Saturday, July 18, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 4

...இதுவரை

நான் சுற்றும் முற்றும் பார்த்தும் என்னவள் அங்கே இல்லை. உள்ளே இருக்கும் இன்னொரு அறைக்குச் சென்று பார்த்து, அங்கும் அவள் இல்லை. குளியலறையிலும் தேடிப் பார்த்துவிட்டேன். அங்கு இருந்த சோப்பு பெட்டி கீழே விழுந்திருந்தது. ஒரு வேளை அது அவள் ஆடை அணியும் போது கீழே விழுந்திருக்கலாம். இது விளையாடும் நேரம் இல்லை என்பது அவளுக்கு ஏன் புரியவில்லை. நான் பார்த்த காட்சிகளை அவள் பார்த்திருந்தால் அவள் என்னை விட்டு எங்கும் போயிருக்கமாட்டாள்.

'அடியே...', நான் அலறியது எனக்கு மட்டுமே பல முறை கேட்டது போலும், யாருமே பதில் சொன்ன பாடில்லை. எனக்குள் இப்போது பயம் எட்டிப் பார்த்தது. எனது கைகள் உதற ஆரம்பின. எனது தொலைப் பேசியை எடுத்து மீண்டும் ஒரு முறை நான் தாமுவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவன் கிளம்பி ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். அவன் வழியின் நடுவே இருக்கலாம்.
'போன எடுடா...' அவன் தொலைப்பேசியை எடுக்கவே இல்லை. நான் குளியலறையிலிருந்து வெளியே வந்து, அங்கிருந்து மெத்தையிருந்த அறைக்கு வந்தேன். எனது தொலைப்பேசி சினுங்கி, குறுஞ்செய்தி வந்திருப்பதை எனக்கு அறிவித்தது.
'நான் வந்துட்டேன்', என்றது அந்தக் குறுஞ்செய்தி. தாமு வந்துவிட்டான் போல் இருக்கிறது.

நான் என்னவளின் தொலைப்பேசிக்கு அழைத்துப் பார்க்கலாம் என்று நினைத்து அவளது எண்ணைச் சுற்றினேன். அவளது தொலைப்பேசி மெத்தையின் மீதே தான் அலறிக்கொண்ட்டிருந்தது. அவள் எப்போதும் தன்னுடன் தொலைப்பேசியை வைத்திருக்கும் பழக்கம் அவளிடத்தில் இல்லை. அழைப்பைத் துண்டித்ததும், எனது தொலைப்பேசி ஆஃப் ஆகியது. எனது தொலைப்பேசி ஆன் ஆகவே இல்லை. அடுத்த வினாடி அறையின் விளக்குகள் அனைத்தும் அனைந்து விட்டன.

வெளியே சென்றிருப்பாளா என்ற சந்தேகம் ஏனோ எனக்கு இதுவரை வரவில்லை. பார்த்துவிடலாம் என்று நினைத்து கதவருகே சென்ற போது ஜன்னல்கள் தட்டப்பட்டது. அதே விரல்கள் வந்த ஜன்னல் தான். ஒரு பக்கம் கதவு இன்னொரு பக்கம் ஜன்னல். மற்றொரு பக்கம் என்னவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை.

ஒன்று மட்டும் எனக்குக் கச்சிதமாகப் புரிந்துவிட்டது. இதிலுள்ள முடிச்சுகளை அவிழ்த்து, கடைசியில் முடியாத பட்சத்தில், என்னவளைக் கண்டுபிடித்து இங்கிருந்து தப்பிக்க வேண்டும். நான் இம்முறை கதவைத் திறப்பதற்கு பதிலாக ஜன்னலருகே சென்றேன். ஜன்னல் பலமாகத் தட்டிக் கொண்டிருந்தது. நான் ஜன்னலைத் திறந்து பார்த்தேன். என் கண்களுக்கு எட்டிய வரையில் எதுவுமே தென்படவில்லை, ஏதோ ஒரு மயான பூமியில் இருப்பது போல் ஒரு உணர்வு. ஜன்னலைத் தட்டியது யாரென்று தெரியவில்லை. அங்கு யாரும் இல்லை. சரி இனி கதவைத் திறந்து என்னவளைத் தேடும் பணியில் இறங்க வேண்டும் என்பது நிச்சயமானது. நான் கதவருகே வந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஏனோ ஜன்னலைத் தட்டியது யார் என்று இன்னும் குழப்பமாகவேத் தான் இருந்தது. அங்கு யாருமே இல்லாத பட்சத்தில் யார் கதவைத் தட்டியிருக்கக் கூடும்? தட்டிவிட்டு ஒளிந்திருப்பார்களோ. அவ்வளவு வேகமாகவா? நான் ஜன்னலைத் திறந்த அந்த ஒரு வினாடிக்கு முன்பும் ஜன்னல் தட்டப்பட்டது. அந்த ஒரு வினாடிக்குள் தப்பிக்க முடியாது. ஒன்றும் புரியாமல் நான் கதவின் தாழ் மட்டுமே திறந்தேன். ஐயோ, ஜன்ன்லைத் தட்டியவன் ஒளிந்துக் கொள்ளவில்லை, அங்கே தான் இருந்திருக்க வேண்டும். ஜன்னலின் அருகே ஓடினேன், மீண்டும் ஜன்னலைத் திறந்து கீழே எட்டிப் பார்த்தேன். அதே மூன்றடி க்ளீனர் மீண்டும் கீழே விழுந்திருந்தான்.

நான் ஜன்னலைத் திறந்த போது கீழே எட்டிப் பார்க்காமல் போனதால் இவனை நான் கவனிக்கவில்லை. இப்போது ஏதோ எனக்கு புரிந்துவிட்டது போல் உணர்ந்தேன். இவன் எங்களைக் காப்பாற்ற வருகிறான். இனி யோசிப்பது நேர விரயம். உடனே தாவி கதவைத் திறக்கப் போனேன். கதவு மீண்டும் 'டொக் டொக் டொக்' என்றது. கதவின் தாழ் திறந்துவிட்டிருந்ததால், கதவு மெல்ல திறந்துக் கொண்டது. நான் பின் வாங்கினேன்.

கதவு முழுவதாக திறந்து கொண்டதே தவிர யாரும் அங்கு இல்லை. நான் சிறிது வலது பக்கமாக வந்து வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கே என்னவள் பயத்துடன் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
'எங்க டீ போனே? என்ன ஆச்சு', என்றேன்.
'நான் இங்க தாங்க இருந்தேன், நீங்க தான் காணாம போயிட்டீங்க'
'என்ன உளர்றே?', என்றேன்
'நீங்க இல்லேன்னு தான் நான் வெளியே தேடிப் பார்த்தேன்'
'சரி என் கூடவே இரு, நாம தப்பிக்கணும், தப்பிச்சுடலாம்'
'நான் வெளியே போனப்போ, அந்த மூனடி ஆளப் பார்த்தேன். அவன் இன்னும் உயிரோடத் தான் இருக்கான்.'
'தெரியும் டி, அவன் நம்மள காப்பாத்த வந்திருக்கான்'
'இல்லேங்க. இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் அவன் தாங்க காரணம்'
'வாட்???'
'நிச்சயமா தெரியுங்க, அவன் அடுத்த முறை நீங்க பார்த்த அவன் கிட்ட இருந்து நாம் தப்பிக்கணும்', என்றாள்.
'எனக்கென்னமோ அவன் நல்லவன்னு தான் தோனுது மா'
'சரி விடுங்க. தாமு எங்கே? இன்னும் வரலியா?'
'இல்ல. ஆனா இதோ இப்போ வந்திருக்கணும்'
'சரி நான் உள்ளேயே இருக்கேன், நீங்க போய் பார்த்துட்டு வர்றீங்களா?'
'சரி பத்திரம், உள்ளே பூட்டிக்கோ, இதோ வந்திடுறேன்'
'சரிங்க', என்றாள்

எனக்கு இதில் ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருப்பதைப் போலவே உணர்ந்துக் கொண்டிருந்தேன். எனக்கு அந்த மூன்றடி மனிதன் உதவும் நோக்கத்துடன் தான் வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அவன் கண்டிப்பாக எனக்கு இன்னுமொரு தடயம் தருவான் என்ற நம்பிக்கை இருந்தது.
'ஹே, நான் இந்த ரூம்ல இருக்கேன், நீ போய் தாமுவ அழைச்சுட்டு வர்றீயா?', என்றேன்
'சரிங்க, உள்ளேயே இருங்க, நான் அழைச்சுட்டு வந்துடுறேன்', என்றாள்.
அதோ வந்துவிட்டான் தாமு. அவனது கார் இப்போது வெளியில் பார்க் செய்துக் கொண்டிருந்தான். நான் எனது கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறான்.

என்னவள் வெளியே சென்றாள். நான் எனது 9 mm பிஸ்டலை எடுத்து என்னுடன் வைத்துக் கொண்டேன். இப்போது மீண்டும் 'டொக் டொக் டொக்', என்ற சத்தம்.
இம்முறை இது ஜன்னலும் இல்லை, கதவும் இல்லை. அறைக்கு உள்ளே எங்கிருந்தோ.
'இதோ வர்றேன் டா', என்று நினைத்து உள்ளே சென்றேன்.

அந்தச் சத்தம் என்னை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றது. நானும் சத்தம் வரும் திசையில் நடந்தேன். சத்தம் என்னைக் குளியலறைக்கு அழைத்துச் சென்றது. நான் குளியலறையைத் திறந்ததும் சத்தம் நின்றது. அங்கிருந்த கண்ணாடிகளில் எனக்கு நான் மட்டுமே தெரிந்தேன். வேறு யாரும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தேன். அங்கிருந்து வெளியே வரும் போது என் மீது ஒரு துளி திரவம் வழிந்தது. மேலே பார்த்து ஷவரில் இருந்து நீர் கசிந்ததைப் பார்த்து ஷவரை முழுவதுமாக மூடினேன். இன்னொரு துளி. விளக்குகள் இல்லாததால், என்னால் ஷவரை சரியாகப் பார்க்க முடியவில்லை.

என்மீது விழுந்த துளி, கொழ கொழவென்று இருந்தது. ஷவரில் ஒரு விரலால் மீட்டி, தடவிப் பார்த்தேன். அங்கிருந்து வரும் நீர் கொழ கொழவென்று இருக்கவில்லை. எனது கண்கள் ஷவருக்கு ஒரு அடி மேல் சென்றது. தீடீரென்று, மேலிருந்து ஒரு பெரிய பந்து அளவிற்கு ஒன்று கீழே விழுந்தது. இருக்கும் வெளிச்சத்தில் கண்களை வெறித்துப் பார்த்தது உடனே வெளியே ஓடினேன், தாமுவைக் காப்பாற்ற.

கீழே விழுந்தது என்னவளின் தலை. அப்போது இவ்வளவு நேரம் நான் பேசிக் கொண்டிருந்தது?

தேனிலவு இனி இல்லை. ஆனால் வேட்டை தொடரும்...

5 comments:

sreeja said...

// கீழே விழுந்தது என்னவளின் தலை. அப்போது இவ்வளவு நேரம் நான் பேசிக் கொண்டிருந்தது? //

யப்பா பயங்கரமா இருக்கு...தொடருங்கள்.

Truth said...

நன்றி ஸ்ரீஜா. அடுத்த பாகம் படிச்சுட்டு சொல்லுங்க.

Manu said...

ஒரு வித்தியாசமான முயற்சி...

வாழ்த்துகள்...

Truth said...

நன்றி மனு

புன்னகை said...

//எனக்குள் இப்போது பயம் எட்டிப் பார்த்தது. எனது கைகள் உதற ஆரம்பின.//
Blood is thicker than water :-)

//ஏதோ ஒரு மயான பூமியில் இருப்பது போல் ஒரு உணர்வு.//
படிக்கிற எங்களுக்கும் கூட கிட்டத் தட்ட அப்படி ஒரு உணர்வு தாங்க!

//என்னவள் வெளியே சென்றாள். நான் எனது 9 mm பிஸ்டலை எடுத்து என்னுடன் வைத்துக் கொண்டேன்.//
பேய்க்கு எதுக்கு பிஸ்டல்???