Sunday, July 12, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 5

இதுவரை பயணித்தது...

நாங்கள் மூவரும் உள்ளே சென்றோம். அங்கே உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் பெண்கள். அனைத்துப் பணிப்பெண்களுக்கும் ஒரே உடுப்பு. மிகவும் தரமான ஓட்டல் போலிருக்கிறது. அனைவருக்கும் தொப்பியிலிருந்து காலணி வரைக்கும் ஒரே மாதிரியான உடை. அவர்கள் போட்டிருந்த டூ பீஸ் உட்பட. இதுவே எங்களை உள்ளே அழைத்துச் சென்றது. இங்கு ஏதோ கிடைத்தவற்றை சாப்பிட்டு விட்டு எங்கள் அறைக்குச் சென்றோம். நாள் முழுவதும் சுற்றியதால் உடனே படுத்ததும் உறக்கம்.

8-அக்டோபர்-2007, திங்கள்
இன்று மாலை நாங்கள் லண்டன் திரும்ப வேண்டும். இன்றைய திட்டத்தில் நாங்கள் ரைன் நீர்வீழ்ச்சிக்கும், ஜுரிக்கும் போக வேண்டும். ரைன் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல நாங்கள் முதலில் ஜுரிக் போக வேண்டும். அங்கிருந்து வடக்கே சென்றால் ரைன் நீர்வீழ்ச்சி. காலையிலேயே மறுபடியும் வழக்கம் போல இலவச உணவை சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். சுமார் இரண்டு மணி நேரம் இண்டெர்லேக்கனிலிருந்து ஜுரிக். அதே முதல் நாள் வந்த வழி தான்.

ஜுரிக் வந்து சேர்ந்த போது மணி காலை ஒன்பது இருக்கும். ஜுரிக்கிலிருந்து ரைன் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல இரண்டு ரயில்கள் மாற வேண்டும். ஒன்று ஜுரிக்கிலிருந்து விண்டர்தூர் என்னும் இடம்வரைக்கு. மற்றொன்று விண்டர்தூரிலிருந்து ரைன் நீர்ழீச்சி. நாங்கள் ஜுரிக்கிலிருந்த ஒரு டிக்கெட் கவுண்டரில் ரயில் எத்தனை மணிக்கு என்று விசாரிக்கச் சென்றொம்.

'When is the next train to Rhine Falls?', என்றேன்
'There is a train in next 10 minutes. The ticket for this train costs more. The trains after one hour costs less', என்றார்.

இதை நான் அப்படியே கார்த்தியிடமும், ஆதியிடமும் சொல்ல, மூவரும் யோசித்து, நமக்கு நேரம் தான் முக்கியம், காசு அல்ல என்று தீர்மானித்து உடனே மூவருக்கும் பயணச்சீட்டுகளை வாங்கிவிட்டு ரயில் ஏறச் சென்றோம். அப்போது தான் எங்களிடம் ஏற்கனவே முதல் வகுப்பு பயணச்சீட்டுகள் இருக்கிறதே என்று தோன்றியது. பின்னர் ஓடிச் சென்று வாங்கிய பயணச்சீட்டுகளை ரத்து செய்யச் சென்றேன். அவர் திட்டப் போகிறார் என்று நினைத்தேன். மாறாக அமைதியாக சிரித்துக் கொண்டே பயணச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு, பயணத்தோடு ரத்து செய்ததற்கான சீட்டும் தந்தார்.

நாங்கள் பிறகு ரயிலில் ஏறி, விண்டர்தூருக்குச் செல்ல ஆயுத்தமானோம். எங்களது முதல் வகுப்புப் பெட்டியில் நாங்கள் மூன்று பேர் தவிர இன்னும் ஒரு ஐந்து பேர் தான். ரயில் பெட்டி ஏதோ ஐந்து நட்சத்திர ஓட்டல் போல் காட்சி அளித்தது. நாங்கள் வைத்திருந்த ரொட்டிகளையும் ஜாம்களையும் காலி செய்ய இது தான் சிறந்த இடம் என்று நினைத்து வெளியே இருக்கும் ரம்மியமான இடங்களைப் பார்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தோம். வைத்திருந்த ரொட்டிகள் தீர்க்கும் முன்பே விண்டர்தூர் வந்துவிட்டதால், மீதமிருந்தவற்றை ஆதி எடுத்துக் கொண்டு நாங்கள் எங்களுடைய அடுத்த ரயிலுக்கு ஏற அதற்கான நடைமேடைக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்த ரயில் விண்டர்தூரிலிருந்து ரைன் நீர்வீழ்ச்சிக்கு. அது மறுபடியும் நமது ஊட்டி ரயில் போல தான் காட்சியளித்தது. அதில் முதல் வகுப்பு தனியாக இல்லையென்பதால் முதலில் இருக்கும் ரயில் பெட்டியில் ஏறினோம். அங்கும் அதே தான். போகும் வழியெங்கும் அழகிய வீடுகள். சில வீடுகளில் சூரியகாந்தி செடுகளும் வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அடுத்தது ரைன் நீர்வீழ்ச்சி ரயில் நிலையம். ரயில் நின்றது. நாங்கள் இறங்க போகும் போது ஆதி எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
'என்ன டா தேடுறே?', என்றேன் நான்.
'ஒன்னும் இல்லே', என்றான்.
'இறங்கணும் டா இங்க'
அவன் எதையோ தேடிக் கொண்டிருக்க ரயில் கிளம்பியது.
'டேய் ரயில் கிளம்பிடிச்சு, என்ன தான் தேடுறே?'
'என்னோட பேக் டா', என்றான்.
'சரி பிரச்சனை இல்ல, அதுல என்ன இருக்கு?'
'என்னோட ட்ரெஸ் இருக்கு டா, அப்றொம் காமெரா இருக்கு டா'
'சரி கலவைப் படாத, நாம அதைத் தேடிக்கிட்டு இருந்தா, இன்னைக்கு ஈவெனிங், ப்ளைட்ட மிஸ் பண்ணிடுவோம்'.
'டேய், அதுல என்னோட பாஸ்போர்ட்டும் இருக்கு டா', என்றான்.

நாங்கள் மூச்சு விடுவதை சற்று மறந்தே போய்விட்டோம்.

பயணம் தொடரும்...

3 comments:

Manu said...

Suspense Story ellam unga kitta picchai edukanum...narration chanceaillae...superbb...vazthukal...

Arasi Raj said...

நிஜமாவே இந்த பக்கம் வரே நேரம் இல்லப்பா..கண்டிப்பா ஒரு நாள் வந்து மொத்தமா அறுவடை செய்யுறேன்...

தொடர்ந்து கலக்குரக்டுக்கு வாழ்த்துக்கள்...

என்ன PIT-க்கு போட்டோ காணும் இன்னும்?

Truth said...

நன்றி மனு
நன்று நிலாம்மா, கண்டிப்பா வாங்க.
PIT போட்டோ இன்னும் புடிக்கலைங்க.