Saturday, July 04, 2009

லெதர் தட் வெதர்ஸ்

என்னுடைய ஊர் சுற்றும் படலம், இந்த வாரத்தோடு முடிவிற்கு வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக நான் இதுவரைக்கும் சுற்றிராத அளவிற்கு சுற்றிவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். லண்டனில் இம்மிக்ரேசன் செக்கில் மார்பு எக்ஸ்-ரே தேவைப் படுகிறது என்பதால் எக்ஸ்-ரே எடுக்க வேண்டி இருந்தது. பூனேவில் முடி வெட்டியதே ஒரு கதை இதில் எக்ஸ்-ரே எடுப்பது என்பது கலவர பூமியில் கல்யாணம் செய்வதற்கு ஒப்பானது. இதுவும் ஒரு முக்கிய காரணம், நான் வெள்ளி இரவே மும்பையில் வடிவேலன் வீட்டிற்கு ஓடி வந்தது.

நேற்று இரவு வடிவேலன் வீட்டை அடைவதற்கு இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. இன்று அதி காலை பதினொன்று மணிக்கு எழுந்து பார்த்தால் மழை பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருந்தது. மழை சற்று குறைந்ததும் நானும் வடிவேலனும் அருகிலிருந்த ஒரு மருத்துவமனைக்குச் செல்ல ஆயுத்தமானோம்.
'மழை பெய்யுது டா, ஷூ தாங்குமா டா', என்றான் வடிவேலன்.
நான் சிரித்துக் கொண்டே, 'மச்சி, இது உட்லேண்ட் ஷூஸ் டா, லெதர் தட் வெதர்ஸ். இடண்டாயிரத்து ஐநூறு ரூபா, அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி', என்றேன்.
குறைவாக எங்கு தண்ணீர் தேங்கி இருந்ததோ அங்கெல்லாம் காலை வைத்து எனது ஷூ முடிந்த வரைக்கும் நனையாமல் மருத்துவமனை சென்று அடைந்தோம். எனக்குத் தெரிந்த இந்தியில் பேசி எக்ஸ்-ரேவிற்கான காரணத்தைச் சொன்னதும் ஒரு ஸ்லிப் என்னிடம் தந்து காசை கட்டிவரும் படி சொல்ல, நானும் அங்கிருந்த வரிசையில் நின்றேன். இவர்கள் எக்ஸ்-ரே ரிப்போர்ட் இன்று தருவார்களா இல்லை தரமாட்டார்களா என்று சந்தேகம் வந்தது. சரி பணத்தைக் கட்டுவதற்கு முன் கேட்டு விடலாம் என்று ஸ்லிப் தந்தவனிடம் போய் கேட்டேன்.

அவர் இன்று ரிப்போர்ட் தர முடியாது, நாளை ஐந்து மணிக்குத் தான் தரமுடியும் என்று சொல்ல, நானும் வடிவேலனும் யோசனையில் மூழ்கினோம். நாளை இரவு பத்து மணிக்குத் தான் வீட்டில் இருந்து கிளம்புவோம் என்பதால் ஐந்து மணி ஓகே என்று சொல்ல முற்படும் போது, அவன் நாளை விடுமுறை அதனால் திங்களன்று மாலை ஐந்து மணிக்கு வந்தால் கண்டிப்பாக தந்து விடுவதாக சொன்னார்.
'பக்கத்தில் எங்கடா நல்ல ஹாஸ்பிட்டல் இருக்கு', என்று வடிவேலனிடம் கேட்டேன்.
'தெரில மச்சி, அவனையே கேளு', என்றான்.
அவனிடம் கேட்டு, பக்கத்திலிருந்த மருத்துவமனைக்குச் சென்றோம். போகும் போது இன்னும் கொஞ்சம் மழையின் அளவு அதிகரித்தது. தண்ணீர் முன்பை விட இப்போது பல இடங்களில் தேங்கி இருந்தது. எனது உட்லேண்ட் ஷூஸ் என்னை காப்பாற்றியது என்றே சொல்ல வேண்டும்.
'மச்சி பரவால்ல டா, ஷூஸ் தப்பிக்குது போல', என்றான் வடிவேலன்.
'டேய்ய்ய்ய், இது லெதர் தட் வெதர்ஸ் டா, விலை இரண்டாயிரத்து ஐநூறு ரூபா', என்றேன்.

அந்த மருத்துவமனையில் இன்று மாலை ஐந்து மணிக்கே ரிப்போர்ட் தந்து விடுவதென்று சொன்னதாலும், அங்கு நாங்கள் இல்லையெனில், அவர்களது கல்லாவில் பணம் சேர வாய்ப்பில்லை என்பதாலும், அவர்களை பார்க்கும் போது ஏதோ எங்களை மலைப் போல் நம்பிக் கொண்டிருந்ததாலும், இவர்களை விட்டால் எனக்கு வேறு வழி இல்லாமல் போனதாலும், மேலும் பல *தாலும் இருந்ததாலும் அங்கு எக்ஸ்-ரே எடுப்பதற்கு ஒத்துக்கொண்டேன். ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்தது. அடுத்து மதியம் சாப்பிட ஒரு ஓட்டலுக்கு செல்லும் போது மழையின் வேகமும் கூடி இருந்தது. ஓட்டலுக்கு ஆட்டோவில் சென்று விட்டோம்.

பிறகு மாலை ஐந்து மணிக்கு ரிப்போர்ட் வாங்க புறப்படும் போது, இந்த மழையில் செல்ல வாய்ப்பில்லை என்பதால், வீட்டிலேயே இருந்து பிறகு இனி மழை குறையாது என்பது தெரிந்துக் கொண்டு நானும் வடிவேலனும் குடையும், தொப்பியுமாக ஆறு மணிக்குக் கிளம்பினோம். தெருக்களில் அனைத்து இடங்களிலும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று அங்குலத்திற்கு தண்ணீர் தேங்கி இருந்தது.
'மச்சி, என்னோட ஷூ ஒன்னும் ஆகாது இது உட்லேண்ட், லெதர் தட் வெதர்ஸ், விலை இரண்டாயிரத்து ஐநூறு. ஆனா ஷூவோட சோல் தாண்டி தண்ணி இருந்துச்சுன்னா தண்ணி உள்ளே போக வாய்ப்பு அதிகம், அப்புறம் சாக்ஸ் நனைஞ்சா கஷ்டம் டா', என்றேன்.
'ஹ்ம்ம், என்ன பண்ணலாம்', இது வடிவேலன்.
'ஒன்னும் இல்ல, கொஞ்சம் பாத்து போகலாம்', என்றேன்.
முடிந்த வரைக்கும் நாங்கள் சிறிதளவு தண்ணீர் இருக்கும் இடங்களாக பார்த்து நடந்தோம். முடியாது என்று முடிவிற்கு வந்த போது ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். சரி சரி தப்பித்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ஆட்டோக்காரனும் அந்தத் தெருவைத் தாண்டியவுடன் கையை விரித்துவிட்டார். நாங்கள் ஆட்டோவிலிருந்து இறங்கி விட்டு நடக்க ஆரம்பித்தோம். மழை விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. தண்ணீர் தேங்கி இருந்ததால் நாங்கள் பல சந்துகளை விடுத்து இதோ ஐந்து நிமிடங்களில் போக வேண்டிய மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்துப் போனோம்.

இதோ வந்து விட்டது மருத்துவமனை. தெருவின் கடைசியில் மருத்துவமனை. தெருவில் முழங்கால் அளவிற்கு தண்ணீர்.
'என்ன டா பண்ணாலாம்', என்றான் வடிவேலன்.
நான் ஷூவை கழட்டி கையில் எடுத்துக்கொண்டேன்.
'என்ன மச்சி, இது உட்லேண்ட், லெதர் தட் வெதர்ஸ்', என்றான் வடிவேலன்.
'ஆமா டா, விலை இரண்டாயிறத்து ஐநூறு ரூபா, அதனால தான்', என்றேன்.

10 comments:

Vidhya Chandrasekaran said...

:)

Manu said...

\\ அந்த மருத்துவமனையில் இன்று மாலை ஐந்து மணிக்கே ரிப்போர்ட் தந்து விடுவதென்று சொன்னதாலும், அங்கு நாங்கள் இல்லையெனில், அவர்களது கல்லாவில் பணம் சேர வாய்ப்பில்லை என்பதாலும், அவர்களை பார்க்கும் போது ஏதோ எங்களை மலைப் போல் நம்பிக் கொண்டிருந்ததாலும், இவர்களை விட்டால் எனக்கு வேறு வழி இல்லாமல் போனதாலும், மேலும் பல *தாலும் இருந்ததாலும் அங்கு எக்ஸ்-ரே எடுப்பதற்கு ஒத்துக்கொண்டேன்.\\

Chanceaillae....Simply superb...

Oru maargammaa thaandaa yosikirangaaa...mallanthu paduthukitu yosipiyo...

Truth said...

நன்றி வித்யா, மனோ

Truth said...

உண்மையில் இன்று இம்மிக்ரேசன் செக்கில் எக்ஸ்-ரே கேட்கவில்லை. :(

புன்னகை said...

லெதர் தட் வெதர்ஸ் ---> இதுக்கு ஒரு பதிவே போட்டாச்சா??? கெட்டதுலயும் ஒரு நல்லது போல, இந்தப் பதிவுக்குப் பிறகு உங்களோட அந்த டயலாக்-ல இருந்து தப்பிச்சோம் சாமி! :-)

Truth said...

@புன்னகை,
இந்த நக்கல், நையாண்டி, குத்தலு, குசும்பல் எல்லாத்தையும் எங்க போனாலும் எடுத்துட்டு வருவீங்களா?
வருகைக்கும், கமெண்ட்டிற்கும் நன்றி.

ரவி said...

ஓட்டு போட்டாச்சு...நல்லா எழுதுறீங்க...

ரவி said...

உங்களுக்கு நீங்க ஒரு ஓட்டு போடுங்க. ஒன்னும் ஒன்னும் ரெண்டு..

கார்க்கிபவா said...

அடங்கொக்க மக்கா

Truth said...

நன்றி செந்தழல் ரவி.
என்னுடைய பதிவை தமிழிஷில் சேர்க்கும் போதே ஒரு ஓட்டு விழுந்துவிடுகிறது, அதற்கு மேல் ஓட்டு போட முடிலைங்க :)

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கார்க்கி