Monday, June 22, 2009

சமைப்பது எப்படி

சமையல் ஒரு கலை. நோ நோ, கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டாதீர்கள். ஒரு பஞ்ச் டயலாகோடு ஆரம்பிக்கலாம் என்று தான் 'சமையல் ஒரு கலை' என்று ஆரம்பித்தேன். உண்மையில் சமையல் ஒரு கலை தான். எத்தனை ரெசிப்பி புத்தகங்களையோ பதிவுகளையோ படித்தாலும், நாமே முன் வந்து சுய புத்தியை உபயோகித்தால் தவிர சமைத்துவிட முடியாது. இந்தப் பதிவை படித்த பின்னர், நீங்க சமையல் வல்லுநர் ஆகிவிடலாம் என்று நினைக்காதீர்கள். அதற்கு தான் முன்னரே சுய புத்தி உபயோகிக்க வேண்டுமென்று சொன்னது.

கிட்டத் தட்ட இரண்டரை வருடங்களாகி விட்டது நான் தனிக்குடித்தனம் வந்து. தனிக்குடித்தனம் என்றால் தனி குடித்தனம். அதாவது வீட்டை விட்டு வெளியூரில் இருக்கிறேன் என்று பொருள். முதல் நாள் நான் லண்டன் (ஏன் மாஸ்டர் எப்பவும் ஒரே ஸ்டெப் போடுறீங்க? இது ஒன்னு தான் டா எனக்கு தெரியும்) ஏர்போர்ட்டிலிருந்து நண்பனுடன் அவனது வீட்டிற்குச் செல்லும் போது, 'மச்சி நாம தான் டா சமைச்சிக்கணும்', என்றான். 'சமையலா? அப்படின்னா?' என்று கேட்ட அதே பேக்கு தான் இன்று 'சமைப்பது எப்படி' என்ற பதிவையெழுத வந்திருக்கிறேன். போகிற போக்கில் திருப்பாச்சி படம் போல, கதை ஆரம்பிக்கும் முன்பே படம் முடிந்து விடுவது போல் இந்தப் பதிவும் முடிவிற்கு வரும் அபாயம் என் கண் எதிரே தென்படுவதால், இதோ வருகிறேன் பதிவிற்கு (நீங்க மெட்ராஸ் யூனிவெர்சிட்டில தானே படிச்சீங்க?)

சரி சமையலுக்குத் தேவையான பொருட்கள் - அது நிறைய வேணுங்க. ஆனால், எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும் போது சோடா தேவைப்படுவதாலும், அதற்கு நேரமில்லாததாலும், ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு சொல்கிறேன். முக்கியமாக தேவைப் படுவது எருமை போல் பொறுமையும், சகிப்புத் தன்மையும், மிக முக்கியமாக ஒரு சிட்டிகை அளவேனும் அறிவு. நாம் சமைப்பதை சாப்பிட சிலர் இருந்தால் நல்லது. இவை இருந்தால் போதும் பருப்பு முதல் பாயாசம் வரை செய்து விடலாம். எதற்கும் வீட்டில் அரைத்த மிளகாய்ப் பொடி (மிளகாய்:தனியா :: 1:1) மட்டும் வைத்திருந்தால் நலம் உண்டாகும், மற்றவை கடைகளில் கிடைக்கும்.

முதலில் தக்காளித் தொக்குடன் ஆரம்பிப்பது நல்லது. இதைச் செய்வதால் நாம் காய்கரிகளை நறுக்குவது எப்படி என்று எளிதில் கற்றுக் கொள்ளலாம். ஒரு நான்கு தக்காளிகளை எடுத்து அதை எப்படி வேண்டுமோ அப்படி வெட்டிக் கொள்ளவும். அதே லட்சணத்தில் நான்கு வெங்காயத்தையும் நறுக்கவும். ஒரு பத்து பூண்டு பற்களைத் தோலுறித்தால் முடிந்தது வேலை. அடுப்பைப் பற்ற வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்னர், கடுகு போன்ற சம்பிரதாயங்களை முடித்து, வெங்காயத்தைப் போடவும். சர்ர்ர்ர்ர் என்று சத்தம் வந்தால், இது உங்கள் முதல் வெற்றி. பொன் நிறமாக வெங்காயம் வந்த பின், வெட்டி வைத்த தக்காளியைப் போடவும். இப்போதும் சர்ர்ர்ர் வரும் என்று எதிர்பார்த்தால், உங்களிடம் அந்த ஒரு சிட்டிகை அறிவு இல்லை என்று பொருள். சத்தம் வராத பட்சத்தில், பூண்டையும் போடவும். பின்னர் நமது மிளகாய்ப் பொடி ஒரு இரண்டு மேசை கரண்டி அளவு போட்டு, பின்னர் புளி பேஸ்டு சிறிது போடவும். புளி பேஸ்டு இல்லையெனில், சமைப்பது கடினமே. ஒரு பத்து நிமிடத்தில் முடிந்தது தக்காளி தொக்கு. இதன் சிறப்பம்சம் யாதெனின், இதை நாம், இட்லியுடனோ, தோசையுடனோ இல்லை சாப்பாட்டில் கூட சேர்த்து சாப்பிடலாம்.

பத்து நிமிடத்திற்குப் பின்னர் தக்காளித் தொக்கை அடுப்பிலிருந்து எடுத்து, ஒரு சிட்டிகை அளவு வாயில் போட்டு டேஸ்டு பாருங்கள். நாராசமாக இருந்தால், நாராசமாகத் தான் இருக்கும், அப்படி இருந்தால், இது நமது இரண்டாவது வெற்றி. ஏனெனில் அடுத்து என்ன சமைக்கலாம் என்று நம்மை யோசிக்கத் தூண்டும்.

இதே முறையில், தக்காளிகளையும், வெங்காயங்களையும் சற்றே குறைத்து, ஒரு காயை வெட்டி, வேகவைத்த துவரம் பருப்புடன் தண்ணீரை சேர்த்தால் அது சாம்பார். பருப்பு இல்லாமல், சற்று மிளகாய்ப் பொடியை அதிகமாக்கினால் அது குழம்பு. குழம்பில், காயிற்கு பதிலாக மீன் துண்டுகளைப் போட்டால்... ஸ்ஸ்ஸ்ஸ் என்ன யோசனை, மீன் குழம்பு தான் வரும். அவ்வளவு தான் சமையல். பொறியல், கூட்டுகளும் இதே பார்முலா தான். சாம்பாரில் தண்ணீரை குறைத்துப் பாரும், கூட்டு ரெடியாக இருக்கும். நீங்களும் 'சமைக்கலாம் வாங்க' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

உங்கள் ஆதரவு அதிகமாகி, எனது வேலைப் பளு குறையும் பட்சத்தில், 'நாம் சமைத்ததைச் சாப்பிடுவது எப்படி' என்ற பதிவு விரைவில் வரும். சமைப்பது எப்படி ஒரு கலையோ, அதே போல், சமைத்ததைச் சாப்பிடுவதும் கலை தானே. என்ன சொல்றீங்க?

பி.கு: சென்ற வாரம் எனது கசினுடன் பேசும் போது நான், "என்னடா சாப்டியா?", என கேட்டேன். அவன், "இனிமே தான் ஹோட்டலுக்குப் போகணும் " என்றான். "ஓ நீ சமைக்க மாட்டியா", என்று கேட்டதற்கு, "சமையலா..." என்று வாயைப் பிளக்க, அவனுக்குத் தந்த அட்வைஸ் தான் இவை. முடியல இல்ல?

6 comments:

புன்னகை said...

சமைக்கக் கற்றுக் கொண்டேனோ இல்லையோ, வயிறு வலிக்க சிரித்தேன்!!! எப்படி தான் உங்களால மட்டும் இப்படியெல்லாம் எழுத முடியுதோ தெரில! எவ்வளவு முயற்சி பண்ணாலும் இந்த அளவு நகைச்சுவை உணர்வோட எழுத முடில என்னால! கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு உங்க மேல!
"சமைத்ததைச் சாபிடுவது எப்படி?" - ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! :-)

Rajarajan said...

உங்க கூட இருக்கிற அந்த அப்பராநீகள நினைக்கும் போது, என்னால சிரிக்காம இருக்க முடியல ...

Anonymous said...

:)

Anonymous said...

What U said is 100% right. That is all the samayal. The way U explained the tomato chutney is really nice and perfect. A screen was going in front of me, while I was reading it.My mouth was watering at that momemt.
Congrats

ப்ரியா கதிரவன் said...

Thouroughly laughed.:)

Truth said...

நன்றி புன்னகை.
//"சமைத்ததைச் சாபிடுவது எப்படி?" - ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! :-)
என்னா வில்லத்தனம்.

நன்றி ராஜராஜன், தூயா, அனோக், அனானி மற்றும் ப்ரியா அக்கா. :)