Thursday, February 26, 2009

தொடர் பதிவு- வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

வணக்கம்.

அட இது என்ன டா கூத்து? என்னையும் மதித்து "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" தொடர் பதிவை எழுதச் சொல்றாங்க நம்ம பொன்னாத்தா [எ] சண்டைக்கோழி.

"ஆழத்தப் பத்தி கொஞ்சம் கூட கவலைப் படாம கால வெச்சிட்டீங்க. கொஞ்சம் நேரத்துல அதோட விளைவு தெரியும்" அப்படின்னு சொன்னதுக்கு கொஞ்சம் கூட அசராம "நான் ரெடி ஆழம் பாக்க, ரொம்ப முட்டி முட்டி யோசிக்குறிங்க போல இருக்கே... நீங்க தயாரா?" அப்படின்னு சேலையை வரிஞ்சு கட்டிக்கிட்டு கேட்டுட்டாங்க.

நிலாம்மா, ஒன்னு சொல்றேன் அதைக் கற்பனை பண்ணிகிட்டு உங்க மூளையில் ஒரு படமா ஓட்டுங்க. சரியா?
சீன் 1 டேக் 2, ஆக்ஷன்.
இப்போ நம் இரு கண்களையும் கட்டிக் கொண்டு படிக்கட்டு மேலிருந்து கீழே இறங்குவதாக நினைத்துக் கொள்வோம். ஒவ்வொரு படி இறங்கும் போது பார்த்துப் பார்த்துத் தான் காலை வைப்போம். ஏன்? அடுத்து ஒரு படி இருக்கிறதா இல்லையா என்று நமக்குத் தெரியாது. எல்லாப் படிகளையும் இறங்கிவிட்டப் பிறகும் ஏதோ இன்னொரு படி இருப்பது போல் நினைத்து காலை ஓங்கி 'தம்ம்' என்று தரையில் வைப்போம்.
கட்.

இதுல தரை தான் நான். ஆழம் இருக்கிற இடத்துல மெதுவா கால வெச்சு, ஆழத்தப் பாக்கலாம். ஆழமே இல்லாத இடத்துல கால வெச்சிட்டீங்க. அதத் தான் நான் "ஆழத்தப் பத்தி கொஞ்சம் கூட கவலைப் படாம கால வெச்சிட்டீங்க", இப்போ புரிஞ்சிருக்கும் விளைவு. எனக்கும் தமிழுக்கும் இருக்கிற ஒரே தொடர்பு இந்த ப்ளாகும், நண்பர்கள் மட்டும் தான். மத்த படி நான் வீட்டுல பேசுற மொழி வேர. நாங்க வீட்ல சுந்தர மொழியில பாட்டு இசைச்சிக்கிட்டே இருப்போம். :-)

எங்க அக்கா பிள்ளைங்க வீட்டுல தாய் மொழியோட கொஞ்சம் தமிழ் சேத்தாலே, உடனே நான் அதை திருத்துவேன். அந்த அளவுக்கு எனக்கு தாய் மொழி மேலப் பற்று இருக்கு. தாய் மொழி எழுதப் படிக்க ஓரளவுக்குத் தான் தெரியும். பள்ளியில படிக்கும் போது தமிழ் படித்ததோடு என்னோட தமிழ்க் கல்வி முடிந்தது.

அதுக்கு அப்றொம், வைரமுத்துவோட 'தண்ணீர் தேசம்', 'வில்லோடு வா நிலவு', 'கள்ளிக்காட்டு இதிகாசம்' மற்றும் பலக் கவிதைகள் படிச்சுட்டு, ஓ, தமிழில் இவ்வளவு அழகா எழுத முடியுமா அப்படின்னு ஆச்சரியப்பட்டதுண்டு. அதுக்கு அப்றொம், சுஜாதாவின் 'ஆஹ்', 'அனிதாவின் காதல்கள்' மற்றும் சிலப் பல சிறு கதைகள் படிச்சிருக்கேன். இப்போ எல்லாம் லைப்ரரி போனா, டைரக்டா தமிழ் செக்ஷனுக்கு போயிட்டு, ராஜேஷ் குமார் புத்தகங்கள எடுத்து படிக்கிறது பழக்கமாயிடிச்சு. மேலும், ராமலக்ஷ்மி, நந்து, சர்வேசன், ப்ரியா, பரிசல்காரன், தாமிரா, கார்க்கி இப்படி பலப்பேருடைய தமிழ் பதிவுகளை படிச்சிட்டு சரி தமிழ்ல முயற்சி பண்ணலாம்னு தான் நானும் டமில்ல எழுதிக்கிட்டு இருக்கேன்.

சரி இதுக்கு மேல மொக்கையெல்லாம் வேணாம். விஷயத்துக்கு வருவோம். சில வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்
o வசை - திட்டுதல்
o ஆரம் - மாலை

சரி இப்போ, எல்லோருக்கும் புத்திமதி சொல்லப் போறேன், எல்லோரும் கவனமாக் கேட்டுக்கோங்க.
வெள்ளையாக இருத்தல் அழகு, கருமையாக இருத்தல் அழகின்மை என்று நினைப்பதும், ஆங்கிலத்தில் பேசுவது அறிவு, தமிழில் பேசுவது அறிவின்மை என்று நினைப்பதும் தவறு. வெள்ளை என்பது கருமைப் போல் ஒரு நிறம். இதில் அழகின்மை என்று ஒன்றும் இல்லை. அதேப்போல், ஆங்கிலம் என்பது தமிழைப் போல் ஒரு மொழி. அவ்வளவு தான். இனிமேலாவது 'கொன்ச்சம் கொன்ச்சம் டமில் டெரியும்' அப்படின்னு சொல்லாதீங்க. தாய்க்கும், தாய் மொழிக்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.

அடுத்து நான் வம்புக்கு இழுக்கப் போறது புன்னகை.

Sunday, February 22, 2009

தெய்வீகமான வார்த்தை

வணக்கம்.

வாரக் கடைசியில், எப்போதாவது நான் கோவிலுக்கு போற பழக்கமுண்டு. பாதி பேருக்கு எதுக்குன்னு தெரிஞ்சிருக்கும். அய்யோ, அதுக்கு இல்லேங்க, நீங்க வேற! நல்ல சாப்பாடு கிடைக்கும். அதுக்கு தான். ஆனா இன்னைக்கு உண்மையாவே சாமி கும்பிடத் தான் போனேன். என்னோட ரூம் மேட் வெங்கியும் கூட வந்தான்.

சாமி எல்லாம் கும்பிடிட்டு, சாப்பாடு போடுற இடத்துக்கு போகும் போது, சாப்பாடு எங்களுக்கு கிடைக்கல. சீக்கிரமாத் தான் போனோம். ஆனாலும் காலி ஆயிடிச்சு. சரி பரவாயில்லன்னு, நானும் வெங்கியும் சம்பிரதாயப்படி கொஞ்சம் நேரம் உக்காந்துகிட்டு கிளம்பலாம்ன்னு முடிவு பண்ணிட்டு கிளம்பினோம். எனக்கு செம்ம பசி.

நான் - டேய் வெங்கி, எனக்கு செம்ம பசி. சென்னை தோசா போய் சாப்பிடலாமா?
வெங்கி - டேஸ்டு ஆஃப் இந்தியால சாப்பிடலாம். நல்லா இருக்கும்.
நான் - ஓ, நான் அங்க சாப்பிட்டதில்ல. நல்லா இருக்கும்னா போகலாம்.
வெங்கி - நான் பல முறை சாப்டிருக்கேன்.
நான் - சரி அங்க டெபிட் கார்டு அக்செப்ட் பண்ணுவாங்கலா?
வெங்கி - பத்து பவுண்டுக்கு மேல சாப்டா அக்செப்ட் பண்ணுவாங்க.
நான் - பத்து பவுண்டா? டேய், ஒரு சிக்கன் பிரியாணி மிஞ்சிப் போனா நாலு பவுண்டு தானே. எனக்கு தெரிஞ்சி இத விட காஸ்ட்லியா ஒன்னும் கிடைக்காது.
வெங்கி - பாத்துகலாம் வாடா.
நான் - சொல்றத கேளு. பக்கதுல எ.டி.எம் இருக்கு. ஒரு பத்து பவுண்டு கைல வெச்சிக்கிலாம். பத்து பவுண்டுக்கு கீழ பில் வந்தா கேஷ் தரலாம். மேல வந்தா கார்டுல தேச்சிடலாம்.
வெங்கி - பாத்துக்கலாம் வாடா. இன்னைக்கு என்னோட ட்ரீட்.
நான் - ஓ அப்படின்னா தைரியமா போலாம்.

பத்து பவுண்டுக்கு மேல சாப்பிடவே முடியாது அப்படிங்கிற ஒரு மைண்ட் செட்ட, "ட்ரீட்" அப்படிங்கிற ஒரு தெய்வீகமான வார்த்தை எப்படியெல்லாம் மாத்திடுது பாத்தீங்களா? நாங்க சாப்பிட்ட பில் அமௌண்டு - 25 பவுண்டு. எல்லாம் ட்ரீட் பண்ணுற வேலை தான். நீங்க உடனே வெங்கி மேல பாச அலைகள்ல வீச வேண்டாம். இதுல பல முறை நானும் மாட்டி, சிக்கிச் சிதறி, சீரழிஞ்சி சின்ன பின்னமாயிருக்கேன். நீங்களும் தானே?

பி.கு.1. இன்னைக்கு (22-Feb-2009) வெங்கியோட பிறந்த நாள். அதுக்கு தான் ட்ரீட். இத மதியம் சாப்பிட போறதுக்கு முன்னாடி தான் சொன்னான். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் டா வெங்கி.
பி.கு.2. 22-Feb-2009 அன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடுற 'அனைவருக்கும்' என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Saturday, February 14, 2009

காதலர் தின வாழ்த்துக்கள்

வணக்கம்.

இன்னைக்கு நான் ஒரு செய்திய படிச்சேன்.

ஆல்ஃபீ பேட்டன் அப்படின்னு ஒரு சின்னப் பயலுக்கு வயசு 13. இந்த ஆல்ஃபீக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி சின்ன சின்ன ஆசை ஒன்னு வந்திருக்கு. சின்னப் பயலுக்கு சின்ன ஆசை தானே வரும். அதான் வந்திருக்கு. ஆக அவனுக்கு 12 வயசு இருக்கும் போது அந்த ஆசை வந்திருக்கு. அந்த சின்ன ஆசை என்னான்னா, "I thought it would be good to have a baby". இது அந்த 12 வயசு பையன் சொன்னது.

இப்போ பிரட்டன்ல இவனும் ஒரு அப்பா. அவங்கிட்ட பேட்டி எடுத்திருக்காங்க. கேட்ட கேள்விகள்ல ஒன்னு - "உன்னுடைய குழந்தைய வளக்கிறதுக்கு ஃபினான்ஷியல் ப்ளான்ஸ் ஏதாவது வெச்சிருக்கியா?" அப்படின்னு கேட்டதுக்கு, அவன் "ஃபினான்ஷியல்-ன்னா என்ன" அப்படின்னு கேட்டிருக்கான். அப்றொம "காசுக்கு என்னடா பண்ண போறே?" அப்படின்னு தெளிவா கேட்டதுக்கு, "தெரில, அப்பா தான் உதவி பண்ணனும்" அப்படின்னு சொல்லியிருக்கான்.

சின்னத்தம்பி படத்துல, பிரபு சொல்லுவாரே, "கல்யாணம்னா, பீ பீ ஊதுவாங்க, டும் டும் கொட்டுவாங்க, சாப்பாடு போடுவாங்க, முதல் ராத்திரி நடக்கும், அப்றொம் குழந்தை எல்லாம் பெத்துக்குவாங்க". இத்தனையும் தெரியும் ஆனா 'தாலி' அப்படின்னா மட்டும் என்னான்னு தெரியாது.

நம்ம ஆல்ஃபீ பேட்டனுக்கு 12 வயசுல குழந்தை பெத்துக்க தெரியும், ஆனா இன்னைய வரைக்கு ஃபினான்ஸ்ன்னா என்னான்னு தெரியல.

கீழ பாருங்க. அண்ணன்-தம்பி இல்லேங்கோ, அப்பா-புள்ள


சரி இது போல சில பல வருஷங்களுக்கு முன்னாடி நம்ம தமிழ் நாட்டுல கூட நடந்ததா கேள்விப்பட்டிருக்கேன்.

காதலர் தினத்தன்று ஒழுங்கா இல்லேன்னா, குழந்தைகள் தினம் கொண்டாட வேண்டி வரும்னு மொக்கைத் தனமான ஜோக்ஸ் எல்லாம் இப்போ குழந்தைகள் தினத்தை கொண்டாட வேண்டிய குழந்தைங்க எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கிட்டு இருக்கானுவோ.

சரி என்ன தான் டா சொல்ல வரேன்னு கேக்றீங்களா?
ஒன்னும் இல்லேங்கோ, 'காதலர் தின நல்வாழ்த்துக்கள்' அவ்ளோ தான்.
சந்தோஷமா, புனிதமா கொண்டாடுங்கோ. கேடு கெட்ட சேனாக்கள் தொந்தரவு செய்யும்ன்னு நினைச்சா நம்ம நண்பர்களோட ஐடியாக்கள்ல ஒரு முறை படிச்சிட்டு போங்க
- Valentines Day - முதலியிடமிருந்து காதலர்கள் தப்பிக்க வழி!
- காதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில டிப்ஸ்!


பி.கு - லண்டன்ல மீதி இருக்கிற மிச்சமும் சொச்சமும் சேர்ந்து ஒரு காதலர் தின பார்ட்டி நடத்துறாங்களாம். தேவைப் பட்டால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனியா கூட நடத்துறாங்களாம். இந்துக்களுக்கு தனியா, முஸ்லிம்களுக்கு தனியாக் கூட நடத்துவதாக கேள்விப் பட்டேன். கண்டிப்பா விவகாரமாத் தான் இருக்கும் போல.
ஏதோ நேர்ல பாத்த மாதிரியே சொல்றியேன்னு கரெக்டா தப்பா நினைக்காதீங்க. எல்லாமே செய்தித்தாள்ல படிச்சதுதான்.

Wednesday, February 11, 2009

கண்ட நாள் முதலாய்...

வணக்கம்.

ஒன்னும் பெருசா இல்லங்க. எனக்குள்ள ஒரு நல்ல (?) பழக்கம் என்னன்னா, எனக்கு ஒன்னு புடிச்சுப்போச்சுனா, அத நான் எங்கயாச்சும் உபயோகிக்கணும். உதாரணத்துக்கு, நான் காலேஜ் படிக்கும் போது ஏதோ ஒன்ன ஆங்கிலத்துல கிறுக்கும் போது, "This" அப்டிங்கற ஒரு வார்த்தைய நல்ல அழகா எழுதித் தொலைச்சிட்டேன். அதை எங்கயாச்சும் உபயோகிக்கணும்னு முடிவும் பண்ணினேன். அது வரைக்கும் என்னோட பெயர அழகா எழுதி அது தான் என்னோட கையொப்பம்னு இருந்த நான் "This"கு பின்னாடி ஒரு மேடு ஒரு பள்ளத்த சேர்த்து, என்னோட கையொப்பத்த மாத்தினேன். இன்னைய வரைக்கும் என்னோட கையொப்பம் This + மேடு + பள்ளம் தான். உற்று கவனிச்சா அதுல ஒரு This நல்லாவேத் தெரியும்.

சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம். "கண்ட நாள் முதலாய்" பாட்ட நான் பல முறை கேட்டிருக்கேன். ஆனா, என்னமோ தெரியல, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அந்தப் பாட்டக் கேட்டு, "ச்ச என்னமோ இருக்கு" அப்படின்னு நெனச்சேன். விளைவு, அத நான் இப்போ எங்கயாச்சும் உபயோகிச்சே ஆகணும். நண்பர் பரிசல் போன பதிவுக்கு கமெண்டும் போது "Me and My Notepad" க்கு பதிலா தமிழ்ல இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாரு. பாட்டு சிக்கிடுச்சு! பேரும் மாறிடுச்சு!