Tuesday, April 28, 2009

தமிழுடன் சேர்ந்து தமிழர்களும் வாழ்ந்து வளரட்டும்

முன்குறிப்பு: இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களே.

இந்தி படிக்காதது குற்றமா? நிச்சயமாக இல்லை. நீச்சல் கற்றுக்கொள்ளாதது எப்படி குற்றமாகும்? ஆனால் தவளைகளாக இருந்துக்கொண்டு நீச்சல் தெரியாமல் போனால்? கடினம் தான் வண்டியை ஓட்டுவது. நாமும் தவளைகள் தான். நிலத்திலும், நீரிலும் இருக்க வேண்டிய தவளைகள். ஆனால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிக்கும் தவளைகள்.

தமிழ்நாட்டில் இருக்கும் போது தமிழ் மட்டுமே போதும் என்று தான் தோன்றுகிறது. ஆனால், தமிழ்நாட்டைத் தவிற வேறு எங்கு போனாலும் நமக்கு ஃபாரின் தான். ஒன்று நாம் போகும் மாநிலத்தின் பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும், இல்லையெனில் தேசிய மொழியாவது தெரிந்திருக்க வேண்டும். இரண்டுமில்லை என்றால், மிளகாய் அரைக்க நமது மண்டையை நீட்டியே ஆக வேண்டியிருக்கிறது.

லண்டனில் அலுவலகத்தில், பல முறை அங்கிருக்கும் வெள்ளையர்களுக்குப் புரியாமல் பேச வேண்டியிருக்கிறது. இதற்காக என்னுடைய டீம் மேட்ஸ் பேசுவது இந்தியில். அதையே என்னிடம் சொல்லத் தனியாக வந்து ஒரு மீட்டிங் ரூமில் பேச வேண்டி இருக்கிறது. இந்த பிரச்சனைகளை களைய நான் கிட்டத்தட்ட எல்லாப் புதிய இந்திப் படங்களையும் பார்த்துத் தொலைத்தேன். அப்படிப் பார்த்தும், 'பெஹலா', 'தூஸ்ரா', 'நீச்சே', 'பீச்சே', 'அந்தர்', 'பாஹர்', 'கரம்', 'டண்டா', 'டீக் ஹே', 'குச் நஹீ', 'இதர்', 'உதர்' போன்ற சின்னச் சின்ன வார்த்தைகள் மட்டுமே எனது மண்டையில் நின்றது. ஆனால் லண்டனில் அது போதுமென்றே தோன்றியது. ஆனால் இன்று நான் இருப்பதோ பூனேவில்.

இங்கு பேருந்தில் ஏறி பயணச்சீட்டு வாங்கினால், பயண்ச்சீட்டில் இருக்கும் எண்கள் கூட இந்தியிலோ, மராட்டியிலோ.
கையில் பயணச் சீட்டுடன், நடத்துனரிடம், 'கித்னா ஹை' என்றேன்.
அவர் மராட்டியில் ஏதோ சொல்ல, 'கித்னா?' என்று நான் மறுபடியும் கேட்க, அவர் நமக்கு மராட்டி தெரியாது என்று சரியாகப் புரிந்து கொண்டு, இந்தி தான் தெரியும் என்று தவறாக நினைத்துக் கொண்டு, 'பாரஹ்' என்றார்.
'ஓ பாரஹ்? ஒகே பாரஹ், யெஸ் பாரஹ், ஆனா அது எவ்வளவு?' என்று ஒரு முறை கேட்டு விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். நமக்கு பத்து வரை தான் இந்தியில் அத்துபடி (அட உண்மையாத் தாங்க), அதற்கு மேல் ஒவ்வொன்றாக சொல்லிப் பார்த்தால் 'பந்த்ராஹ்' வரைக்கும் வரலாம். அவர் பாரஹ் சொன்னவுடன், எனது இடக்கை விரல்களை ஒவ்வொன்றாக நீட்டி, 'க்யாரஹ்', 'பாரஹ்' என்றதும், 'அட அவர் சொல்லிய எண் வந்துவிட்டதே', என்று கையில் நீட்டிய விரல்களுடன் பத்தைக் கூட்டி பன்னிரண்டு ரூபாயை நீட்டினேன்.

இது பரவாயில்லை. ஒரு நாள் இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது பேருந்து இனி நமக்கு சரிப்பட்டு வராது, ஷேர் ஆட்டோவில் ஏறிவிடலாம் என்று முடிவெடுத்தேன். நான் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் 'வாக்கட்'. சாலையின் ஓரத்தில் பல ஷேர் ஆட்டோக்கள் இருக்க, அதில் ஒருவன், 'ஹே வாக்கடு வாக்கடு வாக்கடு வாக்கடு வாக்கடூஊஊஊ', என்று கூவிக் கொண்டிருந்தான்.
அவனிடம் சென்று மறுபடியும் 'கித்னா ஹை' என்றேன். இம்முறை எண்ணுவதற்காக கை விரல்களை நீட்டி ஆயித்தமாக இருந்தேன்.
அவன் 'பாஞ்ச்' என்றவுடன், அடடா இது எனக்குத் தெரியுமே என்று, கொஞ்சம் கூட அசராமல் ஏதோ பத்து பதினைந்து வருடங்கள் இந்தி பேசிப் பழகியதைப் போல் 'டீக் ஹை' என்று சொல்லிவிட்டு ஏறிவிட்டேன். ஆட்டோ கிளம்பிய போது தெரியவில்லை இனி தான் உச்ச கட்ட அவலம் என்று.

வாக்கட் என்பது பெரிய ஊரா அல்லது ஒரு தெரு மட்டுமா என்று கூட எனக்குத் தெரியாது. நான் ஹிஞ்சேவாடி பாலம் ஏறி இறங்கியதும் இறங்க வேண்டும். நான் இறங்க வேண்டிய இடம் வழியாக இவன் செல்வானா? அல்லது பாலம் ஏறாமல் கீழேச் சென்று சில பல டேக் டைவர்ஷன்களில் திரும்பி திருப்பதியில் விட்டுவிடுவானா என்று ஏகப்பட்டக் கேள்விகள். அவனிடம் கேட்டுவிடலாம் என்றால், எப்படி கேட்பது? சரி அவனிடம் கேட்பதற்கு முன் ஒரு முறை மனதிற்குள் சொல்லிப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.
'ஹிஞ்சேவாடி ப்ரிட்ஜ் கே பீச்சே?' இல்லை இல்லை, பீச்சே என்றால் பின்னாடி. சரி 'ஹிஞ்சேவாடி ப்ரிட்ஜ் கே நீச்சே?' இல்லை, நீச்சே என்றால் கீழே.
ஏறி இறங்கனும், இதை எப்படி கேட்பது. சரி நடித்து காட்டி விடலாம் என்று நினைத்து 'பெஹலே ஹிஞ்சேவாடி ப்ரிட்ஜ் மே சொய்ங்ங்க்' என்று சொல்லும் போது கைகளைக் கீழே இருந்து மேலே எடுத்துச் சென்று, பின்னர் 'ஆர் ஃபிர், ஜீங்ங்ங்க்' என்று கைகளை மேலிருந்து கீழே கொண்டு போகலாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொள்ளும் போது ஆட்டோ பாலத்தின் மீது இருந்ததை கவனித்தேன். நல்லவேலை ஆட்டோக்காரன் பிழைத்தான்.

பாலத்தை கடந்தவுடன் 'பையா பையா, இதர் ஸ்டாப் கர்ஜியே', என்றேன். இது மனதிற்குள் அல்ல, ஆட்டோக்காரனிடம் தான். அவரும் பதிலுக்கு ஏதோ சொன்னார். என்ன சொன்னார் என்பது அப்போது புரியவில்லை. ஆட்டோவிலிருந்து அனைவரும் இறங்க, 'இது தான் கடைசி ஸ்டாப்' என்று சொல்லியிருக்கிறார், என்று புரிந்துக் கொண்டேன். கடைசி ஸ்டாப் என்ற தைரியத்தில் இப்போதெல்லாம் 'பையா பையா, இதர் ஸ்டாப் கர்ஜியே' என்று சொல்லி ஆட்டோக்காரனின் சாபத்தைச் சம்பாதிப்பதை நிறுத்தியிருக்கிறேன்.

தமிழ் வாழ்க, வளர்க என்பது தவறில்லை என்ற போதிலும், வேற்று மொழியை கற்பதே தவறு என்று கூறித் தடுப்பதை என்னவென்று சொல்வது? ஏதோ பத்துப் பதினைந்து பேர் மட்டும் பேசிய ஒரு சில மொழிகள் அழிந்திருக்கலாம். ஆனால் கோடிக் கணக்கான மக்கள் பேசும் தமிழ் மொழி அழியாமல் காப்பதற்கான வழிகள்
- முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஒரு படம் எடுத்து, ஆங்கிலத்தில் பாட்டும் எழுதி விட்டு அதற்கு தமிழ் பெயர் வைப்பதோ
- இந்தி எழுத்துக்கள் மீது தார் பூசுவதோ
நிச்சயமாக இல்லை.
தமிழ் மட்டுமே வாழ்ந்து வளர்வதில் பயனில்லை. தமிழுடன் சேர்ந்து தமிழர்களும் வாழ்ந்து வளரவே இந்தப் பதிவு.

பின்குறிப்பு: என்னுடைய இந்தியைப் படித்துச் சிரிப்பவர்களுக்கு -
நான் பூனேவிற்கு வந்து ஒரு சில வாரங்களே ஆகிறது. என்னுடைய நண்பனொருவன் மும்பையில் ஒரு வருடமாக இருக்கிறான். அவனைப் பார்க்க நான் சென்ற மாதம் மும்பைக்குச் சென்றேன். அங்கு மாத்திரான் என்ற ஒரு இடத்திற்கு சென்றோம். அங்கு ஒரு ஏரி இருப்பதாக தெரியவந்தது.
'மச்சி, ஏரில தண்ணீ இருக்கான்னு கேட்டுக்கலாம், தண்ணியே இல்லாம அவ்ளோ தூரம் எதுக்கு நடக்றது', இது நான்.
சரி என்று சொல்லிவிட்டு அவன் அங்கிருக்கும் ஒரு கடைக்காரனிடம் 'லேக்கு வாட்டர் அவேலபல் ஹே' என்று கேட்டான்.
'கொய்யாலே, நீ பேசினதுல ஹே மட்டும் தான் டா இந்தி' என்றேன்.

14 comments:

Manu said...

நான் தான் முதல் வாசகன்...படிச்சிட்டு வரேன்...

பித்தன் said...

This is an interesting observation, but I would like to point out ,that Hindi is not our national language , it is one of the official language of our union government . I agree with your fact that learning other languages will never deter development of Tamil.

Manu said...

அற்புதமான உரைநடை...என்னை மாதிரி படிக்கவே பிடிகாதவனுகும் உன் எழுத்துகள் போதையை உண்டாகு கின்றன ...

நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை...ஹிந்தி பேச தெரியாமல் நானும் பல பல நேரங்களில் படாத பாடு அனுபவித்து இருகிறேன்..

சிந்திக்க வைக்க தூண்டும் ஒரு அற்புதமான பதிவு ..வாழ்த்துகள்...

Priya Kathiravan said...

i really laughed at it...at the same time could appreciate the concern behind

Vidhya Chandrasekaran said...

சிரிக்கவும் வைத்தது. சிந்திக்கவும் வைக்கிறது.

Kevin Matthews said...

ஐயா உங்களை மாதிரி ஆள்களுக்கு தான் இந்தி பிரசார் சபா இருக்கிறது. அதில் சேர்ந்து இந்தியை படித்து கொள்ளுங்கள். உங்களை யாரும் தடுக்க போவது இல்லை. உங்களை போன்ற சொற்ப்ப சதவிகிதத்தார்களுக்காக அனைவரையும் இந்தி படிக்க சொல்வது என்ன நியாயம்?

Unknown said...

அத்தனையும் உண்மை. நானும் பூனேயில் 2 வருடம் இருந்தேன். நான் தமிழ்நாட்டில் இருந்தபோது அவ்வலவாக இந்திஎதிர்ப்போ, படிப்போ தெரியாமல்தான் இருந்தேன். ஆனால், பூனே சென்ற கொஞ்சம் காலத்திலேயே, நம் திராவிட கட்சிகளின்மேல் இந்தி எதிர்ப்பு செய்ததற்காக மதிப்பு வந்தது என்பதும் உண்மை. ஏன் என்கிறீர்களா? அங்கு இந்தியின் ஆதிக்கத்தை உங்களால் இன்னும் கொஞ்ச நாட்களில் உணர முடியும்.

மிக முக்கியமான சில செய்திகளை இங்கு சொல்கிறேன், நீங்களும் அது உண்மைதான என்று கவணியுங்கள்:
1. இந்தி தெரியாமல் வரும், தமிழர்களோ, மலயாலிகளையோ, தெலுங்கர்களையோ பாருங்கள்.. கொஞ்சம் நாட்களில் இந்தி கற்றிருப்பார்கள். ஆனா அவர்களுக்கு மராட்டி வராது. எனக்கும் இன்று இந்தியில் பேசமுடியும். ஆனால் மராட்டி புரிந்துகொள்ளும் அளவிலேயே உள்ளது. மராட்டி மன்னில் இந்தியைதான் நன்றாக கற்க முடிகிறது, மராட்டி பின்னர்தான் என்பது.... கொஞ்சம் யோசிக்க வைக்கவேண்டியதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள்.

2. பூனேவில் எத்தனையோ எப்.ம்(F.M)ஒலிபரப்புகள் இருக்கிறது. அதில் மராட்டியில் பேசுவார்கள், ஆனால் மராட்டி பாடல்கள் எத்தனை முறை ஒலித்திருக்கிறது என்னு எப்போதாவது கவணித்ததுண்டா. 80-90% இந்தி பாடல்களே ஒலிக்கும். திரைப்படங்கள், திரைப்படப்பாடல்கள் என்பவை நவீன கால இலக்கியங்கள். இலக்கியங்கள் வளராத ஒரு மொழியின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் என்னாகும் பாருங்கள்.

3. எத்தனை மராட்டி படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன. அவற்றின் தரம் என்ன. மராட்டி படங்கள் தேசிய விருதுகள் பலவும் வாங்கியவை என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். ஆக மராட்டி மண்னில் மராட்டி படங்கள் பொருளாதார ரீதியில் வெற்றி அடைவதில்லை...

அத்தனைக்கும் என்ன காரணமாக இருக்கு என்று எண்னுகிறீர்கள்????

முடிக்கும் முன், தமிழ்நாட்டில் யாரும் இந்தி படிக்க தடைவிதிக்கவில்லை. என்றைக்குமே தனியார் பயிர்ச்சி வகுப்புகளில் படிக்க தடைகள் இல்லை. பள்ளிகளிலும், பொது சேவைகளிலும் கட்டாயமாக்கப்பட்டதை மட்டுமே எதிர்த்தோம். இந்தி கற்பது தவறில்லை, கட்டாயமாக கற்க வேண்டும் எனபது தமிழ் மட்டுமல்ல, மற்ற அனைத்து மொழிகளின் வளர்சிக்கு மிகப்பெரிய தடை என்பது முற்றிலும் உண்மை. இது என்னுடைய 2 வருட பூனே அனுபவம் மட்டுமே.

Anonymous said...

ஐயா உங்களை மாதிரி ஆள்களுக்கு தான் இந்தி பிரசார் சபா இருக்கிறது. அதில் சேர்ந்து இந்தியை படித்து கொள்ளுங்கள். உங்களை யாரும் தடுக்க போவது இல்லை. உங்களை போன்ற சொற்ப்ப சதவிகிதத்தார்களுக்காக அனைவரையும் இந்தி படிக்க சொல்வது என்ன நியாயம்?///// SUPER COMMENT SEE MANY PEOPLE WILLIN TO LEARN ENGLISH ONLY // OUR TN GOVT ESTABLISHED MANY ENGLISH LANG LABS IN RURAL SCHOOLS // WE MUST SEE PEOPLES INTREST NOW A DAYS MANY HINDI TUTION CENTRES ARE AVAILABLE IN TN BUT PEOPLE WILLIN TO JOIN ENGLISH CENTRES ONLY// NO ONE RUSH TO HINDI CENTRE // SEE "VETA"// NO ONE COMPELL THEM TO JOIN VETA //WHY BIHAR AND UP NOT DEVELOPED ??? MANY ROAD SIDE PANIPURI STALLS ARE RUN BY NORTHINDIAN MIGRANTS ONLY/// LANGUAGE IS NOT A PROBLEM //WHY IT COMPANIES ARE LOCATED IN CHENNAI AND BANGALORE//

பரதர் said...

ஐயா, நானும் முன்பு ஹிந்தி படிப்பதில் அக்கரை காட்டவில்லை. எங்கே தமிழ் நாட்டை விட்டு வெளியே போகப்போகிறோம் என்று விட்டுவிட்டேன். ஆனால் இன்று வளைகுடா நாடுகளில் ஒன்றில் உள்ளேன். எனக்கு ஹிந்தி சுத்தமாக வராது. இங்கு தமிழர்கள் அதிகம். அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இங்கு மலையாளிகள் மிகவும் எளிதாக ஹிந்தி கற்றுக்கொள்கின்றனர். நம் மக்களுக்கு அதிக நாட்கள் எடுக்கின்றது. ஏனெனில் அவர்களுக்கு 10ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயப் பாடமாகும். இதனால் ஒன்றும் மலையாள மொழி அழிந்து விடவில்லையே!!!

ஒரு தமிழன் ஒரு வேலையின் பொருட்டோ அல்லது தமது உரிமையை நிலைநாட்டும் பொருட்டோ நாட்டின் தலைநகருக்குச் செல்ல வேண்டிய நிலை வந்தால், அங்கு சென்று தமிழில் பேச முடியுமா??

தமிழ் ஒரு சிறந்த மொழியாக இருந்தால் (நாம் எத்தனை மொழி கற்றாலும்)எந்த மொழியாலும் அதை அழிக்க முடியாது.
அப்படி இல்லையேல் தமிழ் அழிகிறதோ இல்லையோ; தமிழன் அழிந்து விடுவான்.
இப்படிக்கு
ஹிந்தி தெரியாமல் கஷ்டப்படும் தமிழன்.

Sankar said...

ஹி ஹி .. ஹிந்தி தெரியாத உன்னோட கஷ்டத்தை நீ சொல்லிட்டே .. ஹிந்தி ப்ரசார் சபா’ல ஹிந்தி கத்துகிட்டு நான் பேசின ஹிந்திய கேட்டுபுட்டு என்னோட பங்களூரு நண்பர்கள் இன்னும் சொல்லி சொல்லி சிரிச்சுகிட்டு இருக்காங்க. என் கஷ்டத்தை சொல்ல நான் இன்னொரு பதிவு தான் போடனும். ஆங்கிலத்தில ‘Necessity is the mother of invention' அப்படின்னு சொல்லுவாங்க .. கத்துக்கனுமேன்னு கத்துகிட்டா, ஹிந்தியும் நாம MODERN ALZEBRA படிச்ச மாதிரி பரிச்சை முடிஞ்சவுடனே மறந்து போயிடும். தேவையறிஞ்சு கத்துகிட்டாலோ, இல்லை நண்பர்களோட பேசிகிட்டே இருந்தாலோ ஒழிய, மொழிகளை ஞாபகம் வைச்சிக்கறது கஷ்டம். பள்ளிகள்ல ஹிந்திய கட்டாயமா சொல்லித் தரதுனால என்னைப் பொறுத்த வரை பெரிய பயன் கிடையாது..

’நீ பேசினதுல ஹே மட்டும் தான் டா இந்தி' என்றேன்.’ - உன்னோட டச் :-)

‘தமிழ்நாட்டைத் தவிற வேறு எங்கு போனாலும் நமக்கு ஃபாரின் தான். ’ - உண்மை. ஆனால் அது தான் எனக்கு இந்தியால பிடிச்ச விஷயம். எல்லாப் பக்கமும் ஹிந்தி பேசிட்டு இருந்தா இந்தியாவோட அடையாளமே போயிடும்.

Unknown said...

//எல்லாப் பக்கமும் ஹிந்தி பேசிட்டு இருந்தா இந்தியாவோட அடையாளமே போயிடும்.//

முற்றிலும் உண்மை!!!

Anonymous said...

ya i agree with you i dont knwo hidni but when i came to KSA i found most of the sauth asians' commmonest language is Hindi so i feel it is must for us who lives in middle east

புன்னகை said...

//கையில் பயணச் சீட்டுடன், நடத்துனரிடம், 'கித்னா ஹை' என்றேன்.
அவர் மராட்டியில் ஏதோ சொல்ல, 'கித்னா?' என்று நான் மறுபடியும் கேட்க, அவர் நமக்கு மராட்டி தெரியாது என்று சரியாகப் புரிந்து கொண்டு, இந்தி தான் தெரியும் என்று தவறாக நினைத்துக் கொண்டு, 'பாரஹ்' என்றார்.//
உங்களோட டச்! :-)

//'பெஹலே ஹிஞ்சேவாடி ப்ரிட்ஜ் மே சொய்ங்ங்க்' என்று சொல்லும் போது கைகளைக் கீழே இருந்து மேலே எடுத்துச் சென்று, பின்னர் 'ஆர் ஃபிர், ஜீங்ங்ங்க்'//
chance eh இல்ல போங்க! எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ புரியல! :-)

//'பையா பையா, இதர் ஸ்டாப் கர்ஜியே'//
கர்ஜியே இல்ல, கீஜியே. இனிமே மாத்திக்கோங்க.

//'கொய்யாலே, நீ பேசினதுல ஹே மட்டும் தான் டா இந்தி'//
மறுபடி உங்களோட டச்! ஆனா, நண்பர் தான் பாவம்! ;-)

இத்தனை காமடிக்கு நடுவிலும் ஒரு மெசேஜ் சொல்லி இருக்கீங்க, சூப்பர் ஸ்டார் ரசிகர்னு நிரூபிக்கவோ? இந்த முறை வந்துள்ள பின்னூட்டங்கள் இன்னும் highlight! உங்களுடைய பதில்கள் எப்படி இருக்கும்னு ஆவலோடு எதிர்பாத்துட்டு இருக்கேன்.

அ.மு.செய்யது said...

நான் இருப்பது தங்கியிருப்பது பாஷான்.

ஆனால் ஹிஞ்சவாடி விப்ரோவில் தான் வேலை செய்கிறேன்.