Friday, March 06, 2009

எனது பெயர் நாகவள்ளி

'நம்பினால் நம்புங்கள்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சிலருடைய அமானுஷ்ய சக்திகளை கண்டறிந்து அவர்களை பேட்டி எடுத்து டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவது தான் எனது வேலை. சுமார் பதினெட்டு மாத காலமாக என்னுடைய நிகழ்ச்சிகளை கண்டு எனக்கென்று ஒரு தனி முத்திரையைக் குத்திக் கொண்டு, எனது விசிரிகள் படையுடன் வாழ்வது எனக்கு மிகவும் பிடிக்கவே செய்தது.

இன்று தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கும் சிலப் பல நிகழ்ச்சிகளான 'பாம்பைத் தின்று பட்டைச் சாராயம் குடித்தவன்', 'கனவில் கொட்டிய உண்மைக் காசு', 'மங்களூரில் நடந்த மங்கி மனிதன்' போன்ற சிறுப் பிள்ளைத்தனமான நிகழ்ச்சிகளை எனது தொலைக்காட்சியில் முதல் மாதத்திலேயே ஒளிபரப்பச் செய்தப் பெருமை எனக்குண்டு. மற்ற தொலைக்காட்சிகள் அமானுஷ்ய சக்தியைக் கண்டு வியந்துக் கொண்டிருந்தனர். நானோ அதிலுள்ள உண்மைகளை கண்டறிந்து, போலித்தனத்தை உடைத்தெறிந்து விஞ்ஞானத்தை மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தேன்.

இதன் தொடர்ச்சியாக எனக்கு அடுத்து வந்தது ஒரு சுவாரசியமான ப்ராஜெக்ட். வேலூரைத் தாண்டி முப்பது கிலோமீட்டருக்குத் தெற்கே உள்ளது சினிங்காப்பட்டி என்ற கிராமம். அங்கு வசிக்கும் இராஜனின் உடம்பில் ஆவி ஏறிவிட்டதாம். நானும் எனது படக்குழுவும் அன்றிரவே கிளம்பினோம். அடுத்த நாள் காலை சினிங்காப்பட்டி கிராமத்தை அடைந்தோம். இராஜனை சந்திப்பத்ற்கு முன்பு இராஜனின் பெற்றோரைச் சந்தித்தோம்.

'வணக்கம், நாங்க நம்பினால் நம்புங்க நிகழ்ச்சில இருந்து வர்றோம்', என்றேன்.
எனதுப் படக்குழு மூன்று காமெராக்களை ஆன் செய்து வெவ்வேறு கோணத்தில் படமெடுக்க ஆரம்பித்தது.
'ஆ நீங்க தானே பேயெல்லாம் ஓட்றவரு? வாங்கப்பூ', என்றார் இராஜனின் தந்தை.
நான் சிரித்துக் கொண்டே, 'இல்லேங்க, நான் பேய் எல்லாம் ஓட்ட மாட்டேன். பிரச்சனையை கண்டுப்பிடிச்சு, அதை விஞ்ஞான ரீதியில் சரி செய்ய மட்டும் தான் எனக்குத் தெரியும்'
'என்னவோ பண்ணுங்க, எங்க பையன் நல்லபடியா குணமடைஞ்சாச் சரிங்க', என்றாள் இராஜனின் தாய் ஏக்கத்துடன்.
'சரி சொல்லுங்க உங்க பையனுக்கு என்ன ஆச்சு? எப்போல இருந்து இந்த பிரச்சனை?'
'என்னத்த சொல்றதுங்க, போன மாசம் எங்க பக்கத்து வீட்டுல நாகவள்ளின்னு ஒரு பொண்ணு, தூக்கு மாட்டி செத்துடிச்சு. அன்னைலயிருந்து தான் என் பையனுக்கு பேய் புடிச்சிடுச்சுங்க'
'எப்பவுமே பேய் புடிச்ச மாதிரி இருப்பாரா, இல்லே, எப்போதாவதா?'
'அமாவாசைக்கு அடுத்த நாள் மட்டும் தாங்க அதுவும் ராத்திரி எட்டு மணிக்கு வெறும் முப்பது நிமிஷத்துக்கு மட்டும், நாகவள்ளி செத்துப் போனதும், அமாவாசைக்கு அடுத்த நாள் ராத்திரி எட்டு மணி தான்', என்றார் இராஜனின் தந்தை.
'ம்ம்ம். நீங்க ஏதாவது மன நிலை ஆலோசகர அணுகுனீங்களா?'
'அப்படின்னா என்னங்க?'
இவர்களுக்கு புரியவைப்பதும் புலிக்கு பிரசவம் பார்ப்பதும் ஒன்று என்பதை புரிந்துக் கொண்டு, 'சரி நான் உங்க பையன் கிட்ட கொஞ்சம் பேசனுங்க', என்றேன்.
'வெளீல போயிருக்காய்ன், பத்து நிமிசத்துல வந்திருவான்' என்றான் இராஜனின் தந்தை.

நானும், எனது படக்குழுவும், சிறிதே ஆலோசித்தோம்.
'என்னயா இது. இருபத்தொன்னாம் நூற்றாண்டுல பேய் பிசாசுன்னு', என்றேன்.
'எல்லாம் கற்பனை சார். ஒரு ரெண்டு அதட்டு அதட்டினா, எல்லா உண்மையும் கக்கிடுவான்', என்றான் எனது படக் குழுவைச் சேர்ந்த தாமு.
'எனக்கு என்ன கவலைன்னா, இன்னும் இதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்காங்க'
'விடுங்க சார், ஒரு மணி நேரம் தானே வந்திடுவான். உங்க ஸ்டைல்ல கேளுங்க, அடங்கிடுவான்'
'இல்ல, இவங்க வழிலயே போயி, இவனுங்கள மடக்கனும். எப்போ வருது அமாவாசை?'
'சார், இன்னைக்கு தான் சார் அமாவாசை'
'ஃபண்டாஸ்டிக். அப்போ நாளைக்கு இராஜனும், நாகவள்ளியும் ஒண்டிக் குடித்தனம் நடுத்துவாங்களா?' என்றேன் சிரித்தவாரே.

அப்போது இராஜன் அந்தத் தெருவில் தனது நண்பர்களோடு நடந்து வந்துக் கொண்டிருந்தான்.
'சார், அவன் தான் இராஜன்னு நினைக்கிறேன்', என்றான் தாமு.
'சரி வா விசாரிக்கலாம்', என்று அவனை நோக்கி நடந்தோம்.

நானும், எனது குழுவும் அவனை சந்தித்து பேசினோம். அவன் மிகவும் கம்பீரமாகக் காணப்பட்டான். தோள் பட்டைகளும், கைகளும், இரும்பு கம்பிகளை முறுக்கி வைத்தப் படி இருந்தது. நானும் அவனுக்கு எந்த விதத்திலும் சளைத்தவன் இல்லை. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்து இரண்டு முறை ஆணழகன் பட்டம் பெற்றவன் தான். சரி இன்று வரை நன்றாக இருக்கும் இவன் நாளை பேய்களோடு பேசுவானா? அதையும் தான் பார்த்து விடலாம் என்று மனசாட்சியுடம் பேசிக்கொண்டேன்.

'வணக்கம், இராஜன், நாங்க நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சில இருந்து வர்றோம்', என்றேன்.
'வணக்கங்க. ஆத்தா சொன்னாங்க. என்ன விசயமா வந்திருக்கீக?'
'உங்களுக்குள்ள பேய் இருக்கிறதா சொல்றாங்க. அதைப் பத்தி தெரிஞ்சிக்கத் தான் வந்திருக்கோம்'
'அட நீங்க வேற, அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க. ஆனா எனக்கு ஒன்னும் தெரியலேங்க. அமாவாசைக்கு அடுத்த நாள் நான் ஏதோ பித்துப் பிடித்த மாதிரி இருக்கேனாம். என்னென்னமோ உளரிக்கிட்டு இருக்கேன்னு சொல்றாங்க'
'மத்தவங்க சொல்றது இருக்கட்டும், நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?'
'எனக்கு ஒன்னும் நினைவுல இருக்காதுங்க சார்', என்றான்.

பேட்டியை முடித்துக் கொண்டு குழுவுடன் வேலூரில் பதிவுச் செய்த விடுதியில் அன்றிரவு தங்கினோம்.
'என்ன சார், எதாவது க்ளூ கிட்டிச்சா?', தாமு கேட்டான்.
'ஒன்னும் பெரிய பிராப்ளம் இல்ல தாமு. இட்ஸ் சிம்பிள்'
'என்ன சார் சொல்றீங்க, அப்போ கண்டுப் பிடிச்சிட்டீங்களா?'
'யெஸ் அஃப் கோர்ஸ், இது நம்ம ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி தான். வேர ஒன்னும் இல்ல'
'ஓ அவ்ளோ தான, அப்போ ட்ரீட்மெண்ட் தந்தா சரியாயிடும்ன்னு சொல்லுங்க'
'செர்டென்லி, சரி லெட்ஸ் ரிட்டையர். நாளைக்கு நாம அங்க மறுபடியும் போகணும்'
'ஷூர் சார், குட் நைட்'

அடுத்த நாள் குழுவுடன் மீண்டும் சினிங்காப்பட்டி கிராமத்தை வந்து அடைந்த போது மாலை ஆறு மணி. இராஜனின் தாய் மிகவும் கவலையுடன் பலவகையாக சமைத்துக் கொண்டிருந்தாள்.
'வணக்கங்க, என்ன இன்னைக்கு ஸ்பெஷல், இவ்ளோ சமைக்கிறீங்க', என்றேன் உண்மையை தெரிந்துக் கொண்டே.
'நாகவள்ளி வந்திருவா, இதெல்லாம் அவளுக்கு ரொம்ப புடிக்கும். பண்ணலேன்னா...' என்று இழுத்தாள்.
'பண்ணலேன்னா என்ன ஆகும், சொல்லுங்க', என்றேன். தாமு தன் காமெராவை இராஜனின் தாயைச் சுற்றிச் சுற்றி பதிவுச் செய்துக் கொந்திருந்தார்.
'பண்ணலேன்னா, என்னோட மவனை கொண்டே புடுவா', என்றார் கவலையுடன்.

இது எனக்கு அதிர்ச்சித் தரவில்லை என்றாலும், கொன்று விடுவாள் என்று இவர்கள் எப்படி கண்டுப் பிடித்தார்கள் என்ற கேள்வி என்னுடைய மூளையை துளைத்துக் கொண்டிருந்தது.

இரவு ஏழு ஐம்பது:
இராஜன், நண்பர்களுடன் சிரித்துக் கொண்டு தான் இருந்தான். நேரம் போகப் போக நண்பர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

இரவு ஏழு ஐம்பத்தைந்து:
இராஜன் இப்போது தனியாக நடந்துக் கொண்டிருந்தான். அருகிலுள்ள ஒரு சிறுப் பாறை மீது அமர்ந்துக் கொண்டான்.

எனது படக்குழு மூன்று திசைகளில் தங்களுடைய காமெராக்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தனர்.

தொடரும்...

10 comments:

Manu said...

அடுத்தது என்ன நடக்குமோ என்று திரும்ப திரும்ப யோசிக்க வைக்கும் திறமை உன் கதைக்கு உள்ளது...கதையின் உரைநடை அற்புதமாக உள்ளது...

தமிழை இவ்வளவு இனிமையாக எழுதி எடுத்து காட்டியதற்கு மிக்க நன்றி...

கூடிய விரைவில் நீங்கள் ஒரு கதையை எழுதி வெளியிட வேண்டும் என்று ஆசைபடுகிறேன்...

நாமக்கல் சிபி said...

அட! சஸ்பென்ஸ்ல முடிச்சிட்டீங்களே!

SurveySan said...

nallaarukku matter.
thodarattum!

Vidhya Chandrasekaran said...

சீக்கிரம் முடிங்கப்பா. ரெம்ப சஸ்பென்ஸ் தாங்க முடியல:)

Raich said...

Truth,
Umnaiya sollanumna, enaku intha maathiri horror stories na konjam bayam. Konjam illa, nerayave.
Intha storya padikaracha, heart konjam vegama adichuthu.
Aduthu padikara alavukku dhairiyam irukaanu enakke doubt vanthirichu.
But kandippa suspense a padikaama vidarathaa illa.
The way you depicted the picture is really good.
Eagerly waiting for the climax...
Post it soon,

புன்னகை said...

உண்மையச் சொல்லவா?

"Sleepless nights" அப்படின்னு சொல்லுவாங்கல்ல, அப்படி தான் இருக்கு என்னோட இரவுகள் எல்லாம் உங்களால! அய்யோ, தெய்வமே உங்க வீட்டம்மாவ கோபிக்க வேணாம்னு சொல்லுங்க, நான் சொல்ல வரது, உங்கக் கதையப் படிச்சதுல இருந்து நான் நிம்மதியாத் தூங்கி பலநாள் ஆகுது! இந்தப் பதிவுல அப்படி ஒன்னும் பயப்படுத்தும் அளவுக்கு விஷயமில்லையே, எதுக்கு இவ இவ்ளோ பில்ட் அப் தரான்னு நீங்க யோசிக்கறது தப்பில்ல. உங்கள ஓரளவுக்கு நல்லாத் தெரியும் என்பது தான் இப்போப் பிரச்சனையே! மிகவும் எளிய நடைல கதை சொல்லும் போதே தெரிஞ்சு போச்சு, இது பாய்ச்சலுக்கு முந்தைய பதுங்கல் என்று.

//கொன்று விடுவாள் என்று இவர்கள் எப்படி கண்டுப் பிடித்தார்கள்//
இந்த வரியப் படிக்கும் வரை நானும் ரொம்ப தைரியமாத்தான் இருந்தேன். இந்த வரியைத் தொடர்ந்து, அந்த 5 நிமிட இடைவெளி விட்டு நீங்க கதை சொல்லியிருக்கும் விதம் அருமை! அடுத்து என்ன என்று கொஞ்சம் நடுக்கத்துடன் எதிர்பார்க்கும் போது, "தொடரும்" போட்ட உங்களுக்கு ஒரு சபாஷ்!

வாழ்த்துக்கள் Truth! :-)

Truth said...

நன்றி மனோ, நாமக்கல் சிபி, சர்வேசன், விதயா, ரைச், புன்னகை. :-)

Rathna said...

உங்களோட பதிவை படித்தேன் சுவாரஸ்யமாக உள்ளது, எந்த தொலைகாட்சியில் உங்களது பதிவுகள் இடம் பெறுகின்றன என்று தெரிந்து கொள்ள ஆவல், இன்னொரு வேண்டுகோள், கருப்பு பின்னணியில் எழுத்துக்களை படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது, background கலர் வெள்ளையில் கருப்பு எழுத்துக்கள் என்பது போல மாற்றி தர முடியுமா, முடிந்தால் படிக்க வசதியாக இருக்கும், நன்றி.
எனது வலைத்தளம் www://:rathnapeters.blogspot.com

Truth said...

@rathnapeters,
//உங்களோட பதிவை படித்தேன் சுவாரஸ்யமாக உள்ளது

ரொம்ப நன்றிங்க.

//எந்த தொலைகாட்சியில் உங்களது பதிவுகள் இடம் பெறுகின்றன என்று தெரிந்து கொள்ள ஆவல்

ஜோக் எல்லாம் அடிக்கல தானே நீங்க :-). இனிமே யாராவது இத படிச்சிட்டு யாராவது நாடமாக்கினாத் தான் உண்டு :-)

//இன்னொரு வேண்டுகோள், கருப்பு பின்னணியில் எழுத்துக்களை படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது, background கலர் வெள்ளையில் கருப்பு எழுத்துக்கள் என்பது போல மாற்றி தர முடியுமா, முடிந்தால் படிக்க வசதியாக இருக்கும், நன்றி.

மாத்திட்டேன்.

Rathna said...

thank you so much........