Sunday, July 19, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 5

...இதுவரை

என்னவளின் மரணத்திற்கு அழ இது நேரமில்லை என்பதும், தாமுவைக் காப்பாற்றவதன் மூலமாகத் தான் நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை மட்டுமே நான் உணர்ந்திருந்த சமயம் இது. என்னவளின் தலையை கீழே போட்டுவிட்டு நான் குளியலறையின் வெளியே ஓடிவந்து, மீண்டுமொரு முறை என்னவளோடு இருந்த மெத்தையை ஒரு முறை பார்த்துவிட்டு கதவைத் திறந்தேன். கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது.

எனது 9mm பிஸ்டலால் பூட்டிய கதவை சுட்டு, பூட்டை உடைத்து வெளியே வந்தேன். இருட்டில் எனக்கு ஒன்றும் சரியாகத் தென்படவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். என்னவள் இன்னேரம் தாமுவை பார்த்திருப்பாள். ஆனால் அவன் இன்னும் உயிரோடு தான் இருப்பானா என்பது கேள்விக்குறி தான். என்னவள் எப்போது, எப்படி கொல்லப்பட்டிருப்பாள் என்பது என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

முதலில் கதவு தட்டும் போது என்னவள் குளியலறைக்கு ஆடையுடன் ஓடினாள். அப்போது க்ளீனர் என்னிடம் ஏதோ சொல்ல வந்திருக்கும் போது, என்னவளின் உயிர் போயிருக்கிறது. இதை நினைக்கும் போதே என உயிர் ஒரு கனம் வெளியே சென்று திரும்பி வந்தது. அதன் பின் குளியலறையிலிருந்து 'நான் ரெடி' என்று சொல்லி வெளியே வந்தது என்னவள் இல்லை. பின்னர் நடுவே கானாமல் போனதும், பிறகு வந்ததும் என்னவள் இல்லை.

சரி இனி அதைப் பற்றி யோசிப்பதில் எந்த உபயோகமும் இல்லை என்பது முடிவாகியது. தாமு எங்கே என்பதை தேட முற்பட்டேன். இருட்டில் நான் எங்கு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பது கூட எனக்குச் சரியாகத் தெரியவில்லை. போகும் வழியெங்கும் ஏதேதோ தடங்கல்கள் இருந்துக் கொண்டே தான் இருந்தது. எதை மிதிக்கிறேன், எதை இடிக்கிறேன் என்று கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். அதோ இருக்கிறது தாமுவின் கார். ஆனால் தாமு அங்கு இல்லை. அவன் கண்டிப்பாக இப்போது என்னவளிடம்... இல்லை இல்லை அவளிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். அவள் என்று தான் இனி அவளைச் சொல்ல வேண்டும். மூளை முழுவதும் பயம் சூழ்ந்துக் கொண்டிருந்தாலும் ஏனோ என்னவளைக் கொலை செய்த அவளை ஒழித்துவிட்டுத் தான் போகவேண்டும் என்று மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

நான் லாபியில் ஓடிக் கொண்டிருந்த போது என்னைத் தவிர இன்னொருவர் ஓடும் சத்தம் கேட்பதை நான் உணர்ந்தேன். ஐயோ, அது தாமுவாகத் தான் இருக்க வேண்டும். அவள் தாமுவைத் துரத்துகிறாள். இப்போது தாமுவின் கார் இக்னைட் ஆனது. அதோ நான் அவனை காரில் பார்க்கிறேன். அவன் வெளியே போகிறான். என்னை இங்கேயே விட்டுப் போகிறான். கார் வெளியே சென்ற அந்த வினாடி கார் வெடித்து சிதறியது. தாமுவும் என்னை விட்டு போய்விட்டான். இப்போது விளக்குகள் எல்லாம் மிண்டும் பிரகாசமாய். என் முன்னால் ரிசப்ஷன். அதே தேவதை ரிசப்ஷனிஸ்டாக இருந்தாள். அவளிடம் நான் ஓடிச் சென்றேன்.

அவளின் பின்னால் இருந்தால் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து என்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேனா? எனது முகம் முழுவதும் கொழ கொழவென்று இரத்தம் படிந்திருந்தது. சட்டை முழுவதும் இரத்தக் கறை. எனது இடது கண் வீங்கியிருந்தது. வலது காது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. நான் ஓடி வரும் போது இருந்த தடங்கல்களை யோசித்துப் பார்த்தேன். பல இடங்களில் நான் தடுக்கி விழுந்து, பல முறை என் மீது ஏதோ விழுந்தது எல்லாம் என் நினைவிற்கு வந்தது. தாமுவைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று நினைத்ததில் என்னை நான் கவனிக்க தவறவிட்டேன்.

தேவதை என்னைப் பார்த்து, 'என்ன சார் என்ன ஆச்சு?' என்றாள்.
என்ன ஆச்சா? இவை அனைத்தும் ஒருவேளை எனக்கு மட்டும் தானா நடந்தது? இவள் நடந்தவை எல்லாம் அறிந்திருப்பாளா? இவளுக்கு என் முகத்தில் இருக்கும் காயங்கள் தெரிகிறதா? இல்லை எனக்கு மட்டும் தானா இதுவும்?
'என்ன சார் ஆச்சு? இவ்வளவு ரத்தம்?', என்றாள்.
ஓ, இவளுக்கு என்னுடைய காயங்கள தெரிகிறது. ஆனால் இது வரைக்கும் நடந்த பேய் விஷயங்கள் தெரிந்திருக்காதா? சரி நமக்கு உதவி தான் வேண்டும்.
'மேடம், எனக்கு ஒரு உதவி வேணும்'
'சொல்லுங்க சார், எனிதிங்'
'நான் உடனே சென்னைக்கு கிளம்பணும்', என்றேன்.
'அது முடியாது சார்', என்றாள்.
எனக்குப் புரியவில்லை. அடுத்த நொடி அவளின் வலது பக்கத்தில் இருந்து என்னவளைப் போல் இருந்த அவள் வெளியே வந்தாள். அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். தேவதையின் இடது பக்கத்திலிருந்து தாமு வெளியே வந்தான்.
ஓ தாமு சாகவில்லையா? பின், காரில் இருந்தவன் யார்? ஒரு வேளை இறந்தவர்கள் மீண்டும் இப்படி வருகிறார்களா? இப்போது லேசாக புரிந்தது என்னவளைப் போல் அவள் எப்படி என்றும், தாமுவைப் போல் அவன் எப்படி என்றும்.

இனி ஓட்டம் மட்டுமே நமக்குத் தெரிந்த ஒரே ஆயுதம். உடனே பின்னால் திரும்பி ஓட ஆயத்தமானேன். எனக்கான அதிர்ச்சிக்கு எங்குமே பஞ்சம் இல்லை. எனது முன்னால் கிட்டத்தட்ட ஐம்பது பேர் முகத்தில் இரத்த காயங்களுடன் இருந்தனர். அனைவருக்கும் இடது கண் வீங்கியிருந்தது, வலது காது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர்கள் அனைவருக்கும் இடது பக்கத்தில் வயிறு வெட்டி எடுக்கப் பட்டிருந்தது. நான் எனது வயிற்றை தொட்டுப் பார்த்தேன். இல்லை நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். அனைவரும் இதற்கு முன்னர் இங்கு இறந்தவர்களாகத் தான் இருந்திருக்கக்கூடும். எனது இரத்த காயங்களுக்கு இவர்கள் தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

நான் மீண்டும் திரும்பி தேவதையைப் பார்த்தேன். இப்போது தேவதைக்கும், அவளுக்கும், அவனுக்கும் அதே காயங்கள் இருந்தன. அவள் தனது சிங்கப் பற்களை காட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தாள். இம்முறை அவை அழகாக இருந்திருக்கவில்லை.

எனக்கு முன், தேவதை, அவள், அவன். எனக்கு பின்னால் சுமார் ஐம்பது பேர். எனது நம்பிக்கை அளவுகோளின் முள் இப்போது எங்கேயோ அதலபாதாளத்தில் இருக்கிறது.

வேட்டை, பழிவாங்குதல், தப்பித்தல், இம்மூன்றில் ஒன்று கூடிய விரைவில்...

7 comments:

Anonymous said...

iyo katha mudincha illa innum iruka???

Truth said...

@அனானி,
என்னங்க இப்படி கேட்டுடீங்க. கதை நல்லா இல்லையா?

Manu said...

உரைநடை அற்புதம்...

வாழ்த்துகள்...

sreeja said...

என்ன பயங்கரமான் வேகம். கதையின் நாயகனைப் போல நாங்களும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.

ஆறாவது பாகத்தை சீக்கிரம் வெளியிடுங்கள்.

கார்க்கிபவா said...

படிச்சிட்டுத்தான் இருக்கோம்..

நல்லாவே போது பாஸ்

Truth said...

@மனு, ஸ்ரீஜா, கார்க்கி,
ரொம்ப நன்றி, அடுத்த பாகம் போட்டாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க.

புன்னகை said...

//என்னவளின் தலையை கீழே போட்டுவிட்டு நான் குளியலறையின் வெளியே ஓடிவந்து, மீண்டுமொரு முறை என்னவளோடு இருந்த மெத்தையை ஒரு முறை பார்த்துவிட்டு கதவைத் திறந்தேன்.//
மனம் கொஞ்சம் கனக்கிறது!

//மூளை முழுவதும் பயம் சூழ்ந்துக் கொண்டிருந்தாலும் ஏனோ என்னவளைக் கொலை செய்த அவளை ஒழித்துவிட்டுத் தான் போகவேண்டும் என்று மனதில் ஓடிக் கொண்டிருந்தது.//
இரண்டாம் பகுதியின் காதலுக்கும் இந்தப் பகுதியின் காதலுக்கும் நல்ல வேறுபாடு குடுத்திருக்கீங்க.

//அனைவருக்கும் இடது கண் வீங்கியிருந்தது, வலது காது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.//
கோரக் காட்சி கண் முன்னே வருவதைத் தவிர்க்க முடியவில்லை.