Sunday, March 29, 2009

எனது பெயர் நாகவள்ளி : பாகம் 2

பாகம் ஒன்று

இரவு எட்டு மணி:
இராஜன் தனது இரு கைகளையும் பிசைந்து கொள்ள அவனது கைகள் முழுவதும் இரத்தக் களரியாக மாறியது. எனக்கு அதிர்ச்சி. கைகளில் எப்படி இரத்தம்? முன்னமே கைகளில் காயம் இருந்திருக்குமோ? இதை நமது கேமராக்கள் பதிவு செய்யத் தவறியிருக்குமோ? என எனக்குள் ஏகப்பட்டக் கேள்விகள்.

'யாரு தாயீ?' என விடையைத் தெரிந்துக் கொண்டே கேட்டாள் ஒரு எழுபத்தைந்து வயதுக் கிழவி.
'எனது பெயர் நாகவள்ளி', என்றான்.
'உனக்கு என்ன வேணும் தாயீ?', ஒரு பயம் கலந்த நடுக்கத்துடன் அதே கிழவி கேட்டாள்.

நாகவள்ளியாக இருந்த இராஜன் கேட்டது அனைத்தும், ஏற்கனவே அவனது தாய் தயாராக சமைத்து வைத்தது தான். கிட்டத்தட்ட பத்து பேர் உண்ணக்கூடிய அளவிற்கு அவன் தனியாக உண்டான். இரத்தக் கைகளால் உண்டு நடு நடுவே எச்சிலுக்குப் பதிலாக இரத்தத்தைத் துப்பவும் அவன் தவறவில்லை. எனது கேமெராக்கள் இதில் எதையும் பதிவுச் செய்யவும் தவறவில்லை. இவனிடம் பேசக் கூட எனக்கு சற்றே தயக்கமாகத் தான் இருந்தது. ஏதோ ஒரு திகில் படத்தை நேரில் பார்த்த உணர்வு எனக்கு. சென்னைக்குத் திரும்பிச் சென்ற பின்னர் பதிவு செய்ததைப் பார்த்து இதை ஆராயலாம் என்று முடிவு செய்தேன். அவனது களேபரம் சுமார் முப்பது நிமிடங்கள் ஓடியது. பின்னர் இராஜன் மயங்கி விழுந்தான்.

'பார்த்தீர்களா? இப்படிப்பட்ட அமானுஷ்ய சக்திகளுடன் நம்முள் பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இராஜனைப் போலவே உங்களுக்கு யாராவது தெரிந்திருந்தால் கீழே தெரியும் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். இராஜனைப் போன்று அமானுஷ்ய சக்தியுடன் வாழும் வேறொருவருடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். வணக்கம்' என்று கூறி, ஒரு வாரத் தொடருக்கு வேண்டியதை பதிவு செய்து கொண்டு முடித்தேன்.

அன்று இரவு, வேலூர் விடுதியில்:
'என்ன சார் இதெல்லாம்', தாமு கேட்டான்.
'இது வெறும் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டின்னு சொல்லி ஒதுங்கிக்க முடியாது தாமு. இட்ஸ் சம்திங் ஃபிஷ்ஷி'
'எனக்கு புரியல சார், எத்தனையோ கேஸ் ஹேண்டில் பண்ணியிருக்கீங்க. இது அப்படி என்ன சார் கஷ்டம்?'
'பல கேள்விகள் இருக்கு தாமு. கைகளத் தடவும் போது எதுக்கு இரத்தம் வரணும்? அதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி கூட அவன் அவனோட நண்பர்களோட பேசிக்கிட்டு தானே இருந்தான்?'
'ஆமா சார். இராஜனோட எல்லா மூவ்மெண்ட்ஸ் நம்ம கேமரால இருக்கு. அவன் எங்கேயும் போய், எதுவும் எடுக்கல. அதுக்கு நம்ம கேமெராமென் காரண்டி.
'ஒரு மனுஷனால எப்படி பத்து பேரு சாப்டுற அளவுக்கு சாப்பிட முடியும்? வாயில இருந்து எப்படி இரத்தம் வரும்? சாப்பாடு ஐடெம்ல எதாவது இரத்தம் கலந்து இருப்பாங்களா?'
'இல்ல சார். அவங்க கொண்டு போனத எல்லாம் நாங்க ஒரு முறை செக் பண்ணினோம். வெறும் ட்ரை ஃபுட் தான் சார்'
'ம்ம்ம். ஒன்னுமே விளங்கல தாமு. நான் ஒன்னு பண்ணறேன். இதே ஊருல, இராஜனுக்குக் கூடத் தெரியாம ஒரு மாசம் தங்கி அவனோட செயல்களைக் கண்கானிக்கப் போறேன். அடுத்த மாசம், அமாவாசைக்கு அடுத்த நாள் வீ வில் ப்ரேக் ஆல் த பசுல்ஸ்'
'ஷூர் சார்'

நான் எனது முழு வேலையாக இராஜனை ரகசியமாகத் தொடர்ந்தேன். இராஜனுடைய வாழ்க்கை மிகவும் எளிமையாகத் தான் காணப்பட்டது. அவனுண்டு வயலுண்டு என்றிருந்தான். அவனைப் பற்றி அவனுடைய நண்பர்களிடம் கேட்டுப் பல உண்மைகளைக் கண்டறிந்தேன். நாகவள்ளியும் இராஜனும் காதலித்திருந்தார்களாம். சாதிப் பிரச்சனையின் பெயரில் அவர்களின் காதலை இராஜனின் வீட்டில் சம்மதிக்கவில்லையாம். வேறு வழி தெரியாமல் நாகவள்ளி தற்கொலை செய்து கொண்டாளாம். அதன் பின் இராஜனின் உடலில் நாகவள்ளி புகுந்து கொண்டாளாம். மற்றபடி இராஜனின் வாழ்க்கை மிகவும் எளிமையாகவே இருந்திருக்கிறது. இதிலுள்ள சந்தேக முடிச்சுகளை அவிழ்க்க நான் ஒரு மன நிலை ஆலோசகரைச் சந்தித்தேன்.

மன நிலை ஆலோசகரிடமிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் - நாகவள்ளி இறந்து போனது அவனது உள்மனதை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அவனது உள் மனம், நாகவள்ளியின் மரணத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நாகவள்ளி இறந்து போன நாளன்று, இராஜனின் உள் மனது அவனது மூளையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இது இராஜனுக்குத் தெரிவதில்லை. இராஜனின் உள் மனதால் வெறும் முப்பது நிமிடங்கள் மட்டுமே அவனது மூளையை ஆக்கிரமிக்க முடிகிறது. அதனால் முப்பது நிமிடங்களுக்குப் பின்னர், நாகவள்ளி வெளியே சென்றுவிடுகிறாள். அதாவது இராஜனின் மூளை விழித்துக் கொள்கிறது.

இராஜனின் உடம்பிலிருந்து நாகவள்ளியை விரட்ட வேண்டுமெனில் இராஜனின் உள்மனது இராஜனை முப்பது நிமிடங்கள் ஆட்கொள்ளும் போது, அந்த முப்பது நிமிடங்களுக்குள் இராஜனின் மனதை விழிக்க வைக்க வேண்டும். அதற்கு அந்த முப்பது நிமிட நேரத்தில் இராஜனின் மூளையைத் தட்டி எழுப்ப வேண்டும்.

சரி நமக்கு முகவரி தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அன்றிலுருந்து, நான் ரகசியமாகத் தொடர்வதை நிறுத்திக் கொண்டு, அவனுடைய நண்பர்களுள் ஒருவனானேன். அவனுக்கு பிடித்தமான விஷயங்கள் எவை என்று தெரிந்துக் கொண்டேன். முப்பது நிமிடங்களுக்குள் அவனது மூளையை எழுப்பவதற்காக அவனுக்கு பிடித்தமான விஷயங்களைக் கண்டுபிடித்தேன். இராஜனின் தினசரி வாழ்க்கையில் அவனுக்குப் பிடித்தமானவற்றைக் குறிப்பெடுத்தேன்.

நாகவள்ளியை விரட்ட வேறொரு வழியையும் கண்டுபிடித்தேன். அதாவது, இராஜனுக்குப் பிடித்தமானவற்றைக் குறிப்பெடுப்பது மட்டுமின்றி, நாகவள்ளிக்குப் பிடிக்காதவற்றையும் கண்டுபிடிக்க முயற்சித்தேன். இதற்காக, நாகவள்ளியின் பிறந்தநாள் முதல் அவள் வாழ்ந்த வீடு, பள்ளி, அவளுடைய தோழிகள், அவளுக்கு பிடித்த, மற்றும் பிடிக்காதவற்றை கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுள் கண்டுபிடித்தேன். நாகவள்ளிக்கு இராஜனின் பெற்றோர் மீது மிகுந்த கோபம் இருப்பதாகத் தெரிந்தது. நாகவள்ளியைப் பற்றிய குறிப்புகளை எழுத எனக்கு சுமார் இருநூறு தாள்கள் தேவைப்பட்டது.

இப்போது நான் தயார் நிலையில்! இன்று அமாவாசைக்கு அடுத்த நாள். எனது குழு தனது வேலைகளை கச்சிதமாக உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. நான் தாமுவிடம் எனது திட்டத்தைப் பற்றிச் சொன்னேன்.
'எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே சார்', என்றார் தாமு.
'கேட்ட கதை இல்ல தாமு, பாத்த கதை தான்', என்றேன், சிரித்துக் கொண்டே.

நான் இராஜனின் தாயிடம், நாகவள்ளிக்குப் பிடிக்காத உணவை தயார் செய்யச் சொன்னேன். அவரும், சிறிது தயக்கத்திற்குப் பின்னர் சம்மதித்தார்.

இரவு எட்டு மணி:
இராஜன் கைகளைத் தடவினான். இரத்தம் கொட்டியது.
'எனது பெயர் நாகவள்ளி என்றான்'
'என்ன தாயீ வேணும்', இம்முறை கேட்டது இராஜனின் தாய்.
இராஜனின் முகம் சிவந்தது. 'உன்ன யாருடி என்கூட பேசச்சொன்னது?' கொதித்தபடி இராஜனாகிய நாகவள்ளி கேட்டாள்.
பின்னர் நாகவள்ளிக்குப் பிடிக்காத உணவு பரிமாறப்பட்டது. நாகவள்ளி எழுந்து ருத்திரத் தாண்டவம் ஆடத் தொடங்கினான். இதைக் கண்டு இராஜனின் தாய் மயங்கி வீழ்ந்தாள். இதை இங்கேயே விட்டு விட்டால், இராஜனின் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இராஜனின் நண்பர்களைப் பக்குவப்படுத்தி இராஜனிடம் பேச வைத்தேன். இராஜனின் உயிர் நண்பனாகிய செல்வம், நிலைமையை கச்சிதமாகப் புரிந்து கொண்டு, பழைய நினைவுகளைக் கூறி, இராஜனின் மூளையை எழுப்ப முயன்றான்.

இரவு எட்டு மணி, இருபத்து ஐந்து நிமிடம்:
இன்னும் ஐந்து நிமிடங்களுள் இராஜனை எழுப்ப வேண்டியிருக்கிறது. செல்வம் பேசப் பேச இராஜனின் முக பாவங்களில் மாற்றங்கள் தெரிந்தது. நாகவள்ளியும், இராஜனும் மாறி மாறி வந்து போயினர். ஆனால் இராஜன் முழுவதாக விழிக்க வில்லை.

இரவு எட்டு மணி, இருபத்து எட்டு நிமிடம்:
பிரச்சனையின் உச்சக் கட்டத்தை புரிந்துக் கொண்டு, ஏற்கவனே தயார் செய்யப்பட்டுள்ள நாகவள்ளியின் உருவப் பொம்மை ஒன்று இராஜனின் கண் முன் நிருத்தப்பட்டது. நாகவள்ளி இறந்து போன போது உடுத்தியிருந்த உடைகளைப் போலவே அந்த உருவப் பொம்மைக்கும் உடுத்தப் பட்டது. அந்த பொம்மையை தூக்கிலிட்டால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நாகவள்ளி வரவேண்டும் என எண்ணி, அந்த பொம்மையை தூக்கிலிட சைகை செய்தேன்.

அப்போது நடந்தது அந்த அதிசயம்.

தொடரும்...

Friday, March 06, 2009

எனது பெயர் நாகவள்ளி

'நம்பினால் நம்புங்கள்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சிலருடைய அமானுஷ்ய சக்திகளை கண்டறிந்து அவர்களை பேட்டி எடுத்து டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவது தான் எனது வேலை. சுமார் பதினெட்டு மாத காலமாக என்னுடைய நிகழ்ச்சிகளை கண்டு எனக்கென்று ஒரு தனி முத்திரையைக் குத்திக் கொண்டு, எனது விசிரிகள் படையுடன் வாழ்வது எனக்கு மிகவும் பிடிக்கவே செய்தது.

இன்று தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கும் சிலப் பல நிகழ்ச்சிகளான 'பாம்பைத் தின்று பட்டைச் சாராயம் குடித்தவன்', 'கனவில் கொட்டிய உண்மைக் காசு', 'மங்களூரில் நடந்த மங்கி மனிதன்' போன்ற சிறுப் பிள்ளைத்தனமான நிகழ்ச்சிகளை எனது தொலைக்காட்சியில் முதல் மாதத்திலேயே ஒளிபரப்பச் செய்தப் பெருமை எனக்குண்டு. மற்ற தொலைக்காட்சிகள் அமானுஷ்ய சக்தியைக் கண்டு வியந்துக் கொண்டிருந்தனர். நானோ அதிலுள்ள உண்மைகளை கண்டறிந்து, போலித்தனத்தை உடைத்தெறிந்து விஞ்ஞானத்தை மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தேன்.

இதன் தொடர்ச்சியாக எனக்கு அடுத்து வந்தது ஒரு சுவாரசியமான ப்ராஜெக்ட். வேலூரைத் தாண்டி முப்பது கிலோமீட்டருக்குத் தெற்கே உள்ளது சினிங்காப்பட்டி என்ற கிராமம். அங்கு வசிக்கும் இராஜனின் உடம்பில் ஆவி ஏறிவிட்டதாம். நானும் எனது படக்குழுவும் அன்றிரவே கிளம்பினோம். அடுத்த நாள் காலை சினிங்காப்பட்டி கிராமத்தை அடைந்தோம். இராஜனை சந்திப்பத்ற்கு முன்பு இராஜனின் பெற்றோரைச் சந்தித்தோம்.

'வணக்கம், நாங்க நம்பினால் நம்புங்க நிகழ்ச்சில இருந்து வர்றோம்', என்றேன்.
எனதுப் படக்குழு மூன்று காமெராக்களை ஆன் செய்து வெவ்வேறு கோணத்தில் படமெடுக்க ஆரம்பித்தது.
'ஆ நீங்க தானே பேயெல்லாம் ஓட்றவரு? வாங்கப்பூ', என்றார் இராஜனின் தந்தை.
நான் சிரித்துக் கொண்டே, 'இல்லேங்க, நான் பேய் எல்லாம் ஓட்ட மாட்டேன். பிரச்சனையை கண்டுப்பிடிச்சு, அதை விஞ்ஞான ரீதியில் சரி செய்ய மட்டும் தான் எனக்குத் தெரியும்'
'என்னவோ பண்ணுங்க, எங்க பையன் நல்லபடியா குணமடைஞ்சாச் சரிங்க', என்றாள் இராஜனின் தாய் ஏக்கத்துடன்.
'சரி சொல்லுங்க உங்க பையனுக்கு என்ன ஆச்சு? எப்போல இருந்து இந்த பிரச்சனை?'
'என்னத்த சொல்றதுங்க, போன மாசம் எங்க பக்கத்து வீட்டுல நாகவள்ளின்னு ஒரு பொண்ணு, தூக்கு மாட்டி செத்துடிச்சு. அன்னைலயிருந்து தான் என் பையனுக்கு பேய் புடிச்சிடுச்சுங்க'
'எப்பவுமே பேய் புடிச்ச மாதிரி இருப்பாரா, இல்லே, எப்போதாவதா?'
'அமாவாசைக்கு அடுத்த நாள் மட்டும் தாங்க அதுவும் ராத்திரி எட்டு மணிக்கு வெறும் முப்பது நிமிஷத்துக்கு மட்டும், நாகவள்ளி செத்துப் போனதும், அமாவாசைக்கு அடுத்த நாள் ராத்திரி எட்டு மணி தான்', என்றார் இராஜனின் தந்தை.
'ம்ம்ம். நீங்க ஏதாவது மன நிலை ஆலோசகர அணுகுனீங்களா?'
'அப்படின்னா என்னங்க?'
இவர்களுக்கு புரியவைப்பதும் புலிக்கு பிரசவம் பார்ப்பதும் ஒன்று என்பதை புரிந்துக் கொண்டு, 'சரி நான் உங்க பையன் கிட்ட கொஞ்சம் பேசனுங்க', என்றேன்.
'வெளீல போயிருக்காய்ன், பத்து நிமிசத்துல வந்திருவான்' என்றான் இராஜனின் தந்தை.

நானும், எனது படக்குழுவும், சிறிதே ஆலோசித்தோம்.
'என்னயா இது. இருபத்தொன்னாம் நூற்றாண்டுல பேய் பிசாசுன்னு', என்றேன்.
'எல்லாம் கற்பனை சார். ஒரு ரெண்டு அதட்டு அதட்டினா, எல்லா உண்மையும் கக்கிடுவான்', என்றான் எனது படக் குழுவைச் சேர்ந்த தாமு.
'எனக்கு என்ன கவலைன்னா, இன்னும் இதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்காங்க'
'விடுங்க சார், ஒரு மணி நேரம் தானே வந்திடுவான். உங்க ஸ்டைல்ல கேளுங்க, அடங்கிடுவான்'
'இல்ல, இவங்க வழிலயே போயி, இவனுங்கள மடக்கனும். எப்போ வருது அமாவாசை?'
'சார், இன்னைக்கு தான் சார் அமாவாசை'
'ஃபண்டாஸ்டிக். அப்போ நாளைக்கு இராஜனும், நாகவள்ளியும் ஒண்டிக் குடித்தனம் நடுத்துவாங்களா?' என்றேன் சிரித்தவாரே.

அப்போது இராஜன் அந்தத் தெருவில் தனது நண்பர்களோடு நடந்து வந்துக் கொண்டிருந்தான்.
'சார், அவன் தான் இராஜன்னு நினைக்கிறேன்', என்றான் தாமு.
'சரி வா விசாரிக்கலாம்', என்று அவனை நோக்கி நடந்தோம்.

நானும், எனது குழுவும் அவனை சந்தித்து பேசினோம். அவன் மிகவும் கம்பீரமாகக் காணப்பட்டான். தோள் பட்டைகளும், கைகளும், இரும்பு கம்பிகளை முறுக்கி வைத்தப் படி இருந்தது. நானும் அவனுக்கு எந்த விதத்திலும் சளைத்தவன் இல்லை. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்து இரண்டு முறை ஆணழகன் பட்டம் பெற்றவன் தான். சரி இன்று வரை நன்றாக இருக்கும் இவன் நாளை பேய்களோடு பேசுவானா? அதையும் தான் பார்த்து விடலாம் என்று மனசாட்சியுடம் பேசிக்கொண்டேன்.

'வணக்கம், இராஜன், நாங்க நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சில இருந்து வர்றோம்', என்றேன்.
'வணக்கங்க. ஆத்தா சொன்னாங்க. என்ன விசயமா வந்திருக்கீக?'
'உங்களுக்குள்ள பேய் இருக்கிறதா சொல்றாங்க. அதைப் பத்தி தெரிஞ்சிக்கத் தான் வந்திருக்கோம்'
'அட நீங்க வேற, அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க. ஆனா எனக்கு ஒன்னும் தெரியலேங்க. அமாவாசைக்கு அடுத்த நாள் நான் ஏதோ பித்துப் பிடித்த மாதிரி இருக்கேனாம். என்னென்னமோ உளரிக்கிட்டு இருக்கேன்னு சொல்றாங்க'
'மத்தவங்க சொல்றது இருக்கட்டும், நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?'
'எனக்கு ஒன்னும் நினைவுல இருக்காதுங்க சார்', என்றான்.

பேட்டியை முடித்துக் கொண்டு குழுவுடன் வேலூரில் பதிவுச் செய்த விடுதியில் அன்றிரவு தங்கினோம்.
'என்ன சார், எதாவது க்ளூ கிட்டிச்சா?', தாமு கேட்டான்.
'ஒன்னும் பெரிய பிராப்ளம் இல்ல தாமு. இட்ஸ் சிம்பிள்'
'என்ன சார் சொல்றீங்க, அப்போ கண்டுப் பிடிச்சிட்டீங்களா?'
'யெஸ் அஃப் கோர்ஸ், இது நம்ம ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி தான். வேர ஒன்னும் இல்ல'
'ஓ அவ்ளோ தான, அப்போ ட்ரீட்மெண்ட் தந்தா சரியாயிடும்ன்னு சொல்லுங்க'
'செர்டென்லி, சரி லெட்ஸ் ரிட்டையர். நாளைக்கு நாம அங்க மறுபடியும் போகணும்'
'ஷூர் சார், குட் நைட்'

அடுத்த நாள் குழுவுடன் மீண்டும் சினிங்காப்பட்டி கிராமத்தை வந்து அடைந்த போது மாலை ஆறு மணி. இராஜனின் தாய் மிகவும் கவலையுடன் பலவகையாக சமைத்துக் கொண்டிருந்தாள்.
'வணக்கங்க, என்ன இன்னைக்கு ஸ்பெஷல், இவ்ளோ சமைக்கிறீங்க', என்றேன் உண்மையை தெரிந்துக் கொண்டே.
'நாகவள்ளி வந்திருவா, இதெல்லாம் அவளுக்கு ரொம்ப புடிக்கும். பண்ணலேன்னா...' என்று இழுத்தாள்.
'பண்ணலேன்னா என்ன ஆகும், சொல்லுங்க', என்றேன். தாமு தன் காமெராவை இராஜனின் தாயைச் சுற்றிச் சுற்றி பதிவுச் செய்துக் கொந்திருந்தார்.
'பண்ணலேன்னா, என்னோட மவனை கொண்டே புடுவா', என்றார் கவலையுடன்.

இது எனக்கு அதிர்ச்சித் தரவில்லை என்றாலும், கொன்று விடுவாள் என்று இவர்கள் எப்படி கண்டுப் பிடித்தார்கள் என்ற கேள்வி என்னுடைய மூளையை துளைத்துக் கொண்டிருந்தது.

இரவு ஏழு ஐம்பது:
இராஜன், நண்பர்களுடன் சிரித்துக் கொண்டு தான் இருந்தான். நேரம் போகப் போக நண்பர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

இரவு ஏழு ஐம்பத்தைந்து:
இராஜன் இப்போது தனியாக நடந்துக் கொண்டிருந்தான். அருகிலுள்ள ஒரு சிறுப் பாறை மீது அமர்ந்துக் கொண்டான்.

எனது படக்குழு மூன்று திசைகளில் தங்களுடைய காமெராக்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தனர்.

தொடரும்...