு கோடுகளும் வரைந்துக் கொள்ளவும். இப்போது 3X3 மேட்ரிக்ஸ் கிடைக்கும் அல்லவா? அனைத்துக் கட்டங்களும் ஒரே அளவில் இருக்க வேண்டும், அதாவது கோடுகளின் இடைவெளி சமமாக இருக்க வேண்டும். இப்போது இதிலிருக்கும் நான்கு கோடுகளின் மீதோ அல்லது அந்தக் கோடுகள் சேரும் புள்ளிகளின் மீதோ தான் நமது கண்கள் தானாக செல்லும். இந்தப் புள்ளிகளை Power Points என்று சொல்வதுண்டு. எனவே நாம் நினைக்கும் சப்ஜெக்ட் இந்தப் புள்ளிகள் இருக்கும் இடத்தில் இருத்தல் நலம். நாம் திரைப்படங்கள் பார்க்கும் போது கூட இதை கவனித்திருக்கலாம். (இல்லையென்றால் இனி கவனிக்கவும்). கீழிருக்கும் புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

புகைப்படம் - நன்றி விக்கிபீடியா







ஆனால் அனைத்துப் படங்களிலும் Rule of Thirds பயன் படுத்த முடியுமா என்றால், முடியாது. காரணம் சில படங்களுக்கு symmetry தேவைப் படுகிறது. அப்படிப் பட்ட இடங்களில் Rule of Thirds பயன் படுத்த முடியாது. இவ்வாரு சிமெட்ரியாக எடுப்பது ஒருவகையான காம்போசிஷன் தான்.







தவறான உதாரணம்


சரி இப்போது மேலே பார்த்த படத்தை வைத்துக் கொண்டு இன்னொரு காம்போசிஷன் விதியையும் சொல்லிவிடுகிறேன். - Leading Lines என்பது இதற்கான பெயர். நாம் பார்க்கும் காட்சிகளில் பெரும்பாலும் கோடுகள் இருக்கின்றன. உதாரணதிற்கு ரயில் தடம், கரண்ட் கேபிள், ஜன்னல் கம்பிகள், மரக் கிளைகள், நேர் ரோடுகள் இப்படிப்பட்டவை. இவற்றை நாம் பார்க்கும் போது நமது கண்கள் நம்மை அறியாமலேயே அந்தக் கோடுகளை நூல் பிடித்தாற் போல் பிடித்துக் கொண்டு கோட்டின் அடுத்த முனைக்குக் கொண்டு சென்றுவிடும். இப்படியிருக்கும் போது நமது சப்ஜெக்ட் எங்கிருக்க வேண்டும்? ஆம் கோட்டின் அடுத்த முனையில் தான். [டோரா கார்டூன் பார்ப்பது போல் இருக்கா? :) ]. கீழே இருக்கும் படங்களைப் பார்த்தால் உங்களுக்குப் புரிந்துவிடும்.





காம்போசிஷனில் இன்னொரு சின்ன விதியும் உள்ளது. இப்போது நாம் நேர் கோடுகளைப் பார்த்தோம் இல்லையா? அதே போல் வளைந்த கோடுகளும் ['S' வடிவிலான வளையங்கள்] மனித கண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். உதாரணத்திற்கு வளைந்து ஓடும் நதிகள், ரோடுகள்.



வளைந்து ஓடும் நதிகளைப் பற்றிச் சொல்லும் போது இன்னொரு விதியும் சொல்லிவிடுகிறேன். அதாவது நமது சப்ஜெக்ட் வலப்பக்கத்திலிருந்து இடமாக போவது போல் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்போது சப்ஜெக்டை வலப்பக்கம் வைத்து விட்டு இடப் பக்கம் நிறைய இடம் இருப்பது போல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது நமது சப்ஜெக்ட் இடப் பக்கம் போவது போல் தெரியும். அதுமட்டுமின்றி நமது ஃப்ரேமிற்கு ஒரு முழுமை கிடைக்கும். அப்படியின்றி வலப்பக்கம் போகும் சப்ஜெக்டை வலதோரத்தில் வைத்தால், இதோ சற்று நேரத்தில் சப்ஜெக்ட் நமது ஃப்ரேமிலிருந்து சென்று விடுவது போல் தோன்றும், அதுமட்டுமின்றி காலியாக இருக்கும் வலப்பக்கம் ஃப்ரேமில் 'ஏதோ மிஸ்ஸிங' போன்றது போல் இருக்கும். இந்த காம்போசிஷனை 'Movement into the Majority of the Frame' என்று சொல்வதுண்டு.



தவறான உதாரணம்


Monotonous Content என்று ஒரு விதி இருக்கிறது. அதாவது ஒரே மாதிரியானவற்றை ஒன்றாக வைத்து படம் எடுப்பது, உதாரணதிற்கு புற்கள், கூழாங்கற்கள்.






இவை மட்டும் தானா விதிகள் என்றால், இல்லை என்பது தான் என்னுடைய பதில். நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று - நாம் நமது புகைப்படத்தில் எதைக் காட்டவேண்டும் என்று நினைக்கிறோமோ, அது மட்டும் தான் நமது புகைப்படத்தைப் பார்ப்பவர்களுக்குத் தெரியவேண்டும். அவர்களின் கண்கள் எங்கு பார்த்தாலும், அவர்களின் கண்களை ஈர்த்துக் கொண்டு வந்து 'இதோ நான் இங்குட்டு இருக்கேன்', என்று சொல்வது போல் இருக்க வேண்டும் நமது புகைப்படங்கள்.

எல்லாவற்றிலும் மிக முக்கியமான விதி ஒன்று இருக்கிறது. பல சமயங்களில் அழகான ஒரு சப்ஜெக்டிற்கு முன்பு படுகேவலமான நமது முகத்தை வைத்து சப்ஜெக்டை அசிங்கப்படுத்துவது நமது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதைத் தவிர்ப்பது என்பது நம்மால் முடியாத ஒன்று தான். ஆனால் இது தான் முக்கியாமன விதி. சொல்லியாச்சு, இனி படங்களை எடுங்க.