Friday, April 24, 2009

தேடல்

எதையோத் தொலைத்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு. எனது முதுகிலிருந்த பையை எடுத்துப் பார்த்தும் தெரியவில்லை. சட்டைப் பையை ஒரு முறை தடவிப் பார்த்தும் விளங்கவில்லை. எதையோ தவறவிட்டது போன்றே தெரிகிறது. ஒரு வேளை தவறான பேருந்தில் ஏறிவிட்டேனோ? இல்லையே, சரியாகப் பார்த்துத் தான் ஏறினேன். இவ்வாறாக எனக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு நானே பதிலளித்துக் கொண்டிருந்த போது இரவு மணி பதினொன்று.

சற்றே ஓய்வெடுக்க இருக்கையிருக்கிறதா என்றுத் தேடிப் பார்க்கையில், அதோ இருக்கிறது இரண்டாம் வரிசையில் எனக்கென ஒரு ஆசனம். ஆட்டம் காணும் பேருந்தில் மெல்ல நடந்து முன்னேறிச் சென்று அமர்ந்தேன். எனது பேருந்து செல்லும் வழியெங்கும் எனக்குப் பரிச்சயப்படாத இடங்களாகவே இருக்கிறது. இயற்கைக் காட்சிகளை ரசிக்கத் தடை போட்டது என்னுடைய மனது. எதைத் தான் தொலைத்தேனோ.

சட்டென்று எனக்குள் ஒரு சந்தேகம், இந்தப் பேருந்து எங்கு தான் போகிறது என்று. கேட்டுவிடலாம் என்று அருகிலிருந்த ஒருவனைக் கேட்க நினைத்த போது அவனது குறட்டைச் சத்தம் என்னுடைய காதுகளைத் துளைத்தது. ஓட்டுனரிடம் கேட்கலாம் என்று எனது இருக்கையிலிருந்து எழுந்து அவரிடம் கேட்க, அவரோ, முழுக்கவனத்துடன் தானுண்டு தன் பேருந்துண்டு என்று என்னைச் சற்றும் பொருட்படுத்தாமல் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார். பேருந்தின் வேகம் குறைய ஆரம்பித்தது. இறங்கிவிடலாம் என்று எண்ணி, இறங்க முற்பட்டபோது, உடனே பேருந்து வேகத்தைக் கூட்டிச் சீறிப் பாய்ந்தது. இந்தப் பேருந்து கடத்தப்பட்டிருக்கிறதோ என்று ஒரு பயம் எனக்குள் மெல்ல எட்டிப் பார்த்தது. நான் திரும்பிப் பார்க்க அனைவரும் அமைதியாக உறங்கிக் கொண்டுதான் இருந்தனர். கடத்தப்பட்டது போல் இல்லை என்றாலும், எனது மனம் பாரமாகவே இருந்தது. தொலைத்தது கிடைக்குமா? அட தொலைத்தது தான் என்ன?

கிட்டத்தட்ட இந்தப் பேருந்தில் பயணித்து ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. இந்தப் பேருந்து மிகவும் வசதியாகத் தான் இருக்கிறது. ஆறு மணி நேரப் பயணத்தின் பின்னும் சற்றும் சோர்வடையாமல் தான் இருக்கிறேன். அட இது என்ன? இந்த இடத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஆம், நிச்சயமாக. அதோ அங்கேயிருக்கிறது ரயில் போகா ரயில் தடங்கள். நினைத்தது போலவே ரயில் தடங்களைத் தாண்டிச் சென்றது பேருந்து. இன்னும் சற்று தூரத்தில் இருக்கிறது பழைய மசூதி என்றது எனது மனம். அதோ இருக்கிறது அந்த மசூதி. ஆஹா, நினைவில் ஏதோ மெல்ல வந்து செல்கிறது. எதைத் தொலைத்தேன்? எதைத் தவறவிட்டேன்? ஒரே கேள்வியைப் பலவாறாக என்னை நானே கேட்டுக் கொண்டேன். சட்டென்று தொலைவில் எங்கிருந்தோ ஒரு பெண், ஒருவனுடன் மூச்சிறைக்க பேருந்தை நோக்கி ஓடி வந்தாள். இவர்களைப் பார்த்தால் பேருந்து ஏறுவது போல் தெரியவில்லை. அவர்கள் சாலை நடுவே பேருந்தை நோக்கி ஓடி வருகின்றனர். சில மீட்டர் தொலைவில் அவர்கள். பேருந்து சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்தது. ஓ, இவர்கள் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றனரோ? அவர்கள் அருகே வர, எனக்குள்ளே ஏவுகனைகளை ஏவி விட்டது போல் ஒரு உணர்வு. அவள் என்னவள்.

அவர்கள் இப்போது ஒரு சில அடி தூரத்தில் தான். அவனது முகம் இப்போது புலப்பட்டது. அவன் நான் என்று உணர்வதற்க்குள் பேருந்து எங்களைத் தாண்டிச் சென்றது. இப்போது விளங்கியது எனக்கு, நான் தொலைத்தது என்னவளைத் தான் என்று. அவளெங்கே என்று தேடிப் பார்க்க அவளோ பேருந்தில் இல்லை. பேருந்து நின்றது. வெளியே மிகப் பெரிய கூட்டம்.
'பையன் ஸ்பாட்லியே அவுட், அவளுக்குச் சின்ன காயம் தான்', என்றான் ஒருவன்.
என்னவள் பேருந்தின் வெளியே மயக்க நிலையில் நிஜமாய், நானோ பேருந்தின் உள்ளே நிழலாய். இப்படிப் பிரிந்துவாழத்தானோ இந்தக் கோழைத்தனமான முடிவெடுத்தோம். இது தெரிந்திருந்தால், போராடியிருப்போமே, என்று கண்ணீருடன் தொடர்கிறது என்னுடைய பேருந்துப் பயணம்.

சங்கமம் போட்டிக்காக...

15 comments:

புன்னகை said...

Me de 1st :-)

Manu said...

பதிவின் உரைநடை மிக மிக அற்புதம்...
கடைசி வரை என்ன முடிவு என்பது உகிக்காக முடியாமல் வைத்த உங்கள் திறமைக்கு சபாஷ்...
போட்டியில் பரிசு கிடைக்க என் வாழ்த்துகள்...

புன்னகை said...

உங்கள் பதிவைப் படித்து வார்த்தையற்று இருக்கிறேன்! "தேடல்" என்ற தலைப்பிற்கு பொருத்தமாக அமைந்துள்ளது கதையின் அமைப்பு. காதலை மிக அழகாய் எழுதத் துவங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

பதிவின் கடைசி வரிகளைப் படித்த பின், "எதையோத் தொலைத்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு!"

வித்யா said...

நல்லாருக்கு.

Truth said...

நன்றி புன்னகை, மனோ, வித்யா. வோட்டு போடும் போது சொல்றேன், வந்துட்டு போங்க. :-)

நந்து f/o நிலா said...

நல்லா வந்திருக்கு கிரண். முடிக்கும் போது இன்னும் கொஞ்சம் பூடகமாகவே முடிச்சிருக்கலாம். அது என்னன்னு இன்னும் கொஞ்ச நேரம் படிக்கறவங்கள யோசிக்க வைக்கலாம் :)

ஆனா கதை ரொம்பவே வித்தியாசம்.கொண்டுபோன விதமும் சஸ்பென்ஸ் நல்லாவே ஏத்துச்சு.

லோகு said...

ரொம்ப நல்ல இருக்குங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வெங்கிராஜா said...

சுத்தமா ஊகிக்கவே முடியலைங்க... திறமையான மொழிநடை... இந்த முறை போட்டி கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல... ஆனாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Truth said...

@நந்து,
//முடிக்கும் போது இன்னும் கொஞ்சம் பூடகமாகவே முடிச்சிருக்கலாம். அது என்னன்னு இன்னும் கொஞ்ச நேரம் படிக்கறவங்கள யோசிக்க வைக்கலாம் :)

அடுத்து எழுதற கதைல இதை மனசுல வெச்சிக்கிறேன். :)

//ஆனா கதை ரொம்பவே வித்தியாசம்.கொண்டுபோன விதமும் சஸ்பென்ஸ் நல்லாவே ஏத்துச்சு.
ரொம்ப நன்றி நந்து, உங்க பேராதரவு ரொம்ப முக்கியம்.

**************************************************
@லோகு, @வெங்கிராஜா
ரொம்ப நன்றிங்க

vinoth gowtham said...

அருமையான மொழி நடை..நல்லா வித்தியாசமா எழுதி இருக்கீங்க..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..

பிரியமுடன்.........வசந்த் said...

புதுசு கண்ணா புதுசு

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Truth said...

@வினோத் கௌதம், வசந்த்,

ரொம்ப நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

அருமையான புனைவு. ஊகிக்க இயலாத முடிவு. வாழ்த்துக்கள்.

”தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே” எனத் தொடங்கும் ‘காதல் மழையே’ பாடல் கேட்டிருக்கிறீர்களா?

தவறாமல் சங்கமத்திலும் வாக்களிக்கிறேன்:)!

Truth said...

@ராமலக்ஷ்மி
நன்றி ராமலக்ஷ்மி :-)

//பாடல் கேட்டிருக்கிறீர்களா?
உண்மைய சொல்லனும்னா, இந்தப் பதிவின் தலைப்பு என்ன வைக்கலாமென்று யோசிக்கும் போது, இந்தப் பாடல் தான் மனதில் இருந்தது. ஆனால் தலைப்பு பெரியதாக இருந்து விடுமோ என்று 'தேடல்' என மாறியது. :-)

//தவறாமல் சங்கமத்திலும் வாக்களிக்கிறேன்:)!
ரொம்ப ரொம்ப நன்றிங்க :-)

ஜோசப் பால்ராஜ் said...

நல்லாருக்குண்ணே.