Tuesday, December 30, 2008

டிசம்பர் -2008

வணக்கம்.
டிசம்பர் 2008 எனக்கு அமோகம்.
எங்க கொம்போனில வருசா வருசம் ரெண்டு செர்டிஃபிக்கேஷன் எழுதனுமாம். அப்டி எழுதி பாஸ் ஆனாத் தான் ப்ரொமோஷனுக்கு நாங்க எலிஜிபிள். ஆங் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கனு நினைக்றேன். பாஸ் ஆனா ப்ரொமோஷன் இல்ல. எலிஜிபிள் மட்டுமே, ப்ரொமோஷன் கிடைக்காமலும் இருக்கலாம். கப் வாங்கினா கண்டிப்பா ப்ரொமோஷன் இல்ல. மூனு வருஷத்துக்கு ஒரு முறை ப்ரொமோஷன். இது ஆறாவது வருஷம் எனக்கு. எல்லா வருஷமும் பாஸ் பண்ணிட்டு வந்தேன்.

ரெண்டு செர்டிஃபிக்கேஷன்ல ஒன்ன் நவம்பர் மாசத்துலேயே பாஸ் ஆயிட்டேன். ரெண்டாவது செர்டிஃபிக்கேஷன் எழுத நான் பரிட்சை ஹால்ல ஆன்லைன் டெஸ்டு எடுத்துக்கிட்டு இருந்தேன். 75 மார்க்கு எடுத்தா பாஸ். 50 கேள்வி தான். கேள்விக்கு ரெண்டு மார்க்கு. கேள்விகள பாக்கும் போது என்னடா இவ்ளோ ஈஸியா இருக்குன்னு பயங்கர சந்தோசம் வேர. ஒரு மணி நேர பரிட்சைய 30 நிமிஷத்துல முடிச்சிட்டு 'சப்மிட்' கிளிக்கினப்போ 72% ன்னு வந்திச்சு. இன்னும் ரெண்டு கேள்விக்கு கரெக்டா அடிச்சியிருந்தா பாஸ் பண்ணியிருப்பேனேன்னு மனசுல நினைச்சிக்கிட்டு (புலம்பிக்கிட்டு) வீட்டுக்கு வந்தேன்.

பசியில உயிரு போற மாதிரி இருந்ததுனால ட்ரெஸ் சேஞ்சு பண்ணிக்கிட்டே தட்டுல சாப்பாட்ட போட்டுக்கிட்டேன். இடது கைல என்னோட ரொம்ப புடிச்ச வாட்ச்ச கிழட்டினேன்.

என்னோட வாழ்க்கைல நான் சந்தோஷமா கட்டின ரெண்டாவது வாட்ச் இது தான். முதல் வாட்ச் எங்க அக்கா வாங்கித் தந்தது. அதுக்கு அப்றோம் எங்க கம்பனில புதுசா வாட்ச் தந்தாங்க. அது ரொம்ப புடிச்சு போனதுனால அக்கா தந்த வாட்ச் அப்பா கைல மாட்டிட்டு, எங்க கம்பனி வாட்ச் என் கைல கட்டினேன். கிட்டத் தட்ட மூனு வருஷமா இந்த வாட்ச் தான்.

சரி ஃப்ளெஷ் பேக் போதும். என்னோட வாட்ச கிழட்டி இது கைல வெச்சிக்கிட்டு அதே இடது கைல தவா-வ (கடாய்) தூக்கினப்போ டப் டிப்ன்னு ஒரு சத்தம். வாட்ச் உடஞ்சிப் போச்சு.

எனக்கு இதெல்லாம் பாக்கும் போது கவுண்டமணி வடக்குப்பட்டி ராமசாமி கிட்ட குடுத்தக் காச திரும்பி வாங்கின கதைப் போலத் தான் தெரிஞ்சுது.



எனக்கு மொபைல் ன்னா கொஞ்சம் (அதிகம்) க்ரேஸி. நோக்கியா பக்கமே போகாம சோனி எரிக்க்ஸனோடவே வாழ்ந்துகிட்டு இருந்தேன். இங்க வந்ததும், புதுசா ஒன்னு வாங்கலாம்ன்னு O2 - Xda Orbit ஒன்னு வாங்கினேன். இந்த ஊருல எது எடுத்தாலும் contract தாங்க. 18 மாசம் contract போட்டு மாசா மாசம் £35 அப்டீன்னு ஒரு contract போட்டு வாங்கினேன். ஆனா அதுல internet எல்லாம் use பண்ணி மாசா மாசம் £50 குறையாம கட்டிக்கிட்டு இருந்தேன். GPS, internet ன்னு எல்லா வசதியோட என்னோட லாப்டோப்ப விட அதிகமா use பண்ணினது இந்த மொபைல் தான். டச் ஸ்கீரின் ஃபோன் வேற. ஊருல எல்லார்கிட்டையும், இனி என்னால டச் ஸ்கீரீன் இல்லாம வாழவே முடியாதது போல சீன் போட்டுக்கிட்டு அலஞ்சிக்கிட்டு இருந்தேன். Jan 2009 ல contract முடிஞ்சப்றொம் prepaidக்கு மாறிடலாம். £50 இனி செலவாகாதுன்னு நெனச்சிக்கிட்டு பஸ்சுல வந்துக்கிட்டு இருந்தேன். ஐயோ வீட்டுல பால் இல்லயே ரூம்மேட்ட வாங்கிகிட்டு வரச்சொல்லலாம்ன்னு ஃபோன்ன எடுக்க பைல கைய விட்டா, ஃபோன் கானல. முடிஞ்ச வரைக்கும் தேடிப் பார்த்தேன் கிடைக்கல. இது வரைக்கும் சுமார் £900 இந்த ஃபோன்க்கு செலவு பண்ணியிருப்பேன். காசு போனத விட ஒரு கை உடைஞ்ச ஒரு ஃபீலிங்க. அதுக்கு அப்றொம் நான் ஆடர் பண்ண போற ஃபோன் இது தான். இன்னும் வாங்கல. ஃபோன் இல்லாம கூட வாழ்க்கை நல்லாத் தான் இருக்கு. :)

அதுக்கு அப்றோம் செர்டிஃபிக்கேஷன்க்கு மறுபடியும் எழுதிப்பாத்தேன். பாஸ் ஆகல. நடுல கொஞ்சம் நாள் உடம்பு சரியில்லாம படுத்துக்கிட்டு இருந்தேன். ஆக இந்த மாசம் எனக்கு ப்ரமாதம்.
நாளைக்கு Dec 31, லண்டன் ஐ ல வெடி வெடிப்பானுங்க, அத பாக்கப் போறேன். நல்ல படியா திரும்பி வரனும். வந்தா ஒரு நல்ல புகைப் படத்த என்னோட அடுத்த பதிவா என்னோட photo blog ல போடறேன். இல்லேனாலும் போடுவேன் ஆனா கொஞ்சம் லேட்டு ஆகும். :)
நல்ல விஷயம் நடக்கிறதுக்கு முன்னாடி பல தடங்கள் வரும்னு சொல்லியிருக்காங்க, (ஆனா யாரு சொன்னாங்கனு யாருக்கும் தெரியாது), அதனால 2009 நல்ல படியா அமையும்னு நினைக்கிறேன்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Thursday, November 20, 2008

Try - இதை அகராதியிலிருந்து விலக்கிடுங்க

வணக்கம்.

சில நாட்களுக்கு முன்பு படித்தது. யார் சொன்னாங்கனு சரியாத் தெரியல, ஆனா படிக்க நல்லா இருந்தது. என்ன சொல்லியிருக்காங்கனா, "Try" என்கிற வார்த்தையை அகராதியிலிருந்து விலக்கிவிடுவது நல்லதுனு சொல்லியிருக்காங்க. சரி அப்படி என்ன தான் அந்த வார்த்தைல பிரச்சனைனு பாக்கலாம்.

Try என்ற சொல் நம்முடைய மூளைக்கு வெற்றிய மறைச்சு, தோல்விக்கான வழிய காட்டுதாம். என்னடா சிறுபிள்ளைத்தனமாக இருக்குனு நீங்க நினைக்கிற மாதிரி தாங்க நானும் நினைச்சேன். மேல படிச்சாத்தான் இது கூட ஒரு விதத்துல சரீன்னு பட்டுது. ஒரு உதாரணத்தோட விளக்கியிருக்காங்க.

ஒரு குழந்தைக் கிட்ட ஒரு பென்சில் தந்து, "Try dropping this pencil" அப்படீன்னு சொல்றதா வெச்சிக்குவோம். அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடும். அந்தக் குழந்தைக் கிட்ட மறுபடியும் போய் "நான் உன்கிட்ட பென்சிலக் கீழ போட சொன்னேனா? பென்சிலக் கீழ போட 'Try' பண்ணுனு தானே சொன்னேன்" அப்படீன்னு சொன்னா, அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடாம, பென்சிலோட ஒரு முனையப் புடிச்சிக்கிட்டு கீழ போட்ற மாதிரி பாவனை பண்ணும். ஆனா பென்சிலக் கீழ போடாது.

ஆக, ஒரு வேலைய செய்ய Try பண்ணுனு சொல்லும் போது, நாம் நமது முளைக்கு அந்த வேலையைச் செய்யாதேன்னு தான் சொல்றோம். இது கிட்டத்தட்ட வெற்றியை மறைத்துத் தோல்வியைத் தான் முன்னிறுத்துது. அதனால தான் Try என்கிற வார்த்தையை அகராதில இருந்து விலக்கச் சொல்றாங்க.

யாராவது அவங்க வீட்டுக்கு உங்களக் கூப்பிட்டா, "I will come" இல்ல "I will not come" அப்படீன்னு தெளிவாச் சொல்லனுமாம். மாறாக "I will try to come" அப்படீன்னு சொன்னா, நாம கண்டிப்பா போகமாட்டோமாம். அதேபோல, உங்கக்கிட்ட இந்த வேலைய முடீன்னு சொன்னா, ஒன்னு, "Yes, I will do it" அப்படீன்னு சொல்லணும், முடியலேன்னா, "No, I cant do it", அப்படீன்னு சொல்லணுமாம். அப்படிச் சொல்லாம, "I will try to do it" அப்படீன்னு சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. என்ன சரிதானே?

உங்கக் கருத்துக்களைக் கமெண்டுங்க.

பி.கு: இதைக் கூறியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அப்படீன்னும் இருந்திச்சு. இது உண்மையான்னு தெரியல.

Friday, November 14, 2008

புரிந்த புதிர்; புரிஞ்சதோட சரி. - 1

வணக்கம் மக்களே...

ஒரு விடுகதையோட உங்க முன்னாடி வந்திருக்கேன். இதுக்கு முடிஞ்சா பதில் கண்டுபிடிங்க. என்ன சந்தேகம் இருந்தாலும் கமெண்டுங்க. டிஸ்கஸ் பண்றாதா இருந்தாலும் கமெண்டுங்க. சரி இனி விடுகதைக்கு போவோம்.

மூனு பேரு வேல வெட்டி இல்லாம இருக்காங்க. A, B, C அப்டீனு வெச்சிக்குவோம்.

C என்ன பண்றான், 2ல இருந்து 100குள்ள ரெண்டு நம்பர மனசுல நெனச்சிக்கிறான். அந்த ரெண்டு நம்பர் X, Y அப்டீனு வெச்சிக்கலாம்.

C என்ன பண்றான்:
-- A கிட்ட போய், X+Y யோட விடைய சொல்றான்.
-- B கிட்ட போய், X*Y யோட விடைய சொல்றான்.

Aக்கு தெரிஞ்சது:
-- X+Y யோட விடை தெரியும்.
-- B கிட்ட X*Y யோட விடை இருக்குனு தெரியுமே தவிர, X*Y யோட விடை என்னான்னு தெரியாது.

Bக்கு தெரிஞ்சது:
-- X*Y யோட விடை தெரியும்.
-- A கிட்ட X+Y யோட விடை இருக்குனு தெரியுமே தவிர, X+Y யோட விடை என்னான்னு தெரியாது.

இது வரைக்கும் புரிஞ்சிதா? புரியலேனா go to step 1 :-) அட மறுபடியும் முதல்ல இருந்து படிங்கப்பா.

சரி இப்போ Aவும் Bயும் அந்த ரெண்டு நம்பர கண்டுப்புடிக்றாங்க. எப்படின்னா...
Statement 1: B கிட்ட A சொல்றான்: எனக்கு அந்த ரெண்டு நம்பரும் தெரில, உனக்குக் கூட கண்டிப்பா தெரியாதுனு எனக்குத் தெரியும்.
Statement 2:A கிட்ட B சொல்றான்: ஆமா, எனக்கு அந்த ரெண்டு நம்பர் முதல்ல தெரியாமத் தான் இருந்திச்சு. ஆனா, உன்னோட statement 1 கேட்டப் பிறகு, எனக்கு அந்த ரெண்டு நம்பர் தெரிஞ்சிப் போச்சு.
Statement 3: B கிட்ட A சொல்றான்: ஆஹா, உன்னோட இந்த statement 2 வ கேட்டுட்டப் பிறகு எனக்குக் கூட அந்த ரெண்டு நம்பர் தெரிஞ்சிப் போச்சு.

அப்படீனு சொல்றாங்க.

ஆக, X மற்றும் Y என்னான்னு கண்டு புடிங்க.

பி.கு1. A கிட்ட B பொய் சொன்னான். B கிட்ட A பொய் சொன்னான், அப்டீங்கற மொக்கைக்கெல்லாம் இங்குட்டு இடம் கிடையாது.
பி.கு.2 இந்த கேள்விக்கு பதில் என்கிட்டயும் இல்ல.

Thursday, November 13, 2008

புரியாத புதிர்- பாகம் 2


இதுக்கு விளக்கம் எல்லாம் வேணாங்க. உடம்புல தெம்பும் இல்ல. செய்திய எல்லோரும் படிச்சிருப்பீங்க.
என்னத்த சொல்ல...
நல்லா காட்றாங்க டா ரியாக்ஷன.

வேடிக்கை பாத்திச்சு போலிஸ்.

இவங்கள என்னங்க பண்றது? எனக்கு ஒன்னுமே புரியல.

நமது பள்ளிகளும், பிள்ளைகளும்

வணக்கம்
இந்தப் பதிவ ரொம்ப அவசர அவசரமா எழுதறதால, கண்டிப்பா நெறய தவறுகள் இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க.

அது வேற ஒன்னும் இல்லேங்க. "வீட்டுப்பாடம் பெற்றோர்களுக்கா? பிள்ளைகளுக்கா!!!" அப்டீங்கற பதிவ நந்து இங்க இருக்கு, படி, படிச்சிட்டு மனசுல தோன்றத கமெண்டு அடீனு சொன்னாரு. அதுக்கு கமெண்டு அடிக்கனும்னு பாத்ததுல மனசுல நெறய விஷயங்கள் பட்டிச்சு. அவ்ளோவும் கமெண்டா போட முடியாதுனுத்தான் ஒரு பதிவாவே போட்றேன்.

இதுல முக்கியமான விஷயம் என்னான, எனக்கு சரீனு படறதத்தான் எழுதறேன்.
முதல்லெ, வீட்டுப்பாடம் (இனி இத வீ.பா னு தான் சொல்லுவேன்) வேணுமானு கேட்டா, கண்டிப்பா வேணுங்க. ஆனா வீ.பா என்னானு தான் நாம முடிவு பண்ணனும். அது பொது அறிவ ஊட்ற மாதிறி இருக்கனும். பள்ளிபுத்தகள்ல இருக்றதையே வீட்லயும் பண்ணச் சொன்னா, வீட்ல பண்ணவேண்டியத, பள்ளிலயா பண்ணமுடியும்? இதுல என்னக் கொடுமைனா, ஆனுவல் (Annual தமிழ்ல தெரிலீங்க) பரிட்சை முடிஞ்சப்பறம் கூட, handwriting நல்லா இருக்கனும்னு பழைய புத்தகங்கள்ல இருக்கறதையே எழுதச்சொல்லுவாய்ங்க. ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் எழுதனுமாம். நானும் கேண மாதிறி எழுதியும் இருக்கேன். முழுசா முள்ளாங்கி பத்த மாதிறி 60 நாளையும் வீனடிச்சிருக்கேன். என்னத்த சொல்ல. லீவு முடிஞ்சி பள்ளிக்குப் போனா, அதப் பத்தி வீ.பா கொடுத்தவங்களும் மறந்திருப்பாங்க. இப்படித் தான் நானும் வளந்தேன்.

என்னப் பொருத்த வரையில் வீ.பா என்ன தரனும்? உன்னோட இஷ்டப்படி எதாவது பண்ணு. வரையவோ, இல்ல handwork, இல்ல பாட்டு பாட்றதோ, இல்ல, கிரிக்கெட் விளயாடறதோ அப்படி என்ன வேணும்னாலும் பண்ணு. முக்கியமா, இந்த வரைஞ்சது, handwork பண்ணினத பாத்தவுடனே, இத பண்ணது யாருனு தெரிஞ்சிடும். புள்ள பண்ணியிருந்தா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் முழு மதிப்பெண் கொடுக்கனும். இதுவே அப்பவோ, அம்மாவோ பண்ணியிருந்தா, அவங்கள கூட்டியாந்து, என்ன ப்ரச்சன உங்களுக்கு, குழந்தைக்கு கொடுத்தத நீங்கயேன் பண்றீங்க? உங்களுக்கு வேல இல்லயானு கேக்கனும். அத விட்டுட்டு, மாத்தி பண்ணா, நந்து சொன்ன மாதிறி குழந்தை ப்ராயிலர் கோழியாத் தான் வளரும். இது ஒன்னுல இருந்து அஞ்சாவது வரைக்கும் செல்லும். ஆறாவதுக்கு மேல, நாட்ல என்ன நடக்குது, அது அரசியலோ விஞ்ஞானமோ, விளையாட்டோ என்ன வேணும்னாலும் இருக்கட்டும், அதப் பத்தி தெரிஞ்சிட்டு வாங்கனு சொல்லலாம். நான் உக்காந்துகிட்டு தாங்க இத எழுதறேன். எனக்கே இவ்ளோ தோனுதுனா, ரூம் போட்டு, மல்லாக்காப் படுத்து, குப்புறப் படுத்து, நின்னு, நடந்து, உக்காந்து யோசிக்கிறவங்களுக்கு இன்னும் நெறயவே ஐடியா வரும்.

"பட்டு, ஸ்கூல்ல சிங்கிங் காம்பெடிஷன்ல ஃப்ஸ்டு ப்ரைஸ் வாங்கினியே, அந்த பாட்ட அங்கிள்க்கு பாடி காட்டுமா" அப்டீனு சொல்றத விடனும். "எங்க பையன் மேத்ஸ்ல எப்பமே செண்டம்" அப்டீனு கணக்கே வராத பையனோட அம்மாகிட்ட சொல்றத அறவே ஒழிக்கனும்.

அடுத்து நம்ம சிலபஸ்க்கு வருவோம். நாம பத்தாவதுல படிச்சத இப்போ இருக்ற குழந்தைங்க அஞ்சாவதுல படிக்குதுனா, (இத சொல்லும் போதே எனக்கு ரொம்ப வயசான மாதிறி ஒரு பீலிங்கு, அது உண்ம தானடானு சொல்றீங்களா? :-) ) அதுக்கு அர்த்தம், இப்போ நெறய புதுசு புதுசா கண்டுப்பிடிச்சிருக்காங்க. அவ்ளொ தான். சிலபஸ் எல்லாம் ஒன்னும் அதிகம் இல்லேங்க. நாம படிச்சத விட இப்போயிருக்ற புள்ளைங்க நெறய படிக்றதுல தப்பு இல்ல. ஆனா, அதச்சொல்லித்தற வாத்தியாருங்கள்ல எத்தன பேருக்கு இந்தப் புது சிலபஸ் புரியுதுனு தான் மேட்டரே.

ரெயில்வே ரிசர்வேஷன் ஃபார்ம் ஃபில் பண்ண தெரில, வௌச்சர்னா என்னனு தெரில, இது தெரில, அது தெரில ஆனா, சிலபஸ் மட்டும் அதிகமா இருக்குனு சொல்றதுல அர்த்தமே இல்லேங்க. சரியாச் சொல்லித்தற வாத்தி இல்ல. அவ்ளோ தான். Integration, differentiation, taylor approximation, rho, vega, tau derivatives எல்லாம் நான் படிக்கும் போது, இத எல்லாம் எதுக்குத் தான் டா படிக்றோம்னு எரிச்சலோடு தான் நானும் படிச்சேன். அப்போ புரியல. இன்னைக்கு என்னோட ப்ரோக்ராம்ல taylor approximationம், differentiationம் இருக்குனு சொன்னா நீங்க நம்பித் தாங்க ஆகனும். புரியாம படிக்க சொல்லித்தந்தத தப்புன்னும் சொல்ல முடியல. ஏனா அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தாங்க. இப்போ எனக்கு இத பத்தி நல்லாவேத் தெரியும். ஆனா இங்க வாங்குற சம்பளம் பள்ளிலயோ, கல்லூரிலயோத் தந்தா பாடம் நடத்த நான் தயார்.

இத படிக்றவங்க பலப்பேர் ஏன்ஸ்டீனோட "தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி" பத்தி படிச்சிருப்பீங்க. சொல்லப்போனா, அது ஆறாவதோ, எட்டாவதோ படிக்கும் போதே வந்திச்சு. கரெக்டா? ஒரு சின்ன கேள்வி. ஒரு ரெண்டு கைக்கடிகாரங்கள் எடுத்துக்குவோம். ரெண்டு கடிகாரத்திலும் ஒரே டைம செட் பண்ணிடுவோம். அதாவது ரொம்ப ரொம்பச் சரியா ஒரே டைம். இதுல ஒரு கடிகாரத்த ஒரு செயற்கைக்கோள்ல வெச்சு அனுப்பிடுவோம். அது உலகத்த விட்டு ஒரு அம்பது வருஷம் வெளிலயே சுத்தட்டும். அம்பது வருஷம் கழிச்சுப் பாத்தா ரெண்டு கடிகாரமும் வெவ்வேரு டைம காட்டும். வெளில சுத்தின கடிகாரம் கொஞ்சம் டைம குறைவாக் காட்டும். எப்படி தெரியுமா? ஒன்னுல பேட்டரி காலி ஆச்சுனு மொக்கத்தனமா எல்லாம் சொல்லக்கூடாது. ஒரு பொருள் பயணிக்குதுன்னா அது டைம சேமிக்கும். ஆக ஒரு மனுஷன் அந்த செயற்கைக்கோள்ல இருந்திருந்தா, அவன் திரும்பி உலகத்துக்கு வரும் போது உலகம் வெள்ளிக்கிழமையா இருக்கும், ஆனா அவனோட கடிகாரம் படி அது இன்னும் வியாழக்கிழமையாக் கூட இருக்கலாம், ஆனா கண்டிப்பா, உலகத்துல இருக்கிற கடிகாரத்த விட டைம் கம்மியாத்தாங்க காட்டும். அது தாங்க தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி. இதெல்லாம் கண்டுப் பிடிக்கலேனா, இன்னைக்கு சந்திராயன் - 1 எல்லாம் பறந்திருக்காது. இத புரிஞ்சி எத்தன பேருங்க படிச்சோம்?

Teaching is not a profession, its a service அப்டீனு சொன்னா வேலைக்காகாது. IT industryய விட அதிகமா இல்லேனாலும் அதுல முக்காவாசி சம்பளத்த வாத்திக்கு தந்தா, பள்ளிலயும், கல்லூரிலயும், பசங்க எதிர்காலம் நல்லவே இருக்கும். ஆனா, இங்க தாங்க ட்விஸ்டு, அவ்ளோ அதிகமா சம்பளம் தரனும்னா, பள்ளிலயும், கல்லூரிலயும் ஃபீஸ் அதிகமாயிடும்.

ஆக இதுக்கு தீர்வு என்னனு கமெண்டுங்க.


Wednesday, November 05, 2008

பச்சை நிறமே பச்சை நிறமே

காலை 8:00

"ஆஹா, எவ்ளோ அழகா இருக்கு, பச்சப் பசேல்னு", புல்லைப் பார்த்து ரசித்தபடி ஆஃபீஸ்ல காலடி வைக்கும் போது, புல்லை வெட்டுகிற பெண்கள், என் கண்களில். "இவங்களும் பச்சப் புடவ கட்டியிருக்காங்க. அது சரி, இவங்களுக்கு எப்போமெ, பச்சப் புடவ தானே" என்று எனக்குள் சொல்லிக்கொண்டு, உள்ளே நுழைய, ஒரு பச்சோந்தி இடமிருந்து, வலம் போனது. நேற்று வரையில், சாம்பல் நிறத்தில் சுற்றிக்கொண்டிருந்தது, இன்று பச்சை நிறத்தில். "அது சரி, அப்பப்போ கலர மாத்தறவன் தானெ நீயி", என்று இன்னொரு முறை எனக்குள் முனுமுனுத்துக்கொண்டு, ஒன்றும் நடக்காதது போல் என்னுடைய சீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில்...

"அட இன்னுமாடா உன் சீட்டுக்கு போகல, எவ்ளோ நேரம் தான்டா நடப்பே" என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழாமல் இல்லை. அதற்கு என்னங்க செய்ய முடியும்? நம் படத்தின் கதாநாயகனை முதல் ஷாட்டில் காலைக் காட்டிவிட்டு, பிறகு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து சண்டைப் போடவிட்டு, அந்த அனல் பறக்கும் சண்டையை முடித்தவுடன் ஷாட்டை அங்கு கட் செய்து, சுவிஸில ஓபன் செய்து தீபிகா படுகோனேவுடன் ஒரு பாட்டு வைக்கவா முடியும? இருக்கிற பட்ஜெட்டில் இவ்வளவுதாங்க முடியும். அட கதாநாயகன் யாருன்னு கேக்கறீங்களா? நீங்க தாங்க. ஆக இந்தக் கதையில் எங்கெல்லாம், 'நான்' அல்லது 'என்' என்று சொல்கிறேனோ, அங்கெல்லாம் உங்களை நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். சரிங்களா? இனி மேல படிங்க.

என்னோட சீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில் என்னுடைய, செல்ஃபோனில 'பச்சை நிறமே பச்சை நிறமே' பாட்டு பாடியபடி ஒரு கால். இளம்பச்சை, கரும்பச்சை, பாட்டில் க்ரீன், கிளிப்பச்சை, அவ்வளவு ஏங்க, சினேகா பச்சையைக் கூட விடாமல், எல்லா வகையான பச்சை நிறங்களிலும் பச்சைப் பச்சையாகப் பேசும் விஜயின் ஃபோன் கால். இல்ல இல்ல வெறும் மிஸ்டு கால். எல்லா விதமான பச்சை ஷேடுகளில் பேசுவதால் அவனுக்கு இந்த ரிங்டோன். அவன் மிஸ்டு கால் தந்தால் "இங்க தான்டா இருக்கேன், வெயிட் பண்ணு வரேன்" என்று அர்த்தம். திரும்பிப் பார்த்துத் தேட, அவன் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

எனக்கு ஒரு நிமிடம் பித்துப் பிடித்தது போல் இருந்தது. இது வரைக்கும், ராமராஜன் கூட, இந்த கலர் காம்பினேஷன்ல வந்ததில்ல. பச்சை சட்டை, பச்சை பேண்டு. பச்சை சட்டை ஒகே. ஆனா பச்சை பேண்டு? நான் பன்னிரெண்டாவது படிக்கும் போது, என்னோட பயாலஜி சார், ஒரு நாள் சிவப்பு நிறத்தில் பேண்ட் அணிந்த போது, "ஏன் சார், இந்த கலர்ல பேண்டு பிட்டு எங்க சார் கிடைக்குது" என்று கேட்டவன் நான். அதற்கு அவர், பதில் சொல்லாமல் சிரித்துவிட்டு சென்றார். அதன் பின்னர் பல கடைகளில் சிவப்பு நிறத்தில் பேண்டு பிட்டோ, அல்லது ரெடி மேட் பேண்டோ கிடைக்குமா என்று பல வருடங்கள் தேடியது தனிக்கதை. சரி இவன் பச்சை பேண்ட எங்கே வாங்கினான் என்று தெரிந்து கொண்டு அங்கேயேச் சென்று சிவப்பு பேண்டு கிடைக்குமா என்று பார்த்து விடலாம் என அவனிடம் கேட்டேவிட்டேன். அவன் அதற்கு பதில் சொல்லாமல் வரும் வழியில பார்த்த பெண்ணைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டான்.

சரி, இடத்திற்க்கு போகும்போது, "குட் மார்னிங்"னு சொல்லிவிட்டு அனிதா இந்த பக்கமாக போனாள். திரும்பி "குட் மார்னிங்"னு சொல்வதற்க்குள் வாய் அடைத்துப் போனேன். அவளும் பச்சை நிற சல்வாரில். எனக்குள் சிறிது பயம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது. உள்ளே நுழைந்ததும் சுவரெங்கும் பச்சை. ஒரு வேளை பாசி பிடித்திருக்குமோ? இல்லை இன்டீரியர் டெகரேஷனாக இருக்குமோ? இல்லை பச்சை நிறத்தை சுவற்றில் அடித்தால் லாபம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று அதிகாலையில் டிவியில் எவனாவது சொல்லித் தொலைத்திருப்பானோ என பயத்துடன் கூடிய கேள்விகளுடன் மேலும் நடந்தேன்.

சிறிது யோசித்ததில், 'ப்ளு டே' என்று ஒரு நாள் எங்க ஆஃபீஸ்சில் கொண்டாடியது நினைவிற்க்கு வந்தது. அன்று அனைவரும், நீல நிறத்தில் சகலமும் அணிந்து ஆஃபீஸ்சிற்க்கு வந்ததும் நினைவிற்க்கு வந்தது. ஓ ஒருவேளை இன்று 'க்ரீன் டே'வாக இருக்குமோ என்று சரவணன் இருக்குமிடத்திற்க்கு சென்றேன்.

அவனிடம், "என்னடா சரவணன், இன்னைக்கு எதாவது 'க்ரீன் டே'யா"? என்று கேட்க, அவன் பச்சை சீட்டில், பச்சை உடை அணிந்து, பச்சை ஆப்பிளை வாய் நிறைய மென்று கொண்டிருந்தான். "என்ன கொடும சரவணா இது" என்று கேட்டுவிட்டு, ஒருவேளை உண்மையாகவே 'க்ரீன் டே'வாக இருக்குமோ என்று எனது மெயில் பாக்ஸ்சில் ஒரு முறை பார்த்துவிடலாமென்று என்னுடைய சீட்டிற்க்கு வந்தேன்.

வந்ததும் அதிர்ச்சி. என்னோட சீட்டு மட்டுமில்லை, எனது கம்ப்யூடரும் பச்சை நிறத்தில். மெயில் பாக்ஸ்சும் பச்சை நிறத்தில். ஒவ்வொரு மெயிலும் பச்சை நிறத்தில். 'க்ரீன் டே' பற்றி மட்டும் ஒரு மெயிலும் இல்லை. கண் பார்வை கோளாறுகளில் நான் படித்தது மையோப்பியா மற்றும் ப்ரொடனாப்பியா. இவை இரண்டில் ஒன்று பச்சை நிறத்தை மட்டும் அதிகமாக காட்டும், மற்றொன்று சிவப்பு நிறத்தை மட்டும் அதிகமாக காட்டும். வயதாக ஆக தூரப்பார்வை தானே வரும்? இதென்னடா புதுசா என்று பயந்து கொண்டு வெளியே வர, என் கண்களில் எனது உடையும் பச்சை நிறத்தில் தெரிந்தது.

சிதறடித்துக்கொண்டு என்னுடைய இடத்திலிருந்து வெளியே வர, என் கண்களில் அனைவரும், அனைத்தும் பச்சை நிறத்தில். எனது கைகளை பார்த்ததில், அவையும் பச்சை நிறத்தில். இது வரையில் சந்தேகமென்று நினைத்திருந்த மையோப்பியா அல்லது ப்ரொடனாப்பியா இரண்டில் ஒன்று என்னைத் தாக்கியுள்ளதென்பது உருதியானது.

பயம் ஒருபுறம் இருக்க, பச்சைத் தரையில் வேகமாக ஓடி, பச்சை நிறப் பலகையில், பச்சை நிறத்தில் 'ஆண்கள்' என் எழுதியிருந்த பச்சைக் கதவைத் திறந்து பச்சைக் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்க்க, எனது முகமும் 'ஹல்க்'கைப் போல் பச்சை நிறத்தில் இருந்தது. பச்சைக் கண்ணாடி முன் முழுமையாக சகலமும் பச்சை நிறத்தில் நின்று கொண்டிருந்தேன். வேறு வழியின்றி, பச்சை முகத்தைக் கழுவ நினைத்து, பச்சைக் குழாயிலிருந்து பச்சை நிறத்தில் வந்த நீரை எனது வலது பச்சைக் கையில் நிறப்பிக்கொண்டு, எனது இடது பச்சைக் கையால் எனது பச்சைக் கண்ணாடியை கழற்ற உலகம் அழகானது.

Monday, November 03, 2008

புரியாத புதிர்- பாகம் 1

அறியாமையா என்னனு தெரியலை, எனக்கு பல விஷயங்கள் புரியவே மாட்டேங்குது. அப்படி பல விஷயங்கள் இருக்கிறதனால இந்தப் பதிப்ப, பாகம் 1 அப்படின்னு பேரு வெச்சிருக்கேன்.

இலங்கைத் தமிழர்களுக்கான சினிமாத்துறை மக்கள் உண்ணாவிரதம்.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் இப்படி பல பேர் பேசிட்டுப்போனாங்க. இது ஒரு உணர்ச்சிய வெளிப்படுத்திற போராட்டம்னு சொல்றாங்க. ஆனா எதுக்கு? இவங்க இங்க பேசறத பாத்து, இலங்கை அரசாங்கம் "ரஜினி சொல்லிட்டாரு, கமல் சொல்லிட்டாரு, மற்றும் பல நடிகர்களெல்லாம் சொல்லிட்டாங்க. அதனால போர நிறுத்திட்டு வீட்டுக்கு வாங்கடா" அப்படினு இராணுவத்திடம் சொல்லப்போறதில்ல.

இது, உண்ணாவிரதம் இருந்த சினிமாத்துறை மக்களுக்கும் நல்லாவே தெரியும். மேடை போட்டு பேசி பன்சு டயலாக் அடிக்கும் போது, ரசிகர்கள் கைத்தட்டி ஆர்ப்பாட்டம் பண்ணி சிரிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆஹா மக்களே, இந்தக் கூட்டம் எதுக்குனே மறந்துட்டீங்களே.

காவிரிப் பிரச்சனை இருக்கும் போது நெய்வேலிக்கு போய் மின்சாரத்தை நிறுத்தினாங்க. ஒகேனக்கல் பிரச்சனையில் சினிமாத்துறைல இருக்கிறவங்க உண்ணாவிரதம் இருந்தாங்க. இப்போது இலங்கைப் பிரச்சனையிலும் இராமேஸ்வரத்துல, சென்னைல மேட போட்டும், உண்ணாவிரதமும் இருந்தாங்க. ஆனா எல்லா சம்பவங்களிலும், ஒன்னுமே நடக்கலேங்க. அடுத்த நாள் செய்தியிலும், பத்திரிக்கையிலும் இவங்க, அவங்க பேசினாங்கனு படம் வந்ததே தவிர, பிரச்சனைக்கு தீர்வு வரல.

ஆக பிரச்சனைக்கு இது தீர்வு இல்லேனு முடிவாகுது. அப்போ என்ன பண்ணனும்? ஒரு வேள சேரன் சொன்ன மாதிரி, "இந்த பிரச்சனை தீரும் வரை இனி தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்", அப்படினு வாக்குறுதி எடுத்துக்கிட்டா? எடுத்த அடுத்த விநாடி இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கு. இத சேரன் இராமேஸ்வரத்துலயே தெள்ளத்தெளிவா, எல்லோருக்கும் புரிகிற மாதிரி, நெத்தில செம்மட்டையால அடிச்சு சொன்னாரு. அவருக்கு ஒரு சபாஷ். ஆனா இத டி.வில, நேர்ல, இண்டெர்னெட்ல எல்லாம் பாத்துட்டு கூட, சென்னைல நடந்த உண்ணாவிரதத்துல பன்சு டயலாகுக்கு எதுக்கு கைத்தட்டி, விசில் அடிச்சு, சிரிச்சீங்க ரசிகர் பெருமக்களே?

எனக்கு சத்தியமா புரியல. உங்களுக்கு புரிஞ்சா கமெண்டுங்க.

Thursday, October 30, 2008

டார்வின் தியரியும், விருதும்.

டார்வின் தியரி பற்றி நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம் என்று நான் சொல்கிற வேளையில், "ஆமா, அப்படி ஏதோ படிச்சியிருக்கோம், ஆனா இப்போ ஞாபகத்துல இல்ல" என்று நீங்கள் சொல்வதில் தப்பொன்றும் இல்லை. ஆறாவது படிக்கும் போது, பத்து மார்க் கேள்விக்காக தலைகீழாக படித்து மறந்தவைகளுள் இதுவும் ஒன்று.

டார்வின் தியரி - சில வரிகளில்.
பழமாகட்டும், பறவையாகட்டும், மலராகட்டும், மங்கையாகட்டும், அவை அனைத்திற்க்கும், முந்தாதையர் ஒன்று தான் என்பது தான் டார்வின் தியரி. பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குகிறது. மேலும் படிக்க இங்கே செல்லவும்.

டார்வின் தியரி சரி, டார்வின் விருது என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?. டார்வின் தியரி பரிணாம வளர்ச்சியைப் பற்றிக் கூறும்போது, டார்வின் விருது, எதற்க்காக வழங்கப்படுகிறது என்று தெரியுமா?

புதிதாக ஏதேனும் கண்டுப்பிடிப்பவர்களுக்கு அல்ல. மிக முட்டாள்த்தனமாக அல்லது விசித்திரமாக இறந்துப் போகிறவர்களுக்கு. ஆக, டார்வின் விருது பெற முதல் தகுதி - இறந்துப்போவது. இரண்டாவது, முட்டாள்த்தனமாக அல்லது யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு விசித்திரமாக இறப்பது.

இந்த விருதை பெறவேண்டும் என்று யாரும் முயற்சிப்பதில்லை என்பது நல்ல விஷயம் என்றாலும், சிலரது தற்கொலை முயற்சிகளும், இன்ன பிற விஷயங்கள் கேளிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. இவர்களுக்கு டார்வின் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் டார்வின் விருதுக்கு தகுதி வாய்ந்ததா என்று தீர்மானிப்பதற்க்காக, ஒரு தனிக்குழுவும் உள்ளது.

சில நாட்களுக்கு முன்னால், இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள நான் இணையதளத்தை நோண்டிய போது சில சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தது. இவர்களுக்கு டார்வின் விருதும் கிடைத்தது. படித்தவைகளுள் ஹாலிவுட் வகையில் யூகிக்கமுடியாத சம்பவம் இதோ.

23-மார்ச்-1994
ரொனால்டு ஓபஸ் என்பவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார் என்று மருத்துவ பரிசோதனை சொல்கிறது. ஆனால் இது தற்கொலை என்று முடிவு செய்து கேஸ் ஃபைலை மூடியது காவல் துறை. நடந்தது என்ன? இதோ...

வாழ்க்கையை வெறுத்த ஓபஸ் தற்கொலை செய்துக்கொள்ள தனது வீட்டின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். கீழே குதிக்கும் போது ஒன்பதாவது மாடியில் இருந்து வந்த துப்பாக்கிக்குண்டு ஓபஸின் தலையை பதம் பார்க்க, தலை சிதறியது. மொட்டை மாடியில் வேலை செய்பவர்கள் தவறி விழுந்தால் காப்பாற்றுவதற்க்காக எட்டாவது மாடியில் கட்டியுள்ள வலையில் ஓபஸ் விழுந்தார். ஆக, தான் நினைத்த படி தற்கொலை செய்யவில்லை.

இது கொலையாக இருக்குமோ என்ற ஐயத்துடன், காவல்துறை ஒன்பதாவது மாடியில் வசிக்கும் தம்பதியரிடம் தன் விசாரணையை தொடர்ந்தது. தம்பதியர் தமக்குள் நடந்த சண்டையில், கணவன் துப்பாக்கியால் மனைவியை சுட, அது தவறி, ஜன்னலின் வழியாக ஓபஸின் தலையை தட்டியது. ஆனால், சட்டப்படி, ஒருவன் 'அ'வை கொலை செய்யும் நோக்கத்தில் 'ஆ'வை தவறுதலாக கொலை செய்தாலும், 'ஆ'வை கொன்றது குற்றமே என்று கூறி, கணவனை கைது செய்ய காவல்துறை முனைந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் தன்னுடைய துப்பாக்கியில் தான் தோட்டாக்களை போடவில்லை என்றும், தனக்கும், தன் மனைவிக்கும், அடிக்கடி சண்டை வருமென்றும், அதனால் வெத்துத் துப்பாக்கியால் தன் மனைவியை மிரட்டுவதும் சகஜம் என்றும் கூறினார்.

இதை மேலும் விசாரித்த போது, துப்பாக்கியில் தோட்டாக்களை போட்டது தம்பதியினரின் மகனென்று தெரிய வந்தது. தாய் தன்னுடைய மகனுக்கு பணம் தருவதை நிறுத்தியதில் கோபமடைந்த மகன் தாயை கொலை செய்ய முடிவெடுத்திறுக்கிறான். தன் தந்தைக்கும், தாய்க்கும் அடிக்கடி சண்டை வருவதையும், தன் தந்தை வெத்துத் துப்பாக்கியால், தன் தாயை மிரட்டுவதும் தெரிந்துக்கொண்டு, ஆறு வாரங்களுக்கு முன்பு துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பியிருக்கிறான். ஆக இந்த மகன் தான் ஓபஸ் கொலையில் குற்றாவாளி என்று காவல்துறை முடிவெடுத்தது.

திரைக்கதையில் "ட்விஸ்டு" என்பார்களே அது இனி தான். தம்பதியினரின் மகன் தான் ஓபஸ் என்றும், தன் தாயை கொலை செய்ய பல வழிகள் கையாண்டும் வெற்றி பெறவில்லை என்ற வருத்ததில் தற்கொலைக்கு முயற்ச்சித்த போது, தன்னால் தோட்டாக்களை நிறப்பப்பட்ட துப்பாக்கியால் இறந்ததால் இது தற்கொலை என்று கூறி கேஸை க்ளோஸ் செய்தது காவல்துறை.

ஓபஸ்சுக்கு டார்வின் விருது வழங்கியது சரியான முடிவு தானே?

Friday, October 24, 2008

லண்டனில் தீபாவளி

வணக்கம் மக்களே...
இது என்னோட முதல் தமிழ் பதிப்பு. படிச்சிட்டு நல்லா இருந்தா நல்ல இருக்குனு சொல்லுங்க, நல்லா இல்லேனாலும் நல்லா இருக்குனே சொல்லுங்க. இல்ல வேனா உண்மையே சொல்லுங்க பரவால. :)

முதல் தமிழ் பதிப்பாச்சே, என்னத்த எழுதறதுனே தெரில, சரி நமக்கு தெரிஞ்ச தீபாவளிய பத்தி எழுதிறலாம்னு ஒரு எண்ணம். தவிர லண்டன்ல இருக்கேனா, அதனால தான் இந்த டாபிக். ஆனா தீபாவளி பத்தி தானா முழு பதிப்பும்? இல்ல, இன்னும் கொஞ்ச கூடவே இருக்கு. முழுசா படிங்க.

நரகாசுரன கொன்னு போட்டாங்கனு சொல்லித்தான தீபாவளிய ஆரம்பச்சானுங்க. ஆனா எனக்கு எங்க வீட்ல வேற மாதிரி தான் சொல்லித்தந்தாங்க. இட்லியும் கோழி கொழம்பும் சாப்டற நாள் தான் தீபாவளினு சொல்லித்தந்தாங்க. அட மொக்கை எல்லாம் ஒன்னியும் இல்லே. உண்மையத்தான் சொல்றே. இதுல விசேஷம் என்னனா, எங்களுக்கு செவ்வாக்கிழமையும், சனிக்கிழமையும், நான்-வெஜ்-ன, ச்சீ ச்சீ அபச்சாரம்னு சொல்ற பழக்கமும் நல்லாவே இருக்கு. அதனால செவ்வாக்கிழம அல்லது சனிக்கிழம வர்ர தீபாவளிய வேற நாள்-ல மாத்தி வெக்கற பழக்கமும் நல்லாவே இருக்கு. இந்த கலாச்சாரத்தோட ஒட்டி நானும் வளந்துட்டேன்.

என்னோட தீபாவளியப்பத்தி சொல்லனும்னா குறைந்தது பதிமூன்றாம் நூற்றாண்டுக்காவது, க்க்க்ம், தசவதாரம் பாத்த எஃபெக்ட்டு. மன்னிச்சிக்கோங்க. என்னோட பதிமூனாம் வயசுக்காவது போகனும். அப்போ பட்டாசு மேல மோகம் போயி கொஞ்சம் எங்க "கலாச்சாரத்தோட"(?) மிக்ஸ் ஆன காலம். அதுக்கு முன்னாடி பட்டாசு எப்டினு கேக்காதீங்க. கிட்டத்தட்ட எல்லா வெடியயும், கைல புடிச்சி கொலுத்தி போட்டிருக்கேன் அப்பாக்கு தெரியாம. சில சமயம் கைலயே வெடிக்கவும் செஞ்சே. ஏன்டா கைலயே வெச்சிக்கிட்டே? தூக்கி போட வேண்டியது தானேங்கறீங்களா? எல்லாம், யோசிச்சா பன்னே? பல பேறு பண்ணாங்க, நானும் பண்ணே. அது சமுதாய பிரச்சன. இங்குட்டு அலச வேண்டாம் :).

சரி டாபிக்குக்கு வருவோம். சின்ன வயசுல இருந்தே எங்களோட "கலாச்சாரத்த" விட்டுக்கொடுக்காம இருந்ததுனால, எனக்கும் என்னோட அக்காவுக்கும் இது கொஞ்சம் போட்டியாவே மாறிடிச்சு. போட்டி விதிகள் ரொம்ப சிம்பிள். ஒரு இட்லிக்கு 10 ரன். போட்டி முடியும் போது யாரு நெறய ரன் எடுத்திருக்காங்களோ அவங்க தான் வின்னர். பரிசு எல்லாம் ஒன்னியும் இல்ல, வேணும்னா எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி சாப்டலாம், ஆனா வயித்துல இடம் இருக்காது. அட எனக்கு சொல்லல. எங்க அக்காக்கு தான் இடம் இருக்காது. எனக்கு அந்த பிரச்சனையும் வந்ததில்ல. நான் "இந்த" போட்டில தோத்து போனதா சரித்திரமும் இருந்ததில்ல.

வயசு எவ்வளவோ அத்தன இட்லிகள உள்ள தள்ளியே ஆகனும் அப்டிங்கரது என்னோட எழுதப்படாத பாலிசியா வெச்சிருந்தேன். அதாவது நான் சொல்றது குறைந்த பட்சம், அப்பர் லிமிட் நான் வெச்சிக்கிட்டதே இல்ல. என்னோட மேக்சிமம் ஸ்கோர் 260 ரன்ஸ். அதாவது 26 இட்லி, சத்தியமா தான். இந்த இமாலய சாதனய(?) நான் நிகழ்த்தும் போது என்னோட வயசு 15. சச்சின் கொஞ்சம் கவனிக்கவும். 260 ரன் அடிச்சும் நான் நாட்-அவுட் தான். ஓவர் தீந்திடிச்சு. அதான் இட்லி அவ்ளோ தான்னு அம்மா சொல்லிட்டாங்க. பாவம் அவங்க, எவ்ளோ தான் பண்ணுவாங்க?

நான் +2 படிக்கும் போது என் நண்பன் ஒருத்தன தீபாவளிக்கு எங்க வீட்டுக்குக் கூப்டலாம்னு இருந்தேன். அவன் முஸ்லிம்ங்கறதனால அவங்க தீபாவளி கொண்டாடல. பட்டாசு வெடிக்கலையானு கேக்றீங்களா? அட பட்டாசு எல்லாம் வெடிச்சானுங்க. நான் சொல்றது எங்களோட சம்பிரதாயப்படி கொண்டாடலனு. அதனால எங்க வீட்டுக்குக் கூப்டேன். நான் பல பேரு மூனு இட்லி நாலு இட்லியெல்லாம் சாப்ட்டு ஏப்பம் விடுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். இவன் ஒரு வேல அந்த சாதிப் பயலா இருந்தா என்ன பண்றது? அவன் நாலு சாப்டு, நான் இறுபத்தி அஞ்சி சாப்டா நல்லாவா இருக்கும்னு ஒரே பீலிங்கு. அட நான் ஃபீல் பண்ணல. எல்லம் எங்க வீட்ல தான். கண்ணு பட்டிரும்னு பயம். சரி என்ன பண்ணலாம்னு அவன கூப்டரதுக்கு முன்னாடி 10 சாப்ட்டு, அவன கூப்டேன். நெனச்ச மாதிரி அவன் நாலு தாங்க சாப்டான். நான் என்னோட பாலிசி(?) அடிவாங்கக் கூடாதுனு 9 சாப்ட்டு, 190 ரன்ஸ்சோட முடிச்சிகிட்டேன். அப்போ என்னோட வயசு 17.

சில சமயம் நான் தான் இப்படியோனு நெனச்சதுண்டு. அப்பொ தான் ஒரு தடவ, எங்க கஸின் பிரதர்ஸ மீட் பண்ணெ. அட அவனுங்களும் என்ன மாதிரி தான் இருந்தானுங்க. சபாஷ் சரியான போட்டினு பல முறை, மோதி இருக்கோம். ம்ம்ம் வீட்ல இல்ல. வீட்ல ஆளுக்கு 25னு நாலு பேறு சாப்டா 100 இட்லிக்கு தகப்பன்ஸ் எல்லாம் எக்ஸ்ட்ரா டைம் வர்க் பண்ணவேண்டி இருக்கும். அதனால அதுக்கு தனியா நாங்க தேதி ஃபிக்ஸ் பண்ணுவோம். எங்க குடும்பங்கள்ல எல்லாம் கல்யாணம் முடிஞ்சி "மறு வீடு" அப்டீனு ஒரு ஃபங்க்ஷன் வெப்பானுங்க. அதாவது பொண்ண பய்யன் வீடுக்கு அனுப்ர ஃபங்க்ஷன். அப்போ மெனுல நான்-வெஜ் தான் அதிகமா இருக்கும். எப்பொ எல்லாம் இது நடக்குதோ, அப்பொ எல்லாம், match கண்டிப்பா நடக்கும். அப்பொ கூட சரித்திரத்த மாத்த முடியலேனா பாத்துக்கோங்க என்னோட திறமய.

நான் காலேஜ் முடிச்சிட்டு ஒரு நல்ல வேல கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு வருஷம் ஏதோ ஒரு சின்ன கம்பேனில தான் வேலயும் பாத்தேன். அப்பொ தான் ஒரு ஞாய்த்துக்கிழம இப்பொ நான் வேல பாக்ற கம்பேனில இருந்து இன்டர்வியூக்கு கூப்டானுங்க. வேல கெடச்சே ஆவனும்னு எங்க வீட்ல எல்லோரும் மனசுக்குள்ளேயே பிரார்த்தன பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நானும் தான். காலைல 8 மணிக்கு இன்டர்வியூக்கு மீனாட்ச்சி காலேஜ்க்கு போகணும். அந்த காலேஜ் இருக்றது கோடம்பாக்கம், நான் இருக்றது அம்பத்தூர். வண்டி வேற இல்ல. பஸ்ல தான் போகனும். ஓரே டென்ஷன். அட டென்ஷன் எனக்கு இல்ல, எங்க வீட்ல இருக்றவங்களுக்கு தான். அன்னைக்கு என்னோட ஸ்கோர் 145. ஒரு பாதி இட்லி எக்ஸ்ட்ரவா சாப்டேன். தட்டுல கொஞ்சம் கொழம்பு இருந்ததுனால அந்த 5 ரன்.

அப்றோம், என்னோட வயசு பெருகப்பெருக, ஸ்ட்ரைக் ரேட் கொறஞ்சுது. இப்பொ புறியுது சச்சின்க்கு என்ன ஆச்சுனு. ஆனாலும் 100 ரன் குறையாம பல வருஷங்களா அடிச்சிக்கிட்டு தான் இருந்தேன்.

இது வரைக்கும், ஃபளாஷ் பேக். இனி வருவது இன்னய பத்தி.

இபோ சிச்சுவேஷன் என்னானு பாத்தா...
1) செவ்வாக் கிழமையா தீபாவளி வருது. [தீபாவளி வட இந்தியால செவ்வாக்கிழமயாவும், தென் இந்தியால திங்கக்கிழமயாவும் வருது. சுவாரஸ்யமும், ஃப்ளோவையும் மனசில வெச்சிக்கிட்டு செவ்வாக்கிழமய எடுத்துக்கிட்டேன்]
2) நான் இப்போ தனியா லண்டன்ல இருக்கேன்.
3) நான் வேற "அதே" கலாச்சாரத்தோட வளந்து தொலச்சிடேன்

இப்படி இருக்கு சிச்சுவேஷன். ஆன அதுக்காக பழக்கத்த மாத்திக்க முடியுமா? உம்மாச்சி என்ன லீவ் போட்டா போயிருக்காங்க? கண்ண குத்தி பள்ளாங்குளி ஆடிட மாட்டாங்க? சம்பிரதாயப்படி, இட்லியும் கோழி கொழம்பயும் உள்ள தள்ளியே ஆகனும்.

அதனால செவ்வாக்கிழமையா வர்ர தீபாவளிய ஞாய்த்துக்கிழமைக்கு மாத்திட்டேன். அடுத்ததா, frozen இட்லியும், pack பண்ணின கோழியயும் வாங்கி, அத சமச்சி ஓரளவுக்கு தீபாவளி சீன்ன க்ரீயேட் பண்ணிட்டேன். இப்பொ எனக்கு முன்னாடி இட்லியும் இருக்கு, கோழி கொழம்பும் இருக்கு. ஆனா எங்க வீட்ல பண்ற மாதிரி ஆவி பறக்ற மல்லிப்பூ இட்லியும் இல்ல, கொழம்ப பாத்த உடனெ வாயில எச்சிலும் ஊரல. இது வரைக்கும் எதுக்கும் கவல படாத நானு இப்போ கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. என்னோட இட்லியயும், கொழம்பயும் பாத்து இல்ல. உலகத்துல பல பேறுக்கு ஒரு வேள சாப்ட கூட சாப்பாடு இல்லேனு நினைக்கும் போது. 

இறைவனை வேண்டி எனக்கு முன்னாடி இருக்றத சந்தோஷமா சாப்ட இப்போ நான் அப்பீட்டு ஆயிக்கறேன்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பி.கு.1. நாம மெக்.டி, KFC போன்ற கடைகளுக்கு போய், ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் கேட்டா கூட நமக்கு pack பண்ணும் போது, உள்ள போறதுல பாதி வெளில விழுது. இந்த கீழ விழறது பல பேறுக்கு முழு உணவாகவும் இருக்கலாம்
பி.கு.2. packed ஃபுட் ங்கர பேருல ஆடுல இருந்து, தக்காளி வரைக்கும், எக்ஸ்பைரி தேதி ஒன்னு போட்டு இருக்காங்க, அடுத்த நாள் அது வீணா போகுது. வேணுங்கற போது ஆட்டையும், கோழியயும் வெட்டலாமெ. நாம இப்படிப்பட்ட packed ஐடங்க்ள தவிர்க்கலாமே
பி.கு.3. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி சொல்லிட்டு போயிருக்காரு. நாம ஜகத்த அழிக்க வேணா, ஆனா, எதாச்சும் செய்யனுங்க. கண்டிப்பா எதாச்சும் செஞ்சே ஆகனுங்க.
பி.கு.4. இதெல்லாம் தப்பு, மெக்.டி யும், KFCயும் பன்றது கரெக்ட்டு தான்னு நீங்க சொன்னா, ஹி ஹி, அதுக்கு வருத்த படபோறது, நான் இல்ல, நாம.
பி.கு.5. இவ்ளோ பேசற, நீ என்னத்தடா பன்னியிருக்கேனு கேக்றீங்களா? நானும் ஒன்னும் செய்யல, அதத்தான் பி.கு.3 ல சொல்லியிருக்கேன்.
பி.கு.6. எதுவுமே பண்ண முடியலேன வாங்கற சாப்பாட்ட வேஸ்டு பண்ணாம சாப்டாலே நல்லது.
பி.கு.7. நந்து, சர்வேசன், ப்ரியா, ராமலக்ஷ்மி. இவங்களோட தமிழ் பதிப்புகள பாத்து தான் நானும் தமிழ்-ல எழுதனும்னு தோனிச்சு. இந்த முதல் பதிப்பு, அவங்களுக்கு. இத நான் அவங்கள கேட்டு போடல, தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க
பி.கு.8. படிச்சிடீங்களா? இப்போ கமெண்ட்டுங்க.