Monday, July 20, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 6

...இதுவரை

யோசித்து பார்த்து முடிவெடுக்கும் சமயம் இல்லை இது. ஐம்பது பேரிடமிருந்து தப்பிக்க வேண்டிய சமயம். எனது பின்னால் இருந்த கூட்டம் என்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். நான் உடனே எனது வலது பக்கம் திரும்பி ஓட, தாமுவாகிய அவன் என்னைப் பிடிக்க முயன்று அவனிடமிருந்து தப்பித்து நான் ஓட ஆரம்பித்தேன். அங்கிருந்த ஏதாவது ஒரு அறையில் நுழைந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றால் அங்கிருக்கும் அறைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையும் தட்டிப் பார்த்து விட்டு திறக்காமலிருக்க, தாமுவும், அவளும், என்னை துறத்த, அவர்களின் பின் ஐம்பது பேர் வந்துக் கொண்டிருந்தனர்.

அதோ தெரிகிறது ஒரு அறை, இல்லை இல்லை அது அறை இல்லை. ஏதோ ஒரு கோ-டவுன் போல் காட்சி அளித்தது. அதில் ஏதோ மூட்டைகள் மட்டுமே திணிக்கும் அளவிற்குத் தான் கதவு இருந்தது. ஆனால் அது திறந்து தான் இருக்கிறது. என்னால் அதில் புகுந்து போய் விட முடியும். எனது வேகத்தை முடிந்த வரையில் கூட்டினேன். பின்னால் வருபவர்களின் வேகமும் இப்போது கூடியிருக்கிறது. அந்த அறை இதோ இருபது அடி தூரம் தான். பின்னால் என்னை துரத்துபவர்களுக்கும் எனக்கும் அதே இருபது அடி தூரம் தான். வேகத்தைக் கூட்டினால் தவிர என்னால் அங்கு நின்று குனிந்து அந்த பொந்துக்குள் சென்று விட முடியாது. இதோ வந்துவிட்டேன். இன்னொரு ஐந்து அடி தான். எனது வேகத்தை குறைத்து கீழே குனியும் போது தேவதை என் முன் வந்து நின்றாள். கண் வீங்கி, காது தொங்குகிறது தேவதைக்கும். அவளது சிங்கப் பற்கள் வளர்ந்து இருக்கிறது. நான் நின்றுவிட்டேன்.

பின்னால் அந்த கூட்டத்துடன் படை எடுத்து அவளும், அவனும் வந்து சேந்தனர். தேவதை எனது வயிற்றைப் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஐயோ, முடிந்து விட்டதா? இன்னும் ஒரு சில வினாடிகளில் நானும் இவர்களில் ஒருவனாவேன். பிரிதொரு சமயம் நானும் இவர்களோடு சேர்ந்து இங்கு தங்க வருபவர்களை துரத்தப்போகிறேன். அதை நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அந்த சிறிய கதவின் துவாரம் வழியாக இரு கண்கள் எனக்குத் தெரிந்தன. எனக்குத் தெரிந்த கண்கள் மற்றவர்களும் உணர்ந்தனர். தேவதை வலதோரமாகப் பறந்து வவ்வாலைப் போல் ஒரு மரக் கிளையில் தொங்க ஆரம்பித்தாள். அவளும், அவனும் மேலும் என் பின் இருந்த கூட்டம் அனைவரும் பறந்து அருகிலிருந்த மரக்கிளைகளில் தொங்கினர். இந்த மரக்கிளைகள் எல்லாம் நான் நேற்று வரை பார்த்ததில்லை. இவை இப்போது புதிதாக முளைத்தது போல் இருந்தது. அந்தக் கண்கள் இப்போது என்னை பார்த்துக் கொண்டிருந்தன.

இவை அனைத்தும் என்ன? நான் இப்போது என்ன செய்ய வேண்டும். இந்தக் கண்களைக் கண்டு ஓட வேண்டுமா? இல்லை இந்தக் கண்களிடம் இருந்தால் தான் தேவதையிடமிருந்து தப்பிக்க முடியுமா? இந்தக் கண்களைக் கண்டு தான் அனைவரும் ஓடி விட்டனர். ஆக இந்த கண்களிடம் இருந்தால் நான் தேவதையிடமிருந்து தப்பிக்க முடியும், ஆனால் இந்தக் கண்கள் என்னை ஒன்றும் செய்யாதா? இத்தனைக் கேள்விகள், ஒரு கேள்விக்கும் என்னிடத்தில் பதில் இல்லை. இனி சுயமாக யோசித்து எந்த முடிவிற்கும் வரும் அளவிற்கு மனதில் திடமும் இல்லை, நேரமும் இல்லை. நான் அங்கிருந்து ஓட ஆரம்பித்ததும், தேவதை தன் படையுடன் கீழே இறங்கினாள். நான் மீண்டும் அந்தக் கண்களிருக்கும் கதவருகே சென்றேன். மீண்டும் தேவதைக் கூட்டம் பறந்துச் சென்றது. அதே சமயம் அந்த அறையிலிருந்து ஒரு கை வெளியே வந்து என்னை உள்ளிழுத்துச் சென்றது.

அறையின் கதவு அடைக்கப்பட்டது. உள்ளே இருட்டைத் தவிர வேறொன்றும் கண்களுக்குத் தெரியவில்லை. மௌனத்தைத் தவிர வேறொன்றும் காதுகளுக்குக் கேட்கவில்லை. அறையின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதினால் என்னால் நிற்கவும் முடியவில்லை. நான் தவழ்ந்துக் கொண்டே அந்தக் கண்களை தொடர்ந்துச் சென்றேன். இது வேறு உலகம் போல் உணர்ந்தேன். இரண்டு நிமிடங்கள் தவழ்ந்திருப்பேன். அதோ அங்கே வெளிச்சம் தெரிகிறது. அறையின் உயரம் இப்போது அதிகரித்தது. இப்போது என்னால் நிற்கவும் முடிகிறது. வெளிச்சம் இன்னும் சற்றுக் கூட, அந்தக் கண்களைச் சுற்றி இருக்கும் மனிதனைப் பார்த்தேன். அவன் அதே மூன்றடி க்ளீனர் தான்.

'நீயா?... நீங்களா?', என்றேன்.
'கவலைப் படவேண்டாம், இப்பொழுது நீ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாய்', என்றான்.
'இது எல்லாம் என்னது? நான் எங்க இருக்கேன்? நீங்க என்ன பண்றீங்க இங்க?'
'இது கிட்டத்தட்ட வேறு உலகம். இதிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதில்லை'
நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். க்ளீனர் நடந்தார். நானும் அவரைத் தொடர்ந்தேன். அங்கிருந்து அடுத்த அறைக்குச் சென்றோம். அங்கு ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள், கணக்கெடுக்க முடியாத அளவிற்கு மனித உடல்கள் இருந்தன. அங்கிருந்த அனைவருக்கும் என்னைப் போலவே முகத்தில் காயங்கள். இறந்த உடல்களின் அழுகிய நிலை வெவ்வேறாக இருந்தன. சில உடல்களில் வெறும் எலும்புக் கூண்டுகள் மட்டுமே இருந்தன.

'இங்க இருந்து எப்படி தப்பிக்கிறது. இவங்க எல்லாம் யாரு?'
'இவர்கள் அனைவரும் உன்னைப் போல் நான் காப்பாற்றியவர்கள் தான். மொத்தம் பதின்முன்று பேர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தப்பிக்க முடியும். இப்போது உன்னுடன் சேர்த்து பன்னிரண்டு பேர், என்னையும் சேர்த்து பதின்மூன்று பேர்', என்றார்.
'இங்க இத்தனை பேரு இறந்துகிடக்கறாங்க, இவங்க உயிரோடு இருக்கும் போது முயற்சி பண்ணலியா?'
'ஓரிரு முறை தப்பிக்க முயற்சி செய்யும் போது இவர்களில் சிலர் இறந்து விட்டனர்', என்றார்.
'அப்போ மத்த உடல்கள்?'
'அவர்கள் வெளியே போக முயற்சிக்கு என்னுடன் ஒத்துழைப்பு தராததால் நான் கொன்றுவிட்டேன்', என்றார்.
நான் இதற்கு பயப்படவில்லை. இப்போது எனது நம்பிக்கை அளவுகோளின் முள் மேலே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
'எப்போ தப்பிக்கலாம்?', என்றேன்.

இனி தாக்குதல் வேட்டை தொடரும்...

5 comments:

Mrs.Menagasathia said...

superr thriller story!!

சந்தி(ப்)பிழை said...

என்னால கதையின் போக்கை யூகிக்கவே முடியல மச்சி. கன்னித்தீவு மாதிரி நிறைய எழுத திட்டமோ ? :-)

“மௌனத்தைத் தவிர வேறொன்றும்ல் காதுகளுக்குக் கேட்கவில்லை.” - நச். ஒரு extra ல் தேவையில்லை.

”அதில் ஏதோ மூட்டைகள் மட்டுமே தினிக்கும் அளவிற்குத்” - திணிக்கும் ?

”மொத்தம் பதின்முன்று பேர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தப்பிக்க முடியும்” - மறுபடியும் 13? ஆக 13 வைச்சு தான் முடிக்கப் போறியோ ?

~சங்கர்

sreeja said...

நன்றாக உள்ளது.

Truth said...

நன்றி Mrs.Menagasathia, சந்தி(ப்)பிழை, ஸ்ரீஜா. அடுத்த பாகம் போட்டாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க.

@சங்கர்,
பிழைகள் மத்திட்டேன்.

புன்னகை said...

//உள்ளே இருட்டைத் தவிர வேறொன்றும் கண்களுக்குத் தெரியவில்லை. மௌனத்தைத் தவிர வேறொன்றும் காதுகளுக்குக் கேட்கவில்லை.//
வார்த்தைகளின் பிரயோகம் நிகழ்வுகளைக் கண் முன்னே நிறுத்தத் தவறவில்லை. அற்புதமான முறையில் கதை சொல்ல முயன்றிருக்கிறீர்கள்.

//இப்போது உன்னுடன் சேர்த்து பன்னிரண்டு பேர், என்னையும் சேர்த்து பதின்மூன்று பேர்', என்றார்.//
இதிலும் பதின்மூன்று லாஜிக் தானா?