Friday, September 25, 2009

£0.99 கடைகள்

சென்னையில் 'எது எடுத்தாலும் இரண்டு ரூபாய்' (கல்லாவைத் தவிர்த்து) கடைகளைப் பார்த்திராதவர்கள் சென்னை மார்க்கெட்டுகளில் நுழையாதவர்களாகத் தான் இருக்க முடியும். தக்காளி முதல் ஊட்டி ஆப்பிள் வரை அதன் விலைக்கேற்ப அளவோடு ஒரு கூடையில் போட்டு கூடை இரண்டு ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தனர். இப்போது அந்த இரண்டு ரூபாய் ஸ்ட்ராடஜி இருக்கிறதா என்று தெரியவில்லை. இரண்டு ரூபாய் கடைகளில் கிடைக்கும் பொருட்களின் தரமும் குறைந்ததில்லை. விலை உயர்ந்தவை பத்து நாட்கள் தரமாக இருக்குமெனில் இரண்டு ரூபாய்க் கடைகளில் கிடைப்பவை எட்டு நாட்கள் தரமாகவே இருக்கும். சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் கையில் ஐந்து ரூபாய் இருந்தாலும் சரி, ஐநூறு ரூபாய் இருந்தாலும் சரி, வேண்டியதை வாங்க முடியும்.

இதே போல் இந்த ஊரிலும் எது எடுத்தாலும் 99 பென்ஸ் என்று விற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடையின் பெயரே 99p தான். மற்ற கடைகளில் விலை £4 என்றாலும் இங்கு வெறும் 99p தான். ப்ராண்டு சாக்லேட்டுகளும் இங்கு 99p தான். வேறு கடைகளில் டாப்லெரான் சாக்லேட் சுமார் இரண்டு பவுண்டாக இருந்தாலும் இங்கு வெறும் 99p. நான் வேறொரு கடையில் வாங்கிய ஷேம்பூவின் விலை ஐந்தரை பவுண்டு. அதையே சில நாட்கள் முன்பு அங்கு பார்க்க நேர்ந்தது. விலை தான் தெரியுமே 99p தான். சில நாட்களுக்கு முன்பு கேமராவைக் கூட வெறும் 99p தான் என்று விற்றுக் கொண்டிருந்தனர். அட நிஜ கேமரா தாங்க. ஆனால் யூஸ் அண்ட் த்ரோ. ஒரு ரோல் முழுக்க எடுத்து விட்டு தூக்கி எறியவேண்டுமாம்.

புதிதாக ஒரு வீடு அமைக்க வேண்டுமென்றால் இங்கு சென்றாலே போதும். அனைத்தும் வாங்கி விடலாம். அதற்காக டி.வி, வாஷிங் மிஷின், கப்பல், எலிகாப்டர் எல்லாம் கிடைக்காது. வீட்டிற்கு வெளியே போட வேண்டிய டோர் மேட்டில் ஆரம்பித்து, சமையலறையில் தேவைப் படும் தட்டு, கப், கத்திகள், நான்-ஸ்டிக் தவா, கின்னம், துணியைத் துவைக்க வாஷிங் பௌடர், சோப்பு, சீப்பு, கண்ணாடிகள், விளக்குகள், வீட்டை அலங்கரிக்க தேவைப்படும் அழகுப் பொருட்கள், ஷேவிங் ரேசர், ஷேவிங் க்ரீம், ஆஃப்டர் ஷேவ் லோஷன், வாசனைத் திரவங்கள், பேட்டரிகள் (சோனி உட்பட), கிட்சன் டிஷ்யூ, டாய்லெட் டிஷ்யூ போன்ற இன்னபிற வஸ்துக்கள் அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் 99p கடைகள் தான். இவற்றின் தரம் உலகத்தரம்.

சென்ற மாதம் அருண் பாரிஸ் சுற்றிப் பார்க்கச் செல்வதற்கு முன் அவனது கேமராவிற்கு சில பேட்டரிகளை வாங்க வேண்டியிருந்தது. அவனது கேமராவை இயக்க மொத்தம் நான்கு பேட்டரிகள் தேவை. அவனிடம் ஏற்கனவே நான்கு ரீ-சார்ஜபிள் பேட்டரிகள் கைவசம் இருந்தன. அவை ஒரு முறை ரீ-சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் வரை இயங்கும் என்றான். எனவே ஒரு முறை ரீ-சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட ஒரு நாள் மட்டுமே போராட முடியும். நான்கு நாட்கள் என்பதால் அவனுக்கு இன்னும் 12 பேட்டரிகள் தேவைப்பட்டது. மற்ற கடைகளில் வெறும் இரண்டு பேட்டரிகள் சுமார் ஐந்து பவுண்டாக இருக்கையில், அருண் 99p கடைக்குச் சென்றான். அங்கு 12 பேட்டரிகள் வெறும் 99p தான்.

வீட்டிற்கு வந்து ஒருமுறை அனைத்து பேட்டரிகளும் சோதனை செய்து விடலாம் என்று முடிவு செய்து நான்கு பேட்டரிகளைக் கேமராவிற்குள் திணித்தான். என்னை சிரிக்கும் படி சொல்லி, கேமராவைக் கிளிக்கினான். ஒன்றும் நடக்கவில்லை. கேமராவின் ஸ்க்ரீன் 'Change the battery pack' என்றது. பேட்டரியில் சுத்தமாக சார்ஜ் இல்லாத பட்சத்தில் கேமராவை ஆன் கூட செய்ய முடியாது. ஆனால் பேட்டரிகளை மாற்ற வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அந்த பேட்டரிகளில் விசயம் இருந்திருக்கிறது. உலகத்தரம்

பிறிதொரு நாளில் நான் எனது லேப் டாப்பில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த வேளையில் அருண் எனது முகத்தில் தண்ணீரை ஸ்ப்ரே செய்தான்.
'பச்ச தண்ணிய குடிச்சுட்டு பால் பாயாசம் குடிச்ச எபெக்ட் எதுக்கு டா?', என்றேன்
'என்ன தல சொல்றே?', என்றான்
'பின்ன தண்ணிய கொண்டு போய் எதுக்கு பாட்டில்ல ஊத்தி ஸ்ப்ரே பண்றே?'
'தல இது சென்ட், தல. வாசனை வரலே?'
'இல்லையே, எங்க மறுபடியும் ஸ்ப்ரே பண்ணு', என்றேன்.
இம்முறை நேராக மூக்கு மீதே அடித்து, 'வரலே?', என்று கேட்டான்.
'ம்ஹூம்ம், எங்க வாங்கினே?'
'இதோ நம்ம 99p கடையில தான்', என்றான்

சில நாட்களுக்கு முன் எனது ஆஃப்டர் ஷேவ் லோஷன் தீர்ந்து போன வேளையில் ஷேவ் செய்த பின்னர் கண்டிப்பாகத் தேவைப்பட்ட நிலையில், குளியலறையில் இருந்த ஒரு லோஷனைப் பார்த்தேன்.
'அருண், இந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் உன்னது தானே, நான் இன்னைக்குக் கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிறேன்', என்றேன்.
'யூஸ் பண்ணிக்கோ தல, ஆனா அது 99p கடையில வாங்கினது என்றான்.
நான் குழாயைத் திறந்தேன்.

நான் இது வரை 99p கடைகளில் பார்த்ததில் நிறைய பொருட்கள் 'Made in China' தான்.
இங்கு Accessorize என்றொரு கடை உண்டு. அங்கு சுமார் 60% சீனாவின் இறக்குமது, மீதமுள்ள 40% இந்தியாவிலிருந்து. இதில் 40%மான இந்தியாவின் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் தரத்தில் சீராகவே இருந்திருக்கிறது.

மெசேஜ் ரொம்ப சிம்பிள் தாங்க. உங்களுக்கு ஏற்கனவே புரிந்திருக்கும். சைனாவில் உச்சக்கட்ட ரீ-யூஸ் ஏற்கனவே பல முறை மெயில் பார்வார்டில் வந்திருக்கும். படிக்காதவர்களுக்கு இதோ இங்கே

Wednesday, September 16, 2009

என்ன பண்ணனும்னே தோனிருக்காது...

'என்ன தம்பி ஒரு மாசம் இருக்குமா?', என்றேன்
'என்னது தல', என்றான் அருண்.
'இன்டர்நெட் கட் ஆனத பத்தி சொல்றேன்'
'அது ஆவுது ஒரு ஒன்ற மாசம், ஆனா பாத்தியா தல எனக்கு எந்த பிரச்சனையுமே தெரியல'
'ம்ம்'
'நாளைக்கே டி.வி கனெக்ஷன் கட் ஆகி, போன் கட் ஆகிப் போனாலும் பழகிடும், என்ன சொல்றீங்க'
'அது சரி', என்று நான் ஜகா வாங்கிக் கொண்டேன்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அதாவது இன்டர்நெட் என்ற ஒரு வஸ்து எங்களிடம் இருந்த வேளை, அடுத்த வீட்டில் வெடிகுண்டே வெடித்தாலும் யூ-டியூபில் ஆயிரம் முறை பார்த்த லொள்ளு சபா மீண்டும் பார்த்துக் கொண்டிருந்த சமயம், வீட்டில் காலிங் பெல் அடித்தாலும் ஏர்டெல் சூப்பர் சிங்கரை டெக்-சதீஷில் அஜிஷ் பாடியதை எட்டாவது முறையாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நாட்கள். அந்த நாட்களில் நாங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவர்களுடைய லேப்டாப்புகளை திறந்து சேட்டுகளும், ஆர்குட்டுகளும், டெக் சதீஷில் புதிய படங்கள், யூ-டியூபில் விவேக் காமெடிகளும் பார்த்துக் கொண்டு வயிற்று பகுதியை மஸ்குலராக மாற்றி அமைத்துக் கொண்டிருந்தோம்.

சமைக்கலாம் என்று தோன்றுவதே எட்டரை மணிக்குத் தான். சமைக்கத் துவங்குவது ஒன்பது ஒன்பதரை மணிக்கு. சுமார் இரவு 11 மணிக்கு தான் நாங்கள் உண்பது. அதன் பின்னர் அனைத்தும் சுத்தம் செய்துவிட்டு தூங்கலாம் என நினைக்கும் போது அடுத்த நாள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். சரி 12:30 மணிக்காவது தூங்கலாம் என்றால், அப்போது தான் அருண், 'தில் படம் பாக்கலாம் தல', என்பான். அதை டெக் சதீஷில் தேடி பின்னர் மெகா வீடியோவில் பிடிப்பதற்குள் மணி ஒன்றாகிவிடும். மெகா வீடியோவில் 72 நிமிடத்திற்குப் பின்னர் 52 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இப்படியாக இரண்டரை மணி படத்தை நான்கு மணி நேரம் பார்த்து ஐந்து மணிக்குத் தூங்குவது அருணின் வழக்கமாக இருந்து வந்தது.

ஒரு வியாழக்கிழமை இங்கு ஒரு சில ரயில்கள் ஓடாததால், இது தான் சமயம் என்று நான் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலக வேலை தாங்க, இன்டர்நெட் வாயிலாக. அப்போது தான் சில பல காரணங்களால் இன்டர்நெட் டாடா சொல்லிவிட்டு சென்றது. அன்றிரவு எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏழு மணிக்கு சமைக்க ஆரம்பித்து எட்டு எட்டரைக்கெல்லாம் எல்லா வேலைகளும் முடிவிற்கு வந்தது. எங்களுக்குக் கையும் ஆடவில்லை, காலும் ஓடவில்லை. அனைத்தும் புதிதாகவே இருந்தது.

அப்போது அருண் ஆரம்பித்தான். 'தல இன்னைக்கு நாம சீக்கிரம் தூங்கிடுவோம் பாரேன். இருபது வருஷத்துக்கு முன்னாடி டி.வி கூட இருக்காதுல்ல நிறைய வீட்டுல', என்று சொல்லிவிட்டு ஒரு சில விநாடிகள் யோசித்து மீண்டும் ஆரம்பித்தான், 'என்ன பண்ணனும்னே தோனிருக்காது, அதனால தான் தல, அப்போ ஜனத் தொகை அதிகமா இருந்திருக்கு', என்றான்.

Wednesday, September 02, 2009

இது ஒரு உண்மைக் கதை

உண்மையில் இது ஒரு உண்மைக் கதை அல்ல. ஆனால் தலைப்பில் 'இது ஒரு உண்மைக் கதை அல்ல' என்று சொல்லியிருந்தால் ஒரு வேளை இது ஒரு உண்மைக் கதை தானோ என்ற எண்ணம் உங்கள் மனதில் வரலாம். அந்த எண்ணத்தைத் தவிர்க்கத்தான் ஒரு பொய்யான கதையை உண்மைக் கதை என்று பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. இது வரையில் நான் சொன்னது அனைத்தும் உண்மை தான். நான் சென்ற மார்ச் மாதம் சென்னை வந்த போது இது நடந்தது. நடந்தது என்று சொல்லும் போது மீண்டும் இது ஏதோ உண்மைக் கதையைப் போல் இருக்கிறது என்று எண்ண வேண்டாம். உண்மையில் இது எந்த செய்தித் தாளிலும் வரவில்லை என்பதால், நீங்கள் படிக்கும் போது இது ஒரு பொய்க் கதை என்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இனி கதை அல்ல நிஜம் (அல்ல கதை தான்). இந்தக் கதையைச் சொல்வதற்கு முன் சில பழைய நிகழ்வுகளும், இதில் வாழ்ந்த்திருக்கும் சில கதாப்பாத்திரங்களையும் உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.

கதாப்பாத்திரங்களில் முக்கியமானவர்கள் நான், எனது நண்பன் இளங்கோ, இளங்கோவின் தம்பி சுகுமாரன். எங்களின் மூவரைத் தவிர்த்து இந்த பொய்க் கதையின் நிஜ வில்லன் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஹிட்லரைப் பார்த்திராதவர்கள் எங்கள் தலைமை ஆசிரியரைப் பார்க்கலாம். பார்த்து மடியலாம். இவரின் பெயர் சொல்லப் போவதில்லை. காரணம் இந்த செய்தி இது வரை செய்திகளில் வரவில்லை.

நானும் இளங்கோவும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது சுகுமாரன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். இளங்கோ படிப்பில் கெட்டி. சுகுமாரன் அப்படி இல்லை. ஊர் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். நண்பர்களைப் போல் கெட்ட பழக்கங்களும் அவனுக்கு அதிகம். ஆறாவது படிக்கும் போது தம் அடிக்க ஆரம்பித்தான். பத்தாவது படிக்கும் போது சாலை மறியல் வரை வந்தான். அன்று எங்களுக்கு ஏதோ அரையாண்டுப் பரிட்சை என்று நினைக்கிறேன். அரையாண்டு தானே என்று சரியாகப் படிக்கவும் இல்லை. அதே நாள் எங்கள் பள்ளியின் அருகில் இருக்கும் ஒரு மில்லில் ஒரு பிரச்சனை. இதனால் அங்கு சாலை மறியல். ஆரம்பத்தில் அது சாலை மறியலாகத் தான் இருந்தது. ஒரு இருபது நிமிடங்களில் அது பள்ளியிலும் வந்து சேர்ந்தது, சுகுமாரனின் உதவியால். அந்த அளவுக்கு சுகுமாரனுக்கு நண்பர்கள். எங்களுக்கு அன்று பரிட்சை எழுத முடியாமல் போகும் என்ற தான் தோன்றியது. படிக்கவும் இல்லை என்பதால், அதுவும் நல்லதாகவே பட்டது.

ஆனால் இதை எல்லாம் இரண்டே நிமிடங்களில் ஹிட்லர் தவுடு பொடியாக்கினார். சுகுமாரன் தொடர்ந்து நான்கு மணி நேரமாக எங்கும் தெரியவில்லை. நானும் இளங்கோவும் பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்த போது எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தது அந்த அதிர்ச்சி. சுகுமாரனை ஒரு அறையில் அடைத்து, அடித்து உதைத்ததில் அவன் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இதை அறிந்து நானும் இளங்கோவும் உடனே பள்ளியிலிருந்து மருத்துவமனைக்கு விரைந்தோம். சுகுமாரன் அன்றிலிருந்து இன்று வரை கோமாவில் இருக்கிறான். அன்று ஹிட்லரை வெட்டுவதற்காகச் சென்ற இளங்கோவை நானும் எனது மற்ற நண்பர்களும் தடுத்தோம். இதற்கான சமயம் வரும் போது இதைப் பற்றி ஏதேனும் செய்யலாம் என்று அன்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தோம். இந்தச் சம்பவம் எந்தச் செய்தியிலும் வரவில்லை.

மார்ச் மாதத்தில் நான் சென்னைக்கு சென்ற போது அதற்கான சமயம் வந்தது. எங்கள் பள்ளியில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. சோதனை செய்தவரின் பெயரும் இங்கு குறிப்பிடப்போவதில்லை. அவரை நான் இன்ஸ்பெக்டர் என்றே குறிப்பிடுகிறேன். அந்த இன்ஸ்பெக்டர் நேர்மையானவர் என்று நாங்கள் விசாரித்ததில் தெரியவந்தது. இன்று ஹிட்லரைப் பற்றி எல்லா விசயங்களும் அம்பலம் செய்வோம் என்று நான், இளங்கோ, மற்றும் ஒரு ஐந்து பேர் பள்ளிக்குச் சென்றோம்.

ஹிட்லர் இன்றும் மாறவில்லை. அதே தோற்றம் தான். தலையில் மட்டும் வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. நானும் இளங்கோவும் மட்டும் பள்ளிக்கு உள்ளே சென்றோம். மற்ற ஐவர் பள்ளிக்கு வெளியே இருந்தனர். எந்நேரமும் எங்களுடன் தப்பிக்க வண்டியுடன் ஆயுத்தமாகவே இருந்தனர். அங்கு இன்ஸ்பெக்டரைப் பார்த்து நான் பேசும் போது ஹிட்லருக்குப் புரிந்துவிட்டது. இன்ஸ்பெக்டரிடம் என்னைப் பேச விடாமல் தடுத்தார். ஹிட்லரை அறையிலிருந்து வெளியே இழுத்துச் சென்றான் இளங்கோ. நான் இன்ஸ்பெக்டரிடம் அனைத்தும் கூறி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு சுகுமாரனைப் பார்த்து விட்டு, மேலும் எங்களுடன் வந்த நண்பர்களிடமும் விசாரித்து உண்மையை அறிந்து கொண்டு ஹிட்லர் மீது ஒரு மெமோ அடித்து அவரின் மேலதிகாரிக்கு அனுப்பினார். ஹிட்லர் கைதாவது உறுதியாகிவிட்டது.

இப்போது, இனியும் ஹிட்லரைப் பழிவாங்க ஏதேனும் செய்ய நினைத்தால் செய்து விடு என்று இளங்கோவிடம் நான் சொல்ல, அவனோ, கைது செய்ததே நல்ல விசயம் தான். இது அடுத்த நாள் பத்திரிக்கைகளில் வருமே, அதுவே வெற்றி தான் என்றான். நான் இளங்கோவை அவனது வீட்டில் விட்டு விட்டு, வீடு திரும்பினேன். வழியில் பொன்னம்பலம் போல் ஒரு நான்கு பேர் என்னை மறித்தனர். அவர்களின் கைகளில் ஐந்து அடி நீளத்தில் உருட்டைக் கட்டைகள் இருந்தன. இனி இவர்களிடமிருந்து தப்பிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது.

நடப்பது நடக்கட்டும் என்று நானும் அவர்களின் முன் நின்றேன். அவர்களில் ஒருவன் ஓடி வர, நான் எனது வலது கையை மடக்கி வுட்டேன் பாரு ஒன்னு, அருகில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அருண் மெத்தையிலிருந்து கீழே விழுந்தான். அதிகாலைக் கனவு, இது நடந்தால், 'அதிகாலைக் கனவு பலிக்கும்' என்ற கதை உண்மைக் கதை. இல்லையென்றாலும், உண்மை (நான் தாங்க) எழுதியதால், இது ஒரு உண்மைக் கதை தானே!

பி.கு: ஆதி இதை படிப்பாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை படித்தால் அவருக்கு ஒரு எச்சரிக்கை, ஆதி, உங்களுடைய அடுத்த டாப் 10க்கு ஒரு டஃப் காம்பெடிஷன் இருக்கும் :-)