Saturday, July 11, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 4

இதுவரை பயணித்தது...

நாங்கள் மூவரும் உள்ளே வரப்போகும் பெண்ணுக்காக ஆவலுடன் காத்திருக்க, ஆங்கிலம் தெரிந்த கொரியன் மட்டும் கதவைத் திறக்கச் சென்றான். கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்து வந்தான். வெளிச்சம் அவ்வளவாக இல்லாததால் உள்ளே வந்த பெண்ணின் முகம் எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.

'மச்சி உங்க யாருக்காவது அவ முகம் தெரிஞ்சுதா?', என்றேன்.
'ஏன் டா, நீ தான் பக்கத்துல இருக்கிற. உனக்கே தெரியல, அப்றொம் எங்க எங்களுக்குத் தெரியப் போவுது', என்றான் கார்த்தி.
'லைட் போட்டுடலாமா?'
நாங்கள் சொல்லும் போதே, அவர்கள் விளக்கைப் போட, முகங்கள் பிரகாசமானது. உள்ளே வந்த பெண்ணுக்கு வயது சுமார் நாற்பத்தி ஐந்து இருக்கும். ஆங்கிலம் தெரியாதவனுக்குப் பாவம் கேள் ப்ரெண்ட் என்றால் என்னவென்று கூடத் தெரியவில்லை. பின்னர் விசாரித்ததில், அந்த யூத் ஹாஸ்டலில் மட்டும் சுமார் முப்பது கொரியர்கள் வந்துள்ளதாகவும், அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்றும், அவர்கள் ஏதோ படிப்பு சம்பந்தமாக வந்ததாகவும், உள்ளே வந்த பெண் அவர்களின் ஆசிரியை என்று தெரிந்ததும் 'ச்சேய்' என்றாகிவிட்டது.

7-அக்டோபர்-2007, ஞாயிறு
அதிகாலை ஆறு மணிக்கே நாங்கள் எழுந்து விட்டோம். இன்று நாங்கள் யூங்ப்ரா போக வேண்டிய நாள். அங்கு தான் ஜில் ஜில் ஐஸ் இருக்கும் இடம். காலை இலவச உணவை சாப்பிட்டு விட்டு, வெளியே வந்தால் இண்டெர்லேக்கனின் அதிகாலைப் பொழுதை எழுத வார்த்தைகள் என்னிடம் இல்லை. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலன்று காட்சியளிக்கும் புல்வெளிகள். தூரத்தில் இருக்கும் மலைகள் நீலநிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது.



இண்டெர்லேக்கனிலிருந்து ரயிலில் சுமார் இரண்டு மணி நேரப் பயணம் என்று நாங்கள் இண்டெர்லேக்கன் ரயில் நிலையத்திலேயே தெரிந்து கொண்டோம். நாங்கள் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு ஒரு வயதான ஒருவர் கார்த்தியைப் பார்த்து, 'Where are you coming from', என கேட்க, கார்த்தி, மறக்காமல், 'We are from London', எனச் சொல்ல, அவர் சற்றும் மதிக்காமல் அங்கே விட்டுச் சென்று விட்டார்.

நாங்கள் இண்டெர்லேக்கனிலிருந்து ஒரு ரயில் ஏறி, க்ரிண்டள்வால்ட் எனும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து நமது ஊட்டி ரயிலைப் போல் ஒரு சிறிய ரயிலைப் பிடித்து யூங்ப்ராவிற்குப் போக வேண்டும். வழக்கம் போல், போகும் வழியெங்கும் அருமையாகவே காட்சியளித்தது. க்ரிண்டள்வால்ட் வந்து சேரும் போதே தூரத்தில் வெள்ளை நிறத்தில் மலைகள் தெரிந்தது.



நாங்கள் போனது அக்டோபர் என்பதால் பனி குறைவாகவே இருந்தது. க்ரிண்டள்வால்ட் அடைந்தது ஒரு சில நிமிடங்களில் இரண்டாவது ரயிலைப் பிடித்தோம். இந்த இடண்டாவது ரயில் மிகவும் சிறியதாகவும், ஒரு பொம்மை ரயில் போல் காட்சியளித்தது. இந்த ரயில் மலையின் இடையே செல்ல வேண்டிய ரயில் பல இடங்களில் மலையின் இடையே இருக்கும் சுரங்கப் பாதையின் இடையே சென்றது. ஆங்காங்கே ரயில் நின்று அங்கிருக்கும் இடங்களைப் பார்க்க ஒரு சில நிமிடங்கள் அளித்தது.



யூங்ப்ராவின் உச்சி தான் ஐரோபாவின் உச்சி. இது ஆல்ப்ஸ் மலையின் ஒரு பக்கம். டிட்லிஸ் என்பது ஆல்ப்ஸ் மலையின் இன்னுமொரு பக்கம். ஆல்ப்ஸ் மலை பல மக்கள் கூடும் சுற்றுலா தளம். எனினும், டிட்லிசும் யூங்ப்ராவும் பார்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும். இரண்டு இடத்திலும் பனிக்கட்டிகள். அதனால் இரண்டில் ஒன்று பார்த்தாலே போதும். நேரம் இருந்தால் இரண்டு இடங்களுக்குச் செல்லலாம். நேரம் இல்லாத பட்சத்தில் இரண்டில் ஒரு இடத்திற்கு சென்றாலே போதும். நாங்கள் யூங்ப்ரா தேர்ந்தெடுத்த காரணம், இதன் மலை உச்சி ஐரோப்பாவிலேயே உயரமான இடம் என்பதால்.

இங்கு பார்க்க வேண்டிய இன்னுமொரு இடம் ஐஸ் பேலஸ். முழுக்க முழுக்க ஐஸ் கட்டிகளால் செய்யப் பட்ட ஒரு குகை. குகையின் உள்ளே பல சிற்பங்கள் செய்யப் பட்டுள்ளது. அனைத்துமே ஐஸ் கட்டிகளால். பிரம்மாண்டமான குகை. பார்த்து நடக்க வேண்டும், இல்லையெனில் என்னைப் போல் ஒரு முறையாவது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம்.







ஐஸ் பேலசைப் பார்த்து விட்டு, வெளியே வந்தால் யூங்ப்ராவில் ஜில் ஜில் ஐஸ் கண் முன்னே. ஏதோ பிறந்த பலன் அடைந்து விட்டது போல் ஒரு உணர்வு.





இங்கே சிறிது நேரம் இருந்து விட்டு, பின்னர் நாங்கள் மலை உச்சிக்குச் சென்றோம். அனைவரும் செல்வார்கள். வழி தவர விட முடியாது. அங்கே நினைப்பவர்கள் உருளலாம், சறுக்க நினைப்பவர்கள் சறுக்கலாம், குதிக்க நினைப்பவர்கள் குதிக்கலாம், அமைதியாக இருக்க நினைப்பவர்கள் இங்கே கண்டிப்பாக வரவேண்டாம். இனி படங்கள்.







ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டு, அங்கிருந்து வர மனமே இல்லாமல் திரும்பினோம். இண்டெர்லேக்கன் வந்து சேரும் போது சுமார் ஆறு மணி இருந்திருக்கும். ஒரு மணி நேரம் தெருக்களைச் சுற்றிக் கொண்டிருந்தோம். அட அங்கு தெருக்களும் சுற்றுலா spell check தளம் தான்.
'இன்னைக்குக் கண்டிப்பா, சுவிஸ் சாப்பாடு தான் சாப்பிடனும்', என்றேன்.
'கண்டிப்பா, இங்க வந்து இந்த ஊரு சாப்பாடு சாப்பிடலேனா எப்படி', என்று வழிமொழிந்தான் கார்த்தியும்.

நான் பார்த்த வரையில் லண்டனில் ஒரு ஓட்டலின் மெனு அட்டை, ஓட்டலின் வெளியே ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்திருப்பார்கள். நமக்கு பிடித்த உணவு இருக்கும் பட்சத்தில் நாம் உள்ளே சென்று சாப்பிடலாம். சுவிசிலும் அப்படித் தான் இருந்தது. மூவரும் இரவு ஏழரை மணியிலிருந்து அருகிலிருந்த ஓட்டல் ஒவ்வொன்றாக சென்று அங்கிருக்கும் மெனு அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பார்த்த அனைத்துமே நிராகரித்துக் கொண்டிருந்தோம். ஒன்று அங்கிருக்கும் உண்வு கண்டிப்பாக நம்மால் சாப்பிட முடியாது, இல்லை அதன் விலை நமக்குக் கட்டுபடி ஆகாது என்பதால். கிட்டத்தட்ட பத்து ஓட்டல்களை விடுத்து, இனி நேற்று போல் ஏதாவது ஒரு இந்திய ஓட்டலுக்குச் சென்று தான் சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.

அதோ அந்தத் தெருவில் இன்னும் சில ஓட்டல்கள் இருந்ததைத் தெரிந்து அங்கு சென்றோம். முதல் இரண்டு மூன்று ஓட்டல்களுக்கு நோ சொல்லி விட்டு, மேலும் நடந்தோம். கடைசியில் இருந்த ஓட்டலின் மெனு அட்டையை கார்த்தி பார்த்துக் கொண்டிருந்தான். நானும் ஆதியும் உள்ளே எட்டிப் பார்த்தொம்.
'மச்சி உள்ளே பாரு, சாப்பாடு எப்படி இருந்தாலும், எவ்ளோ செலவானாலும் இங்க தான் சாப்பிடப் போறோம்', என்றேன்.
'ஆமா டா, கண்டிப்பா', என்றான் ஆதி.
'என்ன டா சொல்றீங்க', என்றபடி கார்த்தி உள்ளே பார்த்து, 'கண்டிப்பா, லெட்ஸ் கோ', என்றான்.

பயணம் தொடரும்...

2 comments:

Manu said...

ஏன் அந்த உணவு விடுதியில் பக்ஷி எதாவது தெரிந்தா?

Truth said...

என்ன தெரிந்ததென்று அடுத்த பகுதி படிச்ச உடனே தெரிந்திருக்குமே!